ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த போது ஸஹாபிகள் நபியவர்களிடம் சென்று ஷபாஅத் வேண்டியதைப் பற்றி ஏகோபித்துக் கூறப்பட்டுள்ளது. உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழை தேடியதையும் ஏற்றுக் கொள்கின்றனர். இவை புகாரியிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களாகும்.
புகாரியில் இடம் பெற்றுள்ள இன்னொரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘நான் நபி (ஸல்) அவர்களின் முகத்தை அவர்கள் மழைத்தேடித் தொழுது கொண்டிருக்கையில் பார்த்தேன். துஆச் செய்தவுடனே மழை பெய்தது. வாய்க்கால்களும், பள்ளத்தாக்குகளும் நிறைந்தோடும் வரையில் பெரும் மழை கொட்டியது. இந்நேரம் இக்கருத்திலுள்ள புலவர் ஒருவரின் சொல்லும் எனக்கு நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மழைத் தேடிய சம்பவம் வேறு பல ஹதீஸ்களிலும் விளக்கமாக வந்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திப்பவர்களாகவும், பரிந்துரைப்பவர்களாகவும் இருக்கும் வேளையில் உமர் (ரலி) அவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து ‘யா அல்லாஹ்! இந்த நபியைப் பிரார்த்திப்பதற்காகவும், எங்களுக்கு சிபாரிசு செய்வதற்காகவும் நாங்கள் முற்படுத்துகிறோம்’ என்றார்களாம். (என் பெற்றோர்களை தங்களுக்கு அர்ப்பணம் செய்கிறோம். அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் அவர்கள் மீது உண்டாகட்டும்). பிரார்த்தனையையும், ஷபாஅத்தையும் ஏற்றருள் என்றும் மேலும் அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறி எல்லோரும் பிரார்த்தித்தனர். இந்த விளக்கம் வேறு ஹதீஸ்களிலிருந்தும் அறியப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…