விஞ்ஞானத்தின் பெரும் பங்களிப்பே மருத்துவத் துறையாகும். மனிதன் சுகாதாரத்தோடும் உடல் நோய்களில்லாமல் வாழ மருத்துவத்துறையே பெருமுயற்சி செய்து வெற்றிகண்டு வருகிறது. அதன் பரிணாம வளர்ச்சியே மாற்று உறுப்பு பொருத்தும் முறையாகும். கண், சிறுநீரகம், போன்ற உறுப்புகளை அடுத்தவர்களுக்கு பொருத்தி வெற்றி கண்டுள்ளது மருத்துவம்.
இத்தகைய மருத்துவத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா…?
பொதுவாக தீமையான காரியங்கள் பயனற்ற செயல்கள் எதற்கும் உதவாத விஷங்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் பட்டியலிட்டு விளக்கிவிட்டது. இஸ்லாம் சுட்டிக்காட்டாத எந்தத் தீமையும் எந்தத் துறையிலும் இல்லை.
”விலக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாக்கப்பட்டு விட்டன” என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் கூறிவிட்டார்கள். (ஆதார நூல், புகாரி)
இந்த அடிப்படையில் தீமையென்று சுட்டிக் காட்டப்படாத எதுவும் அனுமதிக்கப்பட்டவைதான் என்பதில் உலக முஸ்லிம் அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. கண், சிறுநீரகம், இரத்ததானங்கள் கூடாதவை தீமை பயப்பவையென்றால் அதை இஸ்லாம் சுட்டிக்காட்டி இருக்கும் இஸ்லாமிய சட்ட ஆதாரங்கள் எந்த இடத்திலும் இது பற்றி சுட்டிக் காட்டப்படவில்லை. எனவே இவை அனுமதிக்கப்பட்டவைதான்.
இன்னும் தெளிவாகச் சொன்னால்…
ஒவ்வொரு உறுப்பையும் குறித்து இதுவெல்லாம் கூடும் என்று பட்டியலிடாமல் ரத்தினச் சுருக்கமாக இன்னும் ஆழமான விஷங்களை உள்ளடக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது.
”எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்” (பார்க்க அல்குர்ஆன்- 5:32)
உயிர் வாழத்தேவையான எதையும் செய்ய இந்த வசனம் பொது அனுமதியளிக்கிறது. சென்று போன உயிரை மீண்டும் கொண்டுவர தற்கால மனிதனால் முடியாது என்பதால் அலட்சியப் போக்கில் மனிதனை மரணிக்கச் செய்துவிடாதீர்கள். அவன் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உலகளாவிய நற்பணிக்கு ஒத்ததாகும் என்று அழைப்பு விடுக்கிறது அல்குர்ஆன்.
மனிதன் வாழ உணவு உடை இருப்பிடம் தேவைபோல் காற்றும் நீரும் அத்தியாவசியத்தேவை. அதே அத்தியாவசியம் அவனது ஒவ்வொரு உறுப்பிற்கும் இருக்கிறது. உடல் குறைப்பாட்டுடன் வாழ முடியுமென்றாலும் அது முழுமையான வாழ்க்கையல்ல என்பதை குறைப்பாடு உள்ளவர்களால்தான் உணரமுடியும். உடல் குறைப்பாடற்ற மனிதன் தானியங்கியாக இருக்கிறான். குறைப்பாடுள்ளவன் பிறரது உதவியை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
உடல் ஊனமுள்ளவர்களில் தன்னம்பிக்கையுள்ளவர்களால் மட்டும்தான் வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழமுடிகிறது. பலவீனப்பட்டவர்கள் ஊனத்தின் காரணத்தால பிறருக்குத் தொந்தரவு தருகிறோமே என்ற எண்ணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்று, நீர், உணவுப் பொருள்கள், மகசூலுக்கு இறைவன் பொறுப்பேற்பது போல், உணவு வினியோகம், உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது போல்,
இதர துறைகளுக்கு மனிதநேயம் மிக்கவர்கள் பொறுப்பேற்க அல்குர்ஆன் அழைக்கிறது…
”எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்” ஒன்றுக்குப் பலமுறை இந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள் மனிதனின் வாழ்வாதார விஷயத்தை எத்துணை அற்புதமாக இவ்வசனம் விளக்குகிறது. தானம் செய்வோரையும், செய்யத் தூண்டுவோரையும், தான உறுப்புகளை இணைப்போரையும், எல்லோரையும் ஊக்குவிக்கிறது இந்த வசனம்.
நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்