நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.
அங்கு ஒரு சோதனை! உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட 6வயது முதல் 14வயது வரை உள்ள சிறுவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். “சப்தம் போடாமல் அமைதியா மெதுவா வரிசையா போகனும்” என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பின்னே வந்த அப்பாஸ் தாத்தா, அழுத படியே அரைத் தூக்கத்தில் நடந்து வரும் 7வயது சிறுவனை அரவணைத்து, “அழக் கூடாது. பாத்து நட, கீழே விழந்துடுவ, உன்னை அல்லாஹ் பார்த்து கொள்வான். நான் இருக் கேன்ல” என ஆறுதல் கூறிய படி அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அச்சிறுவர்கள் வெளியேறும் வரை கதவோரமாக காத்திருந்த அஹ்மது பாய், “என்ன அண்ணே! தம்பி புதுசா” என்று விசாரித்தார். “ஆம! தம்பி வந்து ரெண்டு நாளாச்சு. நம்மள மாதிரித்தான் பாவம்” என்று அப்பாஸ் தாத்தா சோகமாக சொன்ன போது அஹ்மது பாய் கடந்து போன கசப்பான தனது வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்ட ஆரம்பித்து விட்டார்.
ஐம்பது வயதுகளை கடந்து விட்டாலும் அவர் ஐந்து வயதில் பட்ட அனாதைக் காயத்தின் வேதனை உள்ளத்திலிருந்து இன்னும் மறையவில்லை. சோகங்கள், கொடுமைகள், அரவணைப்புகள் என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் எதையும் அவரால் மறக்கவே முடியவில்லை.
oOo
அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் தெருவில் என் வயதொத்த சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். என் சிறிய தந்தை வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்த நான், அவரது வருகையில் மறைந்திருக்கும் சோகத்தை அறியாது அவருடன் வீட்டுக்கு புறப்பட்டேன்.
வீட்டு முன்னே கூட்டம். எல்லோரின் முகத்திலும் ஒரு வித சோகம்; மௌனம். பலர் புலம்பி அழும் காட்சி. ஒரு மணி நேர இடைவெளியில் திடீரென முளைத்த சாமியானா பந்தல். இவற்றைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த நான், என் தாயாரை தேடி அலைந்த போது, வெள்ளைத் துணியால் போர்த்தப் பட்டு கட்டிலில் கிடத்தப் பட்டிருந்த என் தந்தைக்கு அருகில் அலங்கோலமாக அமர்ந்து உரக்க குரல் எழுப்பி அழுவதைப் பார்த்து, அவர் அருகில் சென்ற போது, “நம்மை அனாதையாக விட்டுட்டு போயிட்டாருப்பா மனுசன்” என என்னைக் கட்டிப் பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்து விட்ட என் தாயாரோடு சேர்ந்து, “அம்மா! அம்மா!” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். சிறிது நேரத்தில் என் தந்தையை நல்லடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பி விட்டார்கள்.
அழுகையும் கண்ணீருமாய் எனது குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எல்லா உறவினர்களும் போய் விட்டார்கள். நான், என் தாயார், அப்பாஸ் என மூவர் மட்டுமே தனியாக விடப் பட்டோம்.
ஒரு மாத காலம் ஓடியது. என் தந்தையின் மரணத்திற்குப் பின் என் தாய் சிரித்துப் பேசியதை ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. எப்போதும் சோகமும் கவலையும் துக்கமும் தோய்ந்த முகம். திடீரென என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ” என அழுவது. இவையே அவர்களின் அன்றாட பணியாக மாறி விட்டது. சரியான உணவு உட்கொள்வதில்லை. பார்க்க அழகாய் இருந்த என் தாய், ஒரு மாதத்திற்குள் உணவின்றி மெலிந்து நலிந்து அலங்கோலமாக மாறி விட்டார்கள்.
ஒரு நாள் மயக்கமுற்று கீழே விழுந்தே விட்டார்கள். மருத்துவர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே என் தந்தை போன இடத்திற்கு என் தாயாரும் சென்று விட்டார்கள்.
oOo
தாயாரும் மரணம் அடைந்து விட்ட பின் எங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது. அடுத்து எங்கே யாரிடம் போய் தங்குவது என யோசிக்கத் தெரியாத வயதிலும் யோசனை செய்யத் தொடங்கி விட்டேன். சில சம்பிரதாயங்களுக்குப் பின் என் சிறிய தந்தைதான் எங்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த போது என் தந்தையின் நினைவு தாயின் பரிவு இவற்றை நினைத்து நினைத்து நானும் எனது அண்ணன் அப்பாஸும் அழுது கொண்டிருப்போம். என் சிறிய தந்தை தொழில் செய்ய காலையில் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். எங்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கென்று யாரும் இல்லை. சிறிய தந்தையின் மனைவியோ ஒரு கொடூரமானவள்; பெண் உருவில் தோன்றிய பேய்; அழும் எங்களை நோக்கி ஆறுதலாகப் பேசமாட்டார்; ஏன் ஓயாமல் அழறிங்க என கண்டித்து எரிச்சலாகப் பேசி கையை ஓங்கி அடிக்க வருவார்.
அன்று மதியம் நேரம். காலை உணவும் சரியாக கிடைக்க வில்லை. கடுமையான பசி. வீட்டில் எல்லோரும் சாப்பிட்டப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். பசி தாங்க முடியாமல் என் சிறிய தந்தையின் மகன் அம்மு குட்டியின் தட்டிலிருந்து சிறிது உணவு எடுத்து சாப்பிட்டு விட்டேன். அவனோ அலற ஆரம்பித்து விட்டான். சப்தம் கேட்டு ஓடி வந்த அவனது தாய் நடந்ததை அறிந்து, ஓங்கி என் கன்னத்தில் அறைந்து, ‘முளைக்கள மூணு எல விடல, அதுக்குள்ள திருட்டுத் தனத்தப் பாரு, இப்பவே புள்ள சாப்பாட்ல கை வச்சுட்டான், நாள எதுல கைய வப்பாங்களோ தெரியள” என வினாடியில் பொரிந்து தள்ளி விட்டார்.
அண்ணன் அப்பாஸுக்கு என்னைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. அவருக்கும் ரெண்டு அடி. திட்டு. “தம்பி பாசம் பொத்து கிட்டு வந்துருச்சு” என்று கூறியபடி, “இவங்கள எங்கயாவது அனாதப் பசங்க உள்ள இடத்திலே சேர்த்து விட்ருங்க! நமக்கு தொல்ல வேண்டாம் என்று ஆயிரம் தடவ சொன்னேன். கேட்டாரா இந்த பாவி மனுசன்” என வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டு எங்கள் இருவரையும் வெளியே தள்ளி, கதவை ஓங்கி அறைந்து சாத்தி விட்டு உள்ளே போய்விட்டார் அந்தக் கொடுமைக்காரப் பெண்.
கன்னத்தில் அடித்தது வலிக்க வில்லை. ஆனால், வார்த்தைகளால் உள்ளத்தில் அடித்தது ரணமாக வலியெடுக்க ஆரம்பித்து விட்டது.
என் சிறிய தந்தை வரும் வரை வெளியிலேயே குளிரில் நடுங்கியபடியே துக்கத்தோடு அமர்ந்திருந்தோம்.
நினைத்துப் பார்க்கிறேன். என் அன்புத் தாய், எனக்கு பசிக்காத நேரத்திலும் கூட என்னை சாப்பிட வைக்க எடுத்தக் கொண்ட முயற்சிகள் மறக்க முடியாதது. நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடிவா! என பாட்டு பாடி, விளையாட்டுக் காட்டி, சீக்கிரம் நீ பெரிய ஆம்பளையா வரனும்ள நல்ல பிள்ளையா இந்த ஒரு வா சோறு மட்டும் வாங்கிக்க! என ஆசை வார்த்தை கூறி, அண்ணன பாரு அண்ணனுக்கு கொடுக்கப் போறேன் என்று வேடிக்கை காட்டி சோறு ஊட்டியதை நினைத்து குளிரையும் மறந்து என் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.
என் சிறிய தந்தை வந்தும் வராதது மாய் பதறிப் போய் ஏன்? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன்? வெளியிலே குளிரிலே இருக்கிங்க? என்று கேட்டபடியே எங்களை உள்ளே அழைத்துச் சென்று நடந்ததை விசாரித்தறிந்து, தன் மனைவியை கண்டித்து விட்டு, அவர்கள் அனாதைகள், அவர்களை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறி,
“அனாதைகளை அடக்கு முறை செய்யாதீர்கள்” (93:9)
என்ற இறைவசனத்தையும்,
“நபி (ஸல்) அவர்கள் ‘நானும் அனாதைகளின் காப்பாளரும் சுவனத்தில் இப்படி இருப்போம்” என்று கூறிய படி தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடை வெளி விட்டு) சமிக்கை செய்தார்கள்” என்ற நபி மொழியையும் எடுத்துக் கூறி தன் மனைவிக்கு உபதேசம் செய்தார்.
அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. வேறு வழியின்றி, எங்களை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பதே பாதுகாப்பானது, மேலும் எதிர் காலத்திற்கும் பயனுள்ளது என முடிவு செய்து, ஒரு குக்கிராமத்தில் ஜமால் ஆலிம் என்பவர் நல்ல முறையில் நடத்தி வரும் அனாதை இல்லத்தில் எங்களிருவரையும் சேர்த்து விட்டு, திண் பண்டங்களை கை நிறைய வாங்கித் தந்து செலவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு என் சிறிய தந்தை போய் விட்டார்.
oOo
புதிய இடம். அங்கே எங்களைப் போன்றே சோகங்களைச் சுமந்த பல சிறுவர்கள். ஆனால் அவர்களது முகங்களில் சோகத்தின் சாயல் அறவே தெரிய வில்லை. மட்டற்ற மகிழ்ச்சி. எப்போதும் சிரித்த முகங்கள். அவர்கள் ஜமால்; ஆலிமுடன் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள்.
ஓரிரு வாரங்கள் ஓடின! ஜமால் ஆலிம் காட்டும் அன்பில் அரவணைப்பில் திக்கு முக்காடிப் போன நாங்கள், எங்களது உள்ளத்தில் படிந்த அனாதைக் காயத்தை சற்றே மறக்கத் தொடங்கினோம். தாயன்பு, தந்தையின் கண்டிப்பு, தேர்ந்த நேர்த்தி மிக்க ஒர் ஆசிரியரின் வழிகாட்டல் என ஜமால் ஆலிம் பழகிய விதம் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக மறக்கச் செய்து விட்டது. மற்ற சிறுவர்களோடு சேர்ந்து நாங்களும் விளையாட ஆரம்பித்து விட்டோம்.
ஜமால் ஆலிம் என் உள்ளத்தில் ஆழமாக இடம் பிடித்து விட்டார். ஒரு சில நிமிடங்கள் அவரைப் பிரிந்திருப்பது கடும் வேதனை அளித்தது. மாலை நேரத்தில் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஜமால் ஆலிமுடன் நானும் ஒரு நாள் புறபட்டு விட்டேன். பஸ் பிடித்து டவுனுக்குப் போனோம். வண்டியை விட்டு இறங்கியதும்; எனக்கு சிற்றுண்டி வாங்கித் தந்த அவர், தனக்கு ஏதும் வாங்கிக் கொள்ள வில்லை.
சில கடைகளில் ஏறி இறங்கினார். கடை முதலாளிகளிடம் ஏதோ பேசி விட்டு வந்தார். என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க விரும்பினேன்.
“என்னங்க பாய்! பிள்ளைங்களுக்கு நாளைக்கு சாப்பாட்டுக்கு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சத கொடுங்க! அல்லாஹ் ஒங்க வியாபாரத்தில பரக்கத்து செய்வான்” என்று சொல்வது என் காதில் விழுந்தது.
“இன்னக்கி வியாபாரம் சரியில்ல. நாள வாங்க பாக்கலாம்” என்றே பலரும் பதில் சொன்னார்கள். இருபது கடைகளுக்கும் மேல் ஏறி இறங்கி இருப்பார். சில கடைகளில் “இவருக்கு வேற வேல பொளப்பு இல்லாம அலைறாரு” என எங்கள் காதுபடவே பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.
எவ்வளவு கஷ்டப்பட்டு நமது உணவிற்கு ஏற்பாடு செய்கிறார் இவர் என்பதை நேரில் பார்த்த போது அவர் மீதுள்ள மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ஆனால், அவரோ இச்சிரமங்களில் எதையும் இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப் பட்டு விட்டது. தொழுது முடித்த பின் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவர் கேட்பது தெளிவாக காதில் விழுகிறது.
“இறைவா! அகிலத்தின் அதிபதியே! அனாதைகளை ஆதரிப்போனே! இதோ! உனது சன்னிதானத்தில் இரு கரம் ஏந்தி நிற்கிறேன். பெற்றோரை இழந்து என்னிடம் அடைக்கலமாகியுள்ள என் பிள்ளைகளுக்கு நாளை உணவிற்கு எதுவுமே இல்லை. நீயே அனைவருக்கும் உணவளிப்பவன். இதோ இந்த அனாதை களுக்கும் உணவளிப்பாயாக!” என உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தார். அதைக் கேட்ட எனக்கும் அழுகை வந்து விட்டது.
பிரார்த்தனையை முடித்து விட்டு வெளியே வந்த அவர், பள்ளி வாசலை ஒட்டி இருக்கும் மளிகை கடை முதலாளியைப் பார்த்து விவரம் கூறினார். அவரோ அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல், முகமலர்ந்து ஒரு மாதத்திற்கு தேவைப் படும் அளவு பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி அவரே ஒரு ஆட்டோவையும் ஏற்பாடு செய்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.
மகிழ்வோடு என்னை நோக்கிய ஜமால் ஆலிம், பார்த்தாயா மகனே!
“அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்டால் அவன் எதையும் மறுக்க மாட்டான். ஏந்திய கரங்களை வெறும் கையாக திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். எனவே, நீயும் எதைக் கேட்பதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்” என்று என் உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்து விட்டார்.
“இறைவா! ஜமால் ஆலிமுக்கு எச்சிரமமும் இல்லாமல் ஆக்குவாயாக! அவருக்கு எல்லா வகையிலும் துணை புரிவாயாக!” என்று நானும் எனது பங்கிற்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்.
மறுநாள் விளையாடி முடித்து, மஃக்ரிப் தொழுது விட்டு சற்று அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது ஆலிம்சா எழுந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார்:
“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களை அமானிதமாக அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்திருக்கிறான். எனவே, உங்களுக்கு நேர் வழி காட்டுவது எனது கடமை. எங்கிருந்தாலும் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். எந்நேரத்திலும் தொழுகையை தவற விட்டுவிடக் கூடாது. பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவதால் 27 மடங்கு நன்மைகள் அதிகம் உண்டு. எனவே, ஜமாஅத் தொழுகையை தவறவிட்டு விடக் கூடாது.” என்று கூறி, சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நீங்கள் வளர்ந்து வந்த பின் ஏழை எளியோருக்கு தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து அவர்களை ஆதரிக்க வேண்டும்.
ஏனெனில் அனாதைகளை நாம் ஆதரிக்க வில்லையெனில் அவர்கள் கவனிப்பாரின்றி சரியான வழி காட்டல் இல்லாமல் திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் போதை பொருள் அருந்துதல் போன்ற பெரும் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு மபெரும் குற்றவாளிகளாக மாறிவிடுவதோடு, சட்டத்திற்கும் பெரும்சவாலாக திகழ்வார்கள்.
மாறாக அவர்களை அரவணைத்து அன்பு செலுத்தி, சரியான-நேரான வழியினை காட்டினால், ஒழுக்கம் நிறைந்த நல்லவர்களாக, சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக, வளர்ந்து வருவார்கள். இது சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையும் ஆகும்! அளப்பரிய இந்த நன்மையை ஒரு அனாதையின் காப்பாளர் செய்கிறார் என்பதால்தான்,
“அனாதைகளை ஆதரிப்போர் சுவனத்தில் என்னுடன் மிக நெருக்க மாக இருப்பார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறிவிட்டு சற்றே அமைதியானார் ஜமால் ஆலிம்.
“அனாதைகளை ஆதரிப்போர் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மீண்டும் உபதேசத்தை தொடர்ந்த அவர்,
“சில சந்தர்ப்பங்களில் அனாதைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் விட்டு சென்ற சொத்துக்களும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களை பராமரிப்போர் அவர்களது சொத்துக்களையும் சேர்த்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதனை கையாடல்-கபளீகரம் செய்ய நினைப்பது, வீண் விரயமாக செலவு செய்வது, அநியாயமாக உண்பது போன்ற எந்தக் குற்றத்தையும் செய்ய நினைக்கக் கூடாது. மாறாக தமது சொத்துக்களை போன்றே அதனையும் பாதுகாத்து, அவர்கள் பருவ வயதை அடைந்து, நிர்வகிக்கும் தகுதியும் வந்த பின் அவர்கள் வசமே அச்சொத்துக்களை ஒப்படைத்து விட வேண்டும்.
அனாதைகளின் சொத்துக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என வழிகாட்டும் இறைவன், அச்சொத்துக்களை வீண் விரயம் செய்வோர், அநியாயமாக உண்போர் அடையும் தண்டனைகள் குறித்தும் குர்ஆனில் விவரித்துள்ளான்.
இதோ அந்த வசனங்கள்!
“அனாதையின் சொத்தை அவர் பருவம் அடையும்வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்!…”(6:152) (17:34)
“அனாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்” (2:220)
“அனாதைகளை சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவார்கள் என பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அனாதையின் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலியாக) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங் கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்” (4:6)
“அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்களின் சொத்துக்களை உங்கள் சொத்துக்களோடு சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாகும்” (4:2)
“அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர், தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள்!” (4:10)
அனாதைகளின் சொத்துக்கள் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தமது உறவுக்கார அனாதைகளின் சொத்துக்களையே அல்லாஹ்வின் அச்சமின்றி அபகரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்” என்று உருக்கமாக கூறி முடித்தார் ஜமால் ஆலிம்.
oOo
அன்று அல்லாஹ்விடத்தில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனக்கும் இறைவன் செல்வத்தை வழங்கினால் அனாதைகளுக்கு அதனை வாரி வாரி வழங்க வேண்டும். ஜமால் ஆலிம் போன்றே அனாதைகளுக்கென்று வரும் எந்தப் பொருளையும் நாம் அனுபவிக்கக் கூடாது. என் போன்ற அனாதைகளுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அந்த உறுதி மொழி.
படித்து வளர்ந்து ஆளாகி, சிறு தொழில் தொடங்கினேன். அண்ணன் அப்பாஸ், பத்து வருட மண வாழ்க்கைக்கு பின் மனைவி மரணம் அடைந்து விட்டதால் மறுமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் மீண்டும் அனாதை இல்லத்திற்கே திரும்பி ஊதியமின்றி ஊழியம் செய்து வந்தார்.
நான் விரும்பியது போலவே அல்லாஹ் எனக்கு செல்வத்தை வாரி வழங்கி விட்டான். பெரும் தொழில் அதிபர். சமூகத்தில் பெரிய அந்தஸ்து என எல்லாம் கிடைத்தது. நான் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை செயல் படுத்தியும் வந்தேன்.
ஆம்! என் செல்வத்தில் பெரும்பகுதியை அனாதைகளுக்கே வாரி வாரி வழங்குகிறேன். வசூல் செய்வது என்ற எந்த சிரமமும் ஜமால் ஆலிம் அவர்களுக்கு அறவே இல்லாமலாக்கி விட்டேன்.
வருடங்கள் உருண்டோடின. இன்று இந்த அனாதை இல்லம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து பல அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு பெரிய நிறுவனமாக உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறதே என்ற சிந்தனையில் சஞ்சரித்தபடி பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருந்த அஹ்மது பாய் அவர்களை, “என்னங்க அஹ்மது பாய் அங்கேயே நின்று விட்டீங்க! தொழுகை நேரம் முடியப் போகுது. சீக்கரம் வந்து தொழுகுங்க” என்ற பேஷ் இமாமின் சப்தம்தான் பழைய நினைவிலிருந்து மீள வைத்தது.
விரைந்து தொழுகையை நிறைவு செய்து விட்டு, தாமதத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, மன நிறைவோடு வீடு திரும்பினார் அஹ்மது பாய் அவர்கள்.