Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-42)

42. பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி!

ஹதீஸ் 42. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஹுனைன் யுத்தம் நடைபெற்றபொழுது ஃகனீமத் (அதாவது, போரில் கைப்பற்றப்பட்ட) பொருட்களின் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்கள் சில மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் என்பாருக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். உயைனா பின் ஹிஸ்ன் என்பாருக்கும் அதுபோல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த வேறு சிலருக்கும் வழங்கினார்கள். அந்நாளின் பங்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். (இது குறித்து) ஒருவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நீதி கடைப்பிடிக்கப்படாத பங்கீடாகும். இறை உவப்பு இதில் நாடப்படவில்லை.

நான் சொன்னேன்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதனை நிச்சயம் நான் தெரிவிப்பேன்’ அவ்விதமே நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அந்த மனிதர் சொன்னதைத் தெரிவித்தேன்.

அப்பொழுது நபியவர்களின் முகம்-சிகப்புச் சாயம் போல் மாறிவிட்டது! பிறகு நபியவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி செலுத்தவில்லையானால் பிறகு யார்தான் நீதி செலுத்துவார்? பிறகு சொன்னார்கள்: மூஸாவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அவருக்கு இதனை விடவும் அதிகமாகத் துன்பம் இழைக்கப்பட்டது., ஆயினும் அவர் பொறுமை காத்தார்!

(எனக்குள்) நான் சொல்லிக்கொண்டேன்: நிச்சயமாக! இனி எந்த விவகாரத்தையும் நபியவர்களிடம் கொண்டு செல்லமாட்டேன், நூல்: புகாரி, முஸ்லிம் – அஸ் ஸிர்ஃப்: சிகப்புச் சாயம்

தெளிவுரை

ஹுனைன் யுத்தம் என்பது தாயிப் வாசிகளுடன் மேற்கொள்ளப்பட்ட போராகும். இது மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்தது. இதில் வெற்றி பெற்றது நபியவர்களும் முஸ்லிம்களுமே! இந்தப் போரில் எதிரிகளிடம் இருந்து நிறைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஒட்டகங்கள், ஆடுகள், தங்கம் – வெள்ளி நாணயங்கள் எனப் பலவகைப் பொருள்கள் முஸ்லிம்களுக்குக் கிடைத்தன.

பிறகு முஸ்லிம்களை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வழியில் ஜுஅரானா என்ற இடத்தில் தங்கினார்கள். இது தாயிபில் இருந்து மக்கா வழியில் ஹரம் (புனிதப்) பகுதியின் எல்லையிலுள்ள ஓர் இடம். நபி(ஸல்) அவர்கள் அங்கு தங்கியிருந்த பொழுது – போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய பல்வேறு அரபு குலங்களின் தலைவர்களுக்கு அதிக அளவு வழங்கினார்கள். இதற்குக் காரணம் இருந்தது. அவர்கள் இஸ்லாத்திற்குப் புதியவர்கள். அவர்களின் இதயங்களை இணக்கமாக்க வேண்டும். ஈர்க்க வேண்டும் என்பதுதான் அது!

ஆனால் இந்நோக்கத்தை அறியாத சிலர் இது குறித்து பலவாறு பேசினார்கள். ஒருவர் சொன்னார்:

‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நீதி கடைப்பிடிக்கப்படாத பங்கீடாகும். இறை உவப்பு இதில் நாடப்படவில்லை’

நபி(ஸல்) அவர்களே நேரடியாக ஈடுபட்டுப் பங்கிட்டுக் கொடுத்தது பற்றியே இவ்வாறு அவதூறு பேசினார். உலகாசையும் ஷைத்தானிய ஊசாட்டமும் எந்த அளவுக்கு ஒருமனிதனை அழிவிலும் வழிகேட்டிலும் தள்ளிவிட வல்லது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்!

இது சாதரணமான வார்த்தை அல்ல., ஈமானைப் பறித்துவிடும் வார்த்தை! இறைநிராகரிப்பில் ஆழ்த்தக்கூடிய வார்த்தை! அல்லாஹ்வும் ரஸூலும் நீதி செலுத்தவில்லை என்பதற்கு என்ன பொருள்? அவ்விருவரும் அநீதி இழைத்து விட்டார்கள் என்பதுதானே பொருள். (அல்லாஹ் காப்பானாக) இது குஃப்ர் – இறை நிராகரிப்பு அன்றி வேறென்ன? ஆனால் நபியவர்களோ அந்தப் பங்கீட்டில் இஸ்லாத்தின் நலனையே நாடினார்கள். இறை உவப்பே அவர்களின் இலட்சியம்!

நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு அதிகப்படியாக வழங்கியது புதிதாக இஸ்லாத்திற்கு வந்த மக்களின் தலைவர்களுக்குத்தான்! அதன் மூலம் அவர்களின் இதயங்களைக் குளிரச் செய்ய வேண்டும். இஸ்லாத்திற்கு வலிமை சேர வேண்டுமெனக் கருதியே அப்படிச் செய்தார்கள். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் – மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் இஸ்லாத்தில் கவர்ச்சியாகி விட்டால் – அவர்களின் விசுவாசம் வலுப்பெற்று விட்டால் அவர்களுக்குக் கீழுள்ள மக்கள் சந்தோசம் அடைவர்! நபி(ஸல்) அவர்கள் நமக்கு விரோதமானவர் அல்லர். நமக்குச் சாதகமாகவே உள்ளார்கள் என்கிற செய்தி பரவுவதன் மூலம் ஏனைய குலத்தார்களும் கோத்திரத்தார்களும் இஸ்லாத்தில் இணைவார்கள். அதன் மூலம் இஸ்லாத்திற்கு வலிவும் பொலிவும் கூடும்! ஆனால் எந்த விஷயங்களையும் மன மாச்சரியமின்றி – சுயநலக் கண்ணோட்டமின்றி ஆராய்ந்திட வேண்டும். அறியாமை என்பது எப்பொழுதும் ஆபத்துதான்! மனிதர்களை அது அழிவில்தான் ஆழ்த்தும்! (அல்லாஹ் பாதுகாப்பானாக)

நபியவர்கள் மன வேதனை அடைந்தார்கள். அது அவர்களது முகத்தில் வெளிப்பட்டது. முகம் செக்கச்செவேறென்று சிவந்துவிடும் அளவு சினம் கொண்டார்கள்! அப்பொழுது சொன்னார்கள்:

‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி செலுத்தவில்லையானால் பிறகு யார்தான் நீதி செலுத்துவார்?’

உண்மைதானே! இவ்வுலகில் நீதியை நிலைநிறுத்துவதற்காகவே இறைவன், அவர்களை நபியாக அனுப்பி வைத்தான், இறைவழிகாட்டலின் அடிப்படையிலேயே நபியவர்கள் செயல்பட்டார்கள். அந்த நபியவர்களின் செயலையே அவதூறு பேசினால் பிறகு இந்நானிலத்தில் வேறு யாரால்தான் நீதியை நிலைநாட்ட முடியும்? – மேலும் சொன்னார்கள்:

‘மூஸாவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அவருக்கு இதனை விடவும் அதிகமாகத் துன்பம் இழைக்கப்பட்டது. ஆயினும் அவர் பொறுமை காத்தார்’

இந்த வாசகத்திற்காகவே இந்நபிமொழியை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இங்கு இடம்பெறச் செய்துள்ளார்கள். அதாவது நபிமார்களுக்குத் துன்பம் இழைக்கப்பட்டதுண்டு. அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் பொறுமைதான் மேற்கொண்டார்கள்!

ஆம்! தூதுத்துவப் பணியேற்று மக்களைச் சீர்திருத்தம் செய்யுமாறு இறைவன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு இவ்வுலகில் நபிமார்கள் அழைப்புப் பணியாற்றிபொழுது அறியாமையில் உழன்று கொண்டிருந்த மக்கள் சிலர், அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றனர். வேறு சிலர், சூனியக் காரர்கள் – ஜோதிடர்கள், கவி பாடுகிறவர்கள் – கற்பனை உலகில் வாழ்பவர்கள் என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசினர்! இவற்றையெல்லாம் அந்நபிமார்கள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பொறுமையின் சிகரமாக விளங்கித் தங்களது சீர்திருத்தப் பணியிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். மக்களை ஓரிறை விசுவாசத்தில் நிலைக்கச் செய்து நேர்வழியில் செலுத்திட ஓயாது உழைத்தார்கள். நபிமார்களின் பொறுமைப் பண்பு குறித்து குர்ஆனில் ஓரிடத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

‘இந்நபிமார்கள் தாங்கள் பொய்ப்படுத்தப்பட்டதையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தனர். நம்முடைய உதவி அவர்களிடம் வரும்வரையில்!’ (6:34)

இதோ! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதே பழி சுமத்தப்படுகிறது! பண்பாடற்ற வார்த்தை கூறப்படுகிறது! அதுவும் எப்பொழுது? இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய ஆரம்பத்தில் அல்ல. ஹிஜ்ரத் நடைபெற்று எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னர்! அவர்கள் ஓர் உண்மைத் தூதர்தான் – நபிதான் என்று தெளிவாக்கப்பட்டதன் பின்னர் – அதற்கான தெளிவான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர் – நபியவர்கள் மேற்கொண்ட அழைப்புப் பணிக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்த பின்னர் – அவர்களுக்கு ஆட்சியதிகாரமும் வழங்கப்பட்ட பின்னர்தான் இவ்வாறு அவதூறு கூறப்பட்டுள்ளது! அவர்கள் மேற்கொண்ட பங்கீட்டில் அவர்கள் அல்லாஹ்வின் உவப்பை நாடவில்லை என்று தூற்றப்பட்டுள்ளது!

ஸஹாபாக்களில் ஒருவர் நபி(ஸல்)அவர்களைக் குறித்து கூறியிருக்கிறார் எனில் இன்று இஸ்லாமிய அழைப்புப்பணியை வாய்மையுடன் மேற்கொள்ளும் அறிஞர் பெருமக்கள் மீது – ஆலிம்கள் மீது இதுபோன்ற அவதூறுகளை சிலர் அச்சமின்றி அள்ளி வீசுவது குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

மட்டுமல்ல இன்று இதில் ஷைத்தானின் தீய சூழ்ச்சியும் பின்னப்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்களைக் களங்கப்படுத்தி விட்டால் அவர்களின் அறிவுரைகளுக்கு மக்களிடத்தில் மதிப்பில்லாமல் போய்விடும். மக்கள் எளிதாக வழிகெட்டுப் போய்விடுவர் என்பதே அது! இதனால்தான் அறிஞர் பெருமக்களைப் பற்றி புறம் பேசுவது ஏனைய மனிதர்கள் தொடர்பாக புறம் பேசுவதை விடவும் கொடிய பாவமாக உள்ளது.

இந்நபிமொழியில் மேலும் பல விஷயங்கள் தெரிய வருகின்றன:

தலைவருக்கு- இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரம் உள்ளது. இஸ்லாத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அவர், சிலபேருக்கு அதிகம் வழங்கலாம். ஆனால் சுயநலத்திற்காக அவ்வாறு செய்வது யாருக்கும் கூடாது.

முந்தைய நபிமார்களின் வரலாற்றின் மூலம் நபி(ஸல்) அவர்கள் படிப்பினை பெற்றுள்ளார்கள்! அந்த ரீதியில் தான் மூஸா நபி (அலை) அவர்களுக்குத் துன்பம் இழைக்கப்பட்டதையும் அப்பொழுது அவர்கள் பொறுமை காத்ததையும் நபி(ஸல்) அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்! அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

‘அந்நபிமார்களின் சரிதைகளில் அறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது’ (12 : 111)

மற்றோரிடத்தில்,

‘அத்தகைய நபிமார்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே (நபியே!) நீரும் பின்பற்றிச் செல்வீராக!’ (6 : 90)

இவ்வாறே நாமும் துன்பங்களின்போது நபிமார்களை – குறிப்பாக அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றிப் பொறுமை காத்து சத்தியத்தில் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும்., அதற்கான கூலியை அல்லாஹ்விடத்தில் எதிர்பார்த்திட வேண்டும்!

கேள்விகள்

1) ஹுனைன் போர் பற்றி சுருக்கமாகக் குறிப்படவும்.

2) போரில் கைப்பற்றப்பட்ட ஃகனீமத் பொருட்களைப் பங்கிடும் பொழுது சிலருக்கு அதிகம் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன?

3) மூஸா நபிக்கு இழைக்கப்பட்ட சில துன்பங்களையும் அவற்றின் பொழுது அவர்கள் பொறுமை மேற்கொண்டதையும் விவரிக்கவும்.

4) அறிவிலிகள் கூறிய அவதூறுகளை எல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டு இறை மார்க்கப்பணியிலேயே நபிமார்கள் ஈடுபட்டிருந்தது குறித்து குர்ஆன் குறிப்பிட்டது என்ன?

5) அறிவிப்பாளர் பற்றி ஓர் அறிமுகம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *