தாமதம் தான். ஆனாலும் எழுதாமல் இருக்க முடியாது. கோத்ரா ரயிலெரிப்பு ச்சம்பவம் ஒரு விபத்துத்தான், சதி அல்ல என்று பானர்ஜி கமிஷன் இடைக்கால அறிக்கை தெளிவாக்கியிருக்கிறது. இது குறித்து சக வலைப்பதிவாளர்கள் யாரும் இதுவரை எழுதியதாக த் தெரியவில்லை.
விபத்தொன்றை சதி என்று குரூரமாய் சதிச்செய்து அன்னை தேசத்து ச் சொந்தங்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் இலட்சக்கணக்கில் அகதிகளாக்கியும் கோடிக்கணக்கான மனங்களில் அவநம்பிக்கையை விதைத்தும் தாம் விரும்புகிற சமூக மேலாண்மையை அறுவடை செய்யத்துடிக்கிற ஆதிக்கவாதிகளுக்கெதிராக எம் தேசத்தில் போதுமான எழுச்சி ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம். இதே மக்கள் தான் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் விளையாட்டாகவோ, பணம் வாங்கிக்கொண்டோ நம்மவர்கள் தோற்றாலும் ஊன் நிறுத்தி உயிர் வருத்தி சோகம் இசைத்து தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறவர்கள்.
சொந்த மண்ணின் சகோதரர்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகி வந்த நிலையில், புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களையே (ஜே ஜே வென்று)பழி சுமத்திய தலைவர்கள், ஏன், அதற்கு முன்பதாக, நியூட்டனின் மூன்றாவது விதியையே சாக்காகச் சொல்லி இனப்படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டியவர்கள், ‘யார் முதலில் பற்ற வைத்தது?” என்கிற ஒற்றை க்கேள்வியில் தமது பொறுப்புணர்வை ஒளித்துக்கொண்ட பிதாமகன்கள்- கரும்புள்ளி என்று நீலிக்கண்ணீர் விட்டு அதேசமயத்தில் தம் கோலங்களுக்கு மேலும்மேவும் புள்ளிகளை த்தேடியவர்கள மட்டும்தாம் என்றில்லை, வேறு யாரையும் கூட இந்த கமிஷனின் அறிக்கை உலுக்கியதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சமாக ஒரு பதவி விலகல் கோரிக்கைக் கூட எழவில்லை.பிரபல பத்திரிக்கைகளும் ‘விபத்தை ச் சதியாக்கிய சதி” என்றதோடு நின்று விட்டன. அவைகளுக்கும் அந்த சீஸனில் விற்றுத்தீர்க்க வேறு பண்டங்கள் இருந்தன.
‘தனி மனித க் கொலைகளுக்கு தேடிப்போய் தூக்கு வாங்கித்தருகிற நம்முடைய அரசியல் அமைப்பு கூட்டுக் கொலைகளுக்கு விசாரணை கமிஷன் வைப்பதோடு நின்று விடுகிறது” என்று ஒரு வலைப்பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.
ஆனால் இதை வைத்து அரசியல் நடத்துவது மட்டும் குறையவில்லை. பிகார் தேர்தலுக்கு முன்பாக இந்த அறிக்கை வெளியானதில் ஆதாயம் தேடும் அரசியல் மனப்பான்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அத்தகைய அரசியலை நிராகரிக்கும் மனப்பான்மையில், அந்த அவசரத்தில், நடந்த உண்மையையும் ஒதுக்கிவைப்பது தான் மிகப்பெரிய அவலம்.
தன் சொந்த மாநிலத்தவர்களையே பல்லாயிரக்கணக்கில் பலியாக்கி அரசியல் ஆதிக்கம் அடைய வல்லாதிக்க வல்லூறுகளும் நினைத்ததில்லை. நாற்காலிக்காக ‘நாற்காலி’களை விடவும் மோசமாக நடந்துக்கொண்ட இவர்களை என்னவென்று சொல்வது..?
பானர்ஜி கமிஷனின் இந்த அறிக்கை க் குறித்து – குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் நானாவதி கமிஷனின் உறுப்பினர் ஒருவர்- கே.ஜி.ஷா என்பவர் – ஆட்சேபணைகள் சிலவற்றை எழுப்பியுள்ளார். அவற்றை நீதிபதி.பானர்ஜி திட்டவட்டமாக மறுத்து ‘அவுட்லுக்கில்” பேட்டியளித்துள்ளார்.
நீதிபதி பானர்ஜியின் பேட்டியில் ‘ரயில் எரிப்பு நடந்திருந்தும் வழக்கமான 48 மணி நேரத்துக்குள் அப்போதைய ரயில்வே அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிடாததும், ஒரு வாரத்துக்கு பிந்தி அமையவிருந்த மாநில அரசின் ஆணையத்தையே அதற்கு காரணம் காட்டியதும் – செயல்முறையில் 60 லிட்டர் பெட்ரோலை அதுவும் சூலம் ஏந்திய கரசேவகர்கள் நிரம்பியிருந்த பெட்டியில் ஊற்றுவது சிறிதளவும் சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.
அப்போதைய ரயில்வே அமைச்சகம் அவசரம் அவசரமாக-‘பெட்ரோலை ஊற்றிய வழி’ என்று சொல்லப்பட்ட (இரண்டு பெட்டிகளை இணைக்கும்) வெஸ்டியபிள் கேன்வாஸை கழிவுப்பொருள் என்று சொல்லி விற்றதும் – திடீரென வந்த கும்பல் பெட்டிகளுக்கிடையேயான அந்த இணைப்பை அறுக்கும் ஆயத்தங்களோடும் ஆயுதங்களோடும் வந்தனர் என்பது அந்த சூழலில் நம்பத்தகாததாகவும் நகைக்கத்தக்கதாகவும் இதில் புதைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர போதுமானதாக இருக்கிறது.
இத்தனை வேதனைகளுக்குமிடையே ஒரு சிரிப்பும் இருக்கிறது. அது,குஜராத்தின் நற்பெயரை நீதிபதி பானர்ஜி களங்கப்படுத்தி விட்டதாக நானாவதி கமிஷன் உறுப்பினர் ஷா சொல்வது தான். இந்த கூற்று வரவிருக்கும் நானாவதி கமிஷன் அறிக்கையை கட்டுடைத்துப்பார்க்கும் வாய்ப்பையும் அளித்து விடுகிறது.
என் பேனா கவிதையாய் கண்ணீர் வடிக்கிறது:
அரசாங்கத் தண்டவாளங்களின் மீது
அமர்ந்திருந்தது அந்த ரயில்
புறப்பட எத்தனிக்கும் முன்பே
பிறப்பிக்கப்பட்டிருந்த சமிக்ஞைகள்
”நிறுத்த வேண்டாம்”
எல்லா ‘நிலை” யங்களும்
ஏற்றுக் கொண்டன அவற்றை.
தம் இருப்புகளைத் தக்க வைக்க..!
நவீன ஹிட்லர் முகத்தில்
நாறிய எச்சில் துடைக்க
நியூட்டனின் மூன்றாம் விதி
அவதாரம் எடுத்து
அரசியலுக்கு வந்தது.
‘பற்ற வைத்தது யார்?”
ஒற்றைக் கேள்வியைப்
பற்றிக் கொண்டவர்களுக்கு
கற்பை நிரூபிக்கவே
தீக்குளித்ததைப் போலொரு
கர்வம் இருந்தது.
எரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கோ
இலவசமாய் கிடைத்தன அறிவுரைகள்!
கர்ப்பிணி வயிற்றிலிருந்து
கிழித்தெறியப்பட்டது சிசு.
மகாத்மாவின் மண்ணிலிருந்து
மனிதாபிமானமும்!
ஜனங்களை முடக்கிவிட்டு
நடந்த தேர்தலில்
நாயகர்கள் வென்றார்கள்
ஜனநாயகம் என்றார்கள்.
காந்திகள் இறந்து போன தேசத்தில்
மோடிகள் முடிசூட்டிக் கொண்டு..!
கடைசியில் உண்மை
கறுப்பு மையில் வெளிப்பட்ட போது
மனிதம் மாண்டிருந்தது.
மானத்தோடு!
The irony is that the great verbal terrorist Togadia confirmed in Nanavati comission that he don’t have any proof to link the Godhra with Pakistan ISI or Terrorist related activities. But he was the main character to harp out the emotions of ordinary Hindus by fanning them that it is done by Muslim terrorists with the help of ISI. Where is the law for verbal terrorism?
அக்பர் பாட்சா,
மாற்றி ப்பேசுவதில் தொகாடியாவும் வாஜ்பாயியும் சளைத்தவர்களில்லை. கோவாவுக்கு போனால் ஒரு பேச்சு, குலுமனாலி என்றால் இன்னொரு பேச்சு. நீங்கள் சொல்வது ப்போல வன்முறையை விசிறி விடுபவர்களுக்கு என்று சட்டம் நமது நாட்டில் செயலளவில் இருக்கத்தான் செய்கிறது – பாவம், அதனால்,பாவப்பட்டவர்களைத்தான் தொட முடிகிறது..
Congress also gained some political advantage out of this massacres. it made big chaos that time to dismiss the modi govt, but make themself busy in other issues.
– A. Jamaludeen
///கோத்ரா ரயிலெரிப்பு ச்சம்பவம் ஒரு விபத்துத்தான், சதி அல்ல என்று பானர்ஜி கமிஷன் இடைக்கால அறிக்கை தெளிவாக்கியிருக்கிறது///
ஆர்.எஸ்.எஸ். பாசிசவாதிகள் முஸ்லிம்களை கலவரத்தின் பெயரில் கொலைசெய்வதற்கு காரணங்கள் தேடுவார்கள்.
அவர்கள் கலவரத்திற்கு தயாராகவே இருக்கிறார்கள். அதற்காகவே பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகின்றது என்பது பழைய செய்தி.
அத்தகைய காரணத்திற்காக இவர்களாகவே உண்டாக்கப்பட்டதுதான் கோத்ரா சம்பவம். அதனைத் தொடர்ந்து அவர்களின் இரத்த தாகத்தை, முஸ்லிம்களை ஆயிரமாயிரம் கொலைசெய்து, முஸ்லிம் கர்ப்பினிகளின் வயிற்றை கீறி, குழுந்தைகளை நெருப்பில் இட்டு பொசுக்கி, முஸ்லிம் பெண்களின் கற்பை சூறையாடி தீர்த்துக்கொண்டார்கள்.
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சித்தரிக்க காரணம், இவர்களை யாரும் தீவிரவாதிகள் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக.
இக்கட்டுரையின் உணர்வை ப்புரிந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
ஜமாலுதீன், காங்கிரஸும் ஒரு அரசியல் கட்சி தான் என்பதை மறக்கதீர்கள். ஒரு குஜராத் பத்திரிக்கையாளர் வார்த்தையில், ‘இந்துத்துவா சக்திகளை எதிர்த்துப்போராடுவதற்கு இம்மாநிலத்தில் காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை’.
அபூ உமருடைய கூற்றில் ஒரே ஒரு மிகை. அது, ”அத்தகைய காரணத்திற்காக இவர்களாகவ உண்டாக்கப்பட்டதுதான் கோத்ரா சம்பவம்.” – உண்மையில் கோத்ரா சம்பவம் ஒரு தற்செயல் விபத்து தான். அதுவே ‘அவர்களுக்கு’ (காத்திருந்தவர்களுக்கு) ஒரு தற்செயல் வாய்ப்பாகிவிட்டது. மதம் சார்ந்து என்றில்லாமல் சகோதர இந்தியர்களை நேசிக்கிற மனப்பாங்கு வரவேண்டும். அப்போது தான் இனியேனும் கோத்ராக்களை காரணம் காட்டியே குஜராத்கள் நிலைப்பெறுவதை தடுக்க இயலும்.
மிகை அல்ல. சரிபார்க்காமல் பதிவு செய்துவிட்டேன். சுட்டுவிரல் சுட்டிகாட்டியமைக்கு நன்றி.
“அத்தகைய காரணத்திற்காக பயன்படுத்தப்பட்டதுதான் கோத்ரா சம்பவம்” என்று படியுங்கள்.