Featured Posts

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை – மாலிக் கான்
எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக. பூமியைப் படைத்தபோதே அல்லாஹ் காலத்தின் அளவையும் நிர்ணயம் செய்துவிட்டான். மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்றும் அதற்கான காலவரையை நாம் அறிந்துகொள்ள சூரியனையும், சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான். இரவை இருளாக்கி சுகம் பெறுவதற்கும், பகலைப் பிரகாசமாக்கி அவன் அருட்கொடைகளைத் தேடிக்கொள்ளவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இவ்வாறு அல்லாஹ் நிர்ணயித்த காலம் நமக்கு ஓர் அருட்கொடை என்பதில் ஐயமில்லை.

இப்பூமியில் நம்மை அவன் சொர்ப்ப காலம்வரை தங்கச் செய்துள்ளான். நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொன்னான நேரங்களைச் சரிவரப் பயன்படுத்தினால் இம்மை வாழ்வில் வெற்றியடைவதோடு மட்டுமில்லாமல் மறுமையிலும் வெற்றியாளர்களாக அவனிடத்தில் நாம் நிற்போம்.

மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள் (அல்குர்ஆன் 22:5)

மனிதர்கள் இரு பெரும் அருட்கொடைகளின் விஷயத்தில் அதிகமாக ஏமாந்து நஷ்டமடைந்து விடுகின்றனர். 1.ஆரோக்கியம் 2.ஓய்வு நேரம். ஆதாரம் : புகாரி, அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி))

நேரம் என்ற அருட்கொடையை பலர் எவ்வாறு வீணடிக்கின்றார்கள், அதை எவ்வாறு பயனுள்ளதாய் மாற்றலாம், நேரத்தைப் பற்றிய ஒரு கணிப்பீடுதான் என்ன?

நேர முக்கியத்துவமும் மேலாண்மையும் (Time Management)

கடந்துவிட்ட காலம் செல்லாத காசோலை. எதிர் வரும் காலம் வாக்குறுதிச் சீட்டு. நாம் கிடைக்கப் பெற்ற நிகழ்காலம் தற்போது நம் கையில் உள்ள பணம் போன்றது என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. நம்மிடமுள்ள பணத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால் அதற்குத் தக்கவாறு பலனை அடைந்து கொள்ளலாம். பணத்தை நாம் இழந்துவிட்டாலும் திரும்பப் பெற்றுக்கொள்ள வாய்புகள் உண்டு. ஆனால் காலத்தை நாம் திரும்பப்பெறுவது சாத்தியமில்லாத கூற்று. எனவே காலத்தை செல்வத்தைச் செலவழிப்பதைவிட மேலானதாக நாம் செலவழிக்க வேண்டும்.

நேரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாளொன்றுக்கு 24 மணிநேரமும், மணிக்கு 60 நிமிடங்களாகவும் அல்லது நாளொன்றுக்கு 86400 வினாடிகளாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் பொதுவாகவும், சமமாகவும்தான் உள்ளது. சிலருக்கு நேரம் பற்றாக்குறை. சிலருக்கு நேரம் கழிப்பது சிரமம். இதன் காரணம் காலத்தைச் சரியாக கணிப்பீடு செய்து பயன்படுத்தத் தவறுவதே.

கல்வி, வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் தமக்குக் கிடைக்கும் உபரியான நேரம் எவ்வளவு. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், அன்றாட சுயதேவைகளுக்கும், உறக்கத்திற்கும் நாம் எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? என்று கால அட்டவணையிட்டால் கண்டிப்பாக எல்லோருக்கும் ஓய்வு நேரங்கள் கிடைக்கத்தான் செய்யும். அந்த ஓய்வு நேரங்களை சரியானமுறையில் பயன்படுத்தத் திட்டமிடுதல் நம் ஒவ்வொறுவருக்கும் இன்றியமையாததாகும்.

வீணாய்க் கழியும் காலங்கள் – காரணிகள்
தற்காலத்தில் பொழுதைக் கழிப்பதற்குத்தான் எத்தனை எத்தனை கேளிக்கை நிலையங்கள், கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் அரங்கேறும் எத்தனை ஆடல், பாடல் நிகழ்ச்சிகள். பள்ளி விட்டு வந்த குழந்தைகளுத்தான் எத்தனை வகை கேம் சி.டிக்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்குத்தான் எத்தனைக் கண்ணீர்ச் சீரியல்கள். கல்லூரி இளவட்டங்களுக்கோ நியூ ரிலீஸ் தியேட்டர்கள், பிரவுசிங் சென்டர்கள், டீக்கடை, கேன்டீன்கள் மெகா நாவல்கள், இரைச்சல் இசைக் கேசட்டுக்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவையெல்லாம் காலத்தை விழுங்கும் டையனோசர்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

டெலிவிஷன் (சின்னத்திரை)
அதிகமானோர் நேரத்தைக் கழிக்கப் பெரும்பாலும் பயன்படுத்துவது தொலைக்காட்சியே ஆகும். ரிமோட் பட்டன்களை அழுத்த அலை அலையாய் அலைவரிசைகள், புற்றீசல் போல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. நேரத்தைப் பாழாக்கும் விஷயத்தில் விஞ்சி நிற்பது டி.வி என்ற மீடியாதான். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இதன் ஆக்கிரமிப்பு வியாப்பித்திருக்கின்றது. சிறந்த நிகழ்சிகளும், நல்ல அலைவரிசைகளும் சில இருக்க, அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்சிகள் என்னவோ ஆடல், பாடல், கவர்ச்சி, நகைச்சுவை, நட்சத்திரங்களின்(?) பேட்டி, திரைப்படங்கள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளே. இவையால் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டா என ஆராய்ந்தால் நேரத்தை வீணடித்ததுதான் மிஞ்சுகிறது.

அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது. இது நம் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கும் தகுமாறு உள்ளது. படிக்கின்ற சிறுவர்கள் விரும்பிப் பார்பது கார்டூன் மற்றும் கல்விக்குத் தொடர்பில்லா நிகழ்ச்சிகளேயாகும். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பரவலாகப் பல பள்ளிகளிலும் குறைந்துள்ளது. இன்றைய குழந்தைகள் அதிகமாக காலவிரயம் செய்வது தொலைக்காட்சிகளிலேயே.

பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டுவேலை முடிந்ததா டி.வி பார்க்கலாம் என்ற நிலையும் மாறி, டி.வி சீரியல்கள் ஒளிபரப்பு முடிந்துவிட்டதா, இனி வீட்டுவேலைகள் செய்யலாம் என்ற மனோநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். மேலும் திரைப்படைத்தையோ, சீரியல்களையோ தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இடையில் செய்திகள் வந்தால் டி.விக்கு ஒய்வு தருகிறார்கள்.

தொலைக்காட்சி பார்ப்பவர்களில் நல்ல பயனுள்ள ஒளிபரப்புகளையும், செய்திகளையும் பார்த்துப் பயனடைபவர்கள் மிகச் சிலர் என்றே கூறலாம்.

திரைப்படங்கள்
ஆக்ஷன் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியும், நகைச்சுவை என்ற பெயரில் காமத்தை அள்ளித்தூவியும், கவர்ச்சி என்ற பெயரில் கலாச்சாரத்தை அழித்தும், பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்தங்களைப் புனைந்தும் மனிதனை சீரழிவின் பக்கம் கொண்டு செல்கிறன. இதைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை 3 மணிநேரங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். இவர்கள் பின் கொடிதூக்கி நடக்கிறோம். திரைப்படம் தொடர்பான செய்திகளை விருப்பிப் படிக்கிறோம். இதில் வீணடிக்கப்படும் நேரத்தை ஒரு கணம் சிந்திப்பீர். திரைப்படங்களை முற்றிலும் தவிர்ப்பீர்.

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட்
இந்நூற்றாண்டில் மனித அறிவின் முதிர்ச்சி என அடையாளம் காட்டவேண்டுமானால் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் துறையைச் சொல்லாம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது இண்டர்நெட். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு உபயோகமான துறைகளில் இது பயன்பட்டாலும் பலர் இதை சாட்டிங்கும், டேட்டிங்கும் செய்யப் பயன்படுத்துகிறார்கள். காதல் என்ற போர்வையில் எதிர்முனையிலிருப்பவரிடம் இன்ப அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கிறார்கள். நல்ல சாப்ட்வேர்கள் பல இருக்க சி.டி கேம்களையும், சாலிடரையும் (Solitaire) சலிப்பின்றி விளையாடி நேரத்தைக் கழிக்கின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் இண்டெர்நெட் எந்த அளவிற்கு மக்களுக்கு உபயோகமாக இருக்கின்றதோ அதைவிட அதிகமான அளவிற்கு நேரத்தை வீணடிக்கவும் உபயோகிக்கப்படுகிறது. இனி இவை இரண்டில் எதை நீங்கள் தேர்வு செய்யப்போகிறீர்?

சூதாட்டம்
பொம்மைகளில் புதைந்திருக்கும் எண்களைத் தேடித் தேடி, தன் பொருளையிழந்து, நேரத்தை வீணடித்து வாழ்வில் இன்பத்தைத் தொலைக்கின்றான். இது தாய்லாந்து லாட்டரியின் நிலைமை. விட்டதைப் பிடிப்பேன் என்று கொண்டதையும் விற்று விட்டு விட்டத்தில் தொங்கிச் சாகும் நிலைமை. இது வேறுவகை லாட்டரிக்களின் நிலைமை. ஒரு கை குறையுதென்று அமர்ந்து விடிய விடிய விளையாடி வெறும் கையாகிப்போகுவது மற்றுமொறு வகை. இவையெல்லாம் சூதாட்டம் என்ற வட்டவரைக்குள் வந்துவிடுகின்றன. இச்சூதாட்டம் பலபேர்களுடைய நேரத்தை பாழாக்குவதோடல்லாமல் வாழ்வையும் பாழாக்கிவிடுகிறது. பொழுதுபோக்காக ஆரம்பிக்கின்றான் பின் பேராசை பிடித்து பிறறிடம் கையேந்தும் நிலைக்குத்தள்ளப்படுகின்றான்.

வீண்பேச்சுக்களும் வேண்டா வெறுப்புகளும்
ம்மில் இருவர் சந்தித்துக்கொள்ளும் போது வீண்பேச்சுகளில் ஈடுபட்டுவிடுகிறோம். பொழுது போகவில்லை, பேச்சுத்துணைக்கு யாருமில்லை எனத் தேடிப்பிடித்து வீண் பேச்சுக்களைப் பேசி நேரத்தைக் கழித்து வருகிறோம். வீண்பேச்சுகள் புறம்பேசுதலில் கொண்டுசென்றுவிடுகிறது.
நபி(ஸல்)அவர்கள் நவில, தாம் செவிமடுத்ததாக அபூஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நன்மையான பேச்சா அல்லது தீமையான பேச்சா என்று சிந்தித்துப் பார்க்காமல் அடியான் பேசிவிடுவானேயானால் அதன் காரணமாக கிழக்குக்கும் மேற்குக்கும் மத்தியிலுள்ள தூரத்தை விட அதிகமான தூரத்தில நரகில் விழுவான். (ஆதாரம்: புகாரி)

ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றிப் பேசி பின் வேரொருவர் வாயிலாக அச்செய்தி அவரை வேறுமாதிரியாக அடைந்து வேண்டா வெறுப்புகளுக்கு ஆட்படுத்துவிடுகிறது. நமக்கு நேரம் போகவேண்டியதற்காக அடுத்துவர்களைக் கேலிசெய்து மகிழ்வதும், ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றிக் குறைகூறிக்கொண்டிப்பதும் தவிர்த்து நீங்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் போது நன்மையைக் கொண்டு ஏவுங்கள்.

முன்மாதிரிகள்
ஏதோ ஒரு வழியில் பெரும்பாலோர் தன்னுடைய பொன்னான நேரத்தைத் தங்களை அறிந்தோ அறியாமலோ பல வழிகளிலும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ நமக்குப் பல அறிய கண்டிபிடிப்புகளைத் தந்த அறிவியல் வல்லுநர்களின் பட்டியல்... விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள், டெலிபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்த சார்லஸ் பேப்பேஜ், மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், ரேடியோவைக் கண்டுபிடித்த பேலிஸ் டிரிவோ கிரஹாம்…

இவர்களெல்லாம் மனிதகுலத்திற்குப் பல அறிய கண்டுபிடிப்புகளைத் தந்து சரித்திரத்தில் இடம்பெற்றவர்கள். தங்கள் நேரங்களை அற்பணித்து தங்கள் கண்டுபிடிப்புகளை மக்களுக்கு பயனுள்ளவகையில் தந்தவர்கள். எனினும் இவர்கள் ஆன்மீகத்தைப் பற்றி ஆராயமுற்படவில்லை. இவர்களின் மறுமைநிலை அல்லாஹ்வே மிகஅறிந்தவன்.

நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்துச் சென்ற நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்குத் திறந்த புத்தகமாகக் கிடைத்திருக்கின்றது. இஸ்லாத்தை ஏற்ற நாம் அதனடிப்படையில் நம் நேரங்களை பயன்படுத்தினால் நம் பெயரும் நாளைய சரித்திரத்தில்இன்ஷாஅல்லாஹ்.

நேரத்தை உரிய முறையில் கழித்திடுவோம்
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) (அல்குர்ஆன் 103:13)

வீணாய்க் கழிந்துவிட்ட காலங்களை எண்ணி வருந்தி விரக்தியடையாதீர். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிமுறையை வகுத்திடுவீர்.

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் -எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (அல்குர்ஆன் 7:10)

நமக்குக் கிடைத்திருக்கும் ஓய்வுநேரங்களை அல்லாஹ்வுக்கு விருப்பமான மற்றும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளில் பயன்படுத்தி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.

குர்ஆன் ஓதுதல் மற்றும் மனனம் செய்தல்
நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்) ஆதாரம்: திர்மிதி – அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி).

நம்மில் பலருக்கு குர்ஆன் நன்றாக ஓதத் தெரிந்திருந்தும் ஒரு முறை முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டால் அதை அன்றோடு நிறுத்திவிடுகிறோம். தினமும் அதை நாம் தொடர்வதில்லை. குர்ஆன் ஓதுவதினால் கிடைக்கப் பெறும் நன்மைகளைச் சற்று சிந்தியுங்கள். நாளொன்றுக்குத் தங்களால் இயன்றவரை குர்ஆனை ஒதத் தொடங்குங்கள். குர்ஆன் படிக்கத் தெரியாதவர்கள் அதைப் படிக்க முயலுங்கள். இஸ்லாம் என்கிற அறிய வாழ்வியல் திட்டத்திற்கு அடிப்படையாக உள்ள குர்ஆன் வசனங்களைப் பொருளறிந்து படியுங்கள். அவை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துங்கள். இதற்காக தங்களின் நேரத்தை சற்று ஒதுக்குங்கள் இன்ஷாஅல்லாஹ் உங்கள் குடுப்பத்தில் இஸ்லாம் மிளிர்வதோடல்லாமல் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியிலும் இஸ்லாம் பரவும்.

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றாவார். (திர்மிதி: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்).

குர்ஆனை சின்னச் சின்ன அத்தியாயங்களிலிருந்து மனனம் செய்யத் தொடங்குங்கள். மனனம் செய்யும் பயிற்சி தங்களின் நினைவாற்றலை அதிகப்படுத்தும். திரைப்படங்களில் கேட்கும் பாடல்களும், வசனங்களும் அடிபிறழாமல் கோர்வையாகச் சொல்லும் அளவுக்கு நம் மனதில் பதிந்துவிடுகின்றன. அதற்காக நாம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. உங்கள் சிந்தனையைச் சற்றுச் சுழலவிடுங்கள் ஏன் நாம் அல்லாஹ்வின் திருவசனங்களை மனனம் செய்ய முயற்சிக்கக் கூடாதா? முயலுங்கள்! குர்ஆனின் கடைசி பாகத்தையாவது மனனம் செய்திடவேண்டும் என்று.

அழைப்புப்பணியை மேற்கொள்ளுங்கள்
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) மூஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். – ஆதாரம்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அனஸ்(ரலி).

அழைப்புப்பணி நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அழைப்புப்பணிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். அழைப்புப்பணிக்குத் தங்களைத்தாங்களே தயார் செய்துகொள்ளுங்கள். அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பாளர் பெயர்களுடன் மனனம் செய்யுங்கள். நபி(ஸல்) மற்றும் அவரைப் பின்தொடர்ந்த சஹாபாக்களின் சரித்திரத்தைப் படியுங்கள். இஸ்லாம் இம்மண்ணில் ஓங்க தன் இன்னுயிரையும் துச்சமாய் மதித்து ஷஹீதான உத்தம சஹாபாக்களை எண்ணிப்பார்ப்பீர். இஸ்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றது என்று சொன்னால் அதன் பின் அதிகமான தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இஸ்லாம் எதிர் வரும் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் தாஃவா பணியில் ஈடுபடுதல் மிக அவசியம். அதற்காக உங்கள் நேரங்களை சற்று அற்பணித்து தாஃவா பணியை மேற்கொள்ளங்கள். அல்லாஹ் உம்மைக் கொண்டு ஒருவருக்கு நேர்வழி காட்டுவது, சிவந்த ஒட்டகைகள் (உமக்குக்) கிடைப்பதை விடச் சிறந்ததாகும் – நபி மொழி.

உபரியான வணக்கங்களில் அதிகம் ஈடுபடுங்கள்
இஸ்லாத்தில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய வணக்கங்கள் ஐந்தாக இருந்தாலும் அதில் ஏற்படும் சில குறைகளை நிவர்த்தி செய்யவும் அல்லாஹ்வின் நேசத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் உபரியான வணக்கங்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்கள். கிடைக்கின்ற நேரங்களைப் பயனுள்ளவையாகக் கழிக்க உபரியான வணக்கங்களில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது? இதோ சில வழிகள்…

சுன்னத் தொழுகைகள்
ஐவேளை தொழுபவர்கள் கூட முன் பின் சுன்னத் தொழுகைகளை தொழுவதில் பாராமுகமாக இருக்கிறார்கள். தொழுகை நம் ஒவ்வொருவர் மீதும் நேரம் குறிக்கப்பட்ட ஒரு கடமையாகும். தொழுகைகளை அதற்குறிய நேரத்தில் தொழுங்கள். தொழுகைக்கு முன் பின் சுன்னத்துகளை தொழுதால் கிடைக்கப் பெரும் நற்பாக்கியங்களை கருத்தில் கொண்டு அதைப் பேணித் தொழுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுங்கள்.

திக்ர் செய்தல் (பிரார்த்தனை)
கிடைக்கப் பெற்றிருக்கும் ஒவ்வோர் வினாடியிலும் பயன் கண்டிடுவோம். முமின்களின் உள்ளம் எந்த நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவையாகவே இருக்கும். அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு அவனைப் புகழுங்கள். அவனிடமே உதவிகளையும் தேடுங்கள். உள்ளத்தாலும் நாவாலும் திக்ர் செய்யுங்கள். சுப்ஹானல்லாஹ் என்று கூறுவதும், அல்ஹம்துலில்லாஹ் என்றுகூறுவதும், அல்லாஹு அக்பர் என்று கூறுவதும் அவனிடத்தில் தர்மமாகக் கணக்கிடப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் சொல்வதற்கு ஓர் வினாடியே ஆகும். இதன் பலனை சிந்தியுங்கள். அதிகமதிகம் அவனை திக்ர் செய்யத் துவங்குங்கள். பயணத்தின் போது அதிகமாகத் திக்ர் செய்யுங்கள். பயணத்தின் போது காலவிரயம் ஆவதைத் தடுக்கச் சிறந்த புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் அடைவதோடல்லாமல் உள்ளமும் புத்துணர்வு அடைகிறது. உங்கள் வாழ்வில் ஒருபகுதி வாலிபம் அப்பருவத்தில் நீங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தவறினால் முதுமையில் தங்கள் சுயதேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளக்கூட பிறர் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். தினமும் குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். உரிய நேரத்தில் படுக்கைக்குச் செல்லுங்கள். உணவு முறைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புகைபிடித்தல், மது மற்றும் உடலுக்குத் தீங்கிழைக்கும் அனைத்துத் தீய பழக்கங்களையும் இனம் கண்டறிந்து களைந்து வாழ்வில் வசந்தம் வீச வாயிலைத் திறந்துக்கொள்ளுங்கள்.

புற அழகிற்காக வாரம் மூன்றுமுறை முகச்சவரம் செய்பவர்கள் தாடிவைத்திருக்கும் இளைஞர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள் சோம்பேரிகள் என்று. புறஅழகை மட்டும் கருத்தில் கொண்ட நவீன தாய்மார்கள் தாய்ப்பால் தருவதையும் அழகுவிரயம் என எண்ணி புட்டிப்பாலை புகட்டுகிறார்கள். இவர்கள் சிந்திக்கட்டும் எது காலவிரயம். எது அழகு என்று. உண்மையில் ஆரோக்கியம் தான் அழகுக்கு வழிவகுக்கும். எனவே உடற்பயிற்சிக்காக நேரங்களை ஒதுக்குங்கள்.

கலையும், திறனும் வளர்ப்போம்
கலையும, திறனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். கிடைக்கின்ற ஓய்வு நேரங்ளை அவரவர் திறமைகளை அறிந்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் ஓய்வு நேரங்களை முறையாகப் பயன்படுத்த உங்கள் வியாபாரம், வேலை மற்றும் கல்வி தொடர்பான கலைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக மாணவர்கள் கணிப்பொறி, இலக்கியம், மொழி, வரலாறு குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளலாம். வியாபாரம் மற்றும் வேலை தொடர்பானவர்கள் அதை மேலும் முன்னேற்றம் காண புதிய யுக்திகளைக் கையாள்வது குறித்து தங்களின் நேரங்களைப் பயன்படுத்தலாம்.

குடும்பத்திற்காக நேரங்களைச் செலவழியுங்கள்
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: மூஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களில் சிறந்தவர்கள், உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே. அறிவிப்பவர்: பூரைரா(ரலி).

இஸ்லாம் ஆன்மீகத்தை மட்டும் போதிக்காமல் இல்லற வெற்றிக்கும் வழிவகுத்துத் தந்துள்ளது. தொழுகை, நோன்பு என்று வணக்கங்களிலோ அல்லது வியாபாரம், வேலை என்றோ எந்நேரமும் தங்கள் குடுப்பத்தைப் பிரிந்திருத்தல் கூடாது. ஆனால் இன்று நம்மில் பலரும் வியாபாரம், வேலை என்று செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். வசதிகளைத் தேடித் தேடி வாலிபத்தில் வாழவேண்டிய வாழ்கையைத் தொலைத்து விடுகிறோம். தன் மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலுங்கள். வாழ்க்கையைச் சீராக வடிவமையுங்கள்.

நட்பைப் பேணுங்கள்
நாம் வசிக்குமிடத்திலும், பணிபுரியுமிடத்திலும் சகநண்பர்களும் அண்டை வீட்டாருடனும் நட்புகள் ஏற்படும். அவ்வாறான நட்புகளின் மூலம் நல்ல விஷயங்களில் மட்டும் நாம் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அண்டைவீட்டாருடனும், நண்பர்களுடனும் நலம்நாட ஒருவொருக்கொருவர் சலாம் சொல்லிக் கொள்ளுங்கள். ஒவ்வொருமுறையும் அவர்களைக் காணும் போதும் சலாம் உரையுங்கள். தொலைபேசிகளில் அழைப்பை ஏற்கும் போதும், உரையாடலைத் துவங்கும் முன்னும், முடிக்கும் முன்னும் மறவாமல் சலாம் உரையுங்கள். அங்கே காலவிரயத்தைக் கருத்தில் கொள்ளாதீர்கள். உங்கள் சுக மற்றும் துக்க நிகழ்வுகளையும் அண்டைவீட்டாருடனும், நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதவும் மனப்பான்மையையோடு அவர்களுக்கு உதவிடுங்கள். சிறுசிறு வேலைகளில் அவர்களுக்கு உதவியாக இருங்கள். நட்புகளைத் தொடர அவ்வப்போது அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். சமுதாயத்தில் நல்ல பண்பாளனாக வேண்டுமானால் நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும் மென்மையாக நடந்துகொள்ள முயலுங்கள்.

காலம் தாழ்த்தாதீர்
மரணவேளை வந்துவிட்டால் மலக்குகள் மனித உயிரை ஒருகணம் முந்தவோ, பிந்தவோ காலம் தாழ்த்தாமல் அவனுக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் அவன் உயிரை கனகச்சிதமாக பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அந்த நிலை நமக்கு வரும்முன் மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த அறிய நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இன்றே ஆயத்தமாகுவோம். திசை தெரியாத பயணத்தை மேற்கொள்வது போல நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மறுமையில் வெற்றியடையக் கூடிய வழிகளறிந்து அதன்படி நடந்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் பாக்கியத்தை நம்மேல் நல்கிட அவனே போதுமானவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *