Featured Posts

பிப்ரவரி 14 – காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள். ஆனால், காதலர் தினம் காதல் எனும் ஹராத்துக்கு ஹலால் அந்தஸ்து வழங்கப்படும் தினமாக உள்ளது.

இன்றைய மீடியாக்கள், சினிமாக்கள் இலக்கியங்கள் அனைத்துமே முழுக்க முழுக்க காதலை ஊக்குவிப்பதாகவும் அதை மையமாகக் கொண்டதாகவுமே அமைந்துள்ளன. இதனால் மாற்றுப் பாலினத்தினருடன் காதல் கொள்வதென்பது இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் செயலாகும். காதல் என்ற விடயம் சமூகத்தில் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. காதலர் தினங்களில் ஆரம்ப வகுப்பு மாணவ மாணவிகள் முதல் சகல வகுப்புக்களிலும் இனிப்புக்களும், அன்பளிப்புக்களும் பரிமாறிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தலை தூக்கியுள்ளது.

காதல் எனும் வார்த்தை குறிப்பாக அன்பையும், நேசத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் இவ்வார்த்தை எதிர்ப் பாலினர் மீது இளம் வயதினருக்கு ஏற்படும் ஈர்ப்பையும் அதன் மூலம் ஏற்படும் தொடர்பையும் குறிக்கும் விதத்திலேயே இப்பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தக் காதல் மூலமாக சமூகத்தில் நிறையவே பாதிப்புக்கள்தான் ஏற்பட்டு வருகின்றன. மதம் மாறி, இனம் மாறி காதல் கொண்டதனால் பல்வேறுபட்ட மத, இனக் கலவரங்கள் உருவாகியுள்ளதுடன் அது வளர்ந்த வண்ணமும் உள்ளது. ஒரு பெண்ணை பலர் காதலித்ததனால் அல்லது ஒரு பெண் பலபேரைக் காதலித்ததனால் சண்டைகள், கத்திக் குத்துக்கள், கொலைகள் என ஏராளமான பிரச்சனைகள் நடந்துள்ளன.

காதலின் பெயரில் பல இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு அவர்களது கற்பு சூறையாடப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். காதலனை நம்பி வீட்டை விட்டும் ஓடிவந்த பெண்கள் காதலித்தவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் சேர்த்து பலிகொடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. இவ்வாறு கைவிடப்பட்ட பெண்களில் பலர் நிரந்தர விபச்சாரிகளாகவும் மாறியுள்ளனர்.

இவ்வாறே இதன் இழப்புக்களும், இழிவுகளும், அழிவுகளும் தொடர்ந்தாலும் ‘காதல்” வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. முற்போக்குவாதிகள் என வாதிக்கும் பலரும் காதலை வரவேற்கின்றனர். திருமணத்திற்கு முன்னரே ஒருவருடன் ஒருவர் பேசி, பழகி, ஒருவரையொருவர் உணர்ந்து மணம் செய்தால் அந்தத் திருமணம் நீடிக்கும் என்று ஒரு நியாயத்தை வேறு சொல்கின்றனர்.
ஆனால், காதல் திருமணங்களை விட குடும்பத்தின் சம்மதத்துடன் பேசித் தீர்த்து நடாத்தும் பாரம்பரியத் திருமணத்திற்குத்தான் ஆயுசு கெட்டி என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. காதல் திருமணங்களே இன்று அதிகமான விவாகரத்தில் முடிகின்றன என்பது புள்ளிவிபரத்தின் கணிப்பாகும்.

உண்மையில் காதலிக்கும் போது யாரும் யாரையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் தொட்டுக் கொள்ளவும் ஒட்டிக் கொள்ளவுமே முயற்சிக்கின்றனர். ஒருவர் மீது மற்றவர் அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுகின்றோம் என காட்டிக் கொள்ள போலியாக நடிக்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர் நடிக்கும் தேவை அற்றுப் போவதால் அவரவர் சுயரூபம் வெளிக்கிளம்ப ஆரம்பிக்கும். இதுவே அதிகமான மண முறிவுகளுக்குக் காரணங்களாக அமைந்து விடுகின்றது.

கடந்த கால காதல் என்பது ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்ப்பது, கையால் மற்றும் கண்களால் சாடை காட்டுவதுடன் நின்றுவிடும். இந்தக் காலக் காதலில் காமமே மிகைத்து நிற்கும். காதல் அரும்பியதும் தொலைபேசியில் முகம் பார்த்துப் பேசிக் கொள்கின்றனர். அந்தரங்கக் காட்சிகளைப் பார்த்துக் கொள்கின்றனர். சில வேளை இந்தப் பேச்சுக்கள், காட்சிகள் தொலைபேசி மற்றும் கணனிகளால் திருடப்பட்டு அல்லது வேறு வழிகளில் பெறப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றவர்களும் உள்ளனர். இது போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர்.

எனவே, கடந்த காலக் காதலை விட இந்தக் காலக் காதல் ஆபத்தானது’ அருவருப்பானது’ எதிர் காலத்தைப் பாதிக்கக் கூடியதது.

இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் கூறுவது போல், காதல் உருவானால் அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திவிட்டால் அதைவிடப் பெரிய சோதனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படாது. காதலைக் கட்டுப்படுத்த முடியாதவர் காதலித்தால் அதைவிடப் பெரிய சோதனைகளைத் தாங்க நேரிடும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

போலிக் காதலில் மாட்டிக் கொண்டால் நாம் நிம்மதியை இழக்க நேரிடும். பெண்ணாயின் கற்பையும் ஆணாயின் காசையும் இழக்க நேரிடும். உண்மைக் காதலாக இருந்து அது கைகூடாவிட்டால் பிரிவு என்கின்ற மிகப் பெரும் துயரத்தைச் சுமக்க நேரிடும். எனவே, மனம் தடுமாறும் போது உறுதியாக இருந்து எம்மைக் காத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

காதல் போதையில் இருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்வதென்றால் மார்க்க வரம்புகளைப் பேண வேண்டும். ஆண்-பெண் தொடர்பாடலின் இஸ்லாத்தின் வரையறைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்த்தரப்பின் பேச்சில் ஏதாவது நெருடல் தென்பட்டாலும் உறுதியாக இருந்து விலகிக் கொள்ள வேண்டும். காதலுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் உள்ளத்தில் புகுந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிடும். அதன் பின்னர் என்றுமே விரட்ட முடியாது. விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தலைக்கு மேல் பிரச்சனைகள்தான் வந்து குவியும்.

திருமணம் முடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அப்போது அதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். திருமணத்திற்கு முன்னர் இப்படியான உறவுகளை உள்வாங்கிக் கொள்வது உங்களுக்கும் உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் சில போது உங்கள் சமூகத்திற்கும் இழிவைத் தேடித் தரலாம்.

எனவே, முறையற்ற காதலைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்வதுடன் முறையான இஸ்லாமிய வழிகாட்டலுடனான உறவுமுறைகளை நம்மில் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்வது முக்கியமானது. அத்துடன் அதற்கான வழிகாட்டல்களை பெற்றோர், குடும்ப உறவுகள், புத்திஜீவிகள், உலமாக்கள், தலைவர்கள்…. என சகலரும் மேற்கொள்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

ஆகவே, இதற்கான முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள முயற்சிப்போமாக! இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

Published on: Feb 10, 2018
Republished on: Feb 12, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *