Featured Posts

முஹம்மது நபியின் முறைப்பாடு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

ஒரு குற்றம் செய்து பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் அதனை முறைப்பாடு செய்யப் போவதாக அறிந்தால் நாம் அச்சமடைகின்றோம். பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி சமரசம் செய்து கொள்ள முற்படுகின்றோம். செய்த குற்றத்திற்கு ஏற்ப ஏதாவது கொடுத்தேனும் முறைப்பாடு செய்யாமல் சமாதானப்படுத்த முனைகின்றோம். முறைப்பாடு ஏன் செய்யப்படுகின்றது? யாரிடம் யாரால் செய்யப்படுகின்றது? என்பதற்கு ஏற்ப அதற்கு அழுத்தமும் இருக்கின்றது.

”எனது இரட்சகனே! நிச்சயமாக எனது சமூகம் இந்தக் குர்ஆனை வெறுக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டார்கள்’ என இத்தூதர் கூறுவார்.’ (25:30)

இந்தக் குற்றச்சாட்டும், முறைப்பாடும் அகிலத்தாரின் அருட்கொடை அண்ணல் நபியினால் முன்வைக்கப்படப் போகின்றது. மறுமையில் அல்லாஹ்விடம் இந்த முறைப்பாடு செய்யப்படப்போகின்றது. அதுவும் அல்லாஹ்வின் அற்புத வேதமாம் அல்குர்ஆனுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு இது எவ்வளவு ஆபத்தான சூழ்நிலை என்பதை சற்று எண்ணிப் பார்த்தீர்களா?

அல்குர்ஆனை அருளியவன் அல்லாஹ்! அந்த அல்லாஹ்விடம் அல்குர்ஆனைப் போதித்த தூதர் வைக்கப்போகும் குற்றச்சாட்டு இது. இதைச் சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்த வசனம் மக்கத்துக் காபிர்கள் குறித்துத்தான் அருளப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் குர்ஆனை வெறுப்புக்குரியதாக கைவிடப்பட்ட ஒன்றாக எடுத்துக் கொள்ளும் நாமும் இந்தக் குற்றச்சாட்டுக்குள்ளாகக் கூடியவர்களே என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

வீட்டில் பிள்ளைகளின் தொல்லை எல்லையில்லாமல் தொடர்ந்தால் அந்தப் பிள்ளைகளை அடக்க தாய் கையாளும் கடைசி ஆயுதம் ‘சும்மா இருக்காட்டி குர்ஆனை எடுத்து ஓதச் சொல்லுவேன்’ என்பதுதான். குர்ஆன் ஓதுவது என்பது தண்டனையாகவும் வெறுப்புக்குரியதாகவும் மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகின்றது.
முஸ்லிம் சமூகம் குர்ஆனை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் – அது அல்லாஹ்வின் கலாம் என ஈமான் கொள்ளும் விடயத்தில் சரியான நிலைப்பாட்டில் இருந்தாலும் அந்தக் குர்ஆனைக் கைவிடப்பட்ட, வெறுப்புக்குரிய ஒன்றாகத்தானே கருதி வருகின்றது.

குர்ஆனில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருப்பதாக ஒருவர் உழறுகின்றார். அவர் மீது பற்றுக் கொண்ட ஒரு கூட்டம் அதற்கும் தலை சாய்க்கின்றது என்றால் அவர்களுக்கு அந்தக் குர்ஆனை விட அந்தத் தனிநபர் முக்கியமாகிவிட்டார் என்பதுதானே அர்த்தம்!

குர்ஆன் சொன்னது என்பதற்காக ஒரு விடயத்தை நம்பாதே! அது சரியா, பிழையா என்று ஆய்வு செய்து ஏற்றுக் கொள் என்று எவனாவது ஒரு கிறுக்கன் சொன்னாலும் அவன் சொன்னது சரிதானே என்று வாதாடுகின்றது ஒரு கூட்டம். அவர்களுக்கு குர்ஆனை விட, அல்லாஹ்வின் வார்த்தையை விட அந்தக் கிறுக்கனின் வார்த்தை பெரிதாகிவிட்டது என்பதுதானே அர்த்தம்.

ஏதாவது பிரச்சினை வரும்போது அல்குர்ஆனில் இப்படித்தான் இருக்கின்றது என்று சொன்னால் ‘ஓண்ட அல்குர்ஆன ஒன்னோட வச்சிக்கோ’ என்று விதண்டாவாதம் பேசுகின்றது ஒரு கூட்டம். இவர்கள் குர்ஆனை கேலிக்குரியதாகவும் வேண்டத் தகாத ஒன்றாகவும் கருதுகின்றனர் என்பதுதானே இதன் அர்த்தம்.

சிலர் குர்ஆனுடன் இப்படியெல்லாம் விளையாடுவதில்லை. இருப்பினும் அல்லாஹ்வின் கலாமுடன் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

‘நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தொழுகையை நிலை நாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரகசியமாகவும் (நல்லறங்களில்) செலவும் செய்கிறார்களோ அவர்கள் நஷ்டமடையாத ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர்.’

‘அவன், அவர்களுக்கு அவர்களது கூலிகளை முழுமையாக வழங்கி, மேலும் அவன் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவுமே (இதைச் செய்கின்றனர்). நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நன்றி பாராட்டுபவன். ‘ (35:29-30)

அல்குர்ஆனை ஓதாமல் ஒதுக்கி வைப்பதும் நபி(ச) அவர்களின் குற்றச் சாட்டுக்குள் அடங்கக்கூடியதுதான் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

‘இவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய வேண்டாமா? அல்லது உள்ளங்கள் மீது அவற்றிற்குரிய பூட்டுக்கள் உள்ளனவா?’ (47:24)

அல்குர்ஆனைச் சிந்திக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. அதைப் படித்து சிந்திக்காமல் விடுவதும் இந்தக் குற்றச்சாட்டுக்குள் அடங்கும் அல்லவா?

25:30 ஆம் வசனத்திற்கு இமாம் இப்னுல் கதீர் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளிக்கும் போது, ‘அவர்களுக்குக் குர்ஆன் ஓதப்பட்டால் அதைக் கேட்கக் கூடாது என்பதற்காக அவர்கள் கூச்சலிடுவார்கள். இதுவும் அல்குர்ஆனை வெறுப்பதில் அடங்கும். அதன் அறிவைப் பெறாமல் இருப்பதும் அதனைப் பாடமிடாமல் இருப்பதும் கூட குர்ஆனைக் கைவிடுவதில் அடங்கும். அதனை ஈமான் கொள்ளாமல் விடுவதும், அதனை உண்மைப் படுத்தாமல் இருப்பதும் கூட குர்ஆனைக் கைவிடுவதில் அடங்கும். அதனை ஆராயாமல் இருப்பதும், விளங்கிக் கொள்ள முயற்சிக்காமல் இருப்பதும் குர்ஆனைக் கைவிடுவதுதான். அதன் படி அமல் செய்யாமலும், அதன் ஏவலை எடுத்து நடக்காமலும் விலக்கல்களை விட்டும் விலகாமல் இருப்பதும் கூட அல்குர்ஆனைக் கைவிடுவதில் அடங்கக் கூடியதுதான்…..’
(தப்ஸீர் இப்னு கதீர்)

இவ்வாறு இமாமவர்கள் கூறுவதை வைத்து நோக்கும் போது நாளை மறுமையில் நபியவர்களின் இந்த முறைப்பாட்டுக்குள் நாம் கூட அடங்கிவிடுவோம் என்று அஞ்ச வேண்டியுள்ளது.

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் சில அறிஞர்கள் நாளை மறுமையில் குர்ஆனே வந்து எமக்கெதிராக முறையிடும் என்றும் விளக்கம் கூறியுள்ளார்கள்.

சிலர் இக்குர்ஆனை ஓதுகின்றார்கள், படிக்கின்றார்கள். பின்னர் குர்ஆனின் பெயரிலேயே மக்களைக் குழப்பி குர்ஆனை விட்டும் அவர்களைத் தூர விரட்டி விடுகின்றார்கள்.

மற்றும் சிலர் குர்ஆன் எனும் லேபிளை ஒட்டி தமது சொந்த சரக்குகளை விற்பனை செய்கின்றனர். இது குறித்து முஆத் இப்னு ஜபல்(வ) அவர்கள் கூறும் ஒரு செய்தி கவனிக்கத்தக்கதாகும்.

‘பிற்காலங்களில் பித்னாக்கள் ஏற்படும், செல்வம் பெருகும், குர்ஆன் திறக்கப்படும், ஆண்கள்-பெண்கள், சிறுவர்-பெரியவர்கள், முஃமின்-முனாபிக் அனைவரும் குர்ஆனை ஓதுவார்கள். ஒரு மனிதர் குர்ஆனை ஓதுவார். அவரை யாரும் பின்பற்ற மாட்டார்கள். பகிரங்கமாக நான் குர்ஆனைப் படிக்கின்றேன். என்னை யாருமே பின்பற்றுகின்றார் கள் இல்லையே என்று கூறி அவன் ஒரு மஸ்ஜிதை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் வேதத்திலோ நபியவர்களின் சுன்னாவிலோ இல்லாத புதிய புதிய கருத்துக்களைக் கூறுவான். நீங்கள் எச்சரிக்கை யாக இருங்கள். அவனும் எச்சரிக்கையாக இருக்கட்டும். இது பித்அதும் வழிகேடுமாகும் என்று முஆத்(வ) அவர்கள் மூன்று விடுத்தம் கூறினார்கள்.’ (இஃலாமுல் முவ்கியீன் 1ஃ48)

இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. குர்ஆனைச் சாதாரணமாகப் படித்தவர்களும் முப்திகள் போன்றும் முஜ்தஹிதுகள் போன்றும் தீர்ப்புக் கூறத் தொடங்கிவிடுகின்றனர். தாம் சொல்வதையும் மக்கள் ஏற்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கயவர்கள் முன்வைக்கும் குதர்க்கமான சில கேள்விகளைப் பார்த்து இவர்களுக்குப் பின்னாலும் ஒரு மூடர் கூட்டம் பின்தொடர்ந்து செல்கின்றது! இதன் மூலம் குர்ஆனின் பாதையிலிருந்து மக்கள் திசை மாறிச் செல்கின்றனர். அல்குர்ஆனுக்கு சுய விளக்கம் கூறி மக்களைக் குர்ஆனின் பாதையை விட்டும் தடுப்பதும் மிகப்பெரும் குற்றமாகும்.

எனவே, இது போன்ற குர்ஆனுக்குத் துரோகம் செய்யும் குற்றங்களிலிருந்து நாம் ஒதுங்க வேண்டியுள்ளது. வீடுகளில் தினமும் திருக்குர்ஆன் ஓதப்பட வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் எமக்கெதிராக நபி(ச) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். அவர்கள் எமக்கெதிராக முறையிட்ட பின்னர் நாம் எப்படி மறுமையில் வெற்றி பெற முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *