Featured Posts

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28)

அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

இந்த உலகத்தில் பிறக்கின்ற வாழ்கின்ற எல்லா மக்களும் அல்லாஹ்வின் படைப்புகளே! பல இனத்தவர்களும் பல மொழி பேசும் மக்களும் பிரதேசத்தால் வேறு பட்டு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரை யும் படைத்தவன் அல்லாஹ்தான்.

அல்லாஹ்வின் உயர்ந்த படைப்பாகிய இந்த மனித சமூகத்திற்கு சத்திய வழியை நேரிய பாதையை காட்டுவதற்கு பல நபிமார் களை காலத்திற்கு காலம் அல்லாஹ் அனுப்பி வைத்து வேதங்களையும் இறக்கி வைத்தான்.

”மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற் செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான் (2:213).

எந்தவொரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி வைத்தோம் (14:4).

இவ்வாறாக வந்த அல்லாஹ்வின் தூதுத் துவம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே உரியதாக அமைப் பெற்றிருந்தது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரு கையோடுதான் இத்தூதுத்துவம் அகிலத் தாருக்குரிய தூதுத்துவமாக நிலைநிறுத்தப் பட்டது.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் மக்கத்து மக்களுக்குரிய அல்லது அரபு தீபகற்பத்துக்குரிய வேதமாக மட்டும் அருளாமல் முழு மனித சமுதாயத் திற்குரிய வேதமாக அருளினான். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குரிய இறுதி நபியாக அனுப்பி வைத்ததுடன் அல்குர்ஆனும் உலக பொதுமறையாக இறக்கப்பட்டது.

அல்குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் அருளப்பட்டது. ரமழானுடைய மகத்து வத்தை கூற வந்த அந்தக் குர்ஆனிய வசனத்தில்தான் உலக மக்களுக்கான நேர் வழி பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. பொது மறை என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

”ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித் தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள அல்குர் ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்….” (2:185).

ரமழான் மாதத்தின் சிறப்பு நோன்பு நோற்பதனால் ஏற்பட்டதல்ல. அல்குர்ஆன் ரமழானில் அருளப்பட்டதால்தான் சிறப்புக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற் கட்டும் என குர்ஆன் விளக்கப்படுத்துகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் ஒரேயொரு வழியை காட்டக் கூடிய நன்மை தீமையை பிரித்தறிவிக்கக் கூடிய உலக பொதுமறையான அல்குர் ஆன் அருளப்பட்டதாக இந்த ரமழான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டு முரிய வேதமல்ல என்கிற செய்தி மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் இத்திருமறை வசனத்தில் கூறப்படுகிறது. ரமழானில் அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணித்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று பக்குவமுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் இச்செய்தி மிக முக்கியமானதாகும்.

தங்களுக்கு மட்டுமுரிய வேதமாகவும் மார்க்கமாகவும் இந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் வைத்துக் கொள்ளாமல் ஏனைய சமூகத்தவர்களுக்குரியதாகவும் எடுத்துக் காட்ட வேண்டிய பொறுப்பையும் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய 81:25-28 வசனம் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது.

உலகத்தார் யாவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறி விக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மத் நபியின்) மீது இறக்கியவன் (அல்லாஹ்) மிக்க பாக்கியமுடையவன். (25:1).

அலிப் லாம் றா, (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உம்மீது அருளி னோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்திற்கும் புகழுக்குரிய மிகைத்தவ னான அல்லாஹ்வின் பாதையின் பால் நீர் கொண்டு செல்வதற்காகவும் உம்மீது அருளினோம் (14:1).

இது மனித குலத்திற்கு சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவன் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டது) (14:52).

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வின் வேதம் முழு மனித சமூகத்திற்குமுரியது என்று விளக்கப்படுத்தப்படுகிறது. முஹம்மத் நபியின் மீது இவ்வேதத்தை இறக்கியருளும் போதே அம்மக்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின்பால் அழை த்து வருவதற்காகவே அருளப்படுவதாக அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

நபியே! நீர் கூறுவீராக! மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியது. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனே உயிர்ப் பிக்கிறான். அவனே மரணம் அடையும் படியும் செய்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் (7:159).

அல்லாஹ்வை கடவுளாக ஏற்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்று நேர்வழியின்பால் வாருங்கள் என்று தூதுத்துவத்தை உலக மக்களுக்குப் பிரகடனப்படுத்துமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு பொதுவாக அழைப்பு விடுத்தார்கள். அன்றைக்கு மக்கா மதீனாவை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் கூடுகின்ற இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள்.

இப்பணியினை நபிகளாருக்குப் பிறகு ஸஹாபாக்கள் செய்தார்கள். கலீபாக்கள் செய்தார்கள். இஸ்லாமிய தூது பரந்து சென்றது, வளர்ச்சி கண்டது.

இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் யார்? ஒரு சிலரை தவிர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். துரதிஷ்டவசமாக மாற்று மத நண்பர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி வந்து அவர்களுடைய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள் எத்தனை பேர்?

சகோதர சகோதரிகளே! முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொறுப்பை உணர்ந்து கொள்வோம். புனித ரமழானை இதற்காக பயன்படுத்துவோம். முடிந்தளவு இஸ்லாமிய மார்க்கத்தினை வாழ்க்கையில் கடைப் பிடித்து அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இஸ்லாத்தை புரியவைப்போம். அல்குர்ஆனையும் இறுதி தாதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும்அறிமுகப்படுத்துவோம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கக் கூடியதாக மார்க்கத்தை சரிவர கற்றுக் கொள்வோம்.

எத்திவைப்பதுதான் எமது பணி! நேர்வழி காட்டுவது (ஹிதாயத் கொடுப்பது) அல்லாஹ்வின் பணி!

2 comments

  1. this is a very useful website to all the muslims im very happy about this website

  2. I like to study about our prophet (sal)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *