கப்று வணக்கத்தை நியாயப் படுத்துகின்றவர்களின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்:
வாதம் 04: ஆதம் நபி (அலை) அவர்கள் தவறு செய்த போது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் வஸீலாக் கேட்கவில்லையா? அது மாத்திரம் இவர்களுக்கு போதுமான ஆதரமாக இல்லையா ?
மறுப்பு: இந்தச் செய்தி ஆதராமற்ற செய்தியாகும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவாகச் சொல்லிவிட்டார்கள். இதை பெரிய ஆதராம் என்ற பெயரால் கூறி தொடர்ந்தும் மக்கள் மத்தியில் உளம்புவது ஒரு வகை நோயாகும்.
முல்லா அலிஅல்காரி (ரஹ்) என்ற அறிஞர் தனது ‘அல்மவ்ழூஆத்’ (நபியின் புனையப்பட்டவைகள்) என்ற நூலில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். கஸஸுல் அன்பியா என்ற நூலில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் இது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தி என்று கூறியுள்ளார்கள். ஹதீஸ் கலையில் பூரண அறிவில்லாதவர்களே இதை ஒரு ஆதராமாகக் கொள்வார்கள்.
வாதத்திற்கு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டாலும், ஒரு நபி மற்றொரு நபியின் பொருட்டால் கேட்டார்கள் என்பதை மகான்களுக்குப் பொருத்திக் கூறலாமா? என்று சிந்தியுங்கள்.
வாதம் 5: நாங்கள் இறைநேசர்களை வணங்கவில்லையே! நாம் பாவிகளாக இருப்பதால் இவர்கள் மூலமாக அல்லாஹ்விடம் நெருங்குகின்றோம். இதில் என்ன தவறு இருக்கிறது?
மறுப்பு: இதே வார்த்தையைத்தான் மக்காவாழ் காபிர்களும் கூறினார்கள். (பார்க்க: அத்தியாயம் அஸ்ஸுமர்: வச: 03.) (யூனுஸ்: வச: 18).(ஸாத்: வச:05) இந்த வசனங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள்.
தொழுது, நோன்பு நோற்று, அல்லாஹ்வை வணங்குகின்றவர்களைப் பார்த்து இதைக் கூறலாமா என்ற ஆதங்கம் பலர் மனதில் தோன்றவே செய்யும். இதைவிட அல்லாஹ்வின் வசனம் ஆயிரம் மடங்கு உண்மை என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்.
இணைவைப்பாளர்கள் உம்ராச் செய்கின்ற போது, இறைவா! உனக்கு கட்டுப்பட்டுவிட்டேன்’ எனக் கூறும் வார்த்தையைச் செவிமடுக்கும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள்
فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْلَكُمْ قَدْ قَدْ فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ
போதும்! போதும்! (இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்) எனக் கூறுவார்கள். (அவர்கள் அதையும் மீறி) நீ உனக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஒரு இணைதெய்வத்தையும், அது சொந்தமாக்கியுள்ளதையும் தவிர என அல்லாஹ்வின் அந்த இல்லத்தை தவாப் செய்து கொண்டே (இந்த இணைவைப்பு வார்த்தையைக்) கூறுவார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்).
ஒருவர் வணக்கம் செய்வதால் அவர் முஸ்லிமாகிவடுவதில்லை. மாற்றமாக அந்த வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளையும் அந்த வணக்கம் பொதிந்திருக்க வேண்டும்.