உறவினர்களுடன் நடந்து கொள்வது.
ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் தந்தையிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.
இரத்த பந்தமுடையவர்கள் முஃமின்களாக இருந்தாலும் காஃபிர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இரத்தபந்தமுடையவர்களாகவே கருத வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழ்வதும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்வதும் கடமையாகும்.
அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்: எந்த அல்லாஹ்வின் பெயரைக்கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம்(உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுகே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். (4:1)
உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கி விடு. (30:38) நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகின்றான். (16:90)
அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்த்து, நரகத்தை விட்டும் தூரப்படுத்தக்கூடிய ஒரு செயலை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டபோது, ‘நீ அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு இணை எதையும் கற்பிக்காதே. தொழுகையை நிலைநாட்டு. ஸகாத் கொடு. உறவினர்களுடன் இணைந்து வாழு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப்(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
அபூபக்கருடைய மகள் அஸ்மா(ரலி) அவர்களின் தாயார் இணைவைப்பவராக இருக்கின்ற நிலையில் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) வந்திருந்தபோது என் தாயாரிடம் நான் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் அஸ்மா(ரலி) கேட்டபோது, ஆம்! உன் தாயாரிடம் நல்ல முறையில் நடந்து கொள் என அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
நூல்: முஸ்லிமின் வழிமுறை