Featured Posts

கலாச்சாரச் சீரழிவின் (காதலர் தின) வரலாறும் இஸ்லாத்தின் தீர்வும்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (காம வெறியர்களின் தினம்) (கற்பை இழக்கும் தினம்) அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் காதல் என்ற பெயரில் இளவயது ஆண்களும் இளவயது பெண்களும்; வாழ்த்து அட்டைகளை பரிமாரிக் கொள்வதும், பூக்களை வழங்கிக் கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வது, பெற்றோருக்குத் தெரியாமல் ஊர் சுற்றுவதும்,

தகவல் தொடர்பு சாதனங்களில் கணவன் மனைவி போல பல அந்தரங்க விஷயங்களை பரிமாரிக் கொள்வதும்,பொது இடங்களில் கட்டிப்பிடித்துக் கொள்வதும்,அசிங்கமாக முத்தமிட்டுக் கொள்வதும், பரஸ்பரம் கற்புகளை இழப்பதும் (விபச்சாரம் செய்வதும்) இப்படி பல அநாகரீகமான அசிங்கமான , அநாச்சாரமான காரியங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

காதலர்கள் (விபச்சாரகர்கள்) இல்லாதவர்கள் அன்றைய தினம் காதலர்களை (விபச்சாரிகளை) தேடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.காதலரதர்கள் இல்லாதவர்களைப் பாரத்து கேலி கிண்டல் செய்வதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

மேலை நாடுகளில் சொல்லவே வேண்டாம்.அங்கே கற்பு என்பது என்ன என்று கேட்கிற அளவிற்கு தான் கற்பு இருக்கிறது.ஒரு தாய் தன் மகளுக்கு கற்பை இழந்தாலும் பரவாயில்லை கற்பத்தோடு வந்துவிடாதே என்று சொல்லுமளவிற்கு ஒழுக்கமும் கற்பும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. ஹேண்ட் பேக்கில் எதை மறந்தாலும் காண்டத்தை மறந்து விடாத அளவிற்கு காதல் என்ற போர்வையில் விபச்சாரம் நடக்கிறது.

கணவன் மனைவி அந்தரங்க விஷயங்கள் பொது இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

இப்படி பலருடைய கற்பு பறிபோவதற்கும் ஒழுக்கங்கெட்ட பல கீழ்த்தரமான காரியங்கள் நடப்பதற்கும் அடிப்படையாகக் கூறப்படுகின்ற இந்த காதலர் தினம் வந்த வரலாறை நோக்க வேண்டும்.

கி.பி.270-ஆம் ஆண்டு ரோமப்பேரரசன் 2-ஆம் கிளாடியஸ் என்பவன் தங்களின் ஆட்சியில் இராணுவ வீரர்கள் யாரும் திருமணம் முடிக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்கிறான்.

வேலன்டைன் என்கிற பாதிரியார் அரசனின் உத்தரவை மீறி இரகசியமாக பலபேருக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.இதையறிந்த அரசன் பாதிரியரை சிறைபிடித்து மரணதண்டனை விதிக்கிறான்.அவர் தூக்கலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14 .

இதை அடிப்படையாக வைத்தே காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த வரலாறு தான் பொதுவாக எல்லோராலும் நம்பப் படுகிற வரலாறாகும்.

இஸ்லாம் இந்த காதலை எவ்வாறு பார்க்கிறது. இஸ்லாம் காதலுக்கு எதிரான மார்க்கமா? அல்லது அதை ஆதரிக்கிற மாரக்கமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காதல் என்ற போர்வையில் ஒரு அந்நிய ஆணும் ஒரு அந்நிய பெண்ணும் மேற்கூறப்பட்ட பல அநாகரீகமான காரியங்களில் ஈடுபடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.இப்படிப் பட்ட கூத்துக்களுக்கு இஸ்லாம் எதிரான மார்க்கமாகும்.

பொதுவாக இஸ்லாத்தைப் பொருத்தவரை தவறில் ஈடுபடாதே என்று சொல்வதற்கு முன்னால் தவறுக்கு காரணிகளாக எவைகளெல்லாம் இருக்குமோ அவைகளை முதலில் தடை செய்யும்.இதுவே இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும்.

பார்வை தான் விபச்சாரத்திற்கு அடிப்படையாகும்.இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை பின்வரும் வசனம் நமக்கு உணர்த்துகிறது.

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், அதுஅவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும், நிச்சயமாக அல்ல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
அல்குர் ஆன்: 24:30,31

ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருப்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒருபெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்யவேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
புகாரி 3006: 5233.
முஸ்லிம்: 3336.

ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.
திர்மிதீ,முஸ்னத் அஹ்மத்

காதலர் தினப் போர்வையில் மேற்கூறப்பட்ட அநாச்சாரங்கள் பரவுவதை விரும்புபவர்களையும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக் கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு, அல்ல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்குர் ஆன்: 24:19

இது போன்ற காரியங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அவர்கள் வழி தவறுவதற்கு அடிப்படைக் காரணியாக எவையெல்லாம் இருக்கின்றனவோ அவைகளை களைவதற்கு பெற்றோர் முயற்ச்சிக்கவேண்டும்.குறிப்பாக இணையதளங்கள், முக நூல்,கைபேசிகள் போன்றவற்றில் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.கைபேசிகள் மூலமாகத் தான் அந்தரங்கமாக ஆணும் பெண்ணும் கூச்சமோ வெட்கமோ கொஞ்சம் கூட இல்லாமல் சல்லாப விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள்.இதை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது.

ஓர் இறை நம்பிக்கை கொண்ட ஆணும் பெண்ணும் நபியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். நபியை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட எவரும் மேற்கூறப்பட்ட எந்த அநாகரீகமான காரியங்களிலும் ஈடுபடவே மாட்டார்கள்.

அல்லாஹ்வின்; மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
அல்குர் ஆன்: 33:21

இவற்றிற்கு வேறொரு முக்கிய காரணம் வெட்கமின்மையே.
நபியவர்கள் திறைமறைவில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்களைவிட அதிகம் வெட்கப்படக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது.
ஒன்று:அதிகமாக வெட்க உணர்வு இருக்கவேண்டும்
இரண்டு:கன்னிப் பெண்களைப் பொருத்தவரை திறை மறைவில் தான் இருக்கவேண்டும்.ஆனால் இன்று சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றுவது அந்நிய ஆண்களோடு (செல்ஃபோன், முகநூல்,இணையதளங்கள்) பேசுவது வெட்கமின்மையின் இறைநம்பிக்கையின்மையின் அடையாளமே.

வெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.
நபி மொழி புகாரி

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்த (அறிவுரைகளில்) ஒன்று தான்,’நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்” என்பதும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
புகாரி:3484,6120, முஸ்னத் அஹ்மத்

பெற்றோர் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுக்கிற அதே நேரத்தில் தரமான ஒழுக்கக் கல்வியை மார்க்கத்தை வழங்க வேண்டும்.

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு அளிக்கிற அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது நல்ல கல்வியே.நபிமொழி

இளைஞர்கள் எதிர்காலத்தின் தூண்கள்.அவர்களால் சமுதாயம் பயனடைய வேண்டியதிருக்கிறது.காதல் என்ற மாயையில் சிக்கி பெற்றோரின் கனவுகளை வீணாக்கிவிடாதீர்.

கற்பு விஷயத்திலும் செல்போனிலோ முக நூலிலோ தவறின் பக்கம் செல்கிற இளைஞர்கள் நபி யூசுஃப் அவர்களை முன்மாதிரியாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அவள் அவர் மீது விருப்பம் கொண்டு கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பத்திற்கு இணங்குமாறு) ‘வாரும்’ என்று அழைத்தாள் – (அதற்கு அவர் மறுத்து) ‘அல்லாஹ் (இத்தீயச் செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக, நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர் என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் – அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று சொன்னார்.

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள், அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார், இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் தம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
அல்குர் ஆன்: 12:23,24

”அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள் நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 660, முஸ்லிம்,முஸ்னத் அஹ்மத்,அபூ தாவூத்

அதே போன்று தான் யுவதிகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காதல் வலையில் உங்களை வீழத்த பல கழுகுக் கண்கள் காத்திருக்கின்றன.அவர்களின் நோக்கம் உங்களை காதலித்து திருமணம் செய்து நல்ல குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதல்ல மாறாக உங்களின் கற்பை சூறையாடவே என்பதை சமுதாயத்தில் நடக்கிற பல நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கிப்படுவது பெண்கள் தான்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் என்கிற வலையில் வீழ்ந்து கற்பை இழந்து மானம் இழந்து தற்கொலை செய்கிற நிலை ஒரு பக்கம்.அப்படியே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்த எத்துனை பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.இவையனைத்திற்கும் காரணம் காதல் என்கிற மாயை.

ஒரு இறை நம்பிக்கை கொண்ட பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் கற்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கும் மர்யம் (அலை)அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கிக் காட்டுகிறான்.

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார், அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம், (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

(அப்படி அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன், நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)’ என்றார்.

‘நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன், பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்’) என்று கூறினார்.
அல்குர் ஆன்: 19:17,18,19

மேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்). அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார். நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும் அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்). இன்னும் அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அல்குர் ஆன்: 66:12

இஸ்லாம் காதலுக்கு எதிரான மார்க்கமா?
இல்லை காதல் என்கிற அந்த புனிதமான வார்ததை அசிங்கமான ஒன்றாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. மாறாக இஸ்லாம் காதலிக்க சொல்கிறது. படைத்தவன் அல்லாஹ்வை, நம் உயிரினும் மேலான நபியை, பெற்றெடுத்த பெற்றோரை, பெற்ற பிள்ளைகளை, கணவன் மனைவியை, மனைவி கணவனை, உடன் பிறந்த சகோதரர்களை, உற்றார் உறவினர்களை, கொள்கை சொந்தங்களை (காதலிக்க) அன்பு செலுத்த, பாசம் வைக்கச் சொல்கிறது.

படைத்த இறைவன் அல்லாஹ் நம்மை நேசிப்பதாக அல்லாஹ்வே குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 6469.

அல்லாஹ் அன்பை நூறு மடங்காக வைத்திருக்கிறான். அதில் ஒருமடங்கு அன்பைத் தான் தன் அடியார்களிடத்தில் பரவ விட்டிருக்கின்றான் மீதி 99 மடங்கு அன்பை மறுமை நாளில் தன் அடியாரகளுக்கு வழங்குவான்.அந்த ஒரு மடங்கு அன்பினால் தான் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் பர ஸ்பரம் அன்பை பரிமாரிக்கொள்கின்றன.எந்த அளவிற்கெனில் ஒரு குதிரை தன் குட்டியின் மீது கால் பட்டுவிடுமோ என்று காலை அகட்டி வைக்கிறது.ஹதீஸின் கருத்து. புகாரி,முஸ்லிம்

படைத்த இறைவன் அல்லாஹ்வை (காதலிக்க) நேசிக்க சொல்கிறது.

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

நம் உயிரினும் மேலான நபி முஹம்மது (ஸல்)அவர்களை (காதலிக்க) நேசிக்க சொல்கிறது

‘என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்’என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா (ரலி)அறிவித்தார்.

‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார். புகாரி:14,15

இந்த நபி மொழியிலிருந்து நபியை நேசிக்கவேண்டும் மற்ற எல்லோரையும் நேசிப்பதை விட என்பதும் மற்ற நம்முடைய தாய் தந்தை பிள்ளைகள் மற்ற நண்பர்கள் உறவினர்கள் ஏனைய மக்கள் இவர்களையும் நேசிக்கவேண்டும் அவர்கள் மீது காதல் அன்பு பாசம் கொள்ளவேண்டும் என்பதும் விளங்குகிறது.

நபியின் தோழர்களை நேசிக்கச் சொல்கிறது.

அன்சாரிகளை நேசிப்பது (காதல் கொள்வது) இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.

அவர்களை வெறுப்பது நயவஞ்கசத்தின் அடையாளமாகும்.புகாரீ:17 முஸ்லிம்

ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளச் சொல்கிறது.அதற்கான வழியையும் காட்டித்தருகிறது.

நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கம் செல்ல முடியாது. நீங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமுடியாது.நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிற ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லித்தரட்டுமா? அதைச் செய்தால் உங்களுக்கிடையில் அன்பு ஏற்பட்டுவிடும் ஏன்று நபியவர்கள் கேட்டுவிட்டு உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்புங்கள் என்றார்கள்.
முஸ்லிம்: 203அபூதாவூத்,திர்மிதீ,முஸ்னத் அஹ்மத்

தான் நேசிக்கிற தன் சகோதரனை பார்க்க செல்கிறார் ஒருவர் அவ்வூரின் வாயிலில் ஒரு வானவர் வந்து அவரிடம் எங்கே செல்கிறீர் எனக் கேட்கிறார்.அதற்கவர் என் சகோதரனை பார்க்க என்கிறார்.அவரிடம் உனக்கு ஏதாவது (உலகியல்)ஆதாயத்திற்கா செல்கிறீர் என அவ்வானவர் கேட்க இல்லை நான் அவரை என் அல்லாஹ்விற்காக நேசிக்கிறேன் அதற்காகத் தான் அவரை நாடிச் செல்கிறேன் என்று அம்மனிரதர் கூற உடனே அவ்வானவர் நீ எந்த அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறீரோ அந்த உன்னை நேசிப்பதாக சொல்கிறான் அதை தெரிவிக்கவே வந்திருக்கிறேன் என்று கூறுசிறார். ஹதீஸின் கருத்து நூல்:முஸ்லிம்

காதல் என்கிற மாயையில் விழுகிற ஆணும் பெண்ணும் தங்களின் காதலர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துடிக்கிறார்கள்.இந்த நிலை தங்களின் காமப் பசி தீரும் வரை தான். இதை விட அல்லாஹ்வையும் நபியையும் நேசிக்க ஆரம்பித்தால் மரணம் வரை அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுவோம்.இது தான் உண்மையான அன்பு,பாசம், காதலுமாகும்.

இறுதியாக எச்சரிக்கை:
இவ்வுலகில் தான்தோன்றித்தனமாக காதல் என்கிற போதையில் மிதக்கிற அநாகரீகமான, அசிங்கமான, வெக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபடுகிற அனைவருக்குமான இறை எச்சரிக்கை.

மேலும் அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்) தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில் அவர்கள் (தனித்தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.

இறுதியில் அவர்கள் (அத்தீயை) அடையும் போது அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும் அவர்களுடைய கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றிசாட்சி கூறும்.

அவர்கள் தம் தோல்களை நோக்கி எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுகிறீர்கள்?’ என்று கேட்பார்கள், அதற்கு அவை: ‘எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்ல்லாஹ், எங்களைப் பேசும்படிச் செய்தான், அவன் தான் உங்களை முதல் தடவையுமபடைத்தான், பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்’ என்று கூறும்.

‘உங்கள் காதுகளும் உங்கள் கண்களும் உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை, அன்றியும் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்ல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டீர்கள்.

ஆகவே உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம் தான் உங்களை அழித்து விட்டது, ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

ஆகவே அவர்கள் வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும் அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் தங்குமிடம் ஆகும் – அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக் கேட்ட போதிலும் அவர்கள் மன்னிக்கப் படமாட்டார்கள்.
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம், ஆகவே (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள், அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம் வாக்கு உறுதியாகிவிட்டது – நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினார்.
அல்குர் ஆன் 41:(19,25)

இவ்வெச்சரிக்கையையும் மீறி காதல் களியாட்டங்களில் கற்பை இழந்து அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நடப்போர் கால்நடைகளை விட ஆகக் கேடுகெட்டவர்கள் என்று திருமறைக்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்று படைத்துள்ளோம், அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள், அவர்களுக்கு கண்கள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை, அவர்களுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைளைக்) கேட்கமாட்டார்கள் -இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றைவிடவும் வழி கேடர்கள், இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்கள்.7: 179.

எனவே மேற்கூறப்பட்ட உபதேசங்களை கவனத்தில் கொண்டு இது போன்ற அநாகரீகமான காரியங்களில் எந்த இஸ்லாமிய ஆணும் பெண்ணும் ஈடுபடாமல் தங்களுடைய ஈமானையும் கற்பையும் பேணிப் பாதுகாத்து ஈருலகிலும் இறையன்பைப் பெருவோமாக.

அதற்கு அல்லாஹ நமக்கு அருள்புரிவானாக.

ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
ஆசிரியர்:அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி,
கோட்டார், நாகர்கோவில்.
தொடர்புக்கு:+919894896579

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *