Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)

6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும்

ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்:

அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் எனக்கு இல்லை. எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நான் தர்மம் செய்துவிடட்டுமா?

இதற்கு நபி(ஸல்)அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! பாதியை?

‘ வேண்டாம்”

‘ அல்லாஹ்வின் தூதரே! மூன்றில் ஒரு பங்கினை? ”

மூன்றில் ஒரு பாகத்தை வேண்டுமானால் தர்மம் செய்யும். மூன்றில் ஒருபாகம்கூட அதிகம் (அல்லது கூடுதல்)தான். நிச்சயமாக நீர் உம் வாரிசுகளைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. மக்களிடம் கை நீட்டிக் கேட்கும் வகையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட! நீர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி எது ஒன்றைத் தர்மம் செய்தாலும் அதன் பொருட்டு உமக்கு நற்கூலி வழங்கப்படாமல் போகாது! உம்முடைய மனைவியின் வாயில் நீர் ஊட்டுகிற உணவு-பானத்திற்குக்கூட (நற்கூலி உண்டு) ”

நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே!என் தோழர்களெல்லாம் மதீனா திரும்பிச் செல்ல நான் இங்கே தங்க விடப்படுவேனா? ”

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தங்கிட வேண்டியது வராது. அப்படி நீர் தங்கியிருந்து – அப்போது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி நீர் எந்த அமல் செய்தாலும் அதன் பொருட்டு ஒரு சிறப்பும் ஓர் அந்தஸ்தும் உமக்கு உயர்த்தப்படாமல் போகாது”

மேலும் நபியவர்கள் சொன்னார்கள்: ‘ஆனால் உமக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்படலாம்., உம்மின் மூலம் நிறையப்பேர் பயன் அடையும் வகையிலும் மேலும் பலபேர் உம்மின் மூலம் நஷ்டம் அடையும் வகையிலும்! (அது அமையலாம்)- யா அல்லாஹ்! என் தோழர்களுக்கு அவர்களின் ஹிஜ்ரத்தை செல்லுபடியாக்குவாயாக! அவர்களை – அவர்களின் பழைய நிலைக்குத் திருப்பி விடாதே!- ஆனால் துயரத்திற்குள்ளானவர் ஸஅத் இப்னு கௌலா என்பவர்தான்! ”- அவர் நோய்வாய்ப்பட்டு மக்காவிலேயே மரணம் அடைந்தது குறித்து நபி(ஸல்)அவர்கள் மனம் வருந்தினார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

புகழ்பெற்ற நபித்தோழரான ஸஅத்பின்அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மக்காவைச் சேர்ந்தவர். பிறந்த பூமியான மக்கத் திருநகரை – அல்லாஹ்வுக்காகவும் ரஸூலுக்காகவும் துறந்து ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவில் குடியேறியவர். சுவனவாசி என்று உலகிலேயே நபியவர்களால் நற்செய்தி சொல்லப்பட்டவர்! இவையே, அன்னாரின் சிறப்புக்கும் உயர்வுக்கும் தெளிவான சான்றுகளாகும்.

ஹிஜ்ரீ 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்த நபி(ஸல்) அவர்களுடன் ஸஅத் (ரலி) அவர்களும் மக்கா மாநகர் வந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்குப் பிறகு கடுமையான பிணிக்குள்ளான ஸஅத் அவர்களை நலம் விசாரிக்க வந்தார்கள் நபியவர்கள். !

நற்குணத்தின் முன்மாதிரியாக விளங்கிய நபியவர்கள் தம் தோழர்களுடன் அன்பாய்ப் பழகும் பண்புள்ளவர்கள். அதிலும் குறிப்பாக பிணியுற்றவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

கடுமையாக நோயுற்றிருந்த ஸஅத் (ரலி) அவர்கள் தமக்கு மரணமே வந்துவிடுமோ என அஞ்சி சொத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்ய முன்வருகிறார்கள். அது குறித்து நபியவர்களிடம் விளக்கம் கேட்டபொழுது மூன்றில் ஒரு பாகத்திற்கு மேல் தர்மம் செய்ய வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடுத்து விடுகிறார்கள்.

ஏனெனில் மரணவேளையோ என அஞ்சுகிற கட்டத்திலுள்ள ஒருவரின் சொத்தில் வாரிசுகளின் உரிமை சம்பந்தப்படுகிறது. எனவே அவர்களின் உரிமைக்குப் பாதிப்பு வராத வகையில்தான் மரண சாஸனம் அமைதல் வேண்டும்.

ஆனால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பவரோ லேசான நோய் கண்டிருப்பவரோ எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் செய்யலாம். மூன்றில் இரண்டு பகுதியோ பாதியோ – தன் விருப்பப்படி அவர் தர்மம் செய்யலாம். ஏன், சொத்து முழுவதையும்கூட அவர் தர்மம் செய்யலாம்! ஆனால் ஒரு நிபந்தனை: வேறொரு வழியில் அவருக்குப் போதிய வருமானம் கிடைப்பதாய் இருக்கவேண்டும். அதனைக் கொண்டு அவர் தனது எதிர்காலப் பொருளாதார நிலையைச் செம்மைப் படுத்திக்கொள்ள இயல வேண்டும். இல்லையெனில் முழுச்சொத்தையும் தர்மம் செய்தல் ஆகாது.

ஆக, ஸஅத் (ரலி) அவர்களை, மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்ய அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் – இதுவும் அதிகம்தான் என்றும் கூறினார்கள்.

இதிலிருந்து சொத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்குக் குறைவாகவே தர்மம் அளிக்குமாறு மரண சாஸனம் அமைந்திட வேண்டும். அதுவே சிறந்தது என்று தெரியவருகிறது.

இதனால்தான், ‘மக்கள் மூன்றில் ஒரு பாகத்தைக்கூட தவிர்த்துக் கொண்டு நான்கில் ஒரு பாகத்தைத் தர்மம் அளிக்குமாறு மரணசாஸனம் செய்யக் கூடாதா?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்

மேலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மரணத் தருவாயில் தமது சொத்தில் ஐந்தில் ஒரு பாகத்தை தர்மம் செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு –

‘அல்லாஹ் தனக்கு எந்தப் பங்கினைப் பொருந்திக் கொண்டானோ அதையே நானும் பொருந்திக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள் – போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருள்களில் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்று குர்ஆனில் (8 : 41) வந்துள்ள வசனத்தைக் குறித்தே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இன்றைய காலத்தில் மக்கள் தங்களது சொத்தில் மூன்றில் ஒருபாகத்தை தர்மம் வழங்கும்படி மரணசாஸனம் செய்வது சிறந்த நடைமுறையல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அது நான்கில் ஒரு பாகமாகவோ ஐந்தில் ஒரு பாகமாகவோதான் இருக்க வேண்டும். அதுவே சிறந்தமுறை.

அபூபக்ர்(ரலி) அவர்களைப் பின்பற்றி ஐந்தில் ஒரு பாகத்தை மரணசாஸனம் செய்வதுதான் சிறந்தது என்று நம்முடைய ஃபிக்ஹு – சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.

‘நீர் உம் வாரிசுகளைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது., மக்களிடம் கைநீட்டி யாசகம் கேட்கும் நிலையில் அவர்களை விட்டுச் செல்வதைவிட! ”

– மரணத்தைத் தழுவ இருப்பவர் தனது சொத்தை வாரிசுகளுக்காக விட்டுச் செல்வதே நேரியமுறை என்பதற்கு இது நேரடியான ஆதாரமாகும். அவரது சொத்தை, வாரிசுகள் கைப்பற்றுவது நிர்பந்தமாகத்தான். ஆகையால் அவருக்கு எந்தப் புண்ணியமும் இல்லை என்று சொல்வது தவறு. வாரிசுகளுக்காகச் சொத்தை விட்டுச் செல்வதால் நிச்சயம் அவருக்கு நற்கூலி உண்டு.

இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இதுவே சிறந்தது. அதாவது, சொத்தை வாரிசுகளுக்காக அவர் விட்டுச் சென்றால் அதை ஆண்டு அனுபவிப்பது யார்? அவருடைய மனைவி – மக்கள்தாம். உறவினர்கள்தாம்! ஆனால் தர்மம் கொடுத்து விட்டுச் சென்றால் அதனை அனுபவிப்பது அந்நியர்கள்!

ஓரு நபிமொழி கூறுகிறது: ‘உறவினருக்குத் தர்மம் செய்வது அந்நியர்களுக்குத் தர்மம் கொடுப்பதைவிடச் சிறந்தது. ஏனெனில் முந்தையது தர்மமாகவும் உறவினர்களை ஆதரிப்பதாகவும் உள்ளது’ இந்த வகையில் இரட்டிப்பு நன்மைக்கு அது காரணியாக அமைகிறது.

‘அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடி எந்த ஒரு தர்மம் நீர் செய்தாலும் அதன் பொருட்டால் உமக்கு நற்கூலி வழங்கப்படாமல் போகாது”

– அதாவது எந்த ஒருபொருளையும் தர்மம் செய்யலாம். பணம், ஆடை, போர்வை, விரிப்பு, உணவுப்பொருள்கள் என எதனையும் தர்மம் செய்யலாம். எதுவாயினும் அல்லாஹ்வுக்காக என நிய்யத் – எண்ணம் வைத்து வழங்கினால் நிச்சயம் அதற்குக் கூலி உண்டு.

‘உம் மனைவியின் வாயில் ஊட்டும் உணவு பானத்திற்குக் கூட (நற்கூலி உண்டு) ”

அதாவது, மனைவியின் தேவைகளுக்காகச் செலவு செய்வதற்கும் நற்கூலி உண்டு. அது கணவன் மீது கடமையானதாயினும் சரியே! அதனை நிறைவேற்றாத கணவனை நோக்கி, என் தேவைக்குச் செலவு செய்யப் பணம் தாருங்கள்., இல்லையெனில் என்னை மணவிலக்குச் செய்து விடுங்கள் என்று சொல்லும் உரிமை மனைவிக்கு உண்டு! அந்த அளவுக்குக் கண்டிப்பான செலவினங்களைக்கூட நிய்யத் – எண்ணத் தூய்மையுடன் செய்தால் அவற்றிற்காகவும் அல்லாஹ் கூலி வழங்குகிறான்.

இதேபோன்றுதான் உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் பெற்றோருக்காக ஏன், உங்கள் தேவைக்காகவே கூட நீங்கள் கஞ்சத்தனம் செய்யாமல் தாராளமாகச் செலவு செய்தால் – அது அல்லாஹ்வின் விருப்பப்படி அமையும்போது எல்லாவற்றிற்கும் நற்கூலி பதிவு செய்யப்படுகிறது.

‘என் தோழர்களெல்லாம் மதீனாவுக்குத் திரும்பிச்செல்ல நான் இங்கேயே தங்கிடுமாறு விடப்படுவேனா? ”

– அதாவது, நோயின் காரணமாக நான் மதீனா திரும்ப இயலாமல் இங்கேயே- மக்காவிலேயே என் வாழ்க்கை முடிந்து விடுமா?

‘அப்படி நீர் தங்கிடுமாறு விடப்பட்டு அப்போது அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடி எந்த ஓர் அமலை நீர் செய்தாலும் அதற்குப் பகரமாக ஒருசிறப்பை -ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உமக்கு உயர்த்தவே செய்வான் ”

– அதாவது, நீர் மக்காவிலேயே தங்கியிருக்குமாறு விடப்பட்டாலும் – மக்காவை விட்டு வெளியேற உம்மால் இயலாது என வைத்துக் கொண்டாலும் – நீர் எந்த மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்தீரோ அந்த மக்காவில் வைத்து நீர் எந்த அமல் செய்தாலும் நல்ல நிய்யத் – நல்லெண்ணத்துடன் செய்தால் அதற்கான நன்மையை – புண்ணியத்தை அல்லாஹ் உமக்கு அளிக்கவே செய்வான். அருட்பேறுகள் நிறைந்த சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை அல்லாஹ் உமக்கு நிச்சயம் வழங்குவான்.

‘ஆனால் உமக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்படலாம் ”

-அதாவது, ஸஅத்(ரலி)அவர்கள் நோயிலிருந்து குணம் அடைந்து நீண்ட காலம் வாழலாம் என நல்லாதரவு வைத்து நபியவர்கள் கூறிய வார்த்தையாகும் இது! அப்படியே நிகழவும் செய்தது. ஸஅத் (ரலி)அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். நிறைய குழந்தைச் செல்வங்களையும் கண்டார்கள். பதினேழு ஆண் குழந்தைகளும் பன்னிரெண்டு பெண் குழந்தைகளும் அவர்களுக்குப் பிறந்தன என்று வரலாறு கூறுகிறது!

‘உம்மின் மூலம் நிறையப்பேர் பயனடையும் வகையில், உம்மின் மூலம் நிறையப்பேர் நஷ்டம் அடையும் வகையில் (நீண்டகாலம் வாழ்வீர்)’

– இதுவும் நிகழ்ந்தது. ஸஆத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பல இஸ்லாமியப் போர்களில் முக்கிய பங்கு வகித்து மகத்தான வெற்றிகள் பல சூடினார்கள். அவர்களின் மூலம் நிறையப்பேர் பயனடைவர்கள் என்பது முஸ்லிம்களைக் குறிக்கும். நிறையப்பேர் நஷ்டம் அடைவார்கள் என்பது நிராகரிப்பாளர்களைக் குறிக்கும்.

இதுவே முன்னேற்றம்

‘யா அல்லாஹ்! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை செல்லுபடியாக்குவாயாக! ”

– தம் தோழர்களின் ஹிஜ்ரத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அதற்கான கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும். அதில் எந்தக் குறையையும் வைத்திடக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறு ஹிஜ்ரத் செல்லுபடியாகுவதற்கு இரண்டு நிலைகள் தேவை.

1) ஈமானில் – நம்பிக்கையில் நிலைத்திருத்தல். ஏனெனில் ஒருவர் ஈமானில் நிலைத்திருந்தால்தான் ஹிஜ்ரத்திலும் நிலைத்திருப்பார்.

2) மீண்டும் மக்காவில் குடியேறாதிருத்தல். ஏனெனில் ஒருவர் அல்லாஹ் – ரசூலின் பக்கம் ஹிஜ்ரத் மேற்கொண்டு ஓர் ஊரைத் துறந்து விட்டாரெனில் அது தர்மம் செய்துவிட்ட பொருளைப் போன்றாகிறது. தர்மம் கொடுத்த பொருளை மீண்டும் பெறலாகாது. இதுபோலவே எந்நாட்டைத் துறந்து ஹிஜ்ரத் மேற்கொண்டாரோ அந்நாட்டில் மீண்டும் குடி புகலாகாது.

இதேபோன்றுதான், ஒருமனிதன் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி தீமைகளைக் கை விட்டுவிடுவதும்! தீய பாட்டுகள், தீய படங்கள், ஆபாசப் பத்திரிகைகள், ஆபாசப்படங்கள், இதேபோல் தீய நண்பர்கள், தீய பழக்கங்கள் ஆகியற்றை ஒருவர் விட்டொழித்து விட்டாரெனில் பிறகு இவற்றை மீண்டும் வாங்கலாமா? தொடங்கலாமா? என்று சிந்திக்கக்கூடாது. தீமைகளை விட்டொழித்தது விட்டொழித்ததாகவே இருக்கவேண்டும். அவற்றை மீண்டும் தொடர்வது இறைவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும்! நன்மையின் பக்கம் அடியெடுத்து வைத்தபின் தீமைக்குத் திரும்பக்கூடாது. தீமைகளை விட்டும் விலகிடும்போது – அது அல்லாஹ்வுக்காக எனும் பொழுது அது நிரந்தரமாக இருந்தால்தான் அது பயனளிக்கும். நற்கூலியைப் பெற்றுத்தரும்.

இதோ! நபி(ஸல்)அவர்கள் மேலும் பிரார்த்தனை செய்ததைப் பாருங்கள். ‘யா அல்லாஹ்! என் தோழர்களை, அவர்கள் வந்த வழியிலேயே திருப்பி விடாதே” – இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதோர் உண்மை. ஈமான்- இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புக் கொள்கைக்குத் திரும்புதல் என்பதென்ன? கண்ணியத்திற்குப் பின் இழிவைத் தேடிக்கொள்வது போன்றதுதானே. சிகரத்தை எட்டிப்பிடித்த பின்னால் கீழ்நோக்கிச் சரிவதற்குச் சமமானதுதானே அது! அழிவிலிருந்து தப்பித்தபிறகு மீண்டும் அழிவை வரவழைப்பது ஒருபோதும் அறிவுடமை ஆகாது.

ஏனெனில் இறைநம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை. முன்னேற்றத்தின் திறவுகோல். தீமைகளை விட்டொழித்து விட்டு நன்மையின் பக்கம் திரும்புவதே உயர்வுக்கும் சிறப்புக்கும் உத்திரவாதம். மாறாக மீண்டும் நிராகரிப்புப் போக்கை மேற்கொள்வதும் நன்றி மறந்து பாவங்கள் புரியத் தொடங்குவதும் நிச்சயம் பின்னடைவேயாகும்!

இந்நபிமொழியில் மேலும் பல விஷயங்கள் தெரியவருகின்றன.

  • ஹலாலான-ஆகுமான வழியில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம்., அது தவறல்ல. ஆனால் அதற்கான ஜகாத்தை கொடுத்திட வேண்டும்.
  • மரணத்தின் பிடியில் இருப்பவர் சொத்தில் மூன்றில் ஒருபங்கிற்கு அதிகமாகக்கூட தர்மம் செய்யலாம். ஆனால் வாரிசுகள் அதனை அனுமதிக்க வேண்டும்.
  • இந்நபிமொழியின் பயன்களில் முக்கியமானது ஆலோசனைப் பண்பாகும்.
  • -ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டுள்ளார்கள். அதுவும் தீன் – மார்க்கப் பிரச்னைகளில் அது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.

அல்லாஹ் தன் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களையே முக்கியமான பிரச்னைகளின்போது தோழர்களிடம் ஆலோசனை செய்து செயல்படுமாறு பணிக்கிறான்:

‘இவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வீராக. மேலும் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக. மேலும் தீனின் பணிகளில் இவர்களிடம் ஆலோசனை செய்வீராக. (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால் அப்பொழுது அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பீராக. திண்ணமாக அல்லாஹ் தன்னை முழுமையாகச் சார்ந்து செயல்படுவோரை நேசிக்கிறான்” (அல்குர்ஆன் 3:159)

மக்களில் சிலர் தமக்கே எல்லாம் தெரியும் என்று கருதுகிறார்கள். பிறரிடம் ஆலோசனை கேட்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆணவம் கொள்கின்றனர். இதனாலேயே தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். அதனால் அவர்களின் முயற்சிகள் பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றன! வேறுபல கெடுதிகளும் விளைகின்றன.

இன்னும் சிலர் – நாம் சத்தியத்தை எடுத்து வைக்கிறோம். இதுவிஷயத்தில் எதற்கும் நாம் அஞ்சப் போவதில்லை என்று வீரவசனம் பேசுகின்றனர். அதனால் குறுகிய வட்டத்தில் சிந்திக்கிறார்கள். எது நன்மை பயக்கும்? எது தீங்கு விளைவிக்கும்? என்று விரிவான முறையில் யாரிடமும் ஆலோசனை கலப்பதில்லை. முழுச் சமுதாயத்துடனும் தொடர்புடைய எவ்வளவு முக்கியமான விவகாரமானாலும் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். சுயமாகத்தான் செயல்படுகிறார்கள். இறுதியில் அவர்களின் நடவடிக்கையினால் ஏற்படும் தீய விளைவுகளைச் சமுதாயம் முழுவதும் சந்திக்க நேரிடுகிறது!

இவர்களின் நிய்யத் – எண்ணம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதாது. விவேகத்துடன் செயல்படும் திறன் இருக்க வேண்டும். ஒரு மனிதன் நல்லெண்ணத்திற்காகப் புகழப்படலாம். ஆனால் விவேகம் இல்லாத பொழுது அது இகழ்ச்சியாகவே வந்து முடியும். நல்லெண்ணம் என்பது வேறு. விவேகமான நடவடிக்கை – பயன்பாட்டின் சுற்றளவு விரிவான செயல்திறன் என்பது வேறு என்பதை நாம் மறந்து விடக்கூடாது!

எனவே பாரதூரமான விளைவுளை ஏற்படுத்தும் விஷயங்களிலாவது அனுபவமிக்கவர்களிடம் தீன் பணிகள் செய்துவரும் இயக்கத்தவர்களிடம்-சமுதாய ஆர்வலர்களிடம் ஆலோசனை கலந்து கூட்டாகச் செயல்படும் சிந்தனை வளர வேண்டும்.

இதேபோல ஆலோசனை வழங்குபவரும் வினயத்துடன் வழங்க வேண்டும். ஆலோசனை கேட்டு வந்திருப்பவர் இதனை எதிர்பார்த்துத்தான் வந்துள்ளார். அதையே நமது கருத்தாகச் சொல்லிவிடலாம் என்பது கூடாது! இது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போக்காகும். எது உண்மையோ – எது பயனுள்ளதோ – சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடியதோ அதை மேற்கொள்ளுமாறுதான் ஆலோசனை கூறிட வேண்டும். அதனைச் செயல்படுத்துவதற்கே ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். ஆலோசனை கேட்டு வந்திருப்பவர் அதை ஏற்றாலும் ஏற்காவிட்டலும் சரியே!

அறிவிப்பாளர் அறிமுகம் : ஸஅத் பின் அபூ வகாஸ் (ரலி) அவர்கள்

ஸஅத் பின்அபீ வகாஸ் (ரலி)அவர்களின் குறிப்புப் பெயர் அபூ இஸ்ஹாக். அவருடைய தந்தை பெயர் மாலிக். ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களில் இவர் ஐந்தாமவர் அல்லது ஏழாமவர். நபியவர்களால் சுவனத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேர்களில் இவர்களும் ஒருவர். உமர் (ரலி) அவர்களது மரணத்தின்பொழுது அடுத்த கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் ஆறுபேர் கொண்ட ஆலோசனை குழுவில் இடம் பெற்றிருந்தார்கள்! இறைவழிப் போரில் அம்பு எய்திய முதல் நபரும் இவர்களே! பத்று போரிலும் ஹுதைபிய்யா உடன்படிக்கையிலும் ஏனைய போர்களிலும் கலந்து கொண்டார்கள். இராக் தேசத்தை வெற்றி கொண்டது இவர்கள்தாம்.

வீரம், இறைமார்க்கத்தின் விஷயத்தில் கண்டிப்பான போக்கு, நபிவழி பின்பற்றல், உலகில் பற்றற்ற நிலை, பேணுதல், வாய்மை, பணிவு ஆகியவற்றில் இவர்கள் பெற்றிருந்த தனிச்சிறப்புகள் பிரபலமானவை. مجاب الدعوة (பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுபவர்) என்று பெயர் பெற்றிருந்தார்.

தடித்த உடல்வாகு கொண்டவராகவும் குள்ளமானவராகவும் இருந்த இவர்கள் கோதுமை நிறத்தவர் ஆவார். ஹிஜ்ரி 55 ஆம் ஆண்டு, மதீனாவில் இருந்து 10 மைல் தொலைவிலான அகீக் என்ற இடத்தில் மரணம் அடைந்தார்கள். இவருடைய ஜனாஸாவை அங்கிருந்து மக்கள் தம் தோள்களில் சுமந்து கொண்டு வந்து மதீனாவில் பகீஃ மண்ணறையில் நல்லடக்கம் செய்தார்கள். ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் மூலம் 270 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேள்விகள்

1) மரணப்படுக்கையில் இருப்பவர் தர்மம் செய்வதாயின் அதற்கான நெறி முறை என்ன? விரிவாக விளக்கவும்.

2) ‘அல்லாஹ் தனக்கு எந்தப் பங்கினைப் பொருந்திக் கொண்டானோ அதனையே நானும் பொருந்திக் கொள்கிறேன்” என்று சொன்னது யார்? இதன் விளக்கம் என்ன?

3) ஹிஜ்ரத் செல்லுபடியாகுவதற்குரிய இரண்டு நிபந்தனைகள் என்ன?

4) இந்நபிமொழி தரும் படிப்பினைகள் சிலவற்றை விவரிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *