Featured Posts

வாய்மையே வெல்லும்!

இஸ்லாம் 1400 வருட கால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது. தடைக் சுவறுகள் தவிடுபோடி ஆயின.

தனது கடவுள்? வாதத்தையும் ஆட்சி பீடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் இனத்தையே அழித்தான் ஃபிர்அவ்ன். ஆனால் அவனுடைய வீட்டிலேயே மூஸா (அலை) அவர்கள் செல்லப் பிள்ளையாக வளர்ந்த அர்ப்புத வரலாறுகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். (பார்க்க, அல்குர்ஆன் 28:1-14)

பயந்து, பயந்து முதியவர் ஒருவர் இஸ்லாத்தைப் போதித்தார். அரசவை குறி, ஜோஸியத்திற்காக தேர்ந்தெடுப்பட்ட சிறுவனை அவர் போதிக்கும் இஸ்லாம் கவர்ந்தது. இதை அறிந்த கொடுங்கோல் ஆட்சியாளன் அந்த முதியவரை சிறுவன் கண் எதிரே சாகடித்தான். அரசனுக்கும் சிறுவனுக்கும் கடும் போரட்டங்கள்! சிறுவனை கொலை செய்ய முடியாமல் அரசன் தவிக்கிறான். இறுதியில் அந்த சிறுவனின் ஆலோசனைப்படியே பொதுமக்களுக்கு மத்தியில் ‘இந்தச் சிறுவனின் இரட்சனின் பெயரால்’ என்று கூறி அம்பெய்து கொலைசெய்கிறான். சிறுவனை கொன்றுவிட்டோம்! என்று நிம்மதிப் பெரும் மூச்சி விடுவதற்கு முன்பே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்த சிறுவனின் இரட்சகனாகி அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று இஸ்லாத்தை ஏற்றனர். பிரிந்தது ஒரு உயிர்தான்! ஆனால் அது ஒரு முஸ்லிம் சமுதாயத்தையே உருவாக்கிச் சென்றது. இவர்களின் தியாக வரலாறுகளைத்தான் ‘நெருப்புக் குன்ற வாசிகள்’ என அல்குர்ஆனின் 89வது அத்தியாயம் நினைவு கூறுகிறது. (பார்க்க, நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களை கொலை செய்யவந்த உமரை, நபிகளாரின் உயிர்காவலராக மாற்றியது இஸ்லாம்! நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசம் அண்ணலாரின் மரணித்த தகவலைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாத பலவீனராக்கியது! அங்கே இஸ்லாத்தின் வீரியத்திற்கு முன்னர் உமரின் வீரம் தோற்றது.

பத்ர் களத்தை விட்டும் வணிகக் கூட்டத்துடன் சாமர்த்தியமாக தப்பித்த, அபூசுப்யான் ‘பத்ருக்கு பழி தீர்ப்பதற்காக பல முறை படைதிரட்டி வந்தார். உஹது நடந்தது, அஹ்ஸாப் நடந்தது. ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தது.

மக்கா வெற்றியின் போது, குரைஷித் தலைவர்களே சரணடைய வருகிறார்கள், என்ற ஆதங்கத்தில் இதோ ஆயிது இப்னு அம்ரும் அபூசுஃப்யானும் வருகிறார்கள்! என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த வருகையை விட இஸ்லாம் மிக கண்ணியமிக்கது! இஸ்லாம் மேலோங்கும்! தாழாது! என்றார்கள்! (நூல்கள்: தாரகுத்னீ, புகாரீ)

மக்கா வெற்றியின்போது ‘அபூசுஃப்யானின் வீட்டில் நுழைந்தவருக்கும் அடைக்களம்!’ என்று அறிவித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சிறப்பிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

அபூசுஃப்யான் (ரலி) அவர்களை முஸ்லிம் கண்டு கொள்ளவோ, அமருமாறு கூறுவதோ கிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள் மூன்றை ஏற்றுக் கொள்ளவேண்டும்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரி! ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். அரபு மக்களில் மிகவும் கவர்ச்சி மிக்க, அழகான என்னுடைய மகள் உம்மு ஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத் தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் -ரலி, நூல்: முஸ்லிம்)

மக்கா வெற்றியின்போது, அபூசுஃப்யானையும் அவர்களின் சஹாக்களான குரைஷிகளையும் பழிவாங்க வேண்டும் என முறையிட முனைந்தேன். ‘உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை! அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன் (அல்குர்ஆன் 12:92) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ச்சியால் மௌனமானேன் என்றார்கள் உமர் (ரலி).

சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்றவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ M.A.
வெளியீடு: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்

2 comments

  1. it is nice and very useful….
    i am very interest to ready more aricle (easy) like islamic political history

  2. Its nice and useful to read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *