Featured Posts

தவறான புரிதலுக்கு தக்க பதில்.

சகோதரர் நேசகுமார், விமர்சிக்கும் நோக்கத்தில் இஸ்லாத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் அழைத்து அவர் குறிப்பிட விரும்புவது இதுதான்…

//இங்கு நான் சலாஹீதீன் மற்றும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்புவது இதுதான். இஸ்லாத்தின் தத்துவக் கொள்கைகளுள் ஒன்று, முகமது நபி அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றவர்தாம் என்பது. அவர் கடவுள் அல்ல. அவர் தப்பே செய்யாதவர் அல்ல. அவர் பல முறை தவறுகள் செய்திருப்பதையும், வருந்தியிருப்பதையும், குழம்பியிருப்பதையும், அவரே தாம் தவறு செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதையும் ஆரம்ப காலத்திய இஸ்லாமிய ஆவணங்களே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்கு இஸ்லாம் அறிந்த எந்த அறிஞரும் இவற்றை எடுத்துரைப்பர். பிற்காலத்திலேயே, இந்த நபி வழிபாடு ஆரம்பித்தது. நபி வழிபாடு என்றால், கோவில் எடுத்து சிலை வைத்து வழிபாடு செய்வது அல்ல. கடவுளைப் போன்று அவரை மானுடப்பிறழ்வுகளுக்கு அப்பாற்பட்ட அமானுடராக கருதுவதே நபி வழிபாடாகும்.//

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே என்ற மனித இயல்பை இறைத்தூதர் முஹம்மது நபிக்கும் பொருத்துகிறார். இஸ்லாத்தின் தேர்ச்சியின்மை சகோதரர் நேசகுமார் இப்படி ஒரு கருத்தை வைத்திருக்கிறார். அவரின் தவறான கருத்து, முஹம்மது நபி இறைவனிடமிருந்து இறைச் செய்தியாகப் பெற்று மக்களுக்குப் பிரச்சாரம் செய்த முழு இஸ்லாத்தையும் சந்தேகிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதைத் தவிர்க்க இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

முஹம்மது நபி மனிதரே.

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும், அந்த மக்கள் பேசுகின்ற மொழியிலேயே, அந்த சமுதாயத்திலிருந்து ஒருவரை நபியாகத் தேர்ந்தெடுத்து அந்த மக்களிடையே இறைத்தூதராக அறிமுகப்படுத்துகிறான் இறைவன். இறைத்தூதர்கள் அனைவரும் மனிதர்களே, என்ற இஸ்லாத்தின் அடிப்படையில் முஹம்மது நபியும் மனிதரே.

(நபியே) நீர் சொல்வீராக, நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே!… (அல்குர்ஆன் 18:110)

முஹம்மது நபியின் பிறப்பு, வளர்ப்பு உண்ணுதல், பருகுதல், தூக்கம், மலஜலம் கழித்தல், இல்லறம், இறப்பு இவையாவுமே மனிதத்தகுதியை கடந்ததாக இருக்கவில்லை – அனைத்து வாழ்வுத்தன்மையிலும் சாதாரண மனிதன் என்ற நிலையிலேயே பலம் – பலவீனத்தைப் பெற்றிருந்தார்.

1.முஹம்மது நபி மக்காவை துறந்து மதீனாவில் அடைக்கலம் புகுந்த ஆரம்ப காலத்தில் மதீனாவாசிகள் விவசாயத்தில் பேரீச்ச மரத்திற்கு மகரந்த சேர்க்கை செய்யும் முறையைப் பார்த்துவிட்டு ”இப்படி செய்ய வேண்டாம்” என்று நபி கூறியதால் மகரந்த சேர்க்கை முறையைக் கைவிட்ட மதீனாவாசிகள் அந்த முறை விளைச்சலை இழந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட முஹம்மது நபி. ”மார்க்க விஷயத்தில் நான் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உலக காரியத்தில் நீங்கள் அறிந்ததை செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

2.அடிமையாக இருந்த பரீரா என்ற பெண்மணி விடுதலை அடைந்ததும் தன் கணவர் முஃகீஸ் என்பவரோடு வாழ விரும்பாமல் விவாகரத்து கேட்கிறார். தன் மனைவியைப் பிரிய மனமில்லாமல் மிகவும் துன்பத்திற்குள்ளாகிறார் முஃகீஸ். அவரின் துன்பத்தைக் கண்ட முஹம்மது நபி அவருக்காக பரீராவிடம் ”நீ முஃகிஸிடம் திரும்பிச் செல்லக்கூடாதா?” என்று கேட்டார். அதற்கு பரீரா ”இறைத்தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்க. முஹம்மது நபி ”(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்” என்றார். அப்போது பாரீரா ”அவர் எனக்குத் தேவையில்லை” என்றார்.

மேற்கண்ட இரு சம்பவங்களும் உலக விஷயத்தில் முஹம்மது நபியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. ஆனால் இறைத்தூதர் என்ற பதவில் எவரும் நெருங்க முடியாத அந்தஸ்தை அடைந்திருந்தார்.

இறைத்தூதர் முஹம்மது நபி.

”நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது… (அல்குர்ஆன் 18:110)

இறைவனோடு வஹீ (இறைச் செய்தி) யின் தொடர்பு உள்ளதால் இறைத்தூதர் பதவியில், இஸ்லாம் மார்க்கத்தில் பின்பற்றப்படத் தகுதியான ஒரே மாமனிதராகத் தனித்து விளங்குகிறார் முஹம்மது நபி. தவறு செய்யும் மனிதயியல்பு இறைத்தூதர் முஹம்மது நபிக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே என்ற சந்தேகத்திற்கிடமில்லாமல் இறைத்தூதர் இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறார் என்பதை கீழ்வரும் இறைவசனம் விளக்குகிறது.

(நபியே) நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்.. (அல்குர்ஆன் 52:48)

தூதுத்துவப் பணியில் இறைத்தூதருக்கு தவறு ஏற்பட்டு விடாமலும் – தவறு ஏற்பட்டால் உடனடியாக திருத்துவதற்காகவும் இறைவனின் நேரடிப் பார்வை தூதுத்துவத்தின் மீது இருந்தது.

1.நபியின் மக்கா வாழ்க்கை ஆரம்பகால பிரச்சாரத்தில், மேல்தட்டினர் என்று அழைக்கப்பட்டவர்கள் முஹம்மது நபியை சந்தித்து, ”நீர் சொல்வதை நாங்கள் ஏற்கிறோம். நீர் எங்களுக்கென்று தனியாக வகுப்பு நடத்த வேண்டும் அதில் கீழ்தட்டினர் எவரும் கலந்து கொள்ளக்கூடாது” என்ற நிபந்தனையை வைத்தார்கள். இதைச் சரிகண்ட நபியைக் கண்டிக்கிறான்.மேல்தட்டு, கீழ்தட்டு என மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை இஸ்லாம் கற்பிக்கவில்லை. ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்த எண்ணி செயல்பட்ட உடனேயே தூதரை இறைவன் கண்டித்து விடுகிறான்.

2.உண்ண அனுமதிக்கப்பட்ட தேனை. முஹம்மது நபி இனி உண்ணமாட்டேன் என்று முடிவெடுத்ததை இறைவன் கண்டிக்கிறான்.

இஸ்லாம் மார்க்கத்தை போதிக்கும் இறைத்தூதர் மீது இறைவனின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்திருக்கிறது. என்பதை மேற்காணும் சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். மனிதன் தவறு செய்பவனே என்ற இஸ்லாத்தின் கருத்தோட்டம், ஒரிறைக் கொள்கையை பிராச்சாரம் செய்த இறைத்தூதர் முஹம்மது நபிக்கு பொருந்தாது – பொருத்தவும் முடியாது.

சகோதரர் நேசகுமார். இறைத்தூதர் அந்தஸ்தை மனிதத்தகுதிக்கு தாழ்த்தி தூதுத்துவத்தை சந்தேகத்திற்குட்படுத்திக் கீழ்கண்ட அவரின் கருத்தை வைக்கிறார்…

//முகமது நபிகளின் வாழ்வு பற்றிய விவாதங்கள், மாறுபட்ட கருத்துக்கள் முஸ்லீம்கள் மற்றும் ஏனையோரிடையே இருந்தாலும், அவர் அப்போது செய்தவையெல்லாம் ஒவ்வொரு முஸ்லீமும் இன்றும் செய்யவேண்டும் என்று வரலாறும், அக்காலச்சூழலும் அறியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மனித குலத்தை 1400 வருடங்கள் பின்னோக்கி கற்காலத்துக்கே எடுத்துச் செல்லும். ஆகவே, அவரது செயல்களின் பிண்ணனியை உணர்ந்து, இக்காலத்துக்கு ஏற்ற உதாரணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை பின் தள்ளுவது இஸ்லாமிய சமுதாயத்திற்கும், ஏனைய சமுதாயங்களுக்கும் நீங்கள் செய்யும் பெரும் சேவையாக இருக்கும். இதை இஸ்லாமிய சமுதாயத்தின் அறிஞர்கள், தலைவர்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும். இதுவே இறைவனுக்காக நீங்கள் செய்யும் சிறந்த இறைக்கொடை(ஜகாத்) ஆக இருக்கும் என்பதே என் கோரிக்கை.//

இவ்வாறு, இஸ்லாத்தை விட்டு வெளியேற முஸ்லிம்களுக்கெல்லாம் மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார். இதை முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும் முன்னெடுத்து செய்ய வேண்டுமாம்.

இஸ்லாத்தை கற்கால மார்க்கமாக்கி, இக்கால உதாரணங்களை மட்டும் நபியின் செயல்களில் முன்மாதிரியாகப் பெற்றுக்கொண்டு மற்ற நபிச்செயல்களைப் புறக்கணிக்கச் சொல்கிறார். இஸ்லாத்தின் ஒரு செயலை வேண்டுமென்றே புறக்கணித்தாலும் அவன் குற்றவாளியாகி விடுவான். என்பதைத் தெரிந்தே இக்கருத்தை வைத்திருந்தால் இது வெளிப்படையான விஷமத்தனம் என்பதை சகோதரர் நேசகுமாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி..

நபி (ஸல்) அவர்கள் தமது 56வது வயதில் ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் மிக விஷேசமாக விமர்சிக்கப்படுவதுண்டு. அதன் உண்மை நிலையை அடுத்த பதிப்பில் பார்ப்போம்.

3 comments

  1. சகோதரரே! நான் இதுவரை அவர் வலைப்பதிவை பார்வையிட்ட வகையில் (நேச குமார்) அவர் இஸ்லாத்தை குறை கூறும் நோக்கோடு மட்டுமே வாதிடுகிறார். இவருக்கு பதிலளித்து நம் நேரத்தை தான் விரயமாக்கி வருகிறோம், அறிந்து கொள்ளவோ. இல்லை அடுத்தவருக்கு எடுத்து சொல்லவோ அவர் இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. அவர் நோக்கம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு ஒரு தவறான புரிதலுடன் விளங்க வைப்பது.

  2. அபூ முஹை

    அன்புள்ள ஜாஃபர்!
    விளக்கங்களை நாம் தனியொருவருக்காக எழுதவில்லை. நடுநிலையாளர்களுக்காக எழுதப்படுகிறது.
    அன்புடன்
    அபூ முஹை.

  3. அபூ உமர்

    /* சகோதரரே! நான் இதுவரை அவர் வலைப்பதிவை பார்வையிட்ட வகையில் (நேச குமார்) அவர் இஸ்லாத்தை குறை கூறும் நோக்கோடு மட்டுமே வாதிடுகிறார். */

    ஜாஃபர் சொன்னது உண்மை.

    மேலும் உங்கள் விபரங்களுக்கு:
    தற்போதைக்கு (அவரின் கூட்டுவலைப்பதிவாளர்களைத்தவிர) மற்றவரின் மறுமொழிகளையும் ஏற்காத வண்ணம் வலைப்பதிவை திருத்தி அமைத்திருக்கிறார். அதாவது நேஷ குமார் அவரின் வலைப்பதிவில் யாருக்கு அனுமதி அளித்து உள்ளாரோ அவரைத் தவிர யாரும் மறுமொழியிடாத வண்ணம் மாற்றி அமைத்துள்ளார்.

    /*இவருக்கு பதிலளித்து நம் நேரத்தை தான் விரயமாக்கி வருகிறோம்*/

    அவரின் நோக்கம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு ஒரு தவறான புரிதலுடன் விளங்க வைப்பது என்றால் மற்றவர்களுக்கு அவரின் கருத்துக்கள் தவறு என்று புரியவைப்பது நமது கடமையல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *