26. பொறுமையே சிறந்த செல்வம்
ஹதீஸ் 26: அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்:
ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் தராமல் சேமித்து வைக்க மாட்டேன். ஆனால் ஒருவர் ஒழுக்கத் தூய்மை மேற்கொண்டால் அவரை அல்லாஹ் அவ்வாறே ஆக்குவான். பிறரிடம் தேவைப்படாத நிலையை ஒருவர் மேற்கொண்டால் அவரை, தேவையாகாதவராகவே அல்லாஹ் ஆக்குவான். மேலும் ஒருவர் பொறுமையை உறுதியுடன் கடைப்பிடித்தால் அவரைப் பொறுமையாளராக ஆக்குவான். பொறுமையை விடவும் சிறந்த, விசாலமான கொடை எதுவும் எவருக்கும் வழங்கப்படவில்லை! – புகாரி, முஸ்லிம்
தெளிவுரை
நபி(ஸல்) அவர்களின் வள்ளல் தன்மையைப் பறைசாற்றும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று! கேட்போருக்கு ஈந்து மகிழ்வதே நபியவர்களின் உயரிய பண்பு. எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று அவர்கள் சொன்னதே இல்லை! வீட்டிலோ ஏழ்மைதான். கஷ்டம்தான்! எந்த அளவுக்கு எனில், சிலநேரங்களில் நபியவர்கள் தமது வயிற்றில் கூழாங் கற்களை வைத்துக் கட்டிக் கொண்டு பசியின் கடுமையைச் சமாளித்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இப்படி ஏழ்மையுடன் வாழ்ந்த ஏந்தல் நபியவர்கள் வறுமைக்கு அஞ்சாமல் வாரிவாரி வழங்கி கைவசம் இருந்ததெல்லாம் காலியானபொழுது சொன்னார்கள்:
‘ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் அதை உங்களுக்குத் தராமல் நான் சேமித்து வைக்கமாட்டேன்’
நபியவர்கள் செல்வத்தைச் சேமித்துவைத்துக் கொண்டு இல்லை என்று சொல்வதென்பது கற்பனைக்கும் எட்டாதது. அந்நேரத்தில் அவர்களிடம் எதுவும் இல்லை என்பதே உண்மை!
இந்த சந்தர்ப்பத்தில் நபியவர்கள் மூன்று பண்புகள் மீது ஆர்வமூட்டுகிறார்கள்:
1) ஒழுக்கத் தூய்மை : அதைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் எனும் ஆர்வம் உண்மையில் எவருக்கு உள்ளதோ, சிற்றின்ப வேட்கையைத் தவிர்த்திட, தீய பெண்களின் பின்னால் சுற்றித்திரியும் போக்கை வெறுத்திட எவர் முன்வருகிறாரோ அவரது மனதைத் தீமைகளிலிருந்து திருப்பி அவரது வாழ்க்கையை அல்லாஹ் தூய்மையாக்குகிறான். அவரை பாதுகாக்கிறான். இதேபோல் அவருடைய மனைவி -மக்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளிக்கிறான்.
ஆனால் தீய மனத்தைக் கட்டுப்படுத்தவும் அதை நல்வழிக்குத் திருப்பவும் அக்கரை செலுத்தாதவன் சிற்றின்ப மோகத்திற்கு ஆளாகிறான். சதாவும் தீமைகளைச் சிந்திக்கிறான. தீய பெண்கள் பின்னால் சுற்றித் திரிகிறான். அவனுடைய கண், காது, கை- கால்கள் ஆகியவை விபச்சாரம் செய்கின்றன. இறுதியில் அவனது மர்ம உறுப்பே அந்தக் கொடிய பாவத்தில் ஈடுபடுகிறது! (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
2) பிறரிடம் தேவைப்படாத நிலை : உண்மை யாதெனில், செல்வ நிலையென்பது போதுமெனும் மனநிறைவே ஆகும். அல்லாஹ் வழங்கிய ரிஜ்க் – வாழ்வாதாரத்தில் – அது குறைவே என்றாலும் அதில் நிறைவு கண்டு வாழ்பவன்தான் செல்வந்தன்! இத்தகைய மனிதனை அல்லாஹ் கண்ணியத்துடன் வாழச்செய்கிறான்.
ஆனால் மக்களிடம் கையேந்திப் பழகியவன் என்றைக்கும் அப்படியேதான் இருப்பான். சுய முயற்சியையும் முன்னேற்றத்தையும் அவனிடம் காண முடியாது. எவ்வளவு கொடுத்தாலும்- கிடைத்தாலும் அவனுக்கு நிறைவு ஏற்படாது. அவனும் அவனது மனமும் என்றைக்கும் ஏழைகள்தாம்!
3) பொறுமை : அல்லாஹ் விலக்கியவற்றை விட்டும் உங்கள் மனத்தை நீங்கள் கட்டுப்படுத்தினால் – ஏழ்மை, கஷ்டம் என வரும்பொழுது எவரிடமும் கையேந்தாமல் கண்ணியம் காத்தால் பொறுமைப் பண்பை அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்கித் தருவான். அதில் ஓர் இணைப்பை- பிரியத்தை உங்களது உள்ளத்தில் நிச்சயம் ஏற்படுத்துவான்!
உலகில் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ வசதிகளை- வாழ்க்கைச் சாதனங்களை அல்லாஹ் வழங்கியிருக்கலாம். ஆனால் அவை அனைத்திலும் பொறுமைதான் சிறப்புமிக்கது., உன்னதமானது! அதனை விடவும் விசாலமான – விரிவான அருட்கொடை வேறெதுவும் இல்லை! ஏனெனில் பொறுமையுடன் வாழும் மனிதன் எதையும் தாங்கிக் கொண்டு இமயம்போல் உயர்ந்து நிற்கிறான்.
பாருங்கள்! சிலநேரம் தீய மனம் ஹராமான – விலக்கப்பட்ட பாவச் செயல்களைச் செய்யுமாறு தூண்டுகிறது. மறுபுறம் ஷைத்தான் வந்து இஸ்லாத்தின் கடமைகளை – இறைவழிபாடுகளை நிறைவேற்ற விடாமல் ஊசலாட்டம் ஏற்படுத்துகிறான். இத்தகைய சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப் பிடித்துவாழும் மனிதன் சலனம் அடைவதில்லை. நெறி பிறழ்வதில்லை! என்றைக்கும் அவனுக்கு நிமிர்ந்த நடைதான். நேர்கொண்ட பார்வைதான்!
இதேபோன்று மனிதர்களிடம் இருந்து தொல்லைகள் ஏற்பட்டாலோ- யாரேனும் ஏசிப் பேசினாலோ வரம்புமீறி அநீதி புரிந்தாலோ அவன் அமைதியே உருவாகக் காட்சி அளிக்கிறான்! உணர்ச்சி வசப்படுவதில்லை. கட்டுப்பாடு இழந்து தீயசொல் -செயல்களில் இறங்கி விடுவதில்லை! இதனால் தான் பொறுமையே அனைத்தினும் சிறந்த- விசாலமான அருட்கொடை என்கிறது இந்நபிமொழி!
கேள்விகள்
1) பொறுமையே சிறந்த – விசாலமான கொடை என்பதைச் சுருக்கமாக விளக்கவும்.
2) ஒழுக்கத் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் சிறப்பையும் உயர்வையும் கூறவும்.
3) பிச்சை எடுத்துப் பிழைப்பதன் இழிநிலையையும் போதுமெனும் மனநிறைவின் சிறப்பையும் விளக்கிக் கூறவும்.
4) பொறுமையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விவரித்து எழுதவும்.
5) ஒரு முஸ்லிமின் குணபாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென இந்நபி மொழி உணர்த்துகிறது?
6) நபி(ஸல்) அவர்களின் சீரிய வாழ்க்கையிலிருந்து அவர்களின் வள்ளல் தன்மையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் சிலவற்றை எழுதவும்.
7) அறிவிப்பாளர் வரலாற்றைச் சுருக்கமாக எழுதவும்.