Featured Posts

பிக்ஹுல் இஸ்லாம்: 14 – கியாமுல் லைல்

கியாமுல் லைல்
கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்களின் கூற்றுக்கான ஆதாரங்களை நோக்குவோம்.

01:
‘இப்னு உமர்(வ) அறிவித்தார்கள். நபி(வ) அவர்கள் மேடை மீது இருக்கும் போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். சுபஹ் நெருங்கிவிட்டது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழவும். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ச) கூறினார்கள்.’
(புஹாரி: 472, 990, 993, முஸ்லிம்: 749-145, இப்னுமாஜா: 1175, அபூதாவூத்: 1326,
திர்மிதி: 437, நஸாஈ: 1668)

இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழப்படும். சுபஹ் நெருங்கிவிட்டது என்று பயந்தால் ஒரு ரக்அத்து வித்ரு தொழுது அதுவரைக்கும் தொழுததை வித்ராக (ஒற்றைப்படையாக) ஆக்கிக் கொள்ளுமாறு இந்த ஹதீஸில் நபி(ச) அவர்கள் கூறுகின்றார்கள். இதன்படி ஆறு ரக்அத்துக்கள் தொழுதவர் ஒரு ரக்அத் வித்ரு தொழுதால் ஏழு ரக்அத்துக்கள் தொழுதவராவார்.

இங்கு நபி(ச) அவர்கள் எத்தனை ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்று கூறவில்லை. இரண்டிரண்டாகத் தொழ வேண்டும், சுபஹுக்கு அதான் கூறப்பட்டுவிடும் எனப் பயந்தால் ஒரு ரக்அத் தொழுது ஏற்கனவே தொழுததை ஒற்றைப்படையாக ஆக்கிக் கொள்ளுமாறு நபி(ச) அவர்கள் கூறுகின்றார்கள். இதன்படி ரக்அத்துக்கள் எத்தனை என்பது பிரச்சினையில்லை. எத்தனையும் தொழலாம் என்பது இக்கருத்துடைய அறிஞர்களின் வாதமாகும்.

11 ரக்அத்துக்களுக்கு மேல் தொழக்கூடாது என்ற கருத்துடைய அறிஞர்கள் இந்த வாதத்தை மறுக்கின்றனர். இங்கு நபி(ச) அவர்கள் எத்தனையும் தொழலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தாலும் அவர்கள் 11 ரக்அத்துக்களை விட அதிகமாகத் தொழுததில்லை எனும் போது 11 இற்குள் இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் பதில் கூறுகின்றனர்.

இதற்கு எத்தனையும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றனர்.

பொதுவாக எத்தனையும் தொழலாம் என்ற கருத்தை நபியவர்கள் கூறியிருக்கும் போது அவர்கள் 11 ரக்அத்துக்களை விட அதிகப்படுத்தியதில்லை என்ற நபியின் செயல் அவர்களின் வார்த்தையை (தஹ்ஸீஸ்) மட்டுப்படுத்தாது. இதுதான் உஸூலாகும்.

நபி(ச) அவர்கள் எத்தனையும் தொழலாம் என அனுமதித்துவிட்டு அவர்கள் 11 ரக்அத்துக்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்றால் அந்த எண்ணிக்கை அவர் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. எத்தனையும் தொழலாம் என்ற கருத்தை அவர்கள் சொன்னார்கள் என்றால் அது பொதுவானது. இதை வைத்து அதைத் தடுக்க முடியாது.

அடுத்து, 11 ரக்அத்துக்ளுக்கு மேல் தொழக் கூடாது என்று நபி(ச) அவர்கள் கூறவில்லை. அதே வேளை, தாவூத் நபி இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். இதுதான் சிறந்த இரவுத் தொழுகை என்று கூறியுள்ளார்கள். இரவின் 1ஃ3 பகுதியில் ஒருவர் 11 ரக்அத்துக்கள் தொழலாம். குறைவாக ஓதித் தொழுபவர் இதை விட கூடிய ரக்அத்துக்களையும் தொழலாம். எனவே, 11 இற்கு மேல் தொழுவது தடை என்பதற்கான எந்த ஆதாரத்தையும் காணமுடியாது என இத்தரப்பு உலமாக்கள் கூறுகின்றனர்.
02:
ரபீஅதிப்னு கஃபுல் அஸ்லமீ(ரஹ்) அவர்கள், ‘சுவனத்தில் நபி(ச) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைக் கேட்ட போது நபி(ச) அவர்கள் அதிகமாக சுஜூது செய்வதன் மூலம் உனது தேவையை அடைந்து கொள்ள எனக்கு உதவி செய்’ என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 488-225, அபூதாவூத்: 1320,
நஸாஈ: 1138)

அதிகமாக சுஜூத் செய்ய வேண்டும் என்றால் அதிகமாகத் தொழ வேண்டும். நபிலான தொழுகைகளை அதிகமதிகம் தொழலாம் என்பதற்கான துணை ஆதாரமாக இதனை எடுத்துக் கொள்கின்றனர். எனவே, எத்தனை ரக்அத்துக்கள் வேண்டுமானாலும் இரவுத் தொழுகை தொழுது கொள்ளலாம் என இத்தரப்பு உலமாக்கள் வாதிக்கின்றனர்.

03:
மஃதான் இப்னு அபூ தல்ஹா கூறுகின்றார். ‘நான் தவ்பான்(வ) அவர்களைச் சந்தித்து ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள். அதைச் செய்தால் அதன் மூலம் அல்லாஹ் என்னை சுவனத்தில் நுழையச் செய்ய வேண்டும் அல்லது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள்’ என்றேன். அதற்கவர், இதே கேள்வியை நான் நபி(ச) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘அல்லாஹ்வுக்கு அதிகமாக நீ ஸஜ்தா செய்! நீ அல்லாஹ்வுக்காக ஒரு சுஜூது செய்தால் அதன் மூலம் அல்லாஹ் உனது அந்தஸ்தை உயர்த்தாமலும் பாவத்தை அழிக்காமலும் விடுவதில்லை’ என்று கூறினார்கள். (சுருக்கம்)
(முஸ்லிம்: 488-225, இப்னுமாஜா: 1422, திர்மிதி: 388, நாஸாஈ: 1139)

இந்த ஹதீஸ் பொதுவாக அதிகம் நபில் தொழுவதை சிறப்பித்துக் கூறுகின்றது. இது போன்ற பொதுவான அறிவிப்புக்களை வைத்து கியாமுல் லைல் தொழுகை எத்தனை வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்று இக்கருத்துடைய அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆதாரங்களையும், அறிஞர்கள் அவற்றை அணுகிய விதத்ததையும் வைத்து நோக்கும் போது 11 ரக்அத்துக்களுடன் நிறுத்திக் கொள்வது சிறந்தது என்பதையும், கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்கள் இத்தனைதான் இதை விட கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது என்ற நிலைப்பாடு இல்லை என்பதையும் அறியலாம்.

இது குறித்து இப்னு அப்துல் பர்(ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘கியாமுல் லைல் தொழுகையின் ரகஅத்தில் வரையறை செய்யப்பட்ட எந்த எல்லையும் இல்லை என்ற விடயத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. இது நபிலான தொழுகையாகும், நல்ல செயல், நல்ல அமல், விரும்பியவர்கள் குறைத்துக் கொள்ளலாம், விரும்பியவர்கள் கூட்டிக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், ‘ரமழானின் இரவுத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட ரக்அத் எண்ணிக்கை உண்டு. அதை விட கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது என யார் நினைக்கின்றாரோ அவர் நிச்சயமாக தவறிழைத்துவிட்டார் என்று கூறுகின்றார்கள்.
(அல்பதாவா: 2ஃ119)

பொதுவாக ஹதீஸ்களை வைத்துப் பார்க்கும் போது எத்தனையும் தொழலாம் என்று முடிவு செய்யவும் இடம்பாடு உள்ளதால்தான் கடந்த கால அறிஞர்களில் பலரும் 11 ரக்அத்துக்களை விட அதிகமாகத் தொழுவதைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்யவில்லை.

இந்த அடிப்படையில் இரவுத் தொழுகையை 11 ரக்அத்துக்களுடன் நிறுத்திக் கொள்வது ஏற்றமானது. அதை விட அதிகமாக ஒருவர் தொழ நினைத்தால் அதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இருப்பினும் தொழும் முறை நபிவழியை ஒட்டியதாக இருக்க வேண்டும். அதிகமாத் தொழுகின்றேன் என்ற பெயரில் ஒழுங்காகத் தொழாமல் ருகூஃ, சுஜூத் ஆகியவற்றை முறையாக நிறைவேற்றாமல் தொழுவது அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். இந்த நடுநிலையான நிலைப்பாட்டிற்கு வருவதே சாலவும் பொருத்தமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *