Featured Posts

[தொடர் 16] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleகப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்:
வாதம் 3:

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. அவர்கள் தமக்கு அநீதி இழைத்ததும் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவதுடன், இத்தூதரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கண்டு கொள்வார்கள். (அந்நிஸா. வச:64) என்ற வசனத்தையும் ஆதாரமாகக் கொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது!

மறுப்பு: இவர்கள் எடுத்து வைக்கின்ற குர்ஆன் வசனம் முனாபிக்குகள் விசயத்தில் இறங்கியதாகும். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு வார்த்தைகளால் தொல்லை தந்த நயவஞ்சகர்கள் திருந்தி வாழ விரும்பினால் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிடுகின்றானே தவிர மரணித்த நபியிடம் மன்றாடும் படி கூறவில்லை. நபித்தோழர்கள் இந்த வசனத்தை இப்படித்தான் புரிந்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், துன்பங்களின் போது அவர்களின் மண்ணறையில் தமது தேவைகளையும், கஷ்டங்களையும் நிவர்த்தி செய்யுமாறு வேண்டாதிருந்தது மாபெரும் சான்றாகும்;.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி, 18ல் ஏற்பட்ட ‘ஆமுர்ரமாதா’ எனப்படும் மாபெரும் வறட்சி ஆண்டு பற்றியும், சிரியாவில் ஏற்பட்ட “தாவூன்” என்ற தொழு நோய் பற்றியும் அறிவீர்கள். இவற்றிற்கெல்லாம் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறைக்கு வந்து அவர்கள் மன்றாடவில்லை, கலீபா உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சியில் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்த போது பயன்படுத்திய வாசகம் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்துப் பாருங்கள்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ
-صحيح البخاري-

மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட போது, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரழி) அவர்களைக் கொண்டு மழைவேண்டுபவர்களாக உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். அல்லாஹ்வே! நமது நபியைக் கொண்டு (முன்றிறுத்தி) நாம் மழை வேண்டுபவர்களாக இருந்தோம். அதனால் நீ எமக்கு மழையைப் பொழிவிப்பாய், நாம் உன்னிடம் நமது நபியின் சிறிய தந்தையை முன்நிறுத்தி (மழைவேண்டி) உதவிதேடுகின்றோம். ஆகவே எமக்கு மழையைத் தருவாயாக! எனக் கூறுவார்கள். அதற்காக மழையும் பெற்றிருக்கின்றார்கள் என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).

கப்று வணங்கிகள் இந்த ஹதீஸை பொது மக்களிடம் தவறாகவே விளக்குவார்கள். அல்லாஹ்வின் தூதரிடம் ஸஹாபாக்கள் கூட வஸீலா வேண்டி இருப்பதாக உளருவார்கள்.

உண்மையில் ஸஹாபாக்கள், அல்லாஹ்வுடைய தூதரிடம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வஸீலா வேண்டி இருந்தால், அல்லாஹ்வின் தூதரே! எமக்கேற்பட்ட வரட்சிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாது, அல்லாஹ்வுடைய தூதர் உயிருடன் இருக்கின்ற போது நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி ‘அல்லாஹ்வே’ என அல்லாஹ்வை அழைத்து நடந்ததைக் கூறிய பின்னர், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரில் ஒருவரை முன் நிறுத்தி மழை வேண்டி பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள்.

மார்க்க அறிவில் உயர் நிலையில் காணப்பட்ட ஸஹாபாக்கள், இவ்வாறு பிரார்த்தித்தது நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர், அவர்களிடம் எந்தவிதமான கோரிக்கைளையும் முன்வைக்கக்கூடாது என்று அவர்கள் புரிந்ததனால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியின் மண்ணறைக்குச் சென்று பாவமன்னிப்புக்கோரலாம், தேவைகளைக் கேட்கலாம் என்பதை மறுத்துரைக்கும் பின்வரும் நபி மொழியைக் கவனியுங்கள். ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தலைவலி, தலைவலி எனக்கதறி அழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,

…ذَاكِ، لَوْ كَانَ وَأَنَا حَيٌّ فَأَسْتَغْفِرَ لَكِ وَأَدْعُوَ لَكِ
-صحيح البخاري-

நான் உயிருடன் இருக்கும் நிலையில் நீ எனக்கு முன்னர் மரணித்தால் உன்னைக் குளிப்பாட்டி, கபனிட்டு, உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், உனக்காக பிரார்த்தனையும் செய்வேன் எனக் கூறினார்கள். (புகாரி).

இந்த செய்தியை சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதுதான் நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல் சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு நடைபெற்ற உஹத் போரில் (இஸ்லாத்தில் இணையுமுன்) காபிர்களின் அணி சார்பாக தலைமை தாங்கி வந்த அபூசுப்யான் (ரழி) அவர்கள்,

قال أبو سفيان يوم أحد . لنا العزى ولا عزى لكم . فقال رسول الله صلى الله عليه وسلم – :
قولوا : الله مولانا ولا مولى لكم

‘எங்களுக்கு (கண்ணிமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இருக்கின்றது, உங்களுக்கு ‘உஸ்ஸா (கண்ணியமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இல்லையே! என்று கூறியபோது ‘அல்லாஹ் எங்கள் (மௌலானா) பாதுகாவலன், உங்களுக்கு (மௌலா) பாதுகாப்பளிப்பவன் இல்லை எனக் கூறிவிடுங்கள் எனப்பணித்தார்கள். (புகாரி).

நபி (ஸல்) அவர்களின் போதனை முறையைக் கவனித்தால் அவர்கள் உயிருடன் இருக்கின்ற போது கஷ்டமான நிலையிலும் அல்லாஹ்வையே பாதுகாவலாக எடுத்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் இருக்கின்றார்கள், மரணிக்கவில்லை என்ற குருட்டு வாதத்தை முன்வைப்போரின் கூற்றை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்பையோ, தேவைகளையோ இப்போதும் வேண்டமுடியாது. ஏனெனில் பத்ர், உஹத் போன்ற போர்க்களங்களில் வானவர்கள்தாம் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *