Featured Posts

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள் !

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
இஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும். அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும். எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் தான் நீங்கள் சமைத்தால் அதில்தண்ணீரை கொஞ்சம் ஊற்றி பக்கத்து வீட்டாருக்கு கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதுவும் ஒரு வகை அன்பளிப்பாகும். இதன் மூலம் பக்கத்து வீட்டார்கள் மூலம்அன்பு என்ற உறவுகள் பலப்படும்.

இந்த அன்பளிப்புகள் விடயத்தில் இஸ்லாம் நமக்கு எப்படி வழிக் காட்டுகிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.

சமமாக கொடுக்கப்படல்
அன்பளிப்புகள் யாரும் யாருக்கும் கொடுக்கலாம். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொடுக்கும் போது எந்த பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் ஒரே மாதிரி சமமாக கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மாதிரி, மற்றொருவருக்கு இன்னொரு மாதிரி என்று வழங்கப்படுமேயானால் அது ஒரு பிள்ளைக்கு செய்யும் பெரிய அநியாயமாகும். அந்த அநியாயத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப் படும். பின் வரும் சம்பவத்தை கவனியுங்கள்.

.” நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பி வந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். ( முஸ்லிம் 3325 )

எனவே பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அன்பளிப்புகளை திரும்ப பெறல் கூடாது
ஒருவருக்கு அன்பளிப்புகளை கொடுத்து விட்டு, ஏதோ ஒரு பிரச்சனையினால் அதை திரும்ப கேட்க கூடாது. அப்படி கேட்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.
“உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 3313 )

எனவே கொடுத்த அன்பளிப்புகளை திரும்ப பெறக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆயுட்கால அன்பளிப்புகள்
. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 3333 )

மேலும் “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், “நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்” என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3334 )

மேலும் ” ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் புதல்வர் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக (உம்றா) வழங்கினார். பிறகு அந்தப் புதல்வர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணும் இறந்துவிட்டார். அந்தப் புதல்வர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்தப் புதல்வருக்குச் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் ஆயுட்கால அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் ஆவர். (அந்தப் புதல்வரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் “தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்” என்று கூறினர். அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்கள், “இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது”என்று கூறினர்.
பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றனர். தாரிக் பின் அம்ர், (தம்மிடம்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களை வரவழைத்(து அதைப் பற்றி விசாரித்)தார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் “ஆயுட்கால அன்பளிப்பு,அன்பளிப்பு பெற்றவருக்கே உரியதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சாட்சியமளித்தார்கள்.
இதன்படியே தாரிக் பின் அம்ரும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் “ஜாபிர் சொன்னது உண்மையே” என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். ( முஸ்லிம் 3340)

மேலும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்” என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். “உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்” என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும். (முஸ்லிம் 3335 )

எனவே தனது தோட்டத்தையோ, தனது விவசாய காணியையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி இது உனக்கு மட்டும் உரியது என்ற அன்பளிப்பாக கொடுத்தால், அவர் மரணித்த பின் அந்த அன்பளிப்பை கொடுத்தவரிடமே போய் சேர்ந்து விடும். அதே நேரம் உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை என்று கூறி அன்பளிப்பாக கொடுத்தால் அது அவரின் பரம்பரை பரம்பரையாக பெற்றவருக்கே சொந்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *