கேள்வி : நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELRY என்று சொல்லப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன. அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற நிலையில் என்ன செய்வது-?
வி. மாசுக் ஹனிபா
தி.நகர், சென்னை & 17
பதில் : ஒரு பொருள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டால் அதன் கிரயமும் தடைசெய்யப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் யூதர்கள் மீது கொழுப்பை தடைசெய்தான். அப்போது அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினர் மீது ஒன்றை சாப்பிடுவதை தடைசெய்தால் அதன் கிரயத்தையும் தடைசெய்து விடுகிறான். (அபூதாவூத் 3490)
இங்கு சாப்பிடும் பொருள் பற்றி கூறப்பட்டாலும் சிலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொதுவான பொருட்களுக்கெல்லாம் பொருந்தும். புகாரியில் இடம் பெறும் நபிமொழி (2236) இதனை விளக்குகிறது. அது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே அதைப்பற்றிக் கூறுங்கள்! எனக்கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது! அது விலக்கப்பட்டது! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்கு கொழுப்பை ஹராமாக்கியபோது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தடைசெய்துள்ளதினால் சிலை, சிற்பங்களாக உள்ள ஆபரணங்களை விற்பனை செய்வது கூடாது. இதனை தங்களின் முதலாளியிடம் தெரிவித்து அவற்றை வியாபாரம் செய்வதை நிறுத்தச் சொல்லவும்.
நீங்களும் எந்தச் அவற்றை வியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும்.
நன்றி அல்-ஜன்னத் மாத இதழ் (பிப்ரவரி 2015)
===============
கேள்வி : எங்கள் நகைக் கடையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், தக்க வைப்பதற்காகவும் ‘தங்க நகை சேமிப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1000/–& முதல் ரூ.5000/& வரை மாத தவணையில் தொடர்ந்து 18 மாதங்கள் பணம் செலுத்தி வர வேண்டும். 19வது மாதத்தில் அவர்கள் இதுவரை செலுத்தியிருக்கும் முழு தொகைக்கும் செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்க நகையை வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் இலகுவாக இருப்பதால் வாடிக்கையாளருக்கும் பயன் உள்ளது. நிரந்தர வாடிக்கையாளர் கிடைத்து விடுவதால் கடைக்கும் பயன் உள்ளது. இதை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தி இதில் இணைத்து விட்டால் வேலை செய்யும் எங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா-? இதன் மூலம் கிடைக்கும் ஊக்கத் தொகையை நாங்கள் பெறலாமா–?
வி. மாசுக் ஹனிபா
தி.நகர், சென்னை & 17
பதில் : இந்த வியாபாரத்தில், வியாபாரத்தின் முக்கிய அம்சமாகிய இருதரப்பு திருப்தி (அல்குர்ஆன் 4:29) இருப்பதுடன் ஏமாற்றுதல், குறையை மறைத்தல், வட்டி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட முறைகள் இல்லை, எனவே இந்த வியாபாரம் ஆகுமானதே!
செய்கூலி, சேதாரம் இல்லை என்பது கடைக்காரர் தனக்கு கிடைக்கும் லாபத்தில் சிறிது குறைத்துக் கொள்கிறார் அவ்வளவுதான்! மார்க்கப்படி இது தவறல்ல.
அதே போல், கூடுதல் வாடிக்கையாளரை நிறுவனத்துக்கு கொண்டு வந்தது மூலமாக நிறுவனத்தின் வருவாய் கூடுவதற்கு வேலை செய்பவர் காரணமாக இருக்கிறார். கூடுதல் வருவாயைப் பெற்றுத் தந்ததற்காக நிறுவனத்தின் உரிமையாளர் உங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகிறார். இது அனுமதிக்கப்பட்டதே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு ஒருவர் நன்மை செய்தால் நீங்கள் அவருக்கு ஈடு செய்யுங்கள். நீஙகள் அவருக்கு ஈடு செய்யும்படியான ஒன்று உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் அவருக்கு ஈடு செய்துவிட்டீர்கள் என்று கருதும் அளவுக்கு அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!
(அபூதாவூத் (1674), நஸாயீ (2567), அஹ்மத்)
வேலை செய்பவர் தன் மீது கடமையான வேலைக்கு அப்பால் முதலாளிக்கு ஒரு நல்லகாரியத்தை செய்கிறார் என்ற விதத்தில் இந்த ஹதிஸின் வழிகாட்டலுக்கு உட்பட்டவராவார்!
நன்றி அல்-ஜன்னத் மாத இதழ் (பிப்ரவரி 2015)
============
கேள்வி : பருவம் அடையாத சிறுவர் (அதாவது பதினைந்து வயது வரை), தூங்குபவர், பைத்தியம் பிடித்தவர் ஆகியோர் செய்யும் குற்றங்கள் எழுதப்படுவதில்லை என்ற கருத்தில் (அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) நபிமொழி இருப்பதாக முந்தைய அல்ஜன்னத் இதழ்களில் ஒன்றில் படித்தேன்.
இதில் எனது கேள்வி, பதினைந்து வயது என்று மூலத்திலேயே உள்ளதா-? ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள், “பிள்ளைகள் ஏழுவயதை அடைந்தால் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதை அடைந்தால் அடித்தாவது தொழவையுங்கள்” என்று கூறியதாகவும் ஹதீஸ் உள்ளதே. இதன்படி பத்து வயதிலேயே மார்க்கக் கடமை வந்து விடுகிறதே? பதினைந்து வயதுவரை தவறுகள் எழுதப்படாது என்றால் முரணாக உள்ளதே?
அத்துடன் இந்த வயதுக்குட்பட்டவர்கள் தெரிந்தே அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள். குற்றங்களில் ஈடுபட்டு உலகம் முழுக்க சிறைகளில் இருக்கிறார்கள். அதே போல் இந்த வயதுக்குட்பட்ட பெண்கள் சிலர் தவறான உறவுகளில் ஈடுபட்டு அதன்மூலம் குழந்தை பெற்றவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் குற்றம் எழுதப்படாதா? மேலும் இந்த ஹதீஸ் ஆண்களை மட்டும் குறிப்பிடுகிறதா? பெண்களையும் உள்ளடக்குகிறதா-?
அடுத்து, நன்மை, தீமையை எழுதும் வானவர்கள் முன்கர், நகீரா?
ஹதீஸ் மூலத்தை சரிபார்த்து தெளிவான விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வி. ஹபீப் ரஹ்மான்
15, ரமளான் நகர், 2வது வீதி, சாரமேடு, கரும்புகடை, கோவை – 8.
பதில் : தாங்கள் குறிப்பிடும் நபிமொழி : மூவரைவிட்டு பேனா உயித்தப்பட்டுவிட்டது. சிறுவன் பருவம் அடையும் வரை, தூங்குபவர் விழிக்கும் வரை, பைத்தியம் பிடித்தவர் குணமாகும் வரை!
(அபூதாவூத் (4404), திர்மிதி, நஸாயீ)
இது ஆதாரப்பூர்வமான நபிமொழி. இந்தக் கருத்தை வலியுறுத்தும் வேறு ஆதாரங்களும் உள்ளன.
இதன்படி மார்க்கக் கடமைகளை செயல்படுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தம் பருவமடைந்த பின்னர்தான் ஏற்படும். குற்றங்கள் பதியப்படுவதும் அதன் பின்னர்தான். இதுமார்க்கத்தில் அறியப்பட்ட பொதுவான நிலைப்பாடு.
ஹதீஸில் பதினைந்து வயது என்று குறிப்பிடப்படவில்லை. அதிகமானவர்கள் அந்த வயதிற்குள் பருவம் அடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் பதினைந்து வயது என்று குறிப்பிடப்படுகிறது. நபிமொழியிலும் இந்த வயதைக் குறிப்பிடுவதற்கு ஆதாரம் உள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு பதினான்கு வயதாக இருக்கும் போது போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்காத நபி (ஸல்) அவர்கள், அவருக்கு பதினைந்து வயதான போது அதற்கு அனுமதி வழங்கினார்கள். இந்த செய்தியை இப்னு உமரிடம் செவியுற்ற நா-ஃபிஉ (ரஹ்) அவர்கள் இதை கலீஃபா உமர்பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் அறிவித்தபோது உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள், “இந்த பதினைந்து வயதே சிறியவர் பெரியவரை வேறுபடுத்தும் எல்லைக் கோடு” என்று கூறி அதையே தனது ஆளுனர்களுக்கு உத்தரவாக எழுதினார்கள். (பார்க்க : புகாரி 2664)
(உமர் பின் அப்தில் அஸீஸ் பிரபல நபித்தோழர்களிடம் பாடம் பயின்ற தாபிஈ ஆவார்.)
எனவே நபி (ஸல்) அவர்கள், பிள்ளைகளை பத்து வயதில் அடித்தாவது தொழ வைக்கும்படி பெற்றோருக்கு கட்டளையிட்டதற்கான காரணம், கடமையாவதற்கு முன்பே முதல் வணக்கமாகிய தொழுகையை நிறைவேற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே! இப்படிப் புரிந்து கொள்வதுதான் ஆதாரங்களை முரண்பாடில்லாமல் புரிவதாகும்.
இந்த வயதுக்குட்பட்டவர்கள் பல்வேறு குற்றங்கள் செய்வது உண்மை. தாங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் படி, அவர்கள் பருவம் அடையாதிருந்தால் அவர்கள் மீது வானவர்களால் குற்றம் எழுதப்படாது. பருவம் அடைந்திருந்தால் குற்றம் எழுதப்படும்.
பதினைந்து வயது என்பது உலக நடைமுறையில் மனிதர்களாகிய நாம் ஒருவரை பெரியவர் என்ற நிலையில் அனுகுவதா? சிறியவர் என்ற நிலையில் அனுகுவதா? என்பதற்கான வரையறைதான்! அல்லாஹ்விடம் செயல்கள் பதியப்படுவதற்கு பருவம் அடைவதுதான் வரையறை. அது பதினைந்து வயதைவிட குறைவாகவும் இருக்கலாம். அதைவிட கூடுதலாகவும் கூட இருக்கலாம்.
இந்த ஹதீஸ் ஆண், பெண் இருபாலரையும் குறிப்பிடுவதுதான்! மார்க்கத்தில் இருபாலருக்கும் பொதுவான விசயங்கள் ஆண்பால் வார்த்தையில்தான் பயன்படுத்தப்படும் என்பது யாவரும் அறிந்ததே!
முன்கர், நகீர் எனப்படும் வானவர்கள் மண்ணறையில் கேள்வி கேட்பவர்கள் ஆவர். (திர்மிதி 1071).
மனிதர்களின் செயல்களைப் பதிவு செய்யும் வானவர்களின் பெயர்கள் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படவில்லை. ஆனால் அவர்களின் வர்ணனை குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அதையே சிலர் அந்த வானவர்களின் பெயராக குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் குறித்து குர்ஆனில் கூறப்படும் வர்ணனைகள்:
“ரகீபுன் அத்தீத்” = “(எழுத) தயாராக இருக்கின்ற கண்காளிப்பாளர்” (அல்குர்ஆன் 50:19)
“கிராமன் காத்திபீன்”= “எழுதக் கூடிய கண்ணியம் வாய்ந்தவர்கள்”
இந்த வர்ணனைகள் எல்லாம் வலது, இடது இருபுறத்தில் இருக்கும் வானவர்களையும் குறிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்!
நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (பிப்ரவரி 2015)