-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
சமூகச் சூழல்
முதியவர்கள், அனுபவங்களின் முன்னோடிகள். வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவர்களது எடுத்துக்காட்டுகள் வளர்ந்து வரும் சமூகத்திற்கு உந்து சக்தியாகும். துரதிஷ்டமாக இந் நிலமைகளைப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ளவும் முடியாதவர்கள் முதியவர்களை ஒதுக்கி வைக்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெரியவர்களுடன் கலந்தாலோசனை செய்ய விரும்புவதில்லை.
இவர்களுக்கு உலகம் தெரியாது, பழங்காலத்தையே பேசுபவர்கள், காலத்துக்கு ஒவ்வாத கதைகளை கூறுபவர்கள் என்ற பாணியிலேயே பேசுவார்கள்.
வெற்றி தோல்விகளை சந்தித்து அவமானங்களுக்கு முகம் கொடுத்து வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட இந்த பெரியவர்களை பெற்றோர்களை ஒதுக்கி விடுவது உண்மையிலேயே துரதிஷ்டம்தான்.
கற்ற கல்வியை விட பட்ட அறிவுதான் வழிகாட்டலுக்கு விளக்காக அமைகின்றது. அந்த அறிவை ஒதுக்கி விடுவது பல தவறுகளுக்குக் காரணமாக அமையலாம்.
முதியவர்கள் எப்போதும் அறிவுரை வழங்க விரும்புவது அவர்களுடைய அனுபவமே காரணம். அவர்கள் சொல்லும் பாணியில் வெறுப்பு இருந்தாலும், அதற்குப் பின்னால் நியாயங்கள் இருக்கும். அவர்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ள விருப்பமில்லை என்றால் மிகவும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து அவர்களுடைய மனங்கள் புண்படும் விதங்களில் நடக்கக் கூடாது.
தெருவோரங்களில் அலைந்து திரியும் வாலிபர்களும் வேலை வெட்டியில்லாமல் அரட்டையடிக்கும் இளைஞர்களும் முதியவர்களைக் காணும்போது இதோ பெரிசு வருது என்ற முறையில் பேசுவதும் கிண்டலடிப்பதும் பட்டப் பெயர்கள் சூட்டி மகிழ்வதும் பொழுது போக்கு என எண்ணுகிறார்கள். ஆனால் முதியவர்கள் (பெரியவர்கள்) இதனை கேட்கும்போது நொந்துப் போகிறார்கள், சஞ்சலப்படுகிறார்கள். சில நேரம் சாபம் இடுவார்கள்.
சில வீடுகளிலும் பேரப் பிள்ளைகள் முதியவர்களைப் பார்த்து கிண்டலடிப்பதும் சாதாரணமாகிவிட்டது. “பெரிசுக்கு இன்னு வீஸா வரவில்லை” என்று கேலியாகப் பேசும்போது வீட்டிலுள்ளவர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
“நாங்கள் உயிருடன் இருப்பது எமது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை போலும்” என்று முதியவர்கள் கவலைப்படுவார்கள். சிரித்து சந்தோசமாக இருப்பதற்குப் பதிலாக மூலையில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருப்பார்கள். தனக்கு மரணம் வந்து விட வேண்டுமே என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறான மனப்பதிவு முதியவர்களான எமது பெற்றோரிடம் ஏற்படுவது பெரும் சாபமாகும்.
ஆன்மீக சூழலை ஏற்படுத்துதல்:
வயது செல்லச் செல்ல ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகத்துடன் தொடர்புகொள்ளவே விரும்புவர். கடந்த காலங்களில் காட்டாத ஆர்வத்தை முதிய வயதில் காண்பிக்கத் துவங்குவர். இதற்குப் பிரதான காரணம், மரணிக்கின்ற காலத்திலாவது புண்ணியம் தேடிக் கொள்வோம் என்பதாகும். அவர்களது விருப்பத்திற்கேற்ப அச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முஸ்லிம் என்ற வகையில் தொழுகை கண்டிப்பான வணக்கமாகும். ஐவேளை, தொழுகைகளுக்கு பள்ளிவாசலுக்குப் போய்வர முடியுமான சூழல் இருக்குமாயின், பெற்றோருடன் பள்ளிவாசலுக்குப் போய் தொழுதுவிட்டு வர வேண்டும்.
நாம் சின்ன வயது பிள்ளைகளாக இருக்கும் போது எமது கைகளை பிடித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு போவதை பெற்றோர் பெருமையாகவும் ஆசையாகவும் கண்டார்கள். வயதான காலத்தில் அதே பிள்ளைகளுடன் கைகளை பிடித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை சிறப்பாகக் கருதுவார்கள்.
பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கும் பொதுப் பணிகளில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்ல முடியாத, தளர்ந்த நிலையில் இருந்தால் தொழுவதற்கும் காலை, மாலை குர்ஆன் ஓதுவதற்கும், தஸ்பீஹ் (திக்ர்) செய்வதற்கும் வீட்டில் பொருத்தமான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுடன் ஆன்மீகத்துடன் தொடர்ப்பை ஏற்படுத்தும் எந்சந்தர்ப்பத்திலும் இடையூறுகளை தந்து விடக் கூடாது.