Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-30)

30. இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

ஹதீஸ் 30. ஸுஹைப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரர் (ஆலோசகராக) இருந்தார். அவர் முதுமை அடைந்தபோது மன்னனிடம் சொன்னார்:

‘நான் முதுமை அடைந்து விட்டேன். எனவே ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை. நான் அவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுக்கிறேன்.

அதன்படி சிறுவனொருவனை அவரிடம் அனுப்பி வைத்தான் மன்னன். அந்தச் சூனியக்காரர் சிறுவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுத்தார்.

சிறுவன் நடந்துவரும் பாதையில் ஒரு துறவி இருந்தார். சிறுவன் சூனியம் கற்க வரும்பொழுது துறவியிடம் சிறிது நேரம் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பான். அவர் சொல்வது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் சூனியக்காரரிடம் வரும்பொழுது வழியில் அந்தத் துறவியிடம் அமர்ந்து அறிவுரை கேட்பது அவனது வழக்கமானது.

ஒருதடவை சூனியக்காரரிடம் வரும்பொழுது (தாமதமானதால்) அவனை அவர் அடித்தார். அது குறித்து துறவியிடம் சிறுவன் முறையிட்டான். அவர் அவனுக்கு ஒருவழி சொன்னார்:

‘இனி சூனியக்காரர் அடிப்பாரே என்று நீ பயந்தால், என் பெற்றோர் தான் என்னைத் தடுத்துத் தாமதப்படுத்தி விட்டனர் என்று அவரிடம் சொல். தாமதமாகத் திரும்பியது பற்றி பெற்றோர் கேட்டால் சூனியக்காரர்தான் தாமதப்படுத்தி விட்டார் என்று சொல்’

இவ்வாறு அவன் செய்து வந்தபொழுது ஒருதடவை பாதையில் பெரியதொரு மிருகத்தைக் கண்டான். அது மக்களின் நடமாட்டத்தைத் தடுத்து வைத்திருந்தது. சிறுவன் (மனத்திற்குள்) சொல்லிக் கொண்டான்: சூனியக்காரர் சிறந்தவரா? துறவி சிறந்தவரா? என்பதை இன்று பார்த்து விடலாம்! -ஒருபெரிய கல்லை எடுத்தான். யா அல்லாஹ்! சூனியக்காரரைவிட துறவியின் விஷயம் உனக்குப் பிரியமானதாக இருந்தால் நான்(இந்தக் கல்லை எறிந்ததும்) மிருகத்தைக் கொன்றுவிடு., மக்கள் நடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்து! என்று பிரார்த்தனை செய்து கொண்டு கல்லால் அந்த மிருகத்தை அடித்தான். அதனைக் கொன்றுவிட்டான். மக்கள் நடந்து செல்ல வழிபிறந்தது!

துறவியிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னான். அதற்கு அவர், ‘என் அன்பு மகனே! இன்று என்னை விடவும் நீ சிறந்து விட்டாய். (ஞானத்தால் – பக்தியினால்) உனது விவகாரம் உயர்ந்துள்ளது என்பதை நான் காண்கிறேன். திண்ணமாக நீ சோதனைக்குள்ளாக்கப் படுவாய். அத்தகைய சோதனைக் கட்டம் வந்தால் என்னைப் பற்றி மக்களிடம் சொல்லி (எனது ரகசியத்தை வெளிப்படுத்தி) விடாதே!’

அந்தச் சிறுவன், பிறவிக் குருடனையும் தொழு நோயாளியையும் குணப்படுத்தக் கூடியவனாக ஆனான். ஏனைய அனைத்து நோய்களில் இருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பவனாகத் திகழ்ந்தான்.

மன்னனின் அவைத் தோழர் ஒருவர் இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டார். அவர் கண்பார்வை இழந்திருந்தார். உடனே அவர் நிறைய அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு அந்தச் சிறுவனிடம் வந்து சொன்னார்:

‘நீ எனக்கு நிவாரணம் அளித்தால் நான் கொண்டு வந்துள்ள அனைத்து அன்பளிப்புகளும் உனக்குத்தான்!’

அதற்கு சிறுவன் சொன்னான்: ‘நான் யாருக்கும் (சுயமாக) நிவாரணம் அளிப்பதில்லை. நீர் அல்லாஹ்வின் மீது ஈமான் – நம்பிக்கை கொண்டால் உமக்காக அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். அல்லாஹ் உமக்குக் குணம் அளிப்பான்’

அதன்படி அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டார். அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளித்தான்.

பின்னர் அவர் மன்னரிடம் வந்து வழக்கம் போல் அவனது அவையில் அமர்ந்தார். மன்னன் கேட்டான்:

‘உமக்கு மீண்டும் பார்வையைக் கொடுத்தது யார்?

‘என் இறைவன்’

‘என்னைத் தவிர வேறொரு இறைவன் உமக்கு உண்டா? ‘

‘என்னுடையவும் உம்முடையவும் இறைவன் அல்லாஹ்தான்;’

உடனே மன்னன் அந்த நண்பரைச் சிறையில் அடைத்தான். அவருக்குத் தொடர்ந்து தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தான். இறுதியில் அவர் சிறுவனைக் காட்டிக் கொடுத்து விட்டார்.

சிறுவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் மன்னன் கேட்டான்: என் அன்பு மகனே! உனது மந்திரத்திறமை எந்த அளவு வளர்ந்துள்ளதெனில் பிறவிக் குருடனையும் வெண்குஷ்டக்காரனையும் கூட நீ குணப்படுத்துகிறாய். – இப்படி இப்படியெல்லாம் நீ சாதனை புரிய வந்துவிட்டாய்,,

அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான்: ‘நான் (சுயமாக) யாருக்கும் நிவாரணம் அளிப்பதில்லை. நிச்சயமாக நிவாரணம் அளிப்பவன் அல்லாஹ்தான்!’

மன்னன் அந்தச் சிறுவனையும் சிறைபிடித்தான். அவனுக்கும் தொடர்ந்து தண்டனை கொடுத்தான். இறுதியில் சிறுவன் அந்தத் துறவியைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

துறவியை அழைத்து வந்தார்கள். உமது மதத்தை நீர் விட்டுவிடும் என்று அவரிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர் மறுத்து விட்டார். உடனே ரம்பம் தருவிக்கப்பட்டது. அதனை அவரது தலையில் நேர் வகிடு எடுக்கும் இடத்தில் வைத்து அறுத்து அவர் இரண்டாகப் பிளக்கப்பட்டார்! துறவியின் உடல் இரண்டானது!

பிறகு மன்னனின் நண்பர் கொண்டு வரப்பட்டார். உமது மதத்தை நீர் விட்டுவிடும் என்று அவரிடம் சொல்லப்பட்டது. அவரும் அதனை மறுத்து விடவே ரம்பத்தை அவரது தலையில் நேர் வகிடு எடுக்கும் இடத்தில் வைத்து அறுத்தார்கள். அவரது உடல் இரு துண்டுகளானது!

பிறகு அந்தச் சிறுவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் சொல்லப்பட்டது: ‘உனது மதத்தைக் கைவிடு’ என்று. அதற்கு அவனும் மறுத்து விட்டான். மன்னன், அரசு அதிகாரிகள் சிலரிடம் சிறுவனை ஒப்படைத்துக் கூறினான்:

‘இவனை இன்ன இன்ன மலைக்குக் கொண்டு செல்லுங்கள். மலையின் உச்சிக்கு அவனை ஏற்றுங்கள். அதன் சிகரத்தை அடைந்ததும் நீங்கள் பார்க்க வேண்டும்: தனது மதத்தை இவன் கை கழுவிவிட்டால் சரி! இல்லையெனில் அவனைக் கீழே எறிந்து விடுங்கள்!’

அவ்வாறே அவர்கள் சிறுவனை அழைத்துச் சென்றார்கள். அவனைப் பிடித்துக் கொண்டு மலைமீது ஏற்றினார்கள்.

சிறுவன் பிரார்த்தனை செய்தான்: ‘யா அல்லாஹ்! இவர்களுக்கு எதிரில் எனக்கு உதவி செய்ய நீ போதுமாகி விடு. அந்த ஏற்பாட்டை நீ விரும்பிய விதத்தில் செய்திடு’ – அவ்வாறே அவர்களோடு சேர்த்து மலை நடுங்கியது. எல்லோரும் கீழே விழுந்தார்கள்.

சிறுவன் மன்னனிடம் நடந்து வந்தான். அவனிடம் மன்னன் கேட்டான். ‘உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிறுவன் சொன்னான்: அவர்களுக்கு எதிராக எனக்கு உதவி செய்ய அல்லாஹ் போதுமாகி விட்டான்’

மன்னன் அவனைத் தன்னுடைய பிரத்தியேக அதிகாரிகளிடம் ஒப்படைத்தான். சொன்னான்: ‘இவனை அழைத்துச் சென்று ஒரு கப்பலில் ஏற்றி நடுக்கடலுக்குக் கொண்டு செல்லுங்கள். (அங்கு இவனிடம் கேளுங்கள்) இவன் தன் மதத்தில் இருந்து விலகினால் சரி. இல்லையெனில் இவனைக் கடலில் எறிந்து விடுங்கள்’

அவ்வாறே அவனை அழைத்துச் சென்றார்கள். சிறுவன் (கப்பலில் அமர்ந்து) துஆ செய்தான்: ‘யா அல்லாஹ்! இவர்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி செய்திடு. (அந்த ஏற்பாட்டை) நீ விரும்பியபடி செய்திடு’

உடனே கப்பல் கவிழ்ந்தது. அனைவரும் நீரில் மூழ்கினார்கள். சிறுவன் மீண்டும் மன்னனிடம் வந்தான். மன்னன் கேட்டான்: ‘உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? ‘

சிறுவன் சொன்னான்: ‘அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எனக்கு உதவிடப் போதுமாகி விட்டான்’

அப்பொழுது சிறுவன் மன்னனிடம் சொன்னான்: ‘நான் உனக்குக் காண்பித்துத் தருகிற முறைப்படி நீ செயல்படாத வரையில் என்னை நீ கொல்லமுடியாது!’

‘அது என்ன? ‘

‘திறந்ததொரு பூமியில் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டு. ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியில் என்னை சிலுவை அடித்து வை. பிறகு என்னுடைய அம்புகளில் ஒன்றை எடுத்து அதனை வில்லின் நடுவில் வை. பிறகு சிறுவனின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் பெயரால்… என்று சொல்லிக் கொண்டு என்னை நோக்கி அம்பை எய்திடு. அப்படிச் செய்தால் தான் நீ என்னைக் கொல்ல முடியும்!’

மன்னன் அவ்வாறே திறந்ததொரு திடலில் மக்களை ஒன்று திரட்டினான். சிறுவனை மரத்தின் அடிப்பகுதியில் கட்டி வைத்தான். பிறகு அவனுடைய அம்புக்கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து வில்லின் நடுவில் வைத்துக் கொண்டு – சிறுவனின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று சொல்லிக்கொண்டு சிறுவனை நோக்கி அம்பை எய்தான். அவனது நெற்றிப்பொட்டை அது தைத்தது. நெற்றிப்பொட்டில் கையை வைத்துக் கொண்டே சிறுவன் இறந்து விட்டான்!

இதனைக் கண்ணுற்ற மக்கள் சொன்னார்கள்: ‘சிறுவனின் இரட்சகனின் மீது நாங்கள் ஈமான் – நம்பிக்கை கொண்டோம்’

மன்னன் ஒருகனவு கண்டான். அதில் அவனிடம் சொல்லப்பட்டது: ‘பார்த்தாயா! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எதனைக் குறித்து நீ அஞ்சிக் கொண்;டிருந்தாயோ அதுதான் உனது விஷயத்தில் நடந்துள்ளது, இதோ! மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டார்களே!’

உடனே வீதிகளின் ஓரங்களில் கிடங்குகள் தோண்டுமாறு மன்னன் கட்டளை பிறப்பித்தான். அவ்வாறே தோண்டப்பட்டது. அவற்றில் நெருப்பும் மூட்டப்பட்டது.

மன்னன் கூறினான்: ‘யார் யாரெல்லாம் தமது மதத்தைக் கைவிடவில்லையோ அவர்களைப் பிடித்து இவற்றில் வீசி எறியுங்கள்!- அல்லது இந்த நெருப்பில் இறங்குங்கள் என்று அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும்.’

அவ்வாறே செய்தனர். இறுதியில் ஒருபெண் வந்தாள். அவளுடன் அவளுடைய குழந்தையும் இருந்தது. நெருப்பில் இறங்குவதற்கு அவள் தயங்கியபொழுது அந்த ஆண்குழந்தை சொன்னது: ‘தாயே! பொறுமை கொள்! நிச்சயமாக நீ தான் சத்தியத்தின் மீது இருக்கிறாய்’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

சிறுவன் ஆற்றிய அழைப்புப் பணி

இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நடைபெற்ற விநோதமான கதையாகும்.

இறைநம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக எத்தகைய இன்னல்களையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும்., அவ்வழியில் இன்னுயிரை ஈந்திட நேர்ந்தாலும் – அதற்கும் தயங்கக்கூடாது என்பதற்கு சிறந்ததொரு முன்னுதாரணத்தை இந்தக் கதை வழங்குகிறது. இதனாலேயே இந்தத் தலைப்பின் கீழ் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்!

சூனியக்கலையில் கைதேர்ந்ததொரு மந்திரவாதி மன்னனுக்குக் கிடைத்திருந்தார். மன்னன், அரசாங்க விவகாரங்களானாலும் – மத விஷயங்களானாலும் அவற்றில் ஒருமுடிவு காண்பது அந்த மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்டுத்தான்!

முதுமைக் காலத்தில் யாருக்காவது தனது மந்திரக்கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டுமென மந்திரவாதி கருதினான். தனக்குப் பிறகும் தனது தொழில் நிலைத்திருக்க வேண்டும். மன்னனுக்குப் பயனளித்துக் கொண்டிருக்க வேண்டும் என எண்ணினான்.

அதற்காக ஒரு சிறுவனை அனுப்பித் தருமாறு மன்னனிடம் கேட்டுக் கொண்டான். ஏனெனில்,

‘சிறுவன் தான் எதுவொன்றையும் அக்கறையுடன் கற்பான். மேலும் சிறு வயதில் கற்கும் கல்விதான் காலாகாலம் நிலைத்து நிற்கும். அவன் பெரியவனாக வளரவளர அந்தக் கலையும் ஓர் இயல்பான திறமையாக வளர்ந்து வரும்!

‘கல்வி கற்பது தொட்டில் முதல் மண்ணறை வரையில் என்பது உண்மைதான். ஆனாலும் கசடறக் கற்பதற்கு – அதிலொரு திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இளமைக் காலமே சிறந்த பருவமாகும்.

‘அந்தப் பருவத்து மனம் கள்ளங் கபடமற்றது. தூய்மையானது! வாழ்க்கைக் கஷ்டங்களின் அழுத்தமோ பிரச்னைகளின் இழுபறியோ எதுவுமின்றி வெள்ளை பலகைபோல் தௌளத் தெளிவானது. அதில் பதியும் விஷயங்கள் கற்பலகையில் செதுக்கப்படுவதுபோல் ஆழமாகப் பதிகின்றன!

மன்னன் சிறுவனைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தான். ஆனால் அல்லாஹ் சிறுவன் விஷயத்தில் வேறொரு நலனை நாடியிருந்தான். அதற்கான சூழ்நிலைகளை மலரச் செய்தான்! அது எப்படி?

சிறுவன் மந்திரம் கற்கச் செல்லும் வழியில் ஒரு துறவி கிடைத்தார். துறவி (றாஹிப்) என்றால் ஆலயத்தில் சதாவும் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர். அவர் கல்வி ஞானத்தை அதிகம் பெற்றிருந்தாலும் ஆலய வழிபாட்டில் மூழ்கி விடுவதால் துறவி என்றே அவர் அழைக்கப்படுகிறார். சிறுவன் இயல்பிலேயே நல்லவனாக இருந்ததால் – நன்மையை நாடும் உள்ளத்தை அவன் பெற்றிருந்ததால் மந்திரவாதியிடம் சூனியம் கற்கச் சென்றவன் துறவியின் அறிவுரையில் சிக்குண்டான்! அவரிடம் உட்கார்ந்து ஞானம் கற்காமல் மந்திரவாதியிடம் செல்வதில்லை! ஏன் தாமதமாகவே வருகிறாய் என்று கேட்டு மந்திரவாதி அடித்தார்.

சிறுவன் துறவியிடம் முறையிடவே அவர் அதிலிருந்து விடுபட ஒருவழி சொல்லித் தந்தார். பொய்யான சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்து விடுவதே அது!

இன்று நம்முடைய சிறுவர்களிடம் – ஏன் பள்ளிக்கூடத்திற்கு அல்லது மத்ரஸாவுக்குத் தாமதமாக வருகிறாய் என்று கேட்டால் ஏதாவது ஒருபொய்யைச் சொல்லிச் சமாளிக்கிறார்களே அது போன்றதே இதுவும்!

எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும் என்றல்லவா கற்றுக் கொடுக்க வேண்டும். பொய் சொல்லும்படி ஏன் அறிவுரை சொன்னார் அந்தத் துறவி?

இது நற்கல்வி தேடுவதற்குக் கிடைத்த நல்ல சூழ்நிலை! அது தடைபட்டு விடக்கூடாது. சிறுவனேகூட அடிக்குப் பயந்து தன்னிடம் வருவதை நிறுத்தி விடக்கூடாது என்று அவர் கருதியிருக்கலாம். அல்லது அன்று ஏதாவது சாக்குப்போக்குச் சொல்வதைத் தவிர வேறுவழி இல்லை என்பதால் அவர் அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்! (அல்லாஹ்தான் மிக அறிந்தவன்)

ஒருநாள் நடைபாதையில் நின்று தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மிருகத்தைக் கண்டதும் அதனை அப்புறப்படுத்தி மக்களுக்குச் சேவை செய்ய நாடினான், சிறுவன்! அப்பொழுது அவனது உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது: துறவி சிறந்தவரா? மந்திரவாதி சிறந்தவரா? என்று இன்று பார்த்துவிட வேண்டும் என்பதே அது!

அவ்வாறே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொண்டு கல்லை எறிய அந்த மிருகம் செத்து விடுகிறது.-ஆகா! என்ன ஆச்சரியம்! அப்படியானால் துறவிதான் சிறந்தவர் என்று சிறுவன் பெருமிதம் கொண்டான்!

உண்மையும் அதுதான்! ஏனெனில் சூனியம் செய்பவன், இறைவனோடு இணைவைத்துச் சிலைகளையும் ஷைத்தான்களையும் வணங்குபவனாக இருந்ததால் சந்தேகமின்றி முஷ்ரிக்தான் – இணைவைத்து வணங்குபவன் தான். அல்லது மந்திரப் பொருட்களைக் கையாண்டு கண்கட்டி வித்தை செய்து பிழைப்பு நடத்தினால் அவன் அநீதியாளன் ஆவான்.

ஆனால் அந்தத் துறவியின் நிலை அவ்வாறல்ல. அவர் சரியான ஞானத்துடன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டால் நேர்வழியில் உள்ளவர். அல்லது அன்றைய சூழ்நிலையில் அறியாமைக்குள்ளாகி வழிகேட்டில் உழன்று கொண்டிருந்தால், குறைந்தபட்சம் உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டவர் என்றாகிறார்!

-ஆக, வழியில் நடந்த நிகழ்ச்சியைச் சிறுவன் துறவியிடம் தெரிவிக்க அவர் சொன்னார்: ‘சிறுவனே! இன்று நீ என்னை விடவும் சிறந்து விட்டாய்’

அவர் உண்மையே உரைத்தார். சிறுவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு உதவி செய்துள்ளான் என்பதே அவனது சிறப்புக்குச் சான்றாகும். அல்லாஹ் அவன் மீது பொழிந்த அருட் கொடையாகும். ஓரு மனிதன் தனக்குத் தயக்கமாயுள்ள விஷயத்தில் சரியான முடிவை- தெளிவானதொரு அடையாளத்தைக் காண்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்க அவன் அதனை ஏற்றுத் தெளிவாக்கிக் கொடுக்கிறான் எனில், அல்லாஹ் அந்த மனிதனை நேசிக்கிறான். அவன் மீது அருள்பொழிகிறான் என்பது தானே பொருள்!

இங்கு ஒரு விஷயத்தை அறிந்துகொள்வது பயன்மிக்கது. ஷரீஅத்தின் நடைமுறையில் இஸ்திகாரா தொழுகை உள்ளது. அதாவது, ஒருகாரியத்தை மேற்கொள்வதா? வேண்டாமா? என்று தயங்கினால் இரண்டு ரக்அத் தொழுது வாய்மையான உள்ளத்துடனும் உறுதியான ஈமானுடனும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒரு தெளிவைத் தருமாறு கேட்க வேண்டும். இந்தத் தொழுகையின் பயனாக உள்ளத்தில் ஓர் உள்ளுதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அல்லது கனவின் மூலம் அல்லது அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையின் மூலம் ஒரு தெளிவான முடிவை அல்லாஹ் தருவான். இந்தச் சிறுவனும் இதுபோன்றே செய்தான்!

இதே போன்று நோயாளிகள் குணமடைவதற்காகவும் அல்லாஹ்விடம் இந்தச் சிறுவன் பிரார்த்தனை செய்ய அதனையும் அல்லாஹ் ஏற்று உதவி செய்தான். பிறவிக்குருடர்கள், வெண்குஷ்டக்காரர்கள் என பலரும் வந்து சிறுவனிடம் நிவாரணம் பெற்றுச் சென்றார்கள்.

ஈஸா நபி (அலை) அவர்களின் வரலாற்றிலும் இதுபோன்று நடந்துள்ளது. அவர்களும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடர்களையும் வெண்குஷ்டக்காரர்களையும் குணப்படுத்தியுள்ளார்கள்! அந்த விவரம் குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருவித்தியாசம். அதாவது, ஈஸா நபி (அலை)அவர்கள் தங்கள் கையால் நோயாளிகளைத் தடவுவார்கள். அவர்கள் குணமடைந்து விடுவார்கள். ஆனால் இங்கே இந்தச் சிறுவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய -அல்லாஹ் அதனை ஏற்று நிவாரணம் அளித்தான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மன்னனின் நெருங்கிய நண்பரும் சிறுவனைத் தேடிவந்தார். எனக்குக் கண் பார்வையை மீட்டுத் தந்திடு. அப்படிச் செய்தால் இந்த அன்பளிப்புகள் அனைத்தும் உனக்குத்தான் என்று அவர் சொன்னபொழுது,

நோயைக் குணப்படுத்துவது அல்லாஹ்தானே தவிர. நான் அல்ல என்று பதிலளித்தான்.

இன்னும் சொன்னான்: நீர் அல்லாஹ்வின் மீது ஈமான் – நம்பிக்கை கொண்டால் உமக்குக் கண்ணொளி கிடைக்க அல்லாஹ்விடம் நான் துஆ செய்கிறேன்.

இறைநம்பிக்கையில் எவ்வளவு தெளிவான நிலையை அவன் பெற்றிருந்தான் என்பதைப் பாருங்கள்! நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் சிறப்பை அடக்கத்துடனும் பணிவுடனும் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்தான் என்பது மட்டுமல்ல. அந்த ஏக இறைவன் மீதே நம்பிக்கை கொள்ளுமாறு அனைவரையும் அழைத்தான் என்பதும் கவனிக்கத்தக்கது!

பிறகு கண்ணொளி பெற்ற அந்த மனிதர் வழக்கம்போல் மன்னனின் அவைக்கு வந்து அமர உமக்கு கண்ணொளி கிடைத்தது எப்படி? என்று மன்னன் கேட்டபொழுது -சிறுவனைப் பின்பற்றியே அவரது பதிலும் அமைந்திருந்தது. என் இறைவன் எனக்கு கண்பார்வை கொடுத்தான் என்றே அவரும் பதிலளித்தார்.

மன்னன் கோபம் கொண்டு, என்னைத் தவிர உமக்கு வேறோர் இறைவனா? என்று பிதற்றினான். அவரைச் சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அதனைத் தாங்க முடியாமல் அவர் சிறுவனைக் காட்டிக் கொடுத்தார். அவ்வாறே சிறுவன் துறவியைக் காட்டிக் கொடுத்தான்.

உடனே துறவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பாவம், ஆலயத்தில் அமர்ந்து வணக்கவழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவரிடம் மன்னன், ‘என்னையே இறைவனாக ஏற்றுக் கொண்டு உமது புதிய மதத்தைக் கை விட்டுவிடும்’ என்று சொன்னான், ஆனால் அவர் மறுத்து விட்டார்.

மன்னன் திடுக்கிட்டான். ஆகா! நமது ஆட்சிக்கு எதிராக பெரும் சூழ்ச்சி நடக்கிறதுபோல் தெரிகிறது. இந்த இறைநம்பிக்கைப் படலம் மேலும் தொடர விடக்கூடாது. இல்லையெனில் நமக்கு ஆபத்து! இந்தத் துறவி தான் இதற்கெல்லாம் மூல காரணம்! முதலில் இவரைத் தீர்த்துக் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்தான்! அவர் மீது ராஜதுரோகக் குற்றம் சுமத்தி கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடனே ரம்பத்தைக் கொண்டு வந்து அவரது தலையில் நேர்வகிடு எடுக்கும் இடத்தில் வைத்து நேராக அறுத்தார்கள். முதலில் தலை. பிறகு கழுத்து. முதுகு என்று அப்படியே அறுத்தார்கள்! உடல் இரண்டு துண்டுகளாயின! ஒன்று இந்தப் பக்கமும் மற்னொன்று அந்தப் பக்கமுமாக விழுந்தன!

மன்னனின் அரசவைத் தோழரை அழைத்து வந்து அவரையும் ரம்பத்தால் அறுத்தார்கள்.

அந்த இறைநம்பிக்கையாளர்களின் கொள்கைப்பற்றும் பொறுமையும் எவ்வளவு உறுதியானவை என்பதைக் கவனியுங்கள்! மன்னன் இவ்வளவு கொடிய தண்டனை தருவான் என்று தெரிந்தும் என்ன நடந்தாலும் சரியே என்று எதற்கும் துணிந்தார்கள். உறுதியான ஈமானுடனேயே உயிரைத் துறந்தார்கள்!

தற்கொலையா? தியாகமா?

இங்கு ஒருகேள்வி எழலாம். இத்தகைய சித்திரவதையையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்று என்ன இருக்கிறது? நிராகரிப்பு (குஃப்ர்) வார்த்தையை ஒப்புக்கு மொழிந்துவிட்டு தப்பித்து விடலாம் தானே. உள்ளத்தில் விசுவாசம் பசுமையாக இருக்கத்தானே செய்கிறது?

இதற்கான பதில் சற்று விரிவானது. பிரச்சனை, நிர்பந்தத்திற்குள்ளான மனிதனுடன் நின்றுவிடும் எனில், அவரது விருப்பப்படி அவர் நடந்து கொள்ளலாம். அதாவது, நிராகரிப்பு வார்த்தையை உயிர் போனாலும் உச்சரிக்க மாட்டேன் என்று மறுக்கவும் செய்யலாம். அல்லது உதட்டளவில் ஒப்புக்குச் சொல்லிவிட்டுத் தப்பிக்கவும் செய்யலாம்.

ஆனால் நிராகரிப்பு வார்த்தையை ஏற்று மொழிகிறபொழுது மக்கள் அனைவருடைய நம்பிக்கையையும் அது பாதிக்கும் – பலவீனப்படுத்தும் என்றிருந்தால் அது கூடாது. உயிர் போனாலும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். இறைவழியில் ஜிஹாத்-புனிதப்போர் செய்வது போன்றதாகும் இது. புனிதப்போராளி எதிரிகளால் கொலை செய்யப்படுவதையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்று இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இமாம் அவர்களின் காலத்தில் ஒருகுழப்பம் தலைதூக்கி இருந்தது. அதாவது குர்ஆன் மக்லூக் – படைக்கப்பட்டது என்று சிலர் குதர்க்க வாதம் பேசினர். அதையே அன்றைய கலீஃபாவும் ஆதரித்தார்.

ஆனால் இமாம் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கவே அவர்களை கலீஃபா கடுமையாகத் தண்டித்தார். இமாம் அவர்களைக் கட்டிவைத்துச் சாட்டையால் அடித்தார். அவர்களைக் கழுதை வாலில் கயிற்றால் கட்டி கடைவீதிகள் வழியாக இழுத்துக்கொண்டு சென்றார்கள். ஒருகட்டத்தில் இமாம் அவர்கள் சாட்டை அடிகளைத் தாங்க முடியாமல் மயங்கி கீழே விழ நேரிட்டது! பிறகு மயக்கம் தெளிந்து சுய உணர்வு வரும் பொழுதெல்லாம் உரத்த குரலில் – குர்ஆன் என் அதிபதியின் வாக்கு தானே தவிர மக்லூக் – படைக்கப்பட்டதல்ல. -(அழியுந்தன்மை கொண்டதல்ல) என்று மொழிந்தார்கள்.

நிர்பந்த நிலையில் குஃப்ர் – நிராகரிப்பு வார்த்தையை மொழிவது தங்களைப் பொறுத்து ஆகுமானதே என்று இமாம் அவர்கள் ஆகுமாக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் இமாம் என்ன சொல்கிறார்கள் என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் மக்லூக் -படைக்கப் பட்டதுதான் என்று இமாம் அவர்கள் சொல்லி விட்டால் மக்களும் அது தான் சரி என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். தீன் – இறைமார்க்கம் குழப்பத்திற்கு உள்ளாகிவிடும்! அதனால்தான் தீனின் நலன் கருதி இமாம் அவர்கள் தங்களை அர்ப்பணித்தார்கள்.

காலங்கள் கடந்தன. தீய கொள்கையுடைய கலீஃபாக்களின் ஆட்சியும் காலாவதியானது. மூன்றாவது தலைமுறையில் நல்ல கொள்கைப் பிடிப்புள்ள கலீஃபா ஆட்சிக்கு வந்தார். அவர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களுக்குக் கண்ணியம் அளித்தார். சத்தியத்தை-சரியான கொள்கையை உரத்த குரலில் இமாம் அவர்கள் முழங்க மக்களும் அவ்வாறு செய்தார்கள். இத்தகைய சுதந்திரம் நிலைபெற்ற பிறகே இமாம் மரணம் அடைந்தார்கள்!

இறுதியாக சிறுவனைக் கொண்டுவந்து, உனது கொள்கையைக் கை விட்டுவிட்டு மன்னன்தான் கடவுள் என ஏற்றுக்கொள் என்று வற்புறுத்தினார்கள்! சிறுவன் மறுக்கவே அவனையும் தண்டிக்குமாறு மன்னன் கட்டளையிட்டான்.

மலையிலிருந்து கீழே எறிந்தோ கடலில் தூக்கி வீசியோ சிறுவனைக் கொலை செய்ய மன்னனின் அடியாட்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அல்லாஹ்வின் உதவி சிறுவனைப் பாதுகாத்தது!

கடைசியாக தன்னைக் கொல்லவேண்டுமாயின் அதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று சிறுவன் மன்னனிடம் சொன்னான். அல்லாஹ்வின் பெயரை மன்னன் மொழிய வேண்டும். மக்கள் அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அதில் பிரதானமான நிபந்தனைகள்! எந்த இறைவன்மீது விசுவாசம் கொண்டதைக் குற்றமெனக் கருதி அம் மூவரையும் மன்னன் தீர்த்துக் கட்டினானோ அந்த இறைவனே நிஜமானவன். ஆற்றல் மிக்கவன் என்பதை மன்னனே நிரூபித்தான். ஆம்! அல்லாஹ்வின் பெயரை மொழிந்து அம்பை எய்துதான் மன்னன் சிறுவனைக் கொன்றான்! இந்த உண்மையைக் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி விசுவாசம் கொண்டார்கள்!

மன்னனின் உள்ளம், தன்னை எதிர்ப்பவர்களை எப்படியாவது கொன்றிட வேண்டுமென்று வெறிகொண்டிருந்ததே தவிர தாம் எதனை ஏற்று மொழிகிறோம் என்பதை அவன் சிந்திக்கவில்லை.

இந்த நபிமொழிக் கதையின் ஒளியில் பல விஷயங்கள் தெரிய வருகின்றன:

கடும் துன்பத்தில் சிக்கித் துயரப்படுபவன் – நிச்சயம் இறையுதவி கிடைக்கும் எனும் உறுதியுடன் இறைவனின் திருமுன்னால் அடைக்கலமாகி உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தால் திண்ணமாக அவனுக்கு உதவி கிடைக்கிறது. அவன் இறை விசுவாசமில்லாதவனாக – நிராகரிப்பாளனாக இருந்தாலும் சரியே! அப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவி செய்து துன்பத்தை அகற்றுகிறான் இறைவன். அப்படி உதவுபவனே இறைவன் என்கிறது குர்ஆன் பல இடங்களில்! அதற்கோர் மற்றோர் ஆதாரம்தான் இந்நபிமொழியில் வரும் சிறுவனின் விவகாரம்!

தன்னைத் தானே அழிவில் ஆழ்த்துவது முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் நலன்கள் கிடைக்க வழிவகுக்குமெனில் அவ்வாறு செய்வது கூடும். அதற்கு இந்த நபிமொழியில் வரும் சிறுவனின் செயல் ஆதாரமாக உள்ளது. ஆம், எந்த முறையைக் கையாண்டால் தன்னைக் கொல்ல முடியும் என்பதை மன்னனுக்குக் காண்பித்துக் கொடுத்துத் தன்னையே அழித்துக் கொண்டான் அவன்! அதனால் விழைந்த நல்ல விளைவுதான் மக்கள் அனைவரும் ஏக இறைவன் மீது விசுவாசம் கொண்டது!

இது குறித்து ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘திண்ணமாக இது ஜிஹாத் – இறைவழியிலான புனிதப் போர் ஆகும்! ஒரு சமுதாயமே இறைவன் மீது விசுவாசம் கொண்டது. அந்தச் சிறுவன் எதையும் இழந்து விடவில்லை. அவன் மரணத்தைத் தழுவினான் – அவ்வளவுதான்! இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் அவன் மரணம் அடைந்துதான் ஆக வேண்டும்’

அப்படி ஏக இறைவன் மீது விசுவாசம் கொண்ட அனைத்து மக்களையும் மன்னன் கடும் சோதனைக்குள்ளாக்கினான். ஆயினும் அவர்கள் ஏக இறைக்கொள்கையைக் கைவிடவில்லை! அதில் உறுதியாக இருந்தார்கள். அதற்காக உயிரையே அர்ப்பணித்தார்கள். அவர்களது கொள்கையே சத்தியமானது என்பதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் காண்பித்துக் கொடுத்தான். அதுதான் நெருப்புக்குண்டத்தில் இறங்கத் தயங்கிய ஒருபெண்ணின் கையிலிருந்த ஆண்குழந்தை ஒன்று – ‘தாயே! பொறுமை கொள். நீதான் சத்தியத்தின் மீது இருக்கிறாய் என்று பேசிய அற்புதம்!’

இன்று முஸ்லிம்களில் சிலர் உடலில் குண்டைக் கட்டிக் கொண்டு எதிரிகளுக்கு மத்தியில் ரகசியமாகப் புகுந்து அதை வெடிக்கச் செய்து பிறரை அழிப்பதுடன் தம்மையும் அழித்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தற்கொலையே! தற்கொலை செய்பவன் நரகத்தில் தள்ளப்பட்டு காலாகாலம் அதில் வீழ்ந்துகிடப்பான் என்று நபிமொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் கடும் தண்டனையும் அதற்குண்டு. ஆனால் இந்நபிமொழிக் கதையில் வரும் சிறுவன் செய்தது தற்கொலை அல்ல! இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் குண்டைக் கட்டிக்கொண்டு தம்மைத்தாமே அழிக்கும் செயல் தற்கொலையே. ஏனெனில் இதனால் இஸ்லாத்திற்கு எந்த நலனும் இல்லை. இதன்மூலம் யாராவது ஈமான் -இறைவிசுவாசம் கொள்கிறார்களா? இஸ்லாத்தின் மீது ஒரு நல்லெண்ணம் வருகிறதா? எதுவும் இல்லை! மட்டுமல்ல நிரபராதிகள் பலரும் அந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்து விடுகிறார்கள்! இது மாபாதகச் செயல் அல்லவா? இதனால் இஸ்லாத்தின் மீது பெரிய அளவில் தவறான கருத்து பரவி விடுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது!

ஆனால் ஒன்று: இப்படிச் செய்பவர் தனிப்பட்டதோர் ஆய்வின் அடிப்படையில் அது கூடுமெனக் கருதி அதை மேற்கொண்டாரெனில் தற்கொலை எனும் பாவத்திலிருந்து அவர் தப்பிக்கலாமென ஆதரவு வைக்கலாம். ஆனால்; அவரது செயலை மெச்சுவதற்கோ பிறர் அதைப் பின்பற்றுவதற்கோ எந்த அடிப்படையும் இல்லை. மேலும் ஷஹாதத்- இறைவழியில் உயிர்த் தியாகம் என்கிற உயர் அந்தஸ்தும் அவருக்கு இல்லை! ஏனெனில் அவர் ஜிஹாதின் வழியில் நடைபோடவில்லை.

கேள்விகள்

1) இளமையில் கல்வி கற்பதன் பயன்களை விவரிக்கவும்.

2) சூனியக்காரனை விடவும் துறவிதான் சிறந்தவர் என்பதை அந்தச் சிறுவன் எவ்வாறு அறிந்து கொண்டான்?

3) சூனியக்காரன் கீழானவன் என்றால் அதற்கான காரணம் என்ன?

4) இஸ்திகாரா தொழுகை என்பது என்ன? இந்நபிமொழிக் கதையில் அதுபோன்று நடந்ததென்ன?

5) பிறவிக் குருடர்களையும் வெண்குஷ்டக்காரர்களையும் குணப்படுத்துவதில் இந்தச் சிறுவனுக்கும் ஈஸா நபிக்கும் வித்தியாசம் என்ன?

6) இந்தச் சிறுவன் ஆற்றிய அழைப்புப் பணி என்ன?

7) இறைவிசுவாசிகளுக்கு ஏற்பட்ட சோதனைகளை விவரிக்கவும்.

8) உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றிருந்தால் குஃப்ர் – நிராகரிப்பு வார்த்தையை ஒப்புக்கு மொழிந்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் தானே… என்கிற கேள்விக்குப் பதில் என்ன?

9) இன்று தற்கொலைப் படை என்கிற பெயரில் உடலில் குண்டைக் கட்டிக்கொண்டு எதிரிகளின் கூட்டத்தில் புகுந்து குண்டை வெடிக்கச் செய்வது தற்கொலையா? தியாகமா? விளக்கிக் கூறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *