வரக்கூடிய எந்த செய்தியாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய ஒரு புதிய வகை நோய் எமது சமுதாயத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைப்பாடு அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இருப்பது மிகப் பாரதூரமான விடயமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“உனக்கு அறிவில்லாத விடயத்தில் நீ நிற்காதே! (உனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதே!) நிச்சியமாக கேள்விப் புலன், பார்வை, உள்ளம் இவை அனைத்தும் அவற்றைப் (பிரயோகித்ததைப்) பற்றி கேள்வி கேட்கப்படும்.” அல்குர்ஆன் (17:36)
பரப்பப்படும் பொய் செய்தி பின்வருமாறு:
((ரமலான் ஜுன் 19ம் திகதி ஆரம்பமாகிறது இன்ஷா-அல்லாஹ். ரமலானுக்கு இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன. கண்மணி நபி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் நவின்றார்கள், “யார் ஓருவர் ரமழானைப் பற்றிய செய்தியை பிறர்க்கு முதலில் கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்” நான் உங்களுக்கு கூறியதுப்போல் தாங்களும் இச்செய்தியை பிறருக்கு பகிர்ந்து நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள் சகோதரர்களே …..))
எந்த அடிப்படைகளும், ஆதாரங்களும் அற்ற இவ்வாரான செய்திகளை வெருமனே மக்களை ஆர்வப்படுத்துதல் என்ற பெயரில் பரப்பி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறாத ஒரு செய்தியை கூறி அவர்கள் மீது இட்டுக்கட்டியமைக்கான பாரிய தண்டனையான நரகத்தை அடைவதில் இருந்து அல்லாஹ் எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
“என் மீது யார் வேண்டும் என்றே இட்டுக் கட்டி ஒரு செய்தியை சொல்கின்றாரோ, அவர் தனக்கு உரிய இடத்தை நரகத்தில் ஏற்பாடு செய்து கொள்ளட்டும்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் கூறிய எச்சரிக்கையை என்றும் எமது மனதில் ஆழமாக பதிந்து கொள்வோம்.