Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-33-34)

33,34. பிளேக் நோயும் தியாகியின் கூலியும்

ஹதீஸ் 33. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களிடம் தாவூன் எனும் உயிர்க்கொல்லி நோய் பற்றி கேட்டேன். அதற்கு என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: தாவூன் (எனும் நோய்) ஒரு தண்டனையாகும். அல்லாஹ், அதனை எந்த மக்கள் மீது அனுப்ப விரும்புகிறானோ அந்த மக்கள் மீது அனுப்புகிறான். ஆனால் முஃமின் (இறைவிசுவாசி)களுக்கு, அதனை ஓர் அருட்கொடையாக ஆக்கியுள்ளான். (இறைவிசுவாசியான) ஓர் அடியார், தாவூன் நோயில் மாட்டிக் கொள்கிறபொழுது -விதியில் அல்லாஹ் எழுதியதைத்தவிர வேறெதுவும் அவரைத் தீண்டாது என்று அறிந்தவராக, பொறுமையுடனும் அதற்கான கூலியை எதிர்பார்த்தவராகவும் தனது ஊரிலேயே தங்கியிருந்தார் எனில், இறைவழிப் போரில் உயிர் நீத்த தியாகி பெறுவதுபோன்ற கூலி நிச்சயம் அவருக்குண்டு. (புகாரி)

ஹதீஸ் 34. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்: அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய ஓர் அடியானை நான் சோதனைக்குள்ளாக்கினால் (அதாவது) அவனுக்கு விருப்பமான இரண்டைப் பறித்(து அவனைச் சோதித்)தால் அப்பொழுது அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டான் என்றால், அவ்விரண்டுக்குப் பகரமாக சுவனத்தை அவனுக்கு நான் வழங்குவேன் – அவனுக்கு விருப்பமான இரண்டை அதாவது அவனுடைய இரு கண்களை. (நூல்: புகாரி)

தெளிவுரை

இவ்விரு நபிமொழிகளும் குறிப்பிட்ட இரு துன்பங்களின் மீது பொறுமை கொள்வதன் சிறப்பை எடுத்துரைக்கின்றன. ஒன்று: உயிரையே காவு கொள்ளும் பிளேக் போன்ற கொடிய நோய்! இரண்டு: இரு கண்களையும் இழந்து பரிதவிப்பது.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பு பிளேக் போன்ற உயிர்க்கொல்லி நோய் தொடர்பானது.

தாவூன் எனும் அரபிச்சொல்லின் பொருள், பிளேக் எனும் குறிப்பிட்டதொரு நோயாகும். அல்லது தொற்று நோய்போல் எல்லோரையும் தாக்கி மரணத்தின் பிடியில் சிக்கவைக்கும் உயிர்க்கொல்லி நோய் அனைத்தையும் அது குறிக்கும். இந்த இரண்டாவது கருத்தின்படி காலரா, பிளேக் போன்ற நோய்கள் அனைத்தையும் இந்த வார்த்தை உள்ளடக்கும். ஆக, தாவூன் என்பது அல்லாஹ் அனுப்பும் கடுமையானதொரு தண்டனையே!

‘ஆனால் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரையில் அந்நோய் ஓர் அருட்கொடையாக மாறிவிடுகிறது’

இது, அவன் மேற்கொள்ளும் பொறுமையின் அடிப்படையிலாகும்! அதாவது, ஒவ்வொரு மனிதனும் -எங்கே உயிர்க்கொல்லி நோய் நம்மையும் தாக்கி விடுமோ, நம் உயிருக்கும் உலை வைத்துவிடுமோ என்று பயந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதாவது ஒரு திக்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இறைநம்பிக்கையாளன் பொறுமையுடன் அந்த ஊரில் தங்கியிருக்கிறான். அல்லாஹ் எழுதிய விதிப்படியே எதுவும் நடக்கும் எனும் உறுதிப்பாட்டுடன் நிலைகுலையாமல் இருக்கிறான். இதனால் அந்நோயால் தாக்குண்டு அங்கேயே மரணம் அடைகிறான் எனில் ஷஹீத் எனும் இறைவழிப் போர்த்தியாகியின் கூலியைப் போன்ற மகத்தான கூலி அவனுக்கு எழுதப்படும்! -இது அல்லாஹ்வின் அருட்கொடையே அன்றி வேறென்ன!

இதனால்தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் அறிவித்த ஆதாரப் பூர்வமான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது:

‘ஓர் ஊரில் இந்நோய் தாக்கியுள்ளதென நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் பகுதியில் இந்நோய் ஏற்பட்டால் அதை விட்டும் தப்பித்து விடலாமென அங்கிருந்து வெளியேறாதீர்கள்’ (நூல்: புகாரி)

ஏனெனில் பிளேக் தாக்கியுள்ள ஊர் என்று தெரிந்தே அங்கு செல்வது நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்வது போன்றதாகும். இது கூடாது!

இதேபோல் ஓர் ஊரை அந்நோய் தாக்கிவிட்ட பிறகு அங்குள்ள எல்லா மக்களும் ஊரையே காலி செய்துவிட்டு வெளியேறுவதும் அவ்வாறு செய்தால் அந்நோயில் இருந்து தப்பிவிடலாம் என்று கருதுவதும் கூடாது! ஏனெனில் அல்லாஹ் விதித்த விதியில் இருந்து தப்பி ஓடுவது எவ்விதப் பயனையும் அளிக்காது. அந்த ஊரிலேயே தங்கியிருப்பதும் நோய் நிவாரணத்திற்கான வழிவகைகளைக் கண்டுபிடித்து வாழ்வதுமே ஈமான் எனும் இறை நம்பிக்கையின் தேட்டமாகும்.

குர்ஆனில் – அல்பகரா அத்தியாயத்தில் ஓர் ஊர் மக்களைப் பற்றி எடுத்துக் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும். ஏதோ ஓர் உயிர்க் கொல்லி நோய் அந்த ஊரில் பரவியபொழுது மரணத்திற்குப் பயந்து வீடு வாசல்களை விட்டும் ஒட்டுமொத்தமாக அந்த மக்கள் வெளியேறி ஓடினார்கள்! செத்து மடியுங்கள் என்று அம்மக்களை நோக்கி அல்லாஹ் கட்டளையிட்டான்! அனைவரும் செத்து மடிந்தார்கள். பிறகு மீண்டும் அவர்களை உயிர் பெற்றெழச் செய்தான். அப்படிச் செய்ததன் நோக்கம், அல்லாஹ் நிர்ணயித்த விதியை விட்டும் எவரும் எங்கும் விரண்டோடித் தப்பிக்க முடியாது. அல்லாஹ்வின் பக்கம்தான் அடைக்கலம் தேடியாக வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும்!

உயிர்க்கொல்லி நோய் பரவியுள்ள ஊரில் வாழும் மக்கள் பொறுமையுடன் அங்கு தங்கியிருப்பதை – இறைவழிப்போரில் பொறுமையுடன் நின்றுபோர் புரிவதுடன் ஒப்பிட்டுக்கூறி பொறுமையின் சிறப்பைச் சிலாகித்துக் கூறுகிறது இந்நபிமொழி!

சுவனபதியில் ஒரு மீட்டர் இடமானாலும்…!

அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் கண்ணிழந்து தவிக்கும் பரிதாபகரமான நோய் மீது பொறுமை கொள்வது பற்றியதாகும். உலக வாழ்வில் மனிதர்களுக்குப் பல்வேறு சோதனைகளைக் கொடுக்கிறான் இறைவன். நோய்நொடிகளைக் கொடுத்துச் சோதிக்கிறான். இதுபோல் உறுப்புகளை ஊனம் அடையச் செய்தும் சோதிக்கிறான்! கண்ணொளி மங்கச் செய்வதோ முற்றிலுமாக இழக்கச் செய்வதோ இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்!

உலக வாழ்வில் மனிதன் இரு கண்களையும் இழப்பதென்பது உலகத்தையே இழப்பதற்குச் சமமாகும். கண்ணொளி இழந்த மனிதனின் ‘உலகம்’; இருண்டுபோய் விடுகிறது! உலகிலுள்ள எந்தப் பொருளின் அழகையும் அவன் கண்டு மகிழ முடியாது! இந்தச் சோதனையின் கடுமையை உணர்த்தும் வகையிலேயே இந்நபிமொழியின் வாசகமும் அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அடியானின் இருகண்களை . . . என்று சொல்வதற்கு பதிலாக அவனுக்கு அதிகப் பிரியமான இரண்டை என்று சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் சோதனையின் கடுமைக்குத் தக்கவாறு அதிக மதிப்புமிக்க நிலையான சுவன வாழ்வே அதற்கான கூலியாக அறிவிக்கப்பட்டுள்ளதும் பொறுத்தமான ஒன்றே!

ஆம்! சுவனப்பேறு என்பது இவ்வுலம் முழுவதற்கும் சமமானது. ஏன் இவ்வுலகத்தையும் இதிலுள்ள அனைத்துச் சுகபோகங்களையும் விடவும் மிக்க மேலான இன்ப நுகர்ச்சி கொண்ட வாழ்வே சுவன வாழ்வென்பது! மற்றொரு நபிமொழி கூறுகிறது:

‘சுவனத்தில் உங்களில் ஒருவரின் சாட்டை அளவுக்குரிய இடமென்பது உலகத்தை விடவும் அதிலுள்ள அனைத்தை விடவும் சிறந்ததாகும்.புகாரி

ஏனெனில் சுவன வாழ்வுதான் அழியாதது. நிலையானது. உலக வாழ்வு அழியக்கூடியதே. இதனால்தான் சாட்டை அளவு இடம் அதாவது ஒரு மீட்டர் இடம் சுவனத்தில் கிடைப்பது பெறற்கரிய பெரும்பேறு என்று சொல்லப்பட்டுள்ளது! கண்ணொளி இழந்தாலும் பொறுமை இழக்காமல் – இறைவனை ஏசாமல் -விதியை நோகாமல்- பாவங்கள் புரியாமல் – பதறிப் பரிதவிக்காமல் இருக்கும் இறைநம்பிக்கையாளனுக்கே இவ்வளவு உயர்ந்த பரிசை இந்த நபிமொழி அறிவித்துள்ளது! இது மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியாகும்!

இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒரு மனிதனின் ஒரு புலனை அல்லாஹ் பறித்து விடும்பொழுது பெரும்பாலும் வேறு புலன்களுக்கு அதிக ஆற்றலை அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அது, இழந்த புலனுக்கு ஈடாக அல்லது அந்த மனிதனின் வாழ்க்கையை ஓரளவுக்கு எளிதாக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது.

பார்வை இழந்த மனிதன் எது ஒன்றையும் துல்லியமாக உணர்ந்து சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் காணலாம். இதோ! கைத்தடியின் துணைகொண்டு அன்றாடம் வீதிகளில் அவர் உலா வருகிறார், பார்வையுள்ள மனிதர்களைப்போல்! பாதைகளில் அமைந்துள்ள வளைவுகளை, மேடுபள்ளங்களைத் துல்லியமாக உணர்ந்து போய்வருவதும் செயல்படுவதும் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது! இதுவும் அல்லாஹ்வின் பெரும் அருட்கொடையே ஆகும்!

கேள்விகள்

1) தாவூன் எனும் சொல்லின் பொருளை விவரிக்கவும்.

2) பிளேக் வந்து மரணம் அடைபவருக்கு தியாகியின் கூலி கிடைப்பதன் அடிப்படை என்ன?

3) சுவனத்தில் ஒரு சாட்டை அளவு இடம்கூட இவ்வுலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தது என்பதன் விளக்கம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *