Featured Posts

kaaba புனித ஆலயம்.

மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ”பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்” (022:029) ”மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்” (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது.

இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை முன்னோக்கித் தொழுவதை அரபு நாட்டுத் திசை நோக்கித் தொழுவதாக சிலர் கருதிக்கொண்டு, அரபு நாட்டுக்கு அடிமைபட்டவர்கள் என்று முஸ்லிம்களின் மீது பொருத்தமில்லாத வசவு மொழிகளை அடுக்குகிறார்கள். இவர்களை ”அறியாத சமுதாயம்” என்று புறக்கணித்து விடுவோம்.

பழமையான காபத்துல்லாஹ் சிதலமடைந்து, இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) புதுப்பித்தார்கள், மீண்டும் காபத்துல்லாஹ்வைக் கட்டியெழுப்பியபின், ”ஹஜ்” செய்வதற்கான அழைப்பையும் அறிவிக்கச் சொல்கிறான் இறைவன்.(022:027)

ஒரே இறைவனுக்கு அடியார்களாக வாக்குக் கொடுத்து இறைவனுக்கு கீழ்படியும் மக்களனைவரும் – அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்காளாக இருப்பினும் – அவர்கள் இந்த ஹஜ்ஜின் அழைப்பையேற்று கூடும் மையமாக காபத்துல்லாஹ்வை இறைவன் நிர்ணயித்தான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜிற்கான அழைப்பை அறிவித்தபோது, சவூதி அரபியா எனும் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட நாட்டிற்குள் காபத்துல்லாஹ் இருக்கவில்லை! மாறாக, காபத்துல்லாஹ் இருந்த இடத்தில் மக்கள் குடியேறினார்கள் அதன் பிறகு நாடு உருவாகி அந்நாடு சவூதி அரபியா எனும் பெயர் பெற்றது.

”எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” (002:125. 022:026) என்று காபத்துல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் பணியை, நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மேற்கொண்டார்கள்.

காலங்காலமாக இந்தப் பணிகள் பல சமூகத்தாரின் கைகளுக்கு மாறி, இன்று சவூதி அரபியாவை ஆட்சி செய்யும் மன்னரின் கண்காணிப்பில் காபத்துல்லாஹ்வின் பணிகள் நிர்வாகமாக இயங்குகிறது. இறைவன், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ”எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” என்று கட்டளையிட்ட அதே பணிகள், இன்றும் தூய்மைப்படுத்துவதோடு, அதிகமான மக்கள் வருகையை கணக்கில் கொண்டு புனித ஆலயம் விரிவாக்கப் பணியும் சிறப்பாக செய்யப்பட்டு பராமரிப்புப் பணியின் நிர்வாகம் நீடிக்கிறது.

காபத்துல்லாஹ்வை யார் நிர்வகித்தாலும், காபத்துல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள உரிமை போன்று உலக முஸ்லிம்களுக்கும் உண்டு என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

”மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும், தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்” (022:025)

ஜாதியின ஏற்றத் தாழ்வு அடிப்படையில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கே வழிபாட்டுத்தலங்களில் முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்படும்.

இஸ்லாம் சமத்துவத்தின் பிறப்பிடமாக, காபத்துல்லாஹ்வுக்கு அருகில் வசிக்கும் ஒரு அரபியனுக்கு காபத்துல்லாஹ்வின் மீது என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை உலகில் எந்த மூலையில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு! என்று ஏற்றத் தாழ்வு வேற்றுமையை வேரோடு அறுத்தெறிகிறது. புனித ஆலயம், ”எனது இல்லம்” என்று இறைவன் கூறியிருக்கும்போது, அந்த ஆலயத்தில் இறையடியார்கள் அனைவரும் சமமானவர்களே! அங்கு எவருக்கும் முன்னுரிமை – முதலிடம் என்பதில்லை!

அன்புடன்,
அபூ முஹை

6 comments

  1. அபூ முஹை

    test

  2. Appreciate your post.

    Asalamone

  3. இன்று முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிளா? எனும் தலைப்பில் வந்துள்ள பதிவிற்கான பின்னுட்டத்திற்கு இது நல்ல பதிலாக அமையும்.

  4. அபூ முஹை

    asalamone, podakkudian உங்கள் வருகைக்கு நன்றி!

  5. சவூதி தமிழன்

    746அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோதரர் அபூமுஹை!

    சிலர் தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காகப் பிறரைப் பழிப்பதுண்டு, அதே போலத்தான் காபா குறித்த மூடத்த்னமான வாதத்தை வைத்துள்ளார்.

    அவரது அர்த்தமற்ற காழ்ப்பிற்கு அழகான பதில் தந்துளீர்கள். நன்றி!

  6. அபூ முஹை

    சவூதி தமிழன் உங்கள் வருகைக்கு நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *