Featured Posts

காஷ்மீர் ஓர் பார்வை-4

இந்தியாவிற்கு தலைவலி அளித்த சமஸ்தானங்கள்.
ஜுனேகாத், ஹைதராபாத், காஷ்மீர்

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பகுதிகள் இருந்தன. இப்பகுதிகளில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவை சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத சுயாட்சிப் பெற்ற பகுதிகளாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் பேரரசின் உத்தரவுகளுக்கு அவ்வப்போது கீழ்படியும் நிலையில்தான் அவை இருந்தன.

இதுபோன்ற ஒரு சமஸ்தானமாகத்தான் ஜம்மு – காஷ்மீர் விளங்கியது. ஹரிசிங் (முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங்கின் தந்தை) ஜம்மு – காஷ்மீரின் மகாராஜாவாக இருந்தார்.
1947ல் இந்தியாவிற்கு விடுதலையளிக்க முன் வந்தபோது இந்தியா துணைக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையுடன் வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும் என்றும். முஸ்லிமல்லாதார் மிகுதியாக வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவாக உருவாக்கப்படும் என்பதே ஆங்கிலேயர்களின் திட்டமாகும். சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் தங்களது பகுதிகளை இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அவர்கள் ஆளும் பகுதியின் பூகோள, மக்களின் மத நம்பிக்கை மற்றும் விருப்பப்படி இணைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனே இணைந்தன. ஆனால் மூன்று மாகாணங்களின் மகாராஜாக்கள் மட்டும் தங்கள் பகுதியை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைப்பதைத் தவிர்த்து காலம் கடத்தி வந்தார்கள். இவர்களில் ஒருவர் ஜம்மு – காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜா ஹரிசிங், மற்றவர் ஜுனேகாத் சமஸ்தானத்தின் (இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) மகாராஜா, இன்னொருவர் ஹைதராபாத் நிஜாம் ஆவார். இவர்கள் மூவரும் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் சமஸ்தானங்களை இணைப்பதை தள்ளிப் போட்டு வந்தனர்.
ஜம்மு – காஷ்மீர் சமஸ்தான மகாராஜா ஹரிசிங் இந்துவாக இருந்தார். ஆனால் அவரது சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களின் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்தனர். ஜுனேகாத் ஆட்சியாளரான நவாப் முஸ்லிமாக இருந்தார் அவரது அட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ஹிந்துக்களாக இருந்தனர். இந்த இரண்டு சமஸ்தானங்களும் பூகோள ரீதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு நடுவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று சமஸ்தானங்களுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து நிர்ப்பந்தங்கள் வந்தன. இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்தங்களும் சமஸ்தானங்களின் அரசர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜுனேகாத் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்கள் ஆவர். ஆட்சியாளர் முஸ்லிமாவார். இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்த ஆவணத்தை இந்திய அரசின் மாநிலங்கள் துறை ஜுனேகாத் நவாபிற்கு அனுப்பி வைத்தது. நவாபிடமிருந்த எவ்வித பதிலும் வராததால், ஆகஸ்ட்,12. 1947ல் உடனடியாக இணைப்பு ஆவணம் குறித்து பதில் தருமாறு மத்திய அரசு கோரியது. இந்த ஆவணம் பரிசீலனையிலுள்ளது என்று ஜுனேகாத்தின் திவான் ஷா நவாஸ் பூட்டோ பதிலளித்தார். ஆகஸ்ட்,13ல் ஜுனேகாத்தில் குடிமக்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு இரண்டு நாள் கழித்து ஆகஸ்ட் 15 அன்று ஜுனேகாத்தின் ஆட்சியாளர் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்தார்.

ஜுனேகாத் ஆட்சியாளரின் இம்முடிவு இந்தியாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பூகோள ரீதியில் ஜுனேகாத் இந்தியாவுடன் நெருங்கி இருந்த போதிலும், அதன் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாக இருந்தும், ஜுனேகாத் மக்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைப்பை விரும்பிய போதினும் ஜுனேகாத் பாகிஸ்தானுடன் இணைந்தது சமஸ்தான இணைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாணது என்று பாகிஸ்தானிடம் இந்தியா புகார் கூறியது. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஜுனேகாத்திற்கு அனுப்பப்பட்டது. பிறகு அங்கு வாழும் மக்கள் இணைய விரும்புவது இந்தியாவுடனா? அல்லது பாகிஸ்தானுடனா? என்பதையறிய மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜுனேகாத் மக்கள் இந்தியாவுடன் சேர பெருமளவில் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து ஜினேகாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்தியா விடுதலையடைந்த போது இந்தியாவுடன் இணைய மறுத்த இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத்தாகும். ஹைதராபாத் சமஸ்தானம் நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவரது குடிமக்களில் 88 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாவர். சுதந்திரம் பெற்ற தனிநாடாக வேண்டுமென்பது தான் நிஜாமின் விருப்பமாகும் மக்கள் விருப்பத்தை அறிய பிரிட்டிஷ் அதிகாரிகள் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலையாகும். இதற்கு இத்திஹாதுல் முஸ்லிமின் என்ற முஸ்லிம்களின் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் இணைவதற்கு நிஜாமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்தியா தங்கள் சுயாட்சியில் தலையிடுவதாக ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நிஜாம் புகார் செய்தார்.

செப்டம்பர் 1947ன் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டது. செப்டம்பர் 9ல் போலீஸ் நடவடிக்கை என்ற பெயரில் இந்திய படைகள் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. செப்டம்பர் 13ம் தேதி ஹைதராபாத் கலகத்தை இந்திய ராணுவம் அடக்கியது. நிஜாமின் அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. இதன் பிறகு காஷ்மீர் மட்டுமே தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருந்தது.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *