ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்’ என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்’ இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே!
‘அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ச) அவர்கள் ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்’ என்றும் ஆயிஷா(Ë) கூறினார்.
(புஹாரி: 1147)
நபி(ச) அவர்கள் பொதுவாக இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத்தான் தொழுவார்கள். ஆனால், இங்கே நான்கு தொழுவார்கள். பின்னர் நான்கு, பின்னர் மூன்று எனக் கூறப்படுகின்றது. இதன் அர்த்தம் நான்கு ரக்அத்துக்களை ஒன்றாகத் தொழுது ஸலாம் கொடுப்பார்கள் என்பதல்ல. இரண்டிரண்டாக நான்கு தொழுது விட்டு சற்று ஓய்வெடுப்பார்கள். பின்னர் இரண்டிரண்டாக நான்கு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு சற்று ஓய்வெடுப்பார்கள்.
இந்த இடைக்கிடையே ஓய்வெடுத்து ரமழான் கால இரவுத் தொழுகை நீட்டி நிதானித்து தொழப்பட்டதால் ‘தராவீஹ்’ ஓய்வெடுத்துத் தொழப்படும் தொழுகை என அழைக்கப் படலாயிற்று. இன்று பள்ளிகளில் இந்தத் தொழுகை தொழப்படும் வேகத்தையும் விரைவையும் பார்த்தால் இந்தப் பெயர் அதற்குப் பொருத்தமானதாக இல்லை என்று கூற நேரிடும்.
கட்டாய சுன்னத்:
ரமழான் கால இரவுத் தொழுகையைக் கட்டாய சுன்னத் ‘சுன்னா முஅக்கதா’ என்று கூறுவார்கள். நபி(ச) அவர்கள் இதை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள். இந்த அடிப்படையில் நபி(ச) அவர்களின் சொல், செயல் இரண்டின் மூலமும் இந்த சுன்னா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
”நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்கு கிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(வ) அறிவித்தார்.
(புஹாரி: 37, முஸ்லிம்: 759-173)
இந்த ஹதீஸின் அடிப்படையில் தராவீஹ் தொழுகை சுன்னாவாகும். இந்த நபிமொழியே தாராவீஹ் தொழுகையின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தப் போதுமான தாகும். பொதுவான கியாமுல்லைலில் இரவுத் தொழுகையில் இதுவும் அடங்கும். என்றாலும் ரமழான் கால இரவுகளில் அது மேலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. ரமழான் கால இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது இஸ்லாமியச் சின்னங்களில், அடையாளங்களில் ஒன்றாகவே மாறியுள்ளது என்று கூறலாம்
ஜமாஅத்தாகத் தொழுதல்:
நபியவர்கள், ‘ரமழான் கால இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதார்கள். பின்னர் அதை விட்டுவிட்டார்கள். அதற்குக் காரணமாகக் கூறும் போது, ‘இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் பயந்தேன்’ எனக் காரணம் கூறினார்கள். பின்னர் உமர்(வ) அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையான ஒழுங்குடன் கூட்டாக இந்தத் தொழுகையைத் தொழும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டு இன்று வரை அது நடந்து வருகின்றது. நபியவர்களுடன் கூட்டாக சில நபித்தோழர்கள் இத்தொழுகை யைத் தொழுதுள்ளதால் ரமழான் கால இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது சுன்னாவாகும். அத்துடன் நபியவர்கள் இது கடமையாக்கப்பட்டுவிடும் எனப் பயந்ததி னால்தான் ஜமாஅத்தாகத் தொழுவதை நிறுத்தினார்கள். நபியவர்களது மரணத்தின் பின்னர் அந்த அச்சம் நீங்கிவிட்டதால் தொடராக முறையான ஏற்பாட்டுடன் ஜமாஅத்தாகத் தொழுவதை உமர்(வ) அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
இந்த அடிப்படையில் ஒரு ஊரில் தராவீஹ் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படுவது பர்ழ் கிபாயா. செய்தால் மற்றவர்கள் மீது கடமை நீங்கக் கூடிய கட்டாய நடைமுறை என்று கூறுவர்.
ஜமாஅத்துடனா? தனித்தா?
தராவீஹ் தொழுகையை தனித்துத் தொழுவது சிறந்ததா? ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்ததா? என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.
தனித்துத் தொழுவது சிறந்தது என்று கூறுபவர்கள் பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாகக் கூறுவர்.
ஸைத் இப்னு ஸாபித்(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி(ச) அவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. எனவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக் கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி(ச) அவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். எனவே (மறுநாள்) நபி(ச) அவர்கள், ‘(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்களின் மீது (ரமழானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீங்கள் தொழுது (இரவுத்) தொழுகை உங்களின் மீது கடமையாக ஆக்கப்பட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர’ என்றார்கள்.’ (புஹாரி: 7290)
பர்ழ் அல்லாத தொழுகைகளை வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. உமர்(வ) அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு அவர்கள் பின்னிரவில் தனித்துத் தொழுதார்கள். எனவே, ஜமாஅத்துடன் தொழுவதை விட தனித்துத் தொழுவதே சிறப்பானது என்பது சிலரது வாதமாகும்.
கூட்டாகத் தொழுவதன் சிறப்பு:
நபியவர்கள் சில இரவுகள் ரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதுள் ளார்கள் என்பதை நாம் கண்டோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் தொழுவித்து முடிந்ததும் அந்த இரவு முழுவதும் நபியவர்களுடன் தொழ வேண்டும் என ஆர்வப்பட்ட நபித் தோழர்கள்,
‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவின் மீதிப் பகுதியிலும் தொழுவிக்கலாமே’ எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், ஒரு மனிதர் இமாமுடன் தொழ எழுந்து அவர் தொழுது முடிக்கும் வரை அவருடன் தொழுதால் அன்றைய இரவில் நின்று வணங்கியவராகக் கருதப் படுவார்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்(வ)
நூல்: தாரமீ- 1929, இப்னு குஸைமா- 2206,
அபூதாவூத்- 1375, இப்னுமாஜா- 1327
ரமழான் கால இரவுத் தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரை இமாமுடன் தொழுதால் அன்றிரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் என இந்த நபிமொழி கூறுவதால் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவதே சிறந்தது என சிலர் குறிப்பிடுவர்.
ஜமாஅத்துடன் தொழாவிட்டால் கூட தனித்து அந்தத் தொழுகையை பூரணமாகத் தொழக்கூடிய பக்குவம் உள்ளவர்கள், நீண்ட சூறாக்களை ஓதி நிதானமாகத் தொழக் கூடிய அளவுக்கு குர்ஆன் மனனம் உள்ளவர்களைப் பொருத்தவரையில் தனித்துத் தொழுவது சிறந்தது எனலாம்.
ஆனால், தனித்துவிட்டால் தொழ முடியாமல் போய்விடும் என்ற நிலையில் இருப்பவர் கள் குர்ஆனில் அதிக மனனம் இல்லாதவர்கள் ஜமாஅத்துடன் தொழுவதே சிறப்பானதாகும். ஏனெனில், தனித்துவிட்டால் அவர்களால் இத்தொழுகையை முழுமையாக முறையாகத் தொழ முடியாமல் போய்விடலாம். எனினும், ஊரில் இத்தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவ தற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள்:
தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் பலத்த சர்ச்சை இருந்து வந்துள்ளது. இன்று சமூகத்தில் 11? 23? என்ற சர்ச்சை மட்டுமே நிலவி வருகின்றது. எனவே, இது குறித்து மட்டும் நாம் பேசுவது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.
பதினொன்று:
தராவீஹ் 11 ரக்அத்துக்கள் தொழலாமா என்பதில் சந்தேகமோ சர்ச்சையோ இல்லை. 23 தொழலாமா என்பதில்தான் சர்ச்சை உள்ளது. ஏனெனில், நபி(ச) அவர்கள் 11 தொழுததற்கான ஆதாரங்கள் நேரடியாக வந்துள்ளன.
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்: ‘நான் ஆயிஷா(Ë) அவர்களிடம், ‘ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ச) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமழானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்’ என்று கூறினார்கள்.’
(புஹாரி: 1147-2013, 3569, முஸ்லிம்: 738-125, இப்னு குஸைமா: (49) 1166, அபூதாவூத்: 1341,
முஅத்தா: 293
இங்கு ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ச) அவர்களது இரவுத் தொழுகை எப்படி இருந்தது என்றுதான் கேட்கப்படுகின்றது. எத்தனை ரக்அத்துக்களாக இருந்தது என்று கேட்கப் படவில்லை. இருப்பினும் எத்தனை ரக்அத்துக்கள் என்பதையும் சேர்த்து பதில் சொல்கின்றார்கள். அடுத்து, ரமழான் கால இரவுத் தொழுகை பற்றிக் கேட்கப்படவே இல்லை. இருப்பினும் ரமழானிலோ அது அல்லாத காலத்திலோ 11 ஐ விட அதிகமாகத் தொழுததில்லை என்று கூறுகின்றார்கள். நபி(ச) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி அதிகம் அறிந்தவர்கள் அவர்களது மனைவிமார்களே! இந்த அடிப்படையில் அன்னை ஆயிஷா(Ë) அவர்களது இந்தத் தகவல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
சில சகோதரர்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் இருக்கலாம். நபி(ச) அவர்கள் தஹஜ்ஜுத் பதினொன்று தொழுதிருப்பார்கள். தராவீஹ் 23 தொழுதிருப்பார்கள் என்று எண்ணலாம். அந்த எண்ணத்திற்கு இடம்பாடு இல்லாமலேயே ரமழானிலோ அது அல்லாத காலத்திலோ 11 இற்கு மேல் தொழுததில்லை என்று கூறுகின்றார்கள்.
அடுத்து, கியாமுல் லைல் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது தெளிவாகவே தாராவீஹ், வித்ர், தஹஜ்ஜுத் என்பதையெல்லாம் ஒரே தொழுகைக்குரிய பல பெயர்கள் என்பது பற்றி நாம் தெளிவாக விபரித்துள்ளோம் என்பதைக் கவனிக்கலாம்.
இது குறித்து அறிஞர் அப்துல்லாஹ் முபாரக் பூரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது,
‘தராவீஹ் என்பதும், ரமழான் இரவுத் தொழுகை என்பதும், தஹஜ்ஜுத் தொழுகை என்பதும் ஒரே அம்சத்திற்குள்ள பல பெயர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ரமழானில் தராவீஹ் அல்லாமல் தஹஜ்ஜுத் என்று தனித் தொழுகை இல்லை. ஏனெனில், நபி(ச) அவர்கள் ரமழான் காலத்தில் இரண்டு விதமாக தொழுகைகளைத் தொழுதார்கள். ஒன்று தராவீஹ் மற்றது தஹஜ்ஜுத் என்று கூறக்கூடிய ஸஹீஹான அறிவிப்போ பலவீனமான அறிவிப்போ கிடையாது.’ என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஹனபி மத்ஹபின் அறிஞர்களில் ஒருவரான அன்வர் ஷபாஷ் காஷ்மீரி(ரஹ்) அவர்கள் இது பற்றி கூறும் போது,
‘தராவீஹ் என்பதும், கியாமுல்லைல் என்பதும் என்னிடத்தில் ஒன்றுதான். அவற்றின் பண்புகள் வேறுபட்டிருப்பினும்.’
இவ்வாறு பல அறிஞர்களும் இது பற்றி தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பதைக் கவனத்திற் கொள்ளலாம்.
எனவே, நபி(ச) அவர்கள் ரமழான், ரமழான் அல்லாத காலங்களில் 11 ரக்அத்துக்கள்தான் தொழுதுள்ளார்கள். எனவே, தராவீஹ் 11 தொழலாம் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்குரிய மற்றும் சில ஆதாரங்களை அவதானித்துவிட்டு இத்தொழுகை பற்றிய சர்ச்சையை அறிஞர்கள் ஏன் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்ற விபரத்தையும் அறிந்து கொள்வது பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன்.
தொடரும்….
Hafiz Ibn Taymiyyah (RA) writes in his Fatawa: ‘Verily it has been proven that Umar made Ubay ibn Ka’ab (RA) lead the people in 20 Rakats of Taraweeh and 3 Witr in Ramadhan. This is the way of the scholars of this Ummah and this is the Sunnah. This is due to the fact that Sayyidina Ubay ibn Ka’ab (RA) read 20 Rakats Taraweeh in a large congregation of the Muhajireen and Ansar of the Sahabah and none amongst them objected to this practice.’ (Fatawa Ibn Taymiyyah vol 1, p191/ Al Mughni vol 1, p803)
In the time of Hafiz Ibn Taymiyyah (RA) when the Rawafid (Shia) put the blame upon Sayyidina Umar (RA) for creating the innovated practice of 20 Rakats Taraweeh. Ibn Taymiyyah (RA) responded to this allegation by writing in defence of Sayyidina Umar (RA) to the Rawafid: ‘If Sayyidina Umar Farooq (RA) by establishing 20 Rakats of Taraweeh had been deemed to adopt a bad practise, then Sayyidina Ali (RA) would have put an end to this in his Khilafat. However, in the Khilafat of Sayyidina Ali (RA) , he too would read 20 Rakats Taraweeh prayer in Kufa. In the month of Ramadhan, Sayyidina Ali (RA) would state: ‘May Allah enlighten the grave of Sayyidina Umar (RA) , just as He (Umar ) has enlightened our Masajids for us.’ (Due to the fact of establishing the 20 Rakats Taraweeh for the Ummah). (Minhaaj ul Sunnah vol 2, p224)
Admin pls respond for this….
கேள்வி: தராவீஹ் 8 ரக்காத், தஹ்ஜ்ஜித் 8 ரக்காத், வித்ரு 3 ரக்காத் தொழலாமா?…
பதில் தரவும்