Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-19)

19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம்

ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன்.

‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்”

‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன்.

‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள்.

நான் சொன்னேன்: மலம், சிறுநீர் கழித்த பிறகு (உளூ செய்யும்போது) காலுறைகளின் மீது மஸஹ் செய்வதென்பது என் மனத்தில் ஒருநெருடலை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர். எனவேதான் உங்களிடம் விளக்கம் கேட்கலாம் என வந்தேன். நபியவர்கள் இதுவிஷயத்தில் ஏதேனும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா”?

அவர்கள் சொன்னார்கள்: ‘ஆம்! நாங்கள் பயணம் மேற்கொண்டால் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ (உளூவின்பொழுது) எங்கள் காலுறைகளை மூன்று பகல் – இரவுகளுக்குக் கழற்ற வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களை ஏவுவார்கள் – பெருந்துடக்கு நீங்கலாக!

‘அன்பு கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏதாவது கூறக் கேட்டிருக்கிறீர்களா? ”

‘ஆம்! ஒரு தடவை நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் புறப்பட்டிருந்தோம். நாங்கள் அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது ஒரு நாட்டுப்புற மனிதர், அவருக்கே உரிய உரத்தகுரலில் நபி(ஸல்) அவர்களை நோக்கி- ஏ முஹம்மத்! என அழைத்தார். நபி(ஸல்) அவர்களும்- அவரது குரலுக்கு ஈடாக குரலுயர்த்தி ‘பெற்றுக் கொள்வீராக” என்று அவருக்குப் பதில் அளித்தார்கள்.

நான் சொன்னேன்: ‘நாசமாகப் போவாய்! குரலைத் தாழ்த்து! நீ நபியவர்களின் சமூகத்தில் இருக்கிறாய்! இப்படிக் குரலுயர்த்துவது உனக்குத் தடை செய்யப்பட்டுள்ளது!” என்று. அதற்கு அவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் குரலைத் தாழ்த்தமாட்டேன்.

அந்த நாட்டுப்புறத்துக்காரர் கேட்டார்: ‘ஒரு மனிதன் தன் சமூகத்தினரை நேசிக்கிறான். ஆனால் (அமல் விஷயத்தில்) அவர்களைச் சென்றடையாமல் இருக்கிறான்?”

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ஒரு மனிதன் யாரை நேசித்தானோ அவர்களுடனேதான் மறுமைநாளில் இருப்பான் – இவ்வாறாகத் தொடர்ந்து பலவிஷயங்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் மேற்குத் திசையில் ஒரு வாசல் படைக்கப்பட்டிருப்பது பற்றி எடுத்துரைத்தார்கள். அது எத்துணை விசாலமானது என்றால், அதன் அகலத்தின் நடைபயணம் (அல்லது ஒருபயணி அதன் அகல வாட்டில்) நாற்பது அல்லது எழுபது ஆண்டுகள் நடந்து செல்லும் அளவு இருக்கும். (அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸுஃப்யான் (இப்னு உயைனா) என்பவர் கூறுகிறார்: ‘அது ஷாம் தேசத்தை நோக்கியதாகும்’)

வானங்கள், பூமியைப் படைத்த காலத்திலேயே அந்த வாசலையும் அல்லாஹ் படைத்து விட்டான். அந்தவாசல் பாவமீட்சிக்காகத் திறந்தே இருக்கும். சூரியன் மேற்கில் உதிக்கும் வரையில் அது மூடப்படமாட்டாது” – இதனை இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் இது, ஹஸன் – ஸஹீஹ் என்றும் சொல்லியுள்ளார்கள்.

தெளிவுரை

பாவமீட்சி தேடுவதற்கான காலம் எப்பொழுது முடிவடையும் என்பதை விளக்கும் நபிமொழிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்காகவே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனை இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த நபிமொழியிலிருந்து இன்னும் பலவிஷயங்கள் தெரிய வருகின்றன. முதலாவதாக, கல்வியின் சிறப்பு. கல்வி கற்கும் மாணவர்களுக்காக வானவர்கள் இறக்கையைத் தாழ்த்துகிறார்கள்.  அதாவது, அவரது முயற்சிக்கு உதவியும் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அளிக்கிறார்கள்.

இங்கு இல்மு-கல்வி எனும் வார்த்தை நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்தின் கல்வியைச் சுட்டுகிறது. அத்துடன் அதற்கு வலிவும் பொலிவும் சேர்க்கிற அனைத்துக் கல்விகளுக்கும் அவற்றின் உபகரணங்களுக்கும் இந்தச் சிறப்பு உண்டு.

ஸிர்ரு இப்னு ஹுபைஸ்(ரஹ்) என்பவர் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்! அவரது உள்ளத்தில் ஓர் ஐயம் எழுந்தது. காலுறைகளை அணிந்திருப்பவர் உளூ செய்யும்பொழுது அவற்றின் மீது மஸஹ்செய்வது (ஈரக்கையால் தடவுவது) கூடுமா? குர்ஆனில்-‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காகச் செல்லும் பொழுது உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள். மேலும் உங்கள் தலைகளை ஈரக்கையால் தடவுங்கள். மேலும் உங்கள் கால்களைக் கணுக்கால்கள் வரை கழுவுங்கள்” (5:6) என்று இறைவன் கட்டளையிட்டபடி பாதங்களைக் கழுவ வேண்டியதில்லையா? என்பதே அந்த ஐயம்!

இதற்கு பிரபல நபித்தோழர் ஸஃப்வான்(ரலி) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இதிலிருந்து-காலுறை மீது மஸஹ் செய்வதுதான் சிறந்தது என்பது தெரிய வருகிறது!

புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ள இன்னொரு நிகழ்ச்சியும் இதற்கு ஆதாரம் சேர்க்கிறது. முஃகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நான் ஒருதடவை நபி(ஸல்) அவர்களுடன் பயணம் சென்றிருந்தேன். நபியவர்கள் உளூ செய்தார்கள். அப்பொழுது நான், அவர்களின் காலுறைகளைக் கழற்றுவதற்காகக் குனிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

‘அவற்றை விட்டுவிடும். நான் அவற்றைச் சுத்தமான நிலையிலேயே மாட்டியுள்ளேன்” பிறகு நபியவர்கள் அவற்றின்மீது மஸஹ் செய்தார்கள். – ஆனால் காலுறைகளின் மீது மஸஹ் செய்யலாம் என்பதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன.

1) உளூ செய்துகொண்டு காலுறைகளை அணிந்திருக்க வேண்டும். மேலே சொன்ன-முஃகீரா(ரலி) அவர்களது அறிவிப்பில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே தயம்மும் செய்துகொண்டு காலுறைகள் அணிந்திருந்தால் பிறகு உளூ செய்யும்பொழுது அவற்றின் மீது மஸஹ் செய்வது கூடாது. ஏனெனில் தயம்மும் என்பது உளூவுக்கான மாற்று ஏற்பாடுதான்! அத்துடன் அது முகத்திலும் கைகளிலும் மட்டும் மேற்கொள்ளும் சுத்தமே ஆகும்!

2) சிறு துடக்கை நீக்குவதற்கான உளூவில் மட்டுமே மஸஹ்! பெருந்துடக்கை நீக்குவதற்கான குளிப்பில் மஸஹ் செய்வது போதுமாகாது! பெருந்துடக்கு நீங்கலாக என இந்நபிமொழியில் வந்துள்ள வார்த்தை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் காயத்திற்காக ஓர் உறுப்பில் கட்டுப்போடப்பட்டு அது அவிழக்கூடாத நிலையில் இருந்தால் குளிப்பின்போது அதன் மீது மஸஹ் செய்யலாம். தலை மஸஹ் குளிப்பில் இல்லை. அத்துடன் – பெருந்துடக்கை நீக்குவதற்கான சுத்தம் பெரிய அளவிலானதாக உள்ளது. எனவே அதில் காலுறைகளைக் கழற்றிப் பாதங்களைக் கழுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது! இவ்வாறாக கியாஸ் எனும் ஒப்பீட்டாய்வும் கடமையான குளிப்பில் காலுறைகளின் மீது மஸஹ் இல்லை என்பதையே வலியுறுத்துகிறது!

3) நபி(ஸல்) அவர்கள் வரையறை செய்த காலத்திற்குள் மஸஹ் செய்தல் இருக்க வேண்டும். அலீ(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ‘ஊரில் தங்கியிருப்பவருக்கு ஒருபகல் ஓர் இரவு என்றும் பயணிக்கு மூன்று பகல்கள் என்றும் (காலுறையின் மீது மஸஹ் செய்வதற்கு) நபி(ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்தார்கள்’ (நூல்: முஸ்லிம்)

நிர்ணய காலத்திற்குப் பிறகு உளூ செய்யும்பொழுது பாதங்களைக் கழுவியாக வேண்டும். மேலும் மஸஹ் அனுமதிக்கபட்ட காலத்தில்கூட இடையில் எந்தச் சூழ்நிலையிலும் காலுறைகளைக் கழற்றாமல் இருக்க வேண்டும். அப்படிக் கழற்றியாக வேண்டியது வந்தால் அத்துடன் அனுமதி காலம் முடிவடைந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். நிர்ணய காலம் முடிந்த நேரத்தில் நீங்கள் உளூவுடன் இருந்தால் நீங்கள் அதனுடனேயே நீடிக்கலாம். பிறகு சுத்தம் நீங்குகிறபோதுதான் மஸஹ்க்கான அனுமதி முடிவுக்குவரும். பிறகு செய்யும் உளூவில் பாதங்களைக் கழுவி நீங்கள் காலுறைகளை அணிந்தால் அதிலிருந்து புதிய கால அவகாசம் தொடங்கும்.

அந்த நாட்டுப்புறத்தாரின் கேள்வி!

விளக்கம் கேட்டுவந்த நாட்டுப்புறத்தார் நபி(ஸல்) அவர்களைக் குரலுயர்த்தி அழைத்தபொழுது-அப்படி அழைப்பது கூடாது. நபியவர்களின் சமூகத்தில் குரலுயத்திப் பேசுவதே தடை என்று அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இது பின்வரும் இறைவசனத்தின் கட்டளையாகும்:

‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களது குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! மேலும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் குரலுயர்த்திப் பேசுவது போல் நபியிடம் உயர்ந்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த நற்செயல்கள் அனைத்தும் – நீங்கள் அறியாத நிலையிலேயே வீணாகிப் போய்விட வேண்டாம்” (49: 3)

ஆனாலும் நாட்டுப்புற மக்கள் ஒழுங்குமுறைகள் அறியாதவர்கள். ஏனெனில் அவர்கள் நகரத்து மக்களை விட்டும் தூரமானவர்கள். நற்கல்வியும் நல்ல பழக்கவழக்கங்களும் கிடைக்கப் பெறாதவர்கள்! அதனால் தான் அவர் நபியவர்களைக் குரலுயர்த்தி அழைத்தார். குரலைத் தாழ்த்தமாட்டேன் என்றும் சொன்னார்.

அந்த மனிதருக்கு அவரைப் போலவே குரலுயர்த்திப் பதிலளித்து, அவரது செயல் விரும்பத்தக்கதல்ல என்று உணர்த்தினார்கள், நபியவர்கள். இந்தப் பாணி நயமானது. எவர் மனத்தையும் புண்படுத்தாதது. ஏனெனில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அனைவரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நற்குணம் கொண்டவர்கள். அவரவரது அறிவின் கொள்ளளவிற்கு ஏற்ப அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர்கள்!

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, அந்த நாட்டுப் புறத்து மனிதர் கேட்ட கேள்வியே! அது மிக முக்கியமானது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில் அதனினும் முக்கியமானது. அதனை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

‘ஒருமனிதன் யாரை நேசித்தானோ அவர்களுடனேயே மறுமை நாளில் இருப்பான்”

ஆகா! எத்துணை மகத்தான அருட்கொடை! உண்மையான அன்புக்குக் கிடைத்த பலன் எத்துணை சிறந்தது?

மற்றொரு தடவை அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசித்த மனிதரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:’ நிச்சயமாக யாரை நீர் நேசித்தீரோ அவர்களுடனேயே இருப்பீர்”

இதனை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘நான் ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களையும் அபூபக்ர், உமர் (ரலி-அன்ஹும்) ஆகியோரையும் நேசிக்கிறேன். மறுமை நாளில் அவர்களுடன் இருப்பதையே விரும்புகிறேன்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

இவ்வாறே நாமும் அல்லாஹ்வையும் நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் குறிப்பாக நேர்வழி பெற்ற கலீஃபாக்களையும் நேசிப்போம். அதற்குப் பின்னர் வாழ்ந்த தீனின் – இறைமார்க்கத்தின் முன்னோடிகளையும் இமாம்களையும் நேசிப்போம். அவர்களின் மீதான அன்பை, நம் உள்ளத்தில் நிலைப்படுத்திட உறுதியேற்போம். அதற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குவோம்!

தன் சமுதாயத்தின்மீது உண்மையான அன்பு செலுத்தும் ஒருமுஸ்லிம் நாளை மறுமை நாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார். அனைவரும் நபி(ஸல்) அவர்களின் தடாகத்தில் தண்ணீர் அருந்தும் பேறு பெறுவார்கள் என்பது எத்துணை மகத்தான நற்செய்தி!

அதே நேரத்தில் அந்த முஸ்லிம் இஸ்லாத்தின் எதிரிகளை வெறுத்திட வேண்டும். அது அவர் மீதான கடமை என்பதையும் மறந்திடக் கூடாது. அவர்கள் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பகைவர்கள். தவ்ஹீத் – ஏகத்துவக் கொள்கைக்கும் இறைத்தூதரின் ஸுன்னத்- நடைமுறைகளுக்கும் எதிராகச் செயல்படுபவர்கள் எனத் தெரிந்த பிறகும் ஒருமுஸ்லிம் அவர்களுடன் நட்போ நேசமோ வைத்துக்கொள்ளக் கூடாது! இறைவன் கூறுகிறான்.

‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்”
(குர்ஆன் 60: 1)

ஆக, ஒருபொதுவான சட்ட நியதியை இந்நபிமொழி நமக்கு வழங்குகிறது: ஒரு மனிதன் யாரை நேசித்தானோ அவர்களுடனேயே இருப்பான். நல்லவர்களை நேசித்தால் நல்லவர்களுடன் இருப்பான். தீயவர்களை நேசித்தால் அத்தீயவர்களுடன் தான் இருப்பான்!

அறிவிப்பாளர் அறிமுகம் – ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்)

ஸிர்ரு பின் ஹுபைஸ் அவர்கள் தாபிஈன் (எனும் நபித்தோழர்களை அடுத்த) தலைமுறையைச் சேர்ந்தவர். இவர்கள் அறியாமைக் காலத்தையும் கண்டுள்ளார்கள். ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்கள் நீங்கலாக உமர்(ரலி) அவர்கள் மற்றும் அலீ(ரலி) அவர்கள் ஆகியோரிடமும் ஹதீஸ்களைச் செவியேற்றுள்ளார்கள். மேலும் புகழ்பெற்ற நபித்தோழர்களாகிய – உபை பின் கஅப், இப்னு மஸ்வூத், அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரலி) போன்றவர்களிடம் இருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். 122 வயது வரை வாழ்ந்த இவர்கள் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் காலத்தில் ஜமாஜிம் யுத்தத்தில் மரணம் அடைந்தார்கள்.

கேள்விகள்

1) கல்வியின் சிறப்பை சுருக்கமாக விளக்கவும்.

2) மஸஹ் என்றால் என்ன? அதன் சட்டங்களை விளக்கவும்.

3) இந்நாட்டுப்புற அரபி கேட்ட கேள்வி என்ன? அதற்கு நபியவர்கள் அளித்த பதில் என்ன? அதில் அமைந்துள்ள அழகிய முன்மாதிரி என்ன?

4) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

5) நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் யாவை? அது வலியுறுத்தப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடவும்.

6) நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவதன் தனிச் சிறப்பை எழுதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *