Featured Posts

திருக்குர்ஆன் சில வசனங்கள் விளக்கம்!

இறைத்தூதர், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பல கடவுட்க் கொள்கையாளர்களும், யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அதனால் முஸ்லிம்கள் பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரிறைக் கொள்கையாளர்களாகிய முஸ்லிம்களும் பல தெய்வக் கொள்கையாளர்களாகிய நிராகரிப்பாளர்களும் உறவினர்களாக இருந்தார்கள். உதாரணமாக: அலி (ரலி) சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக இருந்தார், அவரின் தந்தை அபூ தாலிப் நிராகரிப்பாளராக இருந்தார். அது போல் பத்ருப் போரில் அபூ ஜஹ்ல் கொல்லப்பட்டபின் நிராகரிப்பாளர்களின் தலைவராக அபூ ஸுஃப்யான் பொறுப்பேற்று இஸ்லாத்தை மிக வன்மையாக எதிர்த்தார். இவரின் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் இவர்) ஆரம்பகாலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக தந்தை அபூ ஸுஃப்யானின் கொடுமை தாங்க முடியாமல் அபீஸீனியாவுக்கு (ஹஜ்ரத்) நாடு துறந்து சென்றார்கள்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் இருந்தனர் இதே நிலையில் அவர்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்கு தகவல் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே திருக்குர்ஆன் பல வசனங்களில் இவ்வாறு கட்டளையிடுகிறது.

3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் – அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4:139.இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும் காஃபிர்களிலிருந்தும் யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

60:1. ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள் ”நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்” ஆனால் நீங்கள் மறைத்துவைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும் உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

60:2. அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும் தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள். தவிர நீங்களும் காஃபிர்களாக – நிராகரிப்பாளர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

வெளிப்படையாக எதிப்பைக் காட்டி உள்ளுக்குள் உங்களை ஓழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள். (3:118)
உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (5:57)
உங்களுக்குப் பகைவர்களாக இருப்பவர்களையும், கைகாளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்.(60:2)
ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டதற்காக உங்கள் பகைவர்களாக இருந்து உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் ஊரை விட்டே விரட்டியவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:1)
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் வீடுகளை விட்டும் வெளியேற்றியவர்களையும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:9)
உங்களோடு போரிடாமலும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை விரட்டாத முஸ்லிமல்லாதவர்களிடம் நீங்கள் நட்பு பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள். (60:8) என்று இஸ்லாம் திறந்த புத்தமாக – வெளிப்படையாகத் தெளிவாகவே உள்ளது.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

போரில் எதிரிகளை சந்திக்கும் போது வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று சொல்லாமல், எதிரிகளுக்கு முதுகு சொறிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதிரிகளை வெட்டித் தாக்காவிட்டால் எதிரிகள் முஸ்லிம்களை வெட்டுவார்கள் போரில் இருபக்கமும் தாக்குதலும், உயிரழப்பும் ஏற்படுவது போர் மரபு. போரில் சொல்லப்படும் ஒரு வசனத்தை போருக்கு வேளியே – சாதாரண நிலையிலும் நிராகரிப்பாளர்களை வெட்டச் சொல்வதாகத் தொடர்ந்து திரித்துச் சொல்வது ஒருவித நோயின் அறிகுறியே!

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் – இணை வைப்போர்களில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக – ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

போரிடாமல் அபயம் கேட்கும் நிராகரிப்பாளர்களை ஆதரிக்கச் சொல்லும் 9:6வது வசனம் இவர்களின் நோயை உறுதி செய்கிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களும் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தார்கள் (புகாரி, 1356) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச உடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். (புகாரி, 2068,2916) யூதப் பெண்ணின் விருந்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள், (புகாரி, 2617) யூதர்களே நியாயம் கேட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (புகாரி, 2412,2417) இவர்கள் அனைவரும் போர்ப் பிரகடனம் செய்யாமல் முஸ்லிம்களுடன் சகோதரத்தனத்துடன் பாசமாகப் பழகியவர்கள். நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சர்கள் கூட வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர்.

9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும் (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம், என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

31:14.நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள், இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

31:15. ஆனால் நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம், ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள், (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

ஒரிறைக் கொள்கையை வெறுத்து, நிராகரித்தவர்கள் தந்தை, தனயன்களாகிய குடும்பத்தார்ளேயானாலும் மார்க்க விஷயத்தில் அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்று 9:23 வது வசனம் கட்டளையிடுகிறது. இணைவைக்கும் விஷயத்தில் தாய் தந்தைக்குக் கட்டுப்படக்கூடாது என்பதைத் தவிர மற்ற அனைத்து உலக விஷயங்களிலும் பெற்றோருக்குக் கீழ்படிய வெண்டும் என்றும் 29:8, 34:14,15 ஆகிய வசனங்கள் அறிவுறுத்துகிறது. ”நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!” என்று இறைவன் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய வசனம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒரு லேட்டஸ்ட் அவதூறு.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இது ஜான் டிரஸ்ட் வெளியிடும் தமிழ் மொழி பெயர்ப்பு குர்ஆன் ஆகும். தமிழில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்தற்காக வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்குவதற்கு இந்த வசனம் போரைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு அரபு மூலத்தில் நேரடியாக வசன வாக்கியங்கள் இருக்கின்றன. அதிலிருந்துதான் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்கள் 47:4ம் வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்கியுள்ளார்கள். இதை சப்பைக்கட்டுகள் என்பவர்கள் இப்படி விமர்சித்துள்ளார்கள்..

//*அடைப்புக்குறிக்குள் உள்ளவை தமிழில் குரான் http://www.tamililquran.com/ மொழிபெயர்த்தவரின் சப்பைக்கட்டுகள். அவை ஒரிஜினலில் இல்லை என்ற ஞாபகத்துடன் படிக்கவும். இதன் நேரடி அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கவும். இதில் இருக்கும் வார்த்தைகள் எப்படி தமிழில் சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்க்கவும்.*//

அடைப்புக் குறிக்குள் உள்ளவை அசல் மூலத்தில் இல்லை என்பவர்கள் //*அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.*// என்று கூறியுள்ளதால் இதை பற்றி சப்பைக்கட்டியவர் விளக்கிய பின் சப்பைக்கட்டுவது யார்? என்று திருக்குர்ஆனிலிருந்தே விளக்கங்களை வைத்து நாம் நிரூபிப்போம். (இன்ஷா அல்லாஹ்)

One comment

  1. அபூ முஹை

    இஸ்லாம் இன வெறியைத் தூண்டுகிறது என்று சொல்லும் அறிவுஜீவி!?களுக்கு!

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
    ஒருவன் ஒரு கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் அவனுக்கு துணை புரிந்து – வலுவூட்டினால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான். (மிஷ்காத்)

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
    இன மாச்சரியத்தின்பால் அழைத்தவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன், இன மாச்சரியத்தின் அடிப்படையில் போரிட்டவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன், இனமாச்சரியம் கொண்ட நிலையில் மரணமடைந்தவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (அபூதாவூத்)

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
    எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான். (அபூதாவூத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *