– M.T.M.ஹிஷாம் மதனீ
கருத்து ரீதியான மாற்றம்
ஒரு சொல்லினுடைய அமைப்பை விட்டும் விலகி அதன் எதார்த்த கருத்தைக் கொடுக்காது வேறு ஒரு சொல்லி;ன் கருத்தை அதற்கு வழங்கும் செயற்பாடே கருத்து ரீதியான மாற்றமாகும். இவ்வகைச் செயற்பாட்டுக்கு உதாரணமாக சில நவீன வாதிகளின் விளக்கங்களைத் தருகிறேன்.
الرحمة
(அர்ரஹ்மத்) என்ற வார்த்தைக்கு ‘அருள் புரிய நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.
الغضب
(அல்களப்) என்ற வார்த்தைக்கு ‘பலிவாங்க நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.
التعطيل
(அத்தஃதீல்)
‘அத்தஃதீல்’ என்ற சொல்லுக்கு ‘கலைதல்’ என்று பொருளாகும். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டால், அல்லாஹ்வைவிட்டும் அனைத்து வகையான பண்புகளையும் கலைவதாகப் பொருள் கொள்ளப்படும். இச்செயற்பாட்டின் போது சரியான கருத்துக்குப் பிரதியாக வேறு கருத்தைத் தெரிவிக்கக்கூடிய ஒரு சொல் முன்வைக்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்க.
التكييف
(அத்தக்யீப்)
இச்செயற்பாடானது ஒரு பண்பின் வர்ணனையின் அமைப்பை தெளிவுபடுத்துவதைக் குறிக்கின்றது. ஒருவன் அல்லாஹ்வின் பண்புகளின் அமைப்பை சித்தரித்துக் காண்பிக்கும் போது அவன் ‘அத்தக்யீப்’ எனும் செயற்பாட்டில் ஈடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். இத்தகைய சித்தரித்தல் முறையை எப்போதும் ஒரு மனிதனால் செய்துவிட முடியாது. ஏனெனில், அவையனைத்தும் மறைவான அறிவுடன் சம்பந்தப்பட்டவைகளாகும். எப்படி அல்லாஹ்வை மனிதனால் அறிந்து கொள்ள முடியாதோ அதேபோன்று அவனது பண்புகளின் எதார்த்த தன்மையையும் அறிந்து கொள்ள முடியாது. இதனால் தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடத்தில் الرحمن على العرش استوى என்ற வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய استوى என்ற சொல்லின் விளக்கத்தைப்பற்றி வினவப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்கள்.
‘இஸ்திவா என்ற சொல் அறிமுகமானது, அதனுடைய அமைப்பு அறிமுகமற்றது, அதனை விசுவாசம் கொள்வது வாஜிபாகும், அதனைப்பற்றி வினாத்தொடுப்பது நூதன அனுஷ்டானம் – பித்ஆத் – ஆகும்.’
இமாமவர்கள் அளித்த இந்த பதில் பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து பண்புகள் விடயத்திலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
التمثيل
அத்தம்ஸீல்
இச்சொல் ஒப்பிடுதலைக் குறிக்கின்றது. அதாவது நிச்சயமாக அல்லாஹ்வின் பண்புகளானது படைப்பினங்களின் பண்புகளை ஒத்ததாக இருக்கின்றன என்று கூறுவதாகும். உதாரணமாக, அல்லாஹ்;வுடைய கை எங்களுடைய கைகளைப் போன்றிருக்கின்றது என்று கூறுவதாகும். இப்படி அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுடன் ஒப்பிடுவது அல்குர்ஆனின் போதனைக்கு மாற்றமான செயலாகும். அதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தை குறிப்பிடலாம்.
‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.’ (அஷ்ஷுரா: 42)
எனவே, ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாசி, அல்லாஹ்வினுடைய அனைத்துப் பண்புகளையும் அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் இருப்பதாகக் கூறி உண்மைப்படுத்தக்கூடியவனாக இருப்பான். அத்தகைய வழிமுறை எம்மிலும் காணப்பட வேண்டும். இது விடயத்தில் ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்துயர்ந்து வந்த அறிஞர் பெருமக்கள் எமக்கு நல்லுதாரணமாகத் திகழ்கின்றார்கள். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் நாம் காணக்கூடிய அதே அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் அவர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் எவரும் அவற்றுக்கு வலிந்துரை செய்யக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவற்றைக் கேட்ட மாத்திரத்திலே உண்மைப்படுத்தக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அந்த நிலைப்பாடே எமக்கும் பொருத்தமாகும். ஏனெனில், இந்நிலைப்பாட்டைக் கடைபிடிக்காது பேன பிரிவினர்களுக்கு ஈற்றில் என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அல்லாஹ் எம்மை அவர்களின் சிந்தனைகளைவிட்டும் பாதுகாப்பானாக!