35 பொறுமையும் நற்செய்தியும்
ஹதீஸ் 35. அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: ‘சுவனவாசிகளுள் ஒருவரான ஒரு பெண்மணியை உனக்குக் காண்பித்துத் தர வேண்டாமா?’ அதற்கு நான், ‘வேண்டும்’ என்றேன். அவர்கள் சொன்னார்கள்:
‘இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான்! இவள் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னாள்: ‘சிலபொழுது நான் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன். என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனக்காக அல்லாஹ்விடம் துஆ- பிரார்த்தனை செய்யுங்கள்’
அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீ விரும்பினால் இதனைப் பொறுத்துக்கொள். உனக்குச் சுவனம் கிடைக்கும். அல்லது அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்யத்தான் வேண்டுமென நீ விரும்பினால் உனக்கு நிவராணம் அளிக்க (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்கிறேன்’
அதற்கு அவள்- ‘(அப்படியாயின்) நான் பொறுத்துக் கொள்கிறேன். என்றாள். மேலும் சொன்னாள்: ஆனால் என் ஆடைகள் விலகி விடுகின்றன. அப்படி விலகாதிருக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் – அவ்வாறு அந்தப் பெண்மணிக்காக நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
சுவனத்தைப் பற்றிய நற்செய்தி கிடைக்கப் பெற்ற ஒரு பெண்மணியைக் காண்பித்துத் தரவா என்று கேட்கிறார்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், தம் மாணவர் அதா (ரஹ்) அவர்களிடம்!
சுவனப் பேறு பெற்றவர்கள் இரண்டு வகையில் உள்ளனர்.
1) கொள்கையின் அடிப்படையில் சுவனப்பேறு பெற்றவர்கள்.
-அதாவது யார் யார் ஏக இறைவனை ஏற்று வணங்கி வழிபட்டு அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறார்களோ அத்தகைய ஒவ்வொருவரும் சுவனவாசிகளே! ஆனால் இவ்வாறு பொதுவாகச் சொல்லப்படுமே தவிர இன்ன இன்ன மனிதர்கள் சுவனவாசிகளே என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட மாட்டாது! ஏனெனில் அவர்களுக்கு எத்தகைய முடிவு ஏற்பட்டது – ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது. அவர்களின் புறவாழ்க்கை அழகாக இருப்பது போல் அவர்களின் அகமும் தூய்மையானதுதானா என்பதை நாம் அறியோம்!
ஆனால் நல்லவர். பயபக்தியாளர் என்று எல்லோராலும் நற்சான்று வழங்கப்பட்ட ஒரு நல்லடியார் இறந்தால் அவரைக் குறிப்பிட்டு நாம் சொல்லலாம். இவர் சுவன பாக்கியம் பெறலாமென ஆதரவு வைக்கிறோம் என்று!
2) இன்னார் இன்னார் எல்லாம் சுவனம் செல்வர் என்று குறிப்பிட்டுச் சொல்லப்படுபவர்கள்!
– இது நபி(ஸல்)அவர்களால் நற்சான்று வழங்கப்பட்டதன் அடிப்படையிலாகும். தம்முடைய தோழர்களில் சிலருக்கு அத்தகைய நற்சான்றை நபியவர்கள் வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ, ஸயீத் பின் ஸைத், ஸஅத் பின் அபீ வகாஸ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதுல்லாஹ், அபூ உபைதா ஆமிர் பின் ஜர்ராஹ், ஜுபைர் பின் அவ்வாம் (ரலி… அன்ஹும்) ஆகிய பத்துத் தோழர்கள்!
இதேபோன்று ஸாபித் பின் கைஸ், ஸஅத் பின் முஆத், அப்துல்லாஹ் பின் ஸலாம், பிலால் போன்ற ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளார்கள். இத்தகையவர்களுள் – இந்த நபிமொழியில் கூறப்பட்ட பெண்மணியும் ஒருவர்!
இவர் சாதாரணமான ஒருபெண்தான். சமுதாயத்தில் எவ்வித மதிப்பும் இல்லாதவள்தான்! ஆயினும் சுவனத்தின் நற்செய்தி கிடைக்கப் பெற்றவள் எனும் வகையில் மிக உன்னதமான அந்தஸ்தைப் பெற்று விடுகிறாள்! இதற்கு அடிப்படை பொறுமைதான்! நீ விருப்பினால் இதனைப் பொறுத்துக்கொள். உனக்குச் சுவனம் கிடைக்கும் என்று நபியவர்கள் சொன்ன பொழுது (அப்படியாயின்) நான் பொறுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பொறுமையைத் தேர்ந்தெடுத்தாள். சுவனம் குறித்து நபியவர்கள் வழங்கிய நற்செய்தியைத் தக்கவைத்துக் கொண்டாள்!
இன்றைய காலத்திலும் சிலர் இதுபோன்று திடீர் திடீர் என்று மயக்கம் போட்டு கீழே விழும் சோதனைக்குள்ளாகுவதுண்டு. ஆகையால் இது தொடர்பாக மேலும் சில விவரங்களைச் சொல்வது பயனுள்ள ஒன்றே!
முதலாவதாக, இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று: நோயினால் ஏற்படுவது! -அதாவது, நரம்புத் தளர்ச்சி அதிகரித்தால் சிலர் இவ்வாறு பாதிக்கப்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் காண்பித்து முறையாக மருத்துவம் செய்தால் இதனைக் குணப்படுத்தலாம். குறைந்தபட்சம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இரண்டாவது ஜின்களின் தீண்டுதலால் ஏற்படுவது! அதாவது மனிதனைச் சிலபொழுது ஜின்னு தீண்டுவதுண்டு. அப்பொழுது அவன் உணர்வற்று கீழே விழுந்து விடுவான். பிரமைக்குள்ளாவான். சிலபொழுது அவனது நாவின் மூலம் ஜின்னு பேசும். தீண்டியதற்கான காரணத்தையும் சொல்லும்.
ஆனால் தீய மனிதர் சிலர் ஜின்னு பிடித்திருப்பதாக நடிப்பது – பேசுவது பற்றியும் அதன் மூலம் தங்களது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பற்றியும் பல பொய்யான நிகழ்ச்சிகளை நீங்கள் கேள்விப்படலாம். ஆயினும் உண்மையில் சிலர் ஜின்னுகளின் தீண்டுதலால் பாதிப்புக்கு உள்ளாவதை யாரும் மறுக்க முடியாது! இதோ குர்ஆனில் ஓரிடத்தில்,
‘(ஆனால்) வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் கொண்டவன் எழுவது போன்றே எழுவார்கள்’ (2 : 275) – இந்த வாசகங்களிலும் அவற்றின் சமிஞ்கைளிலும் ஷைத்தான் மனிதனைத் தீண்டுகிறான். அதனால் அவன் புலனுணர்வு இழந்து விடுகிறான் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபிமொழியிலும் இதற்கு ஆதாரம் உண்டு. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் தமது முஸ்னதில் பதிவு செய்துள்ளார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் ஏதோ ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண்ணைக் கடந்து சென்றார்கள். உணர்விழந்து கீழே விழக்கூடிய சிறுவனாகிய அவளுடைய மகனும் அவளுடன் இருந்தான். அந்தப்பெண் அவனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தாள். நபியவர்கள் அந்த ஜின்னை நோக்கிப் பேசினார்கள். அதுவும் அவர்களிடம் பேசியது. பிறகு அந்தச் சிறுவனை விட்டும் அது வெளியேறியது. அதன் பேரில் சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தாள்’ (இதனை ஷைக் நஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் தரத்திலானது என்று சொல்லியுள்ளார்கள்)
இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் சிலர் இத்தகையை நோய்களின் சிகிச்சைக்காக மந்திரவாதிகளிடம் செல்வதையும் அவர்கள் தகடு எழுதி தாயத்துகளில் அடைத்து கொடுப்பதை வாங்கி கழுத்துகளிலும் இடுப்புகளிலும் கட்டிக் கொண்டு திரிவதையும் பரவலாகப் பார்க்கலாம்.
மட்டுமல்ல எதிர் காலத்தில் இன்ன இன்ன காரியங்கள் நடைபெறும் என்று அந்த மந்திரவாதிகள் சொல்லும் ஜோசியத்தையும் இந்த அப்பாவி மக்கள் நம்புகிறார்கள்! எதிர்காலத்தில் நடைபெறுபவை ஃகைப் எனும் மறைவான உண்மைகள். அவை இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். எனக்கும் அது தெரியும் என்று ஒருவன் சொல்வதோ சொல்வதை நம்புவதோ ஷிர்க் – இணைவைப்பெனும் எனும் கொடிய பாவமாகும் என்பதை இந்த மக்கள் அறிவதில்லை! அல்லது அறிந்துகொண்டே சிலர் அந்தப் பாவத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்!
இவ்வாறு சூனியத்தையும் ஜோசியத்தையும் தொழிலாகச் செய்து பிழைப்பு நடத்துவோர் இஸ்லாமிய சமுதாயத்திலும் பெருகிக் கிடக்கிறார்கள். அவர்கள் சிலை வணங்கிகளிடமிருந்து இதனைக் கற்றுவந்து அப்பாவி முஸ்லிம்களைக் குழப்பத்திலும் வழிகேட்டிலும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்! இப்படிப்பட்ட வேடதாரிகள் யாராக இருந்தாலும் அவர்களிடம் செல்வதையும் அவர்கள் சொல்வதை நம்புவதையும் முஸ்லிம்கள் தவிர்த்திட வேண்டும்!
இத்தகைய நிலையில் ஜின்னின் தீண்டுதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதன் வழிமுறைகள் குறித்தும் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள துஆ, திக்ர்கள் பற்றியும் ஒருசில விவரங்கள் கூறுவது பயனுள்ளதாக இருக்கும்.
முதலில்: தூய்மையை எப்பொழுதும் பேணிவர வேண்டும். சுத்தம் ஈமானில் பாதி என்கிற நபிமொழியை முன்னர் நாம் விளக்கியுள்ளோம். உடைகளில் – உறுப்புகளில் அசுத்தங்கள் மண்டினால் – ஜின்னுகளின் தீண்டுதல் ஏற்பட இலகுவாகும்! எனவே தினமும் குளித்து, ஆடைகளை மாற்றி சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் தொழுகைகளைப் பேணிவர வேண்டும். அவற்றை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதில் கவனம் கொள்ள வேண்டும்.
இரண்டாவது, குர்ஆன்-ஹதீஸில் வந்துள்ள திக்ர்கள், பாதுகாப்புத்தேடும் வாசகங்கள் ஆகியவற்றை ஓதிப் பாதுகாப்புத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு ஸலாம் கொடுத்தவுடன் ஓதும் திக்ர்களுடன் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும். மேலும் தூங்கும் முன்பாகவும் அதை ஓதிவர வேண்டும்.
ஆயத்துல் குர்ஸி
உச்சரிப்பு: அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், லா தஅஃகுதுஹு ஸினது (ன்வ்) வலா நவ்மு(ன்ல்) லஹு மா ஃபிஸ் ஸமாவாத்தி வமா ஃபில் அர்ழ், மன் ஃதல்லதீ யஷ்ஃபஉ இன்தஹு இல்லா பி இஃத்னிஹி, யஃலமு மாபைன அய்தீஹிம் வமா ஃகல்ஃபஹும், வலா யுஹீத்தூன பி ஷையின்(ம்) மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ், வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்
பொருள்: அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவன். (இப்பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். தூக்கமோ சிற்றுறக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்கள், பூமியிலுள்ளவை யாவும் அவனுடையவையே. அவனது அனுமதி இன்றி அவனது முன்னிலையில் யார்தான் பரிந்து பேசமுடியும்! (மனிதர்களாகிய) இவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும் இவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடியதைத் தவிர அவனது ஞானத்தில் இருந்து எவரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது! அவனது குர்ஸி வானங்கள் பூமி அனைத்தையும் வியாபித்துள்ளது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவம் மிக்கவன்! (2 : 255) மேலும் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
‘ஒருவர் இரவில் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் அவருக்காக அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாவலர் இருந்து கொண்டே இருப்பார். அதிகாலைவரை ஷைத்தான் அவரை நெருங்கவே மாட்டான்‘ நூல்: புகாரி
இதேபோல் குல் ஹுவல்லாஹு அஹத்
குல்அவூது பிரப்பில் ஃபலக்
குல் அவூது பி ரப்பிந்நாஸ்
ஆகிய சூராக்களையும் ஓதிட வேண்டும்.
அத்தகைய தீண்டுதலுக்கு ஒருவன் உள்ளாகிவிட்டால் அதன் பிறகு செய்ய வேண்டியது என்னவெனில், திருக்குர்ஆனின் வசனங்களை அந்த மனிதன் மீது ஓதி ஊதவேண்டும். அந்தத் தீண்டுதலில் இருந்து முற்றாகத் தெளிவு கிடைக்கும் வரையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடும் துஆக்களையும் திக்ர்களையும் ஓதிக்கொண்டிருக்க வேண்டும்!
அறிவிப்பாளர் அறிமுகம் – அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்)
அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் தாபிஈன் (எனும் நபித் தோழர்களுக்கு அடுத்த) தலைமுறையினர் ஆவார்! மக்கா நகரைச் சேர்ந்த இவர் புகழ்மிக்க மேதைகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்! தங்களது எண்பதாவது வயதில் ஹிஜ்ரி 114 ம் ஆண்டில் மரணம் அடைந்தார்கள்! ஆதாரப் பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்புகளிலும் பிற நூல்களிலும் இவர்கள் அறிவித்த நபிமொழிகள் பதிவாகியுள்ளன!
கேள்விகள்
1) சுவன பாக்கியம் பெற்றவர்கள் இருவகையினர் என்று சொல்லப்பட்டது. அதன் விளக்கம் என்ன?
2) ஸாபித் பின் கைஸ், ஸஅத் பின் முஆத், அப்துல்லாஹ் பின் ஸலாம், பிலால் பின் ரபாஹ் (ரலி . . . அன்ஹும்) ஆகிய ஸஹாபாக்களுக்கு நபியவர்கள் சுவனம்கொண்டு நற்செய்தி அளித்த நிகழ்ச்சிகளைக் கூறவும்.
3) ஜோசியம் சொல்வதை அதாவது எதிர் காலத்தில் இன்ன இன்ன காரியங்கள் நடைபெறும் என்று சொல்வதை நம்புவது ஷிர்க் என்பதற்கு ஆதாரங்கள் எழுதவும்.
4) ஆயதுல் குர்ஸி ஓதுவதன் சிறப்பு என்ன? விளக்கம் என்ன?