இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ”ஒரே இறைவனை வணங்குங்கள்” என்ற ஏகத்துப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை.
மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்!
ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கும், அவனுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கும், இறைவனைப் பற்றிய உண்மைகள், மற்றும் அவனது தனித் தன்மைகள், அவனுக்கு விருப்பமான வழிமுறைகள், இவ்வுலக வாழ்க்கை – அதாவது பரீட்சை வாழ்க்கையின் வெகுமதியையும் அல்லது தண்டனையைப் பெறவிருக்கும் மறுமை வாழ்க்கையைப் பற்றியத் தெளிவான அறிவை – ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மனிதனும் சுயமாக முயற்சி செய்து இறைவனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அப்படி இறைவனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்கள் எவரும் ஒரேக் கருத்தில் இல்லை, மாறாக இறைவனைப் பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் வெவ்வேறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக வேதவெளிப்பாட்டின் (வஹீ) மூலம் மக்களுக்கு இறைச் செய்தியை சமர்ப்பிக்கும்படி இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டான். ஒவ்வொரு சமுதாயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொதுவாக இருந்தது. அதனால் உண்மையான இறைத்தூதர்களை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் பொதுமக்கள் மீது இருக்கிறது.
உண்மையான இறைத்தூதர்.
தன்னை இறைத்தூதர் என அறிமுகம் செய்து கொண்ட எவரும் உடனடியாக இவர் இறைத்தூதர்தான் என்று எற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர் உண்மையான இறைத்தூதர் தானா? எனச் சுண்டிப் பார்க்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், இதற்கான உரை கல்லாக முந்தைய வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என முந்தைய இறை வேதங்களோடு உரசிப்பார்த்தும் ஏற்றுக் கொண்டார்கள். மறுத்தவர்கள் காழ்ப்புணர்ச்சியாலும், பகைமையினாலும் மறுத்தார்கள் என்பதற்கான சான்றுளையும் வரலாற்றில் காண முடிகிறது.
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த போது மக்காவின் அனைத்து சமூக மக்களும் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தார்களென்றால் மிகக் கடுமையான வன்முறைச் செயல்களால் எதிர்த்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என அறிமுகம் செய்வதற்கு முன்பு உண்மையாளர், நேர்மையாளர் என்று முஹம்மது (ஸல்) அவர்களைப் போற்றி புகழ்ந்த அதே மக்காவாசிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் 40ம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்து கொண்டபோது, இவர் பொய்யர், சூனியம் செய்யப்பட்டவர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் சொல்லி மக்கா வாழ் சமூகத் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஊர் விலக்கும் செய்யப்பட்டிருந்தார்கள். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
ஆனாலும் கொள்கையில் எந்த தளர்த்தலும் இல்லை. இதற்கிடையில் எதிரிகளால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலை பேசப்பட்டார்கள் அப்போதும் கொண்ட கொள்கையில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று மறுத்து விட்டார்கள். மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள்…
பிறருக்கு என்ன போதித்தாரோ அதன்படி தாமும் வாழ்ந்து காட்டினார்!
தான் சொன்ன விஷயத்துக்கு மாறாக நடந்து கொண்டதாக சின்ன எடுத்துக் காட்டு கூட அவர் வாழ்வில் இல்லை!
அவரது சொல்லிலும் செயலிலும் எந்த விதமான மாறுதலும் இருந்ததில்லை!
அவர் மற்றவர்களின் நன்மைக்காகக் கஷ்டப்படுகிறார்!
தன் நலனுக்காக பிறரைக் கஷ்டப்படுத்தியதில்லை!
உண்மை, கண்ணியம், பரிசுத்த இயல்பு. உயர்வான சிந்தனை, மேலான மனிதத் தன்மை இவற்றின் முன்மாதிரியாக விளங்குகிறார்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். துருவித் துருவி ஆராய்ந்தாலும் அவரின் வாழ்வில் சிறு களங்கமும் காணப்படுவதில்லை! இப்படி 23 ஆண்டுகள் முரண்பாடு இல்லாத மனித குலத்துக்கே முன்மாதிரியான வாழ்க்கை நெறியை சொல்லாலும், செயலாலும் தானும் பின்பற்றி வாழ்ந்து காட்டினார்.
தனது பிள்ளைகளை அறிவது போல்…
கேஜி வகுப்பில் படிக்கும் தன் மகன், அல்லது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரச் செல்லும் ஒரு தந்தை அங்கே எத்தனை லட்சம் குழந்தைகள் இருந்தாலும் சரியே! அந்தக் கூட்டத்தில் தன் பிள்ளையை அறிந்து கொள்வார். அதுபோல், கேஜி வகுப்பில் படிக்கும் தன் பிள்ளைக்கு உணவு கொண்டு செல்லும் ஒரு தாய், அங்கே எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் தன் பிள்ளையை சரியாக அடையாளம் கண்டு, தன் பிள்ளைக்கே உணவை ஊட்டிவிட்டுத் திரும்புவார். அதாவது எவ்வளவு கூட்டத்திலும் தம் பிள்ளைகளை அடையாளம் கண்டு கொள்வதில் எந்தப் பெற்றோருக்கும் எவ்வித சிரமும் இருக்காது.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அறிவது போன்றே முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர்களை நோக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது…
”நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தம் பிள்ளைகளை அறிவதைப் போன்று இவரை அறிவார்கள். ஆயினும், அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்”. (திருக்குர்ஆன், 002:146)
பெரும் மக்கள் வெள்ளத்திலும் தன் மகனைக் காணும் ஒருவர், அவன்தான் தன் மகன் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறிந்து கொள்வார். அப்படி தனது பிள்ளைகளை அறிவது போன்று, முஹம்மது அவர்களையும் நபியென்று முந்தைய வேதக்காரர்கள் அறிவார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள், இறைத்தூதர் என்பதை மிகச் சரியாக அறிந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
…”அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்”
இது எந்த அளவுக்கு உண்மையான வார்த்தைகள் என்பதற்கு, முஹம்மது அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நன்கு அறிந்திருந்தும், ஒரு பிரிவினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரியாகக் கருதி பகைமைப் பாராட்டி வந்தார்கள் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று…
”நான் எனது தந்தைக்கும், தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வீடடிற்குத் திரும்பும் பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன், ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.
சிறிய தந்தை: ”இவர் அவர்தானா?” (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்ராத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)
எனது தந்தை: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆம்!”
சிறிய தந்தை: ”அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?”
எனது தந்தை: ”ஆம்!”
சிறிய தந்தை: ”அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?”
எனது தந்தை: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்”
உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்கள் யூதராக இருந்த தனது தந்தை ஹை இப்னு அக்தபின் மன நிலையைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்கள். (நூல், இப்னு ஹிஷாம்)
உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்களின் தந்தையாகிய ஹை இப்னு அக்தபுக்கும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஏதாவது பங்காளித் தகராறு இருந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையா? இது எதுவுமே இல்லாமல், முஹம்மது (ஸல்) அவர்களை இதற்கு முன்னால் பார்த்திருக்கக்கூட இல்லை. அன்றுதான் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனா வந்த அன்றே அவர்களை சந்தித்து பேசியதில் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து கொள்கிறார்.
முஹம்மது (ஸல்) அவர்கள், ஒரு இறைத்தூதர் என்பதற்காக மட்டுமே ”நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமை கொள்வேன்” என்று ஹை இப்னு அக்தபு கூறுகிறார் என்றால் அவருடைய மன நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதக் காரணமுமின்றி இது போன்ற பகைவர்கள் இன்னும், இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இருக்கத்தான் செய்வார்கள்.
இறைத்தூதரை உண்மைப்படுத்தும் முந்தைய இறைத்தூதர்.
”இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பட்ட அல்லாஹ்வின் தூதர்! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹ்மத்’ என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் குமாரர் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக.. (திருக்குர்ஆன், 061:006)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முந்தைய இறைத்தூதர்களால், முந்தைய வேதங்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு, அந்த முன்னறிவிப்பின் காரணமாக, முஹம்மது நபி அவர்களை ஏற்றுக் கொள்வதில் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன பகுதியிலிருந்து யூதர்கள், ”தய்யிபா என்ற மதீனா” நகரில் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்களின் வாரிசுகளில் பலர், முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா வந்தபோது அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர். சிலர் இறைத்தூதர் என அறிந்து கொண்டே முஹம்மது (ஸல்) அவர்களை மறுத்தனர்.
இறைத்தூதர் என எற்றுக் கொண்டவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். ஒரு சாரார், இறைத்தூதர் என்பதை அறிந்து கொண்டதாலேயேயும் அவர்களைப் புறக்கணித்து, முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். புறக்கணித்தவர்கள் தங்களை மேட்டுக் குடியினர் என்று சுயப் பிரகடனப்படுத்திக் கொண்டதால் அந்த உயர்குடியில்தான் தூதர்கள் வருவார்கள் என நம்பிய இறுமாப்பினால் அறிந்து கொண்டே மறுத்தனர்.
இன்றைய முஸ்லிம்கள்.
இன்றைய முஸ்லிம்கள், முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள் என்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல. மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்துதூதர் என்பதற்கான வலுவான சான்றுகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த சான்றுகளும் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை! முஹம்மது நபி இறுதி இறைத்தூதர் என்பதால் இதன் பிறகு எந்த நபியின் வருகையும் இல்லை என உறுதியாகி, இன்றைய முஸ்லிம்களுக்கு இனியொரு நபியை அடையாளம் காணும் அவசியமும் இல்லாமல் போய் விட்டது.
உலக முடிவு நாள் நெருக்கத்தின் அடையாளமாக ”தஜ்ஜால்” (கிறிஸ்தவ மதத்தினர் ”அந்தி கிறிஸ்து”) எனும் வழிகெடுப்பவன் தோன்றுவான் என்று அவனைப் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றன இதுவும், இது போன்ற இன்னும் பல அடையாளங்களையும் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை இஸ்லாம் அறிவிக்கின்றது. இவைகளே இன்றைய முஸ்லிம்களும், உலக முடிவு நாள்வரை வரவிருக்கும் முஸ்லிம்களும் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேணடிய விஷயங்களாகும். இது தவிர, ஏற்கேனவே இறைத்தூதரை நம்பிக்கைக் கொண்டவர்களைப் பார்த்து, ”நீங்கள் இறைத்தூதரை எப்படி அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்பது மிகவும் அபத்தமானது.
இதற்காக, ”நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.” என்று சொல்வதும் அறியாமை!
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
அனைவருக்கும் (தாமதமான) நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை