ஒவ்வொரு சமுதாயத்திலும் சில ‘தறுதலைகள்’ இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிவிழந்த தறுதலைகள் செய்யும் தவறை அந்த ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது.
முஸ்லிம்களில் சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை “இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்” என்று மத முத்திரை குத்துவதும் வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை துன்பத்திற்குள்ளாக்குவது. எரியும் புண் காக்கையறியாது, என்பார்களே அதை ஒத்திருக்கிறது. என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் ‘தீவிரவாதத்தை” ஆதாரிக்கிறதா..? என்பதைப் பார்ப்பதற்கு முன்..
மத ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனத்துக்கு அந்த மத ஆதார நூல்களே உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம். எம்மத விமர்சனமும் அம் மதம் போதிக்கும் நூலை நேரடியாக விளங்கி விமர்சிக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு மதத்தை விமர்சிப்பது அறிவுடைமையல்ல! என்பதை மனதில் பதித்துக் கொண்டு தொடர்வோம்.
இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது. என்பதை கீழ்காணும் வசனத்தில் விளங்கலாம்.
”நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்”.. (அல்குர்ஆன் 5:32)
இந்த வசனத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவிற்குத் தெளிவாக – வெளிப்படையாகவே மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரம் – வன்முறை செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது.
தனியொரு மனிதனை எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் – அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன் என்று ஒதுக்கி விடுகிறது.
எவனொருவன் தனி மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான் அதாவது மனித இனத்தை – மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் பேசுகிறது. விசுவாசம் கொண்டவர்கள், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.
ஒரு மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டவனாகவோ, காயம் பட்டவனாகவோ இருக்கலாம். அவன் எந்த நாட்டை, அல்லது எந்த இனத்தை, அல்லது எந்த நிறத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல. அவனுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்தால், அப்பொழுது அவனது நோய்க்கோ, காயங்களுக்கோ சிகிட்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் மீது கடமையாகும்.
அவன் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அவனுக்கு உணவு வழங்கி அவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது உங்கள் கடமையாகும். அவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தாலோ, உயிர் போகும் ஆபத்தில் சிக்கியிருந்தாலோ அந்த ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உங்கள் மீது கடமையாகும்.
இப்போது சொல்லுங்கள், ‘ஜிஹாத்'(?) என்ற பெயரால் வன்முறைகளில் ஈடுபட்டு மனிதக் கொலைகள் புரியும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா?
வன்முறைச் செயல்களால் தனக்கு அறிமுகமே இல்லாத மனித உயிர்களைப் படுகொலை செய்பவன் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?
கொலைக்குப் பதிலாக கொலையாளியின் உயிரைப் பறிப்பதாக இருந்தாலும் சரி. அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்கான தண்டனையாக இருந்தாலும் சரி, அதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றம்தான் இதைப் பற்றிக் கட்டளையிட வேண்டும். இந்த உரிமை தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படவில்லை.
இது போல் பிற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் அதை முடிவு செய்யும் உரிமை முறையாக அமைக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. பூமியில் குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததற்காக ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையும், அதிகாரமும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன், உயிரைப் பறித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்துப்பட்டுள்ள கடமையாகும்.
யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ”அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 6:151)
(‘காஃபிர்களைக் கொல்லுங்கள்’ என்ற அல்குர்ஆன் 9:5 வசனத்தைத் ”திரித்து” விமர்சிப்பவர்கள் அல்குர்ஆன் 5:32, 6:151 ஆகிய வசனங்களை சிந்தித்துணரட்டும்.)
”இணைவைத்தலுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் குற்றம் மனித கொலையாகும்” என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அடுத்து
மனிதனின் நீதி பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை மனிதனுக்கு ‘மனிதன்’ என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறது.
”ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம்”.
”நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (அல்குர்ஆன் 5:2)
ஓ நம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. (அல்குர்ஆன் 5:8)
ஓ நம்பிக்கையாளர்களே! ”நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்”. (அல்குர்ஆன் 4:135)
இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ”வழிகாட்டல்களை” எழுதிக் கொண்டே இருக்கலாம்.
சில அறிவிலி முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பீடு செய்வது அறிவு சார்ந்த வாதமல்ல. இஸ்லாம் என்பது ‘வழிகாட்டல்’ மாத்திரமே. அதைப் பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. பின்பற்றாதது முஸலிம்களின் தவறே தவிர இஸ்லாத்தின் குற்றமாகாது. ”இஸ்லாமிய வன்முறையின் அடித்தளம்” என்ற தலைப்பு சிறு பிள்ளைத் தனமாக இருப்பதால் இஸ்லாம் – முஸ்லிம் என்பது பற்றி அடுத்த பதிப்பில் விளக்குவோம்.
அதற்கு முன்…
//கா பிர்களின் பெண்டிரெல்லாம் விபச்சாரிகள் என்று கூறியிருப்பதையும்[ திருக்குரான் வசனம் 24:3], அந்தக் காலகட்டத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுந்த ஆழ்வார்களின் பாடல்களோடு ஒப்பிடுவது சரியல்ல.//
மாற்று மத பெண்டிரெல்லாம் எமக்கும் சகோதரிகளே! முஸ்லிம் பெண்களைத் தவிர காஃபிர்களின் பெண்டிரெல்லாம் விபச்சாரிகள் என்று அல்குர்ஆன் 24:3 வசனம் கூறுவதாக சகோதரர் நேசகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இதில் அவர் நேர்மையுள்ளவராக இருந்தால், அந்த வசனத்துக்கு அதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும். இல்லையேல் சகோதரர் நேசகுமார் பொய்யர் என்பதை நாம் நிரூபிப்போம்.
அன்புடன்
அபூ முஹை
அபூ முஹை அவர்களே,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
அப்படியே அந்த ‘ஜிஹாத்தில் மரித்தால் 64 கன்னிப்பெண்கள் உனக்காக மேலுலகில் காத்திருப்பார்கள்’ என ஒரு வசனம் இருக்கிறதாமே, அதைப் பற்றிய தங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
இதனைச் சொல்லியே தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் எனவும் சொல்லுகின்றனர்.
நான் வணங்கும் முருகன் மேல் ஆணையாக சத்தியாமகத் தெரிந்து கொள்ளவே இதைக் கேட்டேன். மற்றபடி வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.
நன்றி.
SK அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கேள்விக்கு இங்கே விளக்கம் அளித்திருக்கிறேன்.
அன்புடன்,
அபூ முஹை