Featured Posts

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்: தலாக்கும் ஜீவனாம்சமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –

“நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும், வசதி உள்ளவர் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.”

“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரை வாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.”
(அல்குர்ஆன் 2:236-237)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு அவளது கணவன் மாதா மாதம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் சில நாடுகளில் உள்ளது. இஸ்லாத்தில் கணவன்-மனைவி என்ற உறவு முறிந்த பின்னர் அவர்கள் இருவரும் தனித்தனி நபர்களாக மாறிவிடுவார்கள். அதன் பின்னர் ஒருவர் மற்றவருக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். இந்த வகையில் இஸ்லாம் இந்த ஜீவனாம்ச முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து, இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலும் இந்த ஜீவனாம்சத்தைப் பெண் பெற்றுக் கொள்வதிலும் நிறைய நடைமுறைச் சிக்கல்களை குறித்த பெண் சந்திக்க நேரிடுகின்றது.

இதற்கு மாற்றமாக இஸ்லாம் சில சட்டங்களை வகுத்துள்ளது. அதில் மஹர் எனும் மணக்கொடையும் ஒன்றாகும்.

திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் மனைவியை விவாகரத்துச் செய்தால் கொடுத்த மஹர் கொடையில் எதையும் கணவன் மீளப் பெறமுடியாது என இஸ்லாம் கூறுகின்றது.

“ஒரு மனைவியின் இடத்தில் வேறொரு மனைவியை (விவாகரத்தின் மூலம்) மாற்றிக்கொள்ள நீங்கள் நாடினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு செல்வக் குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அநியாயமாகவும் பகிரங்கமான குற்றமாகவும் அதை நீங்கள் பறித்துக் கொள்வீர்களா?

அவர்கள் உங்களிடம் உறுதியான உடன் படிக்கையை எடுத்து, நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் அனுபவித்திருக்கும் நிலையில் அதை எப்படி நீங்கள் எடுக்க முடியும்?”
(அல்குர்ஆன் 4:20-21)

திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விவாகரத்துச் செய்தால் இத்தா இருக்கும் காலம் வரை உணவு, இருப்பிடம் என்பவற்றுக்கான ஏற்பாட்டைக் கணவனே செய்ய வேண்டும்.

திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்துச் செய்யப்பட்டால் அப்பெண்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை. உடனடியாகவே அவள் மற்றுமொரு நபருடன் இல்லற பந்தத்தில் இணையலாம்.

இந்த நிலையில் இருக்கும் பெண்கள் குறித்து இந்த வசனம் பேசுகின்றது.

“நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும், வசதி உள்ளவர் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.”
(அல்குர்ஆன் 2:236)

மஹர்க் கொடையை நிர்ணயம் செய்யாமல் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்து செய்தால் அவரது பொருளாதார நிலைக்கு ஏற்ப விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏதேனும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என முதல் வசனம் கூறுகின்றது.

“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரை வாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.”
(அல்குர்ஆன் 2:237)

மஹர்க் கொடையை நிர்ணயம் செய்த பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்துச் செய்யப்பட்டால் பெண்ணுக்கு மஹர்க் கொடையில் பாதியை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். குறித்த பெண் விட்டுக் கொடுத்தாலே தவிர இந்தக் கொடையைக் கொடுப்பது கட்டாயமாகும். உதாரணமாக, பத்து இலட்சம் மஹர் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் அந்தப் பெண் விட்டுக் கொடுக்காவிட்டால் அவசியம் ஐந்து இலட்சம் ரூபாவை அப்பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும். கணவன் விரும்பினால் பத்து இலட்சத்தையும் வழங்கலாம். அப்படி விவாகரத்துச் செய்த அந்த கணவன் விட்டுக் கொடுத்து முழு மஹர் கொடையையும் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இதே வேளை திருமணம் முடித்து தாம்பத்தியத்தில் ஈடுபட முன்னரே கணவன் மரணித்துவிட்டால் குறித்த பெண் கணவன் மரணித்ததற்காக நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும். கணவனின் சொத்திலிருந்து அவளுக்குரிய வாரிசுரிமை பங்கும் கொடுக்கப்படல் வேண்டும். இத்தா இல்லை என்பது இல்லறத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

இதே வேளை குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பின்னர் விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு ஏதேனும் கொடுத்து அவர்களை நல்ல முறையில் விவாகரத்துச் செய்வதையும் இஸ்லாம் போற்றியுள்ளது.

“விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வாழ்க்கை வசதிகள் வழங்க வேண்டும். (இது) பயபக்தியாளர்கள் மீது கடமையாகும்.”
(அல்குர்ஆன் 2:241)

இந்த வசனம் பொதுவாகவே விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை வசதிகளை அளிப்பது தக்வா உடையவர்கள் மீது கடமையாகும் எனக் கூறுகின்றது. இங்கே தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்னர்-முன்னர் என்று பிரித்துப் பார்க்கப்படவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

இது போன்றே தனது மனைவியரை அழைத்து நபி(ச) அவர்களுக்கு இவ்வாறு கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

“நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புபவர்களாக இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு நான் வாழ்க்கை வசதிகளை வழங்கி அழகான முறையில் உங்களை விடுவித்தும் விடுகின்றேன் என்று நபியே! நீர் உமது மனைவியரிடம் கூறுவீராக!” (அல்குர்ஆன் 33:28)

இந்த வசனத்தின் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு விவாகரத்து செய்யப்படும் பெண்களின் நலனில் இஸ்லாம் கரிசனை காட்டியுள்ளது. இருப்பினும் நடைமுறைச் சாத்தியமில்லாத ஜீவனாம்ச முறையை இஸ்லாம் ஏற்கவில்லை. கணவன்-மனைவி என்ற உறவு முறிந்த பின்னர் வாழ்க்கைச் செலவு கொடுக்க வேண்டும் என ஆண்பாலாரை நிர்ப்பந்திப்பது ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒருவகைக் கொடுமையாகவே நோக்க வேண்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *