Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-37-38)

37, 38.  ஏன் இந்தத் துன்பங்கள்?

ஹதீஸ் 37. அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’ -: புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: நோய்)

ஹதீஸ் 38. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;: நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்தார்கள். நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதே?’ அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஆம்! உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்பட்டுள்ளது!’

நான் கேட்டேன்: ‘அதற்கு பகரமாக உங்களுக்கு இருமடங்கு கூலி உண்டு அல்லவா?’ – நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ஆம்! அது அப்படித்தான்! எந்த ஒரு முஸ்லிமானாலும் சரி, அவருக்கு ஒரு தொல்லை வந்தால் – ஒரு முள்ளோ அதை விடவும் பருமனான ஒன்றோ அவரது உடலைக் குத்தினால்கூட அதனை அவருடைய தீமைகளுக்குப் பரிகாரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை. மேலும் மரம் தன்னுடைய இலைகளை உதிர்ப்பதுபோன்று அந்த முஸ்லிமின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டும் களையப்படுகின்றன!’ நூல்: புகாரி

மூலத்தில் அல்வஅக் எனும் வார்த்தை ஆளப்பட்டுள்ளது. அதன் பொருள்: காய்ச்சலின் தாக்கம் அல்லது காய்ச்சல்.

தெளிவுரை

உலகில் ஒருமனிதனுக்கு ஏற்படுகிற துன்பங்கள் அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகின்றன. மேற்சொன்ன இரண்டு நபிமொழிகளிலும் இது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கும் அருட்கொடை என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். துன்பங்களைக் கொடுத்து மனிதனைச் சோதிப்பதும் சோதிக்காதிருப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே! அப்படி இருக்க அந்தத் துன்பங்களின் மூலம் பாவங்களைப் போக்குகிறான், பரிகாரம் அளிக்கிறான் என்றால்அது அவனது அருட்கொடை அன்றி வேறென்ன!

இவ்வுலகில் மனிதன் என்றைக்கும் சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. இன்பம் ஒருநாள் என்றால்., துன்பம் ஒருநாள்! லாபம் ஒருநாள் என்றால், நஷ்டம் ஒருநாள்! இவ்வாறு இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதுதான் உலக வாழ்க்கை! எத்தனை விதமான துன்பங்கள், கஷ்டங்கள்! உடல் மற்றும் உள்ளம் ரீதியான துன்பங்கள் ஒருபக்கம் என்றால் குடும்பம் மற்றும் சமுதாய ரீதியான துன்பங்கள் மறுபக்கம்! இவ்வாறு சுழன்றுவரும் துன்பங்களை எண்ணிக் கணக்கிடவே முடியாது! இறைவிசுவாசிகளானாலும் நிராகரிப்பாளர்களானாலும் -அனைவரும் துன்பங்களுக்கு ஆட்பட்டே ஆக வேண்டும்!

ஆனால் ஓர் இறைவிசுவாசியைப் பொறுத்தவரையில் அவனுடைய அனைத்து விவகாரங்களும் நன்மைகளாகவே அமைந்து விடுகின்றன. வாழ்க்கையில் எது வந்தாலும் அதனை அவன் எதிர் கொள்வது ஈமான் எனும் விசுவாசத்தின் அடிப்டையில்தான்! துன்பம் வந்தால் அதனைக் கொடுத்தது இறைவன்தான். அதன் மூலம் நம்மைச் சோதிக்கிறான் என பொறுமையுடன் அதைத் தாங்கிக் கொள்கிறான். அதன் பேரில் அவனுக்குக் கூலி கிடைக்கிறது. அது நன்மையாகி விடுகிறது.

நீங்கள் உண்மையான இறைவிசுவாசி எனில் வாழ்க்கையில் நீங்கள் எதிர் கொள்ளும் எது ஒன்றாலும் அதனை ஈமானுடன் எதிர்கொள்ளுங்கள். எந்த ஒரு கவலையாயினும்- காலில் முள் குத்தியதால் ஏற்படும் நோவாயினும் சரியே, அதன்மூலம் வீணாக அல்லாஹ் நம்மைத் துன்பப்படுத்துகிறானே என்று விதியை நொந்து கவலைப்படாதீர்கள். இறைவனின் எந்த ஒரு செயல்பாடு என்றாலும் அது குறித்து உங்கள் மனம் திருப்தி அடைந்து பொறுமை காத்தால் அதனை அல்லாஹ் உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்குகிறான். உங்கள் அந்தஸ்தை உயர்த்துகிறான். இது அவனது பெரும் அருட்கொடையே!

இத்துடன் இன்னொன்றையும் கவனியுங்கள். பொறுமை கொள்வதுடன் அதற்கான கூலியை எதிர்பார்த்திருந்தால் அதற்கும் நன்மை கிடைக்கிறது.

ஆனால் துன்பத்திற்குள்ளாகும் மனிதன் சிலபொழுது இதனை மறந்து விடுகிறான். அதாவது, பொறுமைக்கான கூலியை எதிர்பார்க்க மறந்து விடுகிறான். அந்த மறதிக்குக் காரணம் வந்துற்ற துன்பத்தால் அவனது மனம் துவண்டு விடுவதே! ஆகையால் பொறுமை கொள்வதுடன் கூலியை எதிர்பார்க்க மறந்ததால் அவனுக்குக் கிடைப்பது. பாவப்பரிகாரம் எனும் பயன் மட்டும்தான்! எப்படியானாலும் துன்பம் வந்தால் ஏதேனும் வகையில் அது லாபமாகத்தானே அமைகிறது! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

கேள்விகள்

1) வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் ஆகுவதை ஆதாரத்துடன் விளக்கவும்.

2) துன்பங்களுக்குள்ளாவது ஓர் இறைவிசுவாசியைப் பொறுத்தவரையில் ஓர் அருட்கொடை என்பதன் கருத்து என்ன? அறிவிப்பாளர்கள் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *