-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
இஸ்லாம் பல்வேறுப்பட்ட விருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் வழிகாட்டாத பல விருந்துக்களை மக்கள் அமல் என்றடிப்படையில் செய்து வருவதை காணலாம்.
அமல் என்று ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றால், அது நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியிருக்க வேணடும். நாமாக நல்லது தானே, செய்தால் என்ன தப்பு? நாம் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம்? நாம் செய்யா விட்டால், அல்லது கலந்து கொள்ளாவிட்டால், அவர்கள் நம்மை கோபித்துக் கொள்வார்கள் என்று மார்க்கத்திற்கு முரணாக பகிரங்கமாக பல தவறுகள் செய்யப்பட்டு வருவதை கண்டு வருகிறோம். அவற்றில் ஒன்று தான் சுன்னத் (கத்னா) விருந்து சாப்பாடு?
குழந்தைப் பிறந்த ஏழாம் நாளில் கத்னா செய்ய வேண்டும் என்பது நபியவர்களின் வழி முறையாகும். அந்த வழி முறையை நபியவர்கள் எப்படி செய்து காட்டினார்கள் என்பதை கவனித்து நாம் நடை முறைப் படுத்துவது நமது கடமையாகுமே தவிர, அனுமதித்த சுன்னத்தை மார்க்கத்திற்கு முரணாக நடை முறைப்படுத்துவது தவறாகும்.
அல்லாஹ் குர்ஆனில் “அந்த துாதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று கூறுகிறான். எந்த வணக்கமாக இருந்தாலு்ம் அந்த துாதரின் வழி முறையைத்தான் நாம் பின் பற்ற வேண்டுமே அல்லாமல், ஊருக்காகவோ, பிறருக்காகவோ நமது செயல்பாடுகள் இருக்கும் என்றால் அது முகஸ்துதி என்ற சிறிய இணைவைத்தலாக மாறி அதுவே நரகத்திற்குள் தள்ளி விடும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் “விருத்த சேதனம்” என்ற பெயரிலும், இன்னும் சிலர் கத்னா வைபவம் என்ற பெயரிலும், பத்திரிகை அடித்து வீடு, வீடாக பங்கிட்டு, அதற்காக சாப்பாட்டை ஏற்பாடு செய்து விழாக் கோலம் நடாத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு நாட்டையும். ஊரையும் பொருத்து இந்த கத்னா வைபவங்கள் வித்தியாசமாக இருக்கும். கத்னா செய்யப்படும் அந்த சிறுவரை ”சுன்னத் மாப்பிள்ளை” என்ற சிறப்பு பெயரால் அழைப்பார்கள். சில இடங்களில் சுன்னத் மாப்பிள்ளைக்கு புதிய ஆடையும், மலர் மாலையும், அணிவித்து. வீதி, வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்று இறுதியில் பாதிஹா ஓதி, செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் செய்து, கத்னாவை செய்தப் பின் சொந்த, பந்தம் என்று. ஊருக்கே விருந்து போடுவார்கள்.
கேட்டால் நாங்கள் சுன்னத்வல் ஜமாத் என்றும், அல்லது நபி வழியை பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொண்டே, நபியவர்கள் காட்டித் தராத வழியில் இப்படி செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தனது சொந்த பிள்ளைகளுக்கோ, அல்லது தனது பேரப் பிள்ளைகளுக்கோ. இப்படி விருந்து போட்டு, கத்னா செய்யவுமில்லை, அப்படி வழிகாட்டவுமில்லை. நபியவர்கள் காட்டித் தராத இந்த செயலை, நபி வழி என்ற பெயரிலோ, அல்லது சுன்னத்வல் ஜமாத் என்ற பெயரிலோ எப்படி செய்ய முடியும்.?
நாமாக ஒன்றை செய்து விட்டு அதற்கு சப்பைக் கட்டு போடலாமா?
எனவே அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் துாதரோ காட்டித் தராத எந்த செயலையும் நாம் செய்யவும் கூடாது, அப்படியான விருந்துகளில் நாம் கலந்து கொள்ளவும் கூடாது. அதையும் மீறி கண்மூடித்தனமாக மார்கத்தை திரிபு படுத்துவார்களேயானால் அவர்கள் பின் வரக்கூடிய குர்ஆன் வசனங்களை சற்று ஆழமாக சிந்திக்கவும்
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”. (33:36)
மேலும் “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). (33- 67,68)
மேற்ச் சென்ற குர்ஆன் வசனங்கள் மார்க்கத்தில் இல்லாத எந்த விடயத்தையும் எவர் செய்தாலும் அவர் வழிகேடர் என்றும், அவர் நரகத்திற்குள் சென்று கூக்குரல் இடவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே நபியவர்கள் காட்டித் தராத இப்படியான சுன்னத் என்ற கத்னா சாப்பாட்டை நாம் சாப்பிடுவதை விட்டும் ஒதுங்கிக் கொள்வதோடு, அப்படியான அழைப்பிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.