– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர் களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான்.’ (2:187)
ஆரம்ப காலத்தில் நோன்பு காலத்தில் இரவில் கூட உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறியலாம். இதனால் ஒரு மாதம் முழுமையாக இல்லற வாழ்வை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. சில நபித்தோழர்கள் இரவு நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டு அதனால் மனம் நொந்த நிலையில் இருந்தனர். அதை அல்லாஹ் மன்னித்தது மட்டுமன்றி நோன்பு கால இரவுகளில் தாம்பத்தியத்தியத்தில் ஈடுபட இருந்த தடையையும் இந்த வசனம் மூலம் நீக்கி விடுகின்றான். இப்போது நோன்பு காலங்களிலும் பகல் நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடலாகாது. இரவு நேரங்களில் இல்லறம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து அஹ்லுல் குர்ஆன் எனும் பெயரில் குர்ஆன் மட்டுமே இறைச் செய்தி எனக் கூறும் ஒரு கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். குர்ஆன் அல்லாத இறைச் செய்தியும் உண்டு என இந்த வசனம் கூறி அவர்களது வாதத்தையும் மறுக்கின்றது.
நோன்பு கால இரவுகளில் குடும்ப வாழ்வில் ஈடுபடக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை இருந்தது. இந்த வசனம் மூலம் அந்தத் தடை நீக்கப்படுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் இடப்பட்ட தடை சம்பந்தமான எந்த செய்தியும் குர்ஆனில் இல்லை. அது நபி(ச) மூலமாகவே இடப்பெற்றிருக்க வேண்டும் குர்ஆன் மட்டுமன்றி நபி(ச) அவர்களின் வாக்குகளும் சட்டமியற்றும் அதிகாரம்மிக்க வேத செய்தி (வஹி) என்பதை இதன் மூலம் அறியலாம்.