மௌலவி யூனுஸ் தப்ரீஸ், இலங்கை
மாதங்களை அல்லாஹ்வே படைத்தான் அதை பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவிற்கு கொண்டு வருகிறான்.
“வானங்களையும். பூமியையும், படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும்…” (9:36)
உலகத்தை படைத்த ஆரம்ப நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் அமைத்து விட்டான். இறைவன் படைத்த எந்த ஒன்றையும் மனிதன் குறையாக பேசக் கூடாது. ஏன்? எதற்கு என்ற கேள்வியையும் கேட்கக் கூடாது.
ஏன் என்றால் மனிதனுடைய பார்வையில் குறையாகத் தெரியும் அனைத்தும் இறைவனுடைய குறை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. காலத்தைப் பற்றிக் கூறும் போது “ஆதமின் மகன் காலத்தை ஏசுகிறான். நானே காலமாக இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இங்கு மனிதனைப் பொறுத்த வரை தொடர் மழையாக இருந்தாலும், அல்லது தொடர் வெயிலாக இருந்தாலும் அல்லது காற்று சற்று கூடுதலாக வீசினாலும், அல்லது காற்று மிக குறைவாக இருந்தாலும் காலத்தை ஏச ஆரம்பித்து விடுகிறான். ஆனால், காலத்தைப் படைத்தவன் அல்லாஹ்வாக இருக்கிறான். எனவே காலத்தை ஏசுவதன் மூலம் அல்லாஹ்வை ஏசுகிறான்.
அதுபோல பன்னிரெண்டு மாதங்களைப் படைத்தவன் அவன்தான். அதில் ஏதாவது ஒரு மாதத்தை நாம் குறையாகப் பார்த்தால் இறைவனை குறையாகப் பார்த்தற்கு சமனாகி விடும். ஆனால், இவ்வளவு மார்க்கம் தெளிவாக இருக்கும் இந்தக் காலத்திலும் அன்றைய ஜாஹிலிய்யா கால மக்கள் குறை கண்டது போல நமது முஸ்லிம்களும் குறை காணக்கூடிய அவல நிலையை கண்டு வருகிறோம். ஸஃபர் மாதம் பீடை மாதம். ஸஃபர் மாதத்தில் மங்களகரமான எந்த விடயங்களும் செய்யக் கூடாது என்று அம்மாதத்தை தீட்டு மாத மாக ஒதுக்கி வைத்துள்ளார்கள்
இந்த மாதத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது “தொற்று நோய், பறவை சகுனம், ஆந்தை சகுனம் போன்றவை கிடையாது. ஸஃபர் மாதம் பீடை இல்லை என்று கூறினார்கள்“. (புகாரி-5757)
நேரடியாக ஸஃபர் மாதம் பீடை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறும்போது நபி (ஸல்) அவர்க ளுக்கு நேர் மாற்றமாக ஸஃபர் மாதம் பீடை மாதம் என்றால் இவர்களை என்ன சொல்வது? நமது சமுதாயத்தில் இன்னும் மூட நம்பிக்கையின் மீது பக்தி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் நல்லது, கெட்டது பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை?
வீட்டின் மீது ஆந்தை அலறினால் அதன் மீது ஒரு மூட நம்பிக்கை, கனவில் கடவாய்ப் பல் விழுவதைப் போல் கண்டால் யாராவது மரணித்து விடுவார்கள் என்று மூட நம்பிக்கையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக ஸஃபர் மாதம் வந்து விட்டது என்றால்
• தூர பிரயாணங்களை தவிர்த்துக் கொள்வார்கள்?
• திருமணங்களை நடத்தப் பயப்படுவார்கள்?
• தொழில்களை ஆரம்பிக்க மாட்டார்கள்
குறிப்பாக ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமை நபி (ஸல்) அவர்கள் நோய்க்கு ஆளானதின் காரணமாக அந்த புதன் கிழமை முஸீபத் பிடித்த புதன் கிழமை என்று அதற்கு ஒடுக் கத்துப் புதன் என்று பெயர் வைத்துள்ளார்கள். அந்த புதன் கிழமை யை ஒதுக்கும் அவல நிலை?
அன்றைய மாதத்தின் முஸீபத்துகள் நீங்குவதற்காக பீங்கானிலும், வாழை இலைகளிலும் மாவினால் அரபு எழுத்துகளை எழுதி கரைத்து குடிப்பதும் கடலில் சென்று குளித்துவிட்டு வருவார்கள். இப்படி இந்த ஸஃபர் மாதத்தை தவறாக நினைத்து பல தவறான செயல்களை செய்து வருகிறார்கள். சில இடங்களில் மௌலவிமார்களே முன்நின்று இதற்கான பரிகாரத்தை செய்து வருவது வேலியே பயிரை மேய்வது போல அமைந்துள்ளது. இந்த விடயத்தில் உலமா சபை கூடுதலான கவனம் செலுத்தி மக்களுக்கு தெளிவை கொடுக்க வேண்டும்.