Featured Posts

பெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத்.

பெருநாள் தர்மமும் அதன் நோக்கமும்.

பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ”இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்” என்றும் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது வழங்க வேண்டும்..?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு..?

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு ‘ஸாவு’ என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த ‘ஸாவு’ என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி ‘இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்’ என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய ‘ஸாவு’ என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. நூல்கள்- தாரகுத்னீ, பைஹகீ.

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை – பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

அலட்சியமின்றி அனைவரும் பெருநாள் தர்மத்ததை செய்பவர்களாக ஆக வேண்டும்.

2 comments

  1. நோன்பு பற்றிய ஹதீஸ்களை அருமையாக விளக்கியிருந்தீர்கள். இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக!.
    என் மனமார்ந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  2. தர்மம் பற்றிய உங்களது கட்டுரை அருமை. நன்றி.

    shafi@dailythanthi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *