Featured Posts

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும், 2

பனு முஸ்தலிக் போர் நடப்பதற்கு முன்பே முஸ்லிம் பெண்கள் ஆடைகள் பற்றிய ஹிஜாப் சட்டம் நடைமுறையில் இருக்கிறது, அதாவது பர்தா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது.

‘இஸ்லாத்தில் பர்தா – வரலாறும் நிகழ்வுகளும்’ என்று இஸ்லாத்தின் பர்தா வரலாறை எழுதப் புகுந்தவர் வரலாற்றை அபத்தமாக்கியிருக்கிறார். இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும் என்ற பதிவில் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மீது அவதூறு கூறியது சம்மந்தமாக நாம் முன் வைத்த நீண்ட ஹதீஸில்…

(இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.



2.(படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். எனவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில்) விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.



அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மேற்காணும் செய்தியிலிருந்து அந்நூர் அத்தியாயத்தின் 31வது வசனம், அஹ்ஜாப் அத்தியாயத்தின் 59வது வசனம் ஆகிய இந்த இரண்டு வசனங்களும் பனு முஸ்தலிக் போர் நிகழ்வுக்கு முன்பே அருளப்பட்டது என்பது தெளிவு. ஆனால் எதிரிகள் இஸ்லாத்தின் வரலாற்றை தலைகீழாகப் புரட்டுகிறார்கள். 24:31 வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணியை விளக்கப் புகுந்தவர் கூறுவதைக் கேளுங்கள்!

//இந்த வசனம் அருளப் பட்டதன் பிண்ணனியைப் அறிவது, இந்த வசனத்தை முறையாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முகமது நபியவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து, சுற்றி இருந்தவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது(ஆறாம் ஆண்டு என இஸ்லாமிய வரலாற்றறிஞர்களுள் சிலர் கருதுகின்றனர்). அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடீரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.//

இஸ்லாத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், ஏற்கெனவே அருளப்பட்ட வசனத்தை தம் கதைக்கு தோதாக மீண்டும் அருளப்பட்டதாக துணிந்து பொய் சொல்கிறார்.

மேலும் 24:31 வசனத்தை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் துவங்கும் முன்பும் அந்த வசனம் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவிகள் குறித்து மட்டுமே சொல்லப்பட்டவைதாம் என்றும் தப்பாக அடம்பிடிக்கிறார்.

//இது போன்றே வசனங்கள் 33:53,33:55 ஆகியவை, மற்ற ஆண்கள் முகமது நபியவர்களின் வீட்டுக்குள் செல்வதையும் (அக்காலத்தில், நபியவர்களின் வீடும் மசூதியும் சேர்ந்தே இருந்தது), அவரது மனைவிகளிடம் பேசுவதையும் தடை செய்தன. ரூமி, இந்தப் பிண்ணனி பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. மேலும், இந்த அத்தியாயத்தைத் தவிர, இன்னொரு இடத்தில் திருக்குரானில் பெண்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்து கொள்வது பற்றி வருகிறது. அது, சூரா அந்நூர் என்கின்ற இருபத்தினான்காவது அத்தியாயம் ஆகும். அந்த திருக்குரான் வசனங்களுமே, இப்படிப் பட்ட ஒரு இக்கட்டான சூழலிலேயே அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அவையும், முகமது நபிகளின் மனைவிகளைக் குறித்தே சொல்லப் பட்டவைதாம். அதாவது, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல, முகமது நபியவர்களின் மனைவிகள் எந்தவித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையும், அவர்கள் வேறு யாரையும் மணந்து கொள்ளக் கூடாது என்பதுமே இந்த வசனங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.//

24:31 ” இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.”

24:31, 33:59 ஆகிய இரு வசனங்களும் வேறு சமயத்தில் அருளப்பட்டவை. இவ்விரு வசனங்கள் மட்டும்தான் முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு வசனங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பும், நியமிக்கப்பட்ட ஆரம்பக் கட்டங்களிலும் அறியாமை காலத்து அரபு மக்களிடம் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகள விட்டு விடுவோம், அவர்களின் குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அறியாமைக் காலத் திருமணங்கள் நான்கு வகைகளில் நடந்தன.

1. ஒரு ஆண்மகன் பெண் பேசி அவளுக்கு மஹர் கொடுத்து மணந்து கொள்வது.

2. ஒருவனுக்கு தனது மனைவி மூலம் குழந்தை ஏதும் உருவாகா விட்டால், அவளது மாதவிடாய் நின்றவுடன் இன்னொருவனிடம் அனுப்பி வைப்பான். அந்த இன்னொருவன் மூலம் அவள் கருவுறும் வரை கணவன் அவளைத் தீண்ட மாட்டான் அவள் கருவுற்றது தெரிந்ததும் அவளைத் திண்டுவான். இதுவும் திருமணம் என்றே கூறப்பட்டது.

3. பத்துக்கும் குறைவான ஆண்கள் ஒரு பெண்ணிடம் சென்று அத்தனை பேரும் அவளுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருவுற்று, குழந்தை பெற்று சில நாட்கள் கழிந்ததும் அவள் அவர்களை அழைப்பாள். அவர்களில் யாரும் மறுக்காமல் வந்து விடுவார்கள். ‘உங்களுடன் நடந்த உறவினால் நான் குழந்தை பெற்று விட்டேன்’ என்று அவர்களிடம் கூறி விட்டு அவள் விரும்பிய ஒருவனைக் குறிப்பிட்டு ‘இது உன் குழந்தையே” என்பாள் அக்குழந்தை அவனுக்கு உரியதாகக் கருதப்படும்.

4. யார் வேண்டுமானாலும் வரலாம் என்று நடந்து கொண்ட விபச்சாரிகளும் இருந்தனர். அவர்களின் வாசல்களில் கொடிகளை நட்டு வைப்பார்கள். அது அடையாளமாகத் திகழ்ந்தது. அவள் கருவுற்று குழந்தைப் பெற்றால் அனைவரும் அவளிடம் வருவார்கள். ரேகை நிபுணர்கள்(?) அழைக்கப்படுவார்கள். குழந்தையின் ரேகை யாருடைய ரேகையுடன் ஒத்திருந்ததோ அவனுக்குரியதாக அக்குழந்தை கருதப்பட்டு விடும். (அபூ தாவூத்)

விபச்சாரம் சர்வ சாதாரணமாக அவர்களிடையே நடந்து வந்தது, அதற்கு சமூக அங்கீகாரம் கிடைத்ததையும் இந்தச் செய்தியிலிருந்து நாம் அறியலாம்.

‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பையன் என் மகனாவான், நான் இவளது தாயுடன் விபச்சாரம்” செய்துள்ளேன் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ”இத்தகைய கோரிக்கைக்கு இஸ்லாத்தில் இடமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். (அபூ தாவூத்)

இந்த நிகழ்ச்சியும் அவர்களின் தரங்கெட்ட வாழ்க்கையை அடயாளம் காட்டுகிறது.

திருமணம் செய்ய எந்த விதமான கட்டுப்பாட்டையும் அவர்கள் வைத்திருக்கவில்லை. கணக்ககின்றி பெண்களை மணந்து கொள்வதை அந்தச் சமுதாயம் அங்கீகரித்து வந்தது.

ஒருவர் இஸ்லாத்தை ஏற்கும் போது அவருக்கு பத்து மனைவிகள் இருந்ததாகவும், நான்கைத் தவிர மற்றவர்களை விவாக விலக்குச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்தால், அல்லது அவன் இறந்து விட்டால் அவனது மனைவியை அவனது மகனே மணந்து கொள்ள அந்தச் சமுதாயத்தில் அனுமதி இருந்தது. இது பரவலாக நடைபெற்றும் வந்தது.

‘உங்கள் தந்தையர் மணந்து கொண்டவர்களை நீங்கள் மணக்கக் கூடாது’ (அல்குர்அன் 4:22) என்ற கட்டளை மூலம் இதனை அறியலாம்.

அன்றைய அரபு மக்களின் வாழ்க்கை நாகரீகக் கலாச்சாரம் இப்படியாகத்தான் இருந்தது. இனி 24:31 வசனம் அருளப்பட்ட போது,

”(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் முந்தானையைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் ஆடைகளில் ஓரத்தைக் கிழித்து அதனை முந்தானையாக ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள். (ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரலி) (புகாரி)

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புக்கு மேல் தங்களின் முந்தானையைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனை முந்தானையாக ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள். (அன்னை ஆயிஷா(ரலி) (புகாரி)

இந்த வசனம் அருளப்படுவதற்கு முன் அன்றைய பெண்கள் மாராப்பு, முந்தானை அணிந்திருக்கவில்லை என்பதும், இந்த வசனம் அருளப்பட்ட செய்தி கிடைத்தவுடன் தங்களிடம் மேலதிமாக துணி இல்லை என்ற நிலையிலும் கீழாடையில் ஒரு பகுதியைக் கிழித்து மாராப்பாக்கிக் கொண்டார்கள் என்பதையும் விளங்கலாம்.

இன்று நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் ‘மேலங்கி’ ஆடை பர்தா முறையை ”முஸ்லிம்கள் மதச் சின்னமாக்குகிறார்கள்” என்று ஒப்பாரி வைப்பவர்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் படித்து சிந்திக்கட்டும். இன்றைய பர்தா முறை நபி(ஸல்) அவர்களின் காலத்துப் பெண்களிடம் இருக்கவில்லை என்பதை உணரட்டும். அங்கங்கள் தான் மறைக்கப்பட வேண்டும் என்று இறைவன் கூறுகிறானே தவிர குறிப்பிட்ட முறையில் தைக்கப்பட்ட ஆடைகளால்தான் மறைக்க வேண்டுமெனக் கூறவில்லை. என்பதை கவனத்தில் கொள்ளவும்.

(இன்னும் வரும்)

One comment

  1. ¿ñÀ÷ «Ò Ó¨†,

    Á¢¸ «Õ¨Á¡¸ ÅÃÄ¡üÚ ¬ö׸¨Ç ÅÆí¸¢ì ¦¸¡ñÊÕ츢ȣ÷¸û. ÁüÈ¡÷¸û þŠÄ¡ò¨¾ ÒâóÐì ¦¸¡ûÇ þÐ ¯¾×õ. «§¾ §¿Ãõ, þŠÄ¡ò¨¾ Å¢Çì̸¢§Èý ±ýÚ ¸¢ÇõÀ¢ÔûÇ Á¡üÈ¡÷¸Ç¢ý ÅÃÄ¡üÚ À¢¾ð¼ø¸ÙìÌ ¿øÄ À¾¢Ä¡¸×õ þÕ츢ÈÐ.

    ¦¾¡¼÷¸ ¯í¸û ±ØòÐì¸û.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *