31. பொறுமையின் இலக்கணம்
ஹதீஸ் 31. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள், ஓர் அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றபொழுது (அவளிடம்) கூறினார்கள்: அல்லாஹ்வைப் பயந்து கொள்., பொறுமையைக் கடைப்பிடி, – அதற்குப் பெண் சொன்னாள்: என்னை விட்டும் தூரவிலகிச்செல்லும். எனக்கு ஏற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை, -நபியவர்களை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. பிறகு -இவர்கள்தாம் நபிகளார் என்று அவளிடம் சொல்லப்பட்டது. உடனே அவள் நபியவர்களின் வாசல் தேடி வந்தாள். அங்கு காவலாளிகள் யாரையும் அவள் காணவில்லை. அவள் சொன்னாள்: ‘உங்களை நான் அறிந்திருக்கவில்லை,- அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: ‘பொறுமை என்பது துன்பத்தின் தொடக்கத்திலேயே மேற்கொள்வதுதான். (புகாரி, முஸ்லிம்)
இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது: அவள் அழுது கொண்டிருந்தது அவளது ஆண் குழந்தையின் அடக்கத்தலத்தில்,,
தெளிவுரை
குழந்தைப் பருவத்திலேயே மரணம் அடைந்த தன் மகனின் பிரிவினால் அந்தப் பெண்மணி கடும் துயரத்திற்குள்ளாகி இருந்தாள். மகனின் மீது அவளுக்கு அளவு கடந்த அன்பு! மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டில் தங்கி பொறுமை காத்திட அவளால் இயலவில்லை.
அந்தப் பெண்ணுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய அறிவுரையின் கருத்து யாதெனில், இவ்வாறு அடக்கத்தலம் தேடிவந்து அழுது புலம்புவது தவறு. அல்லாஹ்வுக்கு அஞ்சி பொறுமை காத்திட வேண்டும் என்பதாகும்.
ஆனால் அவள் – என்னை விட்டும் விலகிச் செல்லும். எனக்கு ஏற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை என்று பதில் கூறினாள், அறியாமையினாலும் ஆற்றாமையினாலும்!
ஆம்! அவளுக்கு ஏற்பட்ட துன்பம் கடுமையானதென்பதை இந்தப் பதில் காட்டுகிறது! பிறகு நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தை விட்டும் விலகிச் சென்றார்கள். இவ்வாறு அறிவுரை கூறியவர்கள் நபிகளார் என்று அவளிடம் எடுத்துக் கூறப்பட்டபொழுது- அடடா! நபியவர்களின் கட்டளையை மீறிவிட்டோமே, அலட்சியமாகப் பேசிவிட்டோமே என்று மனம் வருந்தினாள்.
உடனே நபி(ஸல்) அவர்களின் வீட்டுக்கு வந்தாள். உங்களை நான் அறிந்திருக்கவில்லை. மிகவும் மனம் வருந்துகிறேன். இதோ! உங்கள் கட்டளை ஏற்று பொறுமை கொள்கிறேன். அறியாத்தனமாக அவ்வாறு பதில் சொல்லி விட்டேன். என்று கேட்டுக்கொண்டபொழுது –
பொறுமை என்பது துன்பத்தின் தொடக்கத்திலேயே மேற்கொள்வது தான், என்று தெளிவுபடுத்தினார்கள் நபியவர்கள்!
அதாவது துன்பம் நம்மைப் பீடித்தவுடனேயே மேற்கொள்வதுதான் பொறுமை! அதற்குத்தான் நன்மையும் நற்கூலியும் உண்டு. அப்பொழுது பொறுமை இழந்து வீணாகப் பதறித் துடித்து ஒப்பாரி வைத்து அழுது தீர்த்து – எல்லாம் முடிந்தபிறகு வருகிற அமைதி இருக்கிறதே அது பொறுமையாக இருக்க முடியாது., ஐந்தறிவுப் பிராணிகள் அடைவது போன்ற ஆறுதலாகத்தான் இருக்க முடியும்.
உண்மையான பொறுமை என்பது துன்பம் வந்து உள்ளத்தை உலுக்குகிறபொழுது மேற்கொள்கிற பொறுமைதான்! அதுதான் சிறப்புக்குரியது. அப்பொழுது அதற்கான கூலியை எதிர்பார்த்து இவ்வாறு பிரார்த்தனை செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்: இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீ முஸீபத்தீ வஃக்லுஃப்னீ கைர (ன்) மின்ஹா (நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம். யா அல்லாஹ்! எனது துன்பத்தில் எனக்கு நற்கூலி வழங்குவாயாக. மேலும் இதனைவிடச் சிறந்த நிலையை எனக்கு நீ பகரமாக்கித் தருவாயாக)
இந்த நபிமொழியில் இருந்து பல விஷயங்கள் தெரிய வருகின்றன:
நபி(ஸல்) அவர்கள் நன்மையின் பக்கம் மக்களை அழைத்து சத்திய நெறியில் அவர்களை நடைபோட வைப்பதில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த அதேநேரத்தில் மென்மையுடன் – நற்குணத்துடன்தான் மக்களை அணுகுபவர்களாய் இருந்தார்கள். இத்தகைய மிகஉயர்ந்த நற்குணம் அனைவருக்கும் -குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி ஆகும்.
இதோ! அடக்கத்தலம் வந்துஅழுது கொண்டிருந்த அப்பெண்ணிடம் -இறையச்சத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டபொழுது – என்னை விட்டும் தூரமாக விலகிச் செல்லும் என்றே அவள் கூறினாள். ஆனாலும் நபியவர்கள் ஆத்திரப்படவில்லை., பழிவாங்கும் போக்கைக் கடைப்பிடித்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவளை வெளியேறச் செய்யவுமில்லை! காரணம், அவளுக்கு ஏற்பட்டிருந்த கடும் துயரத்தையும் சஞ்சலத்தையும் நபியவர்கள் அறிந்திருந்தார்கள். அதற்கேற்பவே நடந்து கொண்டார்கள்.
அடக்கத்தலத்தை ஜியாரத் செய்வது பெண்களுக்கு ஹராம் அல்லவா? தடைசெய்யப்பட்டதல்லவா? என்று சிலர் வினா எழுப்பலாம்.
ஆம்! அது அவர்களுக்கு ஹராம் மட்டுமல்ல பெரும் பாவமான செயலும் கூட. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள், அடக்கத்தலங்களை ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை- அவற்றின் மீது தொழுமிடங்களை ஏற்படுத்தக்கூடிய, விளக்கேற்றக்கூடிய பெண்களைச் சபித்துள்ளார்கள்! (ஆதாரம்: திர்மிதி, நஸாஈ) – எந்தச் செயலை அல்லாஹ்வோ ரஸூலோ சபித்துள்ளார்களோ அது பெரும் பாவமான செயலே!
ஆனால் இந்தப் பெண்மணி ஜியாரத்திற்கு வரவில்லை., தனது மகனது பிரிவால் கடும் துயரத்திற்கும் சஞ்சலதிற்கும் உள்ளாகியிருந்ததால் அவன் அடக்கமாகிய இடம் தேடி வந்துவிட்டாள்! அதனால்தான் நபியவர்களும் சரி என்று விட்டு விட்டார்கள். வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு அவளை நிர்பந்திக்கவில்லை.
அறியாமையினால் தவறு செய்யும் மனிதன் மீது குற்றப்பதிவு செய்யப்படமாட்டாது. ஷரீஅத் சட்டம் என்னவென்று அறியாமல் செய்த தவறாயினும் சரி.. நிலைமையை அறியாமையினால் செய்த தவறாயினும் சரியே! அந்தப்பெண் நபியவர்களிடம் அலட்சியமாகப் பதில் சொன்னது அறியாமையினால்தான்!
அந்தப் பெண்மணி நபியவர்களின் வீட்டுவாசலுக்கு வந்தபொழுது அங்கு காவலாளிகள் யாரையும் அவள் காணவில்லை என்று இந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது நபியவர்களின் எளிய வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மக்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றிருப்போர் இதனையே முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். அவர்கள் தமது வீட்டு வாசலில் காவலாளிகளை நியமித்து பொதுமக்களை உள்ளே வரவிடாமல் தடுப்பது கூடாது.
ஆனால் அப்படிச் சந்திக்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமிருந்து அவர்களால் பணிகள் பாதிப்படைவதைப் பயந்தால் -மக்களைச் சந்திக்கவும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றவும் வேறொரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருந்தால் அவ்வாறு செய்வது கூடும். அதில் குற்ற மில்லை.
மட்டுமல்ல, ஒருவீட்டிற்குச் செல்ல வேண்டுமானால் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமென்று ஷரீஅத்தில் ஓர் ஒழுங்குமுறை உள்ளது. அதன் நியாயக் காரணம் என்ன? ஒரு நபிமொழியில் கூறப்பட்டிருப்பதுபோன்று – அந்நியப் பார்வையைத் தடுப்பது ஒருகாரணம். அதே போன்று, தான்விரும்பும் நபரை வீட்டினுள் அனுமதிக்கவும் தடுக்கவும் வீட்டின் உரிமையாளருக்கு அதிகாரம் உண்டு என்பதுவும் ஒருகாரணம். அதில் நியாயமுண்டு என்பதையே இந்த நபிமொழி காட்டுகிறது. ஆனால் சமூகப் பணிகளுக்கு பொறுப்பேற்றிருப்பவர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
அடக்கத் தலத்திற்கு வந்து அழுவதென்பது பொறுமைப் பண்புக்கு எதிரானதாகும். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் – அல்லாஹ்வுக்குப் பயந்து கொள். பொறுமையைக் கடைப்பிடி என்று சொன்னார்கள்.
மக்களில் சிலர் இத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்படுவது உண்டு. நெருங்கிய உறவினரோ உயிருக்குயிரான நண்பரோ தலைவரோ இறந்து விட்டால் அவர்களின் பிரிவைத் தாங்கமுடியாமல் அவர்களின் அடக்கத்தலங்களுக்கு அடிக்கடி வருவதையும் அழுவதையும் காணலாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு நாம் சொல்வது இதுதான்: ‘மரணம் அடைந்தவருக்கு நீங்கள் பயனளிக்க விரும்பினால் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அதனை விடுத்து அடக்கத்தலத்திற்கு வருவதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை’
ஏனெனில் மண்ணறைக்கு அடிக்கடி வருவதென்பது மரணித்த மனிதரையே சதாவும் நினைத்துக் கொண்டிருக்கச் செய்து சஞ்சலத்திலும் துயரத்திலும் மூழ்கிக் கிடக்கவே வழிவகுக்கும்!
மனிதன் துன்பங்களை மறந்திடவேண்டும்., மனத் துயரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வுலகமெனும் செயற்களம் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். – துன்பத்திற்குள்ளான மனிதன் மனத்தை வேறு விஷயங்களில் ஈடுபடுத்துவதும் துன்பங்களை முடிந்தவரையில் மறந்திட முயல்வதும்தானே அதற்கான சிறந்த வழிமுறையாகும்.
கேள்விகள்
1) எந்தப் பொறுமைக்கு நன்மையும் நற்கூலியும் உண்டு? அதற்கான இலக்கணம் என்ன?
2) இந்நபிமொழி நிகழ்ச்சியில் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு என்ன முன்மாதிரி கிடைக்கிறது?
3) கப்று ஜியாரத் செய்வது பெண்களுக்கு விலக்கப்பட்டதல்லவா? இங்கு நபியவர்கள் கப்று ஜியாரத்திற்கு அந்தப் பெண்ணை அனுமதி அளித்ததுபோல் தெரிகிறதே எனும் கேள்விக்கு பதில் என்ன?
4) வீட்டு வாசலில் காவலாளிகளை நியமித்து மக்களின் வருகையைத் தடுப்பதற்கு அனுமதி உண்டா?
5) அறிவிப்பாளர் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?