Featured Posts

இறைவனைப் பார்க்க முடியுமா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

கேள்வி 2. அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

ஆன்மீகத்தின் உயர்வான நிலை இறைவனைக் காண்பது என்பார்கள். ஆன்மீகவாதிகள் சிலர் இறைவனைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஆனால் இவ்வுலகில் இறைவனைப் பார்க்க முடியாது என இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் உள்பட எந்த மனிதனும் நேரில் இறைவனைப் பார்க்க முடியாது என்றே திருக்குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.

”பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான்” (திருக்குர்ஆன், 006:103)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அவனைச் சுற்றிலும்) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். நூல், முஸ்லிம் தமிழ் 291. ஆங்கிலம், 0341.

இந்த உலகில் எந்த மனிதரும் இறைவனைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன், 006:103வது வசனம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் – ”இறைவன் ஒளியாயிற்றே அவனை எப்படிப் பார்க்க முடியும்?” – இம்மையில் இறைவனைப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். இம்மையைப் பொருத்தவரை இறைவனைக் காண முடியாது என்று சொல்லும் இஸ்லாம், மறுமையில் இறைவனைப் பார்க்க முடியும் என்றும் கூறுகிறது.

”அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும், தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்” (075:022,023. இன்னும் பார்க்க: 002:046. 010:007,011.15,45. 018:105. 025:021. 032:010. 041:054. 083:015.)

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக (மறுமையில்) உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!” (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். புகாரி, 554. (முஸ்லிம் தமிழ், 299. ஆங்கிலம் 0349.)

இனி… முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்று விளங்கும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம்: பார்த்தார்! என்பதற்கு திருக்குர்ஆன் 053, 081 ஆகிய அத்தியாயத்திலுள்ள வசனங்கள்…
 
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.

அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.

(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.

அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.

(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.

ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?

அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. (திருக்குர்ஆன், 053:006-14)

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். (திருக்குர்ஆன், 081:23)

திருக்குர்ஆன் 053, மற்றும் 081 ஆகிய இரு அத்தியாயத்திலுள்ள வசனங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்கிறதே? என்று, இது 006: 103வது வசனத்திற்கு முரண்படுகிறது எனச் சொல்ல வருகிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனங்களுக்கு என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன், மிகச் சாதாரணமாக நடுநிலையோடு இந்த வசனங்களை அணுகினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்ததாக இந்த வசனங்கள் சொல்லவில்லை என்ற விளக்கத்தைத் தெளிவாகவே நாம் பெற முடியும்.

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…

”இது மரியாதைக்குரிய தூதரின் சொல்லாகும்” (19)

”(அவர்) வலிமை மிக்கவர், அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்” (20)

”வானவர்களின் தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்” (21) இந்த மூன்று வசனங்களும் சந்தேகத்திற்கிடமின்றி வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியேப் பேசுகிறது என்பது தெளிவு. ”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று சொல்வது இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பிக்கும் வானவர் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்களையே குறிப்பிடுகிறது.

”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…

”அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை” (3)

”அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை” (4)

”மிக்க வல்லமையுடையவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்” (5)

”(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் அடி வானத்தில் இருக்கும் நிலையில் தோன்றினார்” (6,7)

”பின்னர் இறங்கி நெருங்கினார்” (8)

அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதைவிட நெருக்கமாக இருந்தது” (9)

”தனது அடியாருக்கு அவன் அறிவித்ததை அறிவித்தார்” (10)

”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை” (11)

”அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (12) இந்த வசனங்களும் இறைவனுக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையில் தூதராக இருந்து வானுலக இறைச் செய்திகளை இறைத்தூதருக்கு அறிவிப்பவராக இருந்த வானவர் ஜிப்ரீலைப் பற்றியே இங்கு சொல்லப்படுகிறது. அதாவது…

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று இந்த வசனத்தில் யாரைக் குறிப்பிட்டு சொல்லப்படுகிறதோ, அவரையே மீண்டும் சந்தித்தாக – ”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) – இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை சந்தித்ததும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான் என்பது இதன் முன் பின் வசனங்களிலிருந்து விளங்கலாம். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தது இறைவனை அல்ல என்பதை அவர்களே விளக்கியுள்ளார்கள்…

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) ”அபூ ஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான் ”அவை எவை”? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ”யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே நான் சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ”இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசப்படாதீர்கள். வலிவும் மண்புமிக்க அல்லாஹ் ‘அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (081:023) என்றும், ‘நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்’ (053:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின் வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அது (வானவர்) ஜிப்ரீலை (நான்) பார்த்ததையே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரண்டு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) ”அல்லாஹ் (பின் வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

”கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான்” (006:103)

அல்லது (பின் வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ”எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசியதில்லை. ஆயினும் வஹியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை, நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (042:051) முஸ்லிம் தமிழ், 287. ஆங்கிலம் 0337. இன்னும் பார்க்க: புகாரி, 3232, 3233, 3234, 3235.
திருக்குர்ஆனுக்கு விளக்கமாகவே வாழ்ந்து காட்டிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விளக்கமே மிகச் சரியானது! எல்லா நேரத்திலும் வானுலக இறைச் செய்திகளை கொண்டு வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பித்தது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களே என்றாலும், இறைவன் தன்னைப் படைத்த நிஜமான, அசல் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) இரண்டு தடவைகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதை விளக்கவதோடு, மற்ற நேரங்களில், ஜிப்ரீல் (அலை) தமது நிஜத் தோற்றத்தில் அல்லாமல் சாதாரண மனிதரைப் போலவே இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து இறைவனின் வஹியை அருளியிருக்கிறார் என்றும் விளங்கலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை வானவர் ஜிப்ரீலை நிஜத் தோற்றத்தில் சந்தித்தது சர்ச்சையாக இருந்ததால் அது பற்றிய தர்க்கத்தையும் சந்தேகத்தையும் நீக்கிடவே ”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (053:11,12) என ஏக இறைவன் தனது தூதரை மெய்ப்பிக்கிறான்.

இம்மையில், இறைத்தூதர்கள் உள்பட மனிதர்கள் எவரும் இறைவனைப் பார்க்க முடியாது (006:103) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததாகக் குறிப்பிடுவது (081:23, 053:13,14) நிஜத் தோற்றத்தில் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை என்பதால் இங்கு திருக்குர்ஆன் வசனங்களில் முரண்பாடு எதுவுமில்லை என்பது தெளிவு!

**************************************

கேள்வி:- 3

Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?
மேற்கண்ட கேள்விகளில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

2 comments

  1. அட்றா சக்கை

    சகோ அபூமுஹை

    பெயித்ப்ரீடம் என்னும் இஸ்லாத்திற்கு எதிரான தளத்திலிருக்கும் அழுக்குகளை உண்டு அதையே தனது வலைப் பதிவில் வாந்தி எடுத்து வரும் ஒரு நபர் தாங்கள் முன்ன்ன்ர் கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமல் மழுப்பிக் கொண்டு இருக்கிறார்.

    இது ஒரு புறமிருக்க அவரது அடிப்பொடி ஜால்ராக்களும் இது போன்றதளத்திலிருக்கும் அபத்தங்களை ஆங்காங்கே கக்கி வைத்து அசுத்தம் செய்கின்றன.

    அவற்றை அழகிய முறையில் எதிர் கொண்டு அழகிய விளக்கம் அளிக்கிறீர்கள். அதற்கு நன்றி! அவர்களின் ஆதாரமான ஃபெயித்ஃப்ரீடத்தையே ஆட்டம் காண வைக்கிறீர்கள்!

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    இறைவன் உங்களுக்கு நற்கிருபை செய்வானாக!

    அந்த வேச நபருக்கும், அவரது அடிப்பொடிகளுக்கும் உங்களிடம் வந்து விளக்கம் பெற அல்லது விவாதிக்க எல்லாம் நேரம் இருக்காது ஆனால் மேன்மேலூம் ஆதாரமில்லாத குப்பைகளை எழுத மட்டும் நேரம் இருக்கும். நல்ல வேடிக்கை தான்.

    தொடருங்கள் கயமைகளை வெளிச்சம் போடும் உங்கள் பணியை!

  2. அபூ முஹை

    அட்றா சக்கை உங்கள் வருகைக்கு நன்றி!

    இஸ்லாத்திற்கெதிரான இணையத்திலிருந்து, இஸ்லாத்தின் எதிரிகள் ஆதாரமெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஆனால் கொஞ்சமும் மாற்றமில்லாமல் அதை அப்படியே வாசிப்பது இவர்கள் சுய சிந்தனையற்றவர்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

    சற்று வேலைப்பளு கூடியதால் தொடர்ந்து எழுதுவது தாமதம் ஆகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் தொடருவோம் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *