– M.T.M.ஹிஷாம் மதனீ
وَرُسُلِهِ
விளக்கம்:
(وَرُسُلِهِ)
இவ்வாசகத்தின் மூலம் ‘அல்லாஹ்வின் தூதர்கள்’ நாடப்படுகின்றார்கள். அத்தகையவர்கள், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹி மூலம் தெரியப்படுத்தப்பட்டவர்களாகவும், அவற்றை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவர்களில் முதலாமவராக நூஹ் (அலை) அவர்களும், இறுதியானவராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள்.
உண்மையில் நூஹ் (அலை) அவர்கள் தூதர்களில் முதலாவது அனுப்பப்பட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸூன்னாவிலும் காணக்கூடியதாக இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான ஆதாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.
- அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(நபியே!) நூஹூக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம்’. (அன்னிஸா:163) இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கும் அல்லாஹூத்தஆலா வஹீ அறிவித்ததாகக் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வஹீயானது தூதுத்துவத்தைக் குறிக்கும் வஹீயாகத்தான் இருக்க வேண்டும்.
- அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘மேலும், நூஹையும், இப்றாஹீமையும் திட்டமாக நாம் (நம்முடைய தூதர்களாக) அனுப்பிவைத்தோம் அவ்விருவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஆக்கியிருந்தோம்’. (அல்ஹதீத்:26) இவ்வசனத்தில் மிகத் தெளிவாக தூதர்களாகிறவர்கள், நூஹ் (அலை) மற்றும் இப்றாஹீம் (அலை) ஆகியோரின் சந்ததியில் இருந்து அனுப்பப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க, அவ்விருவருக்கும் முன்வாழ்ந்தவர்களை எப்படி அவர்களின் சந்ததிகளாகக் கூற முடியும்?
- அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹூடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்). நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்’. (அத்தாரியாத்:46) இவ்வசனத்தில் இடம்பெறும் ‘ مِنْ قَبْلُ ‘ என்ற வார்த்தை ‘முன்னர்’ என்ற கருத்தை உணர்த்தி நிற்கின்றது. இக்கருத்தானது எல்லாத் தூதர்களுக்கும் ஆரம்பமாக நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்டார் என்ற கருத்தைப் பிரதிபளிக்கச் செய்கின்றது.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இருந்து நூஹ் (அலை) அவர்களே முதலாவது அனுப்பப்பட்ட தூதர் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது தவிர இவ்வாதத்தை ஊர்ஜீதப்படுத்தும் செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மிகப்பிரதானமான ஒரு செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.
புகாரி (7440) முஸ்லிம் (194) ஆகிய கிரந்தங்களில் ஷபாஅத் தொடர்பாக இடம்பெற்ற ஒரு செய்தியில் மஹ்ஷர் மைதானத்தில் குழுமியிருக்கும் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடத்தில் வந்து ‘நீங்கள் தான் உலகத்தாருக்கு அல்லாஹூத்தஆலாவினால் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவராக இருக்கின்றீர்கள் ……….’ என்று கூறுவார்கள். இச்செய்தி மிகப்பட்டவர்த்தனமாக நாம் மேலே எடுத்துரைத்த வாதத்தை உறுதி செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஆதம் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அவர் ஒரு நபியாக மாத்திரம் இருந்தார் என்பதே உறுதியான தகவலாகும். மேலும் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சில அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் அவரை நூஹ் (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவராகவும் நூஹ் (அலை) அவர்களின் மூதாதையர்களில் ஒருவராகவும் கூறுகின்றனர். ஆயினும் இக்கருத்து மிக பலவீனமானது என்பதை அல்குர்ஆன் அஸ்ஸூன்னா ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.