Featured Posts

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்

அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் அவன் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஒன்றைவிட ஒன்றை அவன் சிறப்பிக்கின்றான்.

அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான். இறைத்தூதர்களில் சிலரைவிட சிலரை அவன் சிறப்பித்துள்ளான். வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்காயீல் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான்.

பொதுவாக இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை அவன் புனிதப்படுத்தியுள்ளான். இந்த மூன்று புனித ஸ்தலங்களில் ஒன்றை விட மற்றதை சிறப்பித்துள்ளான்.

உமது இறைவன் தான் நாடியதை படைக்கிறான். தேர்வுசெய்கிறான்.
அல்குர்ஆன் (28 : 68)

அல்லாஹ்வின் இந்த தனிப்பட்ட விருப்பத்தின் படி மாதங்களில் சிறப்பிற்குரிய மாதமாக அவன் ரமலானை தேர்வு செய்து சிறப்பித்துள்ளான்.

ரமலான் மாதம் எத்தகையது என்றால் நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும். நோயாளியாகவோ பயனியாகவோ இருப்பவர்கள் வேறு ஒரு நாளில் (விடுபட்ட நோன்புகளை) நோற்கட்டும்…. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தி நன்றி செலுத்த வேண்டும்.
அல்குர்ஆன் (2 : 186)

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
”ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்கள்: புகாரீ (1898)

”ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்கள்: புகாரீ (1899)

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்துவிட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்ற சிந்தனைகள் இந்த செய்திகளைப் பார்த்தால் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இந்த ஹதீஸ்களின் கருத்து இதுவல்ல!

”ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, நாம் நரகி­ருந்து தப்பித்து இலகுவாக சொர்க்கம் செல்வதற்கான வாய்ப்புகளை இறைவன் ரமலான் மாதத்தில் வைத்துள்ளான். மனிதன் தான் செய்யும் பாவங்களால்தான் நரகத்திற்குச் செல்கிறான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் கற்றுக்கொடுத்த சிறு வணக்கங்களை இம்மாதத்தில் செய்தால் அவற்றின் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிக்கிறான். இந்த சிறு வணக்கங்களுக்கு பன்மடங்கு நன்மைகளையும் ஈடுஇணையில்லாத சுவனத்து பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்குகிறான்.

ஆதமுடைய மக்களை வழிகெடுத்து பாவங்களை செய்ய வைத்து அவர்களை நரகவாசிகளாக ஆக்க வேண்டும் என்பதே ஷைத்தான்களின் ஒரே குறிக்கோள். ரமலான் மாதத்தில் அடியார்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவதால் ஷைத்தான்களின் இந்த முயற்சி பலனற்று தோல்வியில் முடிகின்றது. இதுவே ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதின் விளக்கமாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு
ஒரு நாள் வேலை செய்தால் ஒரு மாதம் வேலை செய்த கூலி­யை யாரும் தரமாட்டார்கள். இவ்வாறு ஒரு முதலாளி தருகிறார் என்றால் அவரை மிகப்பெரிய கொடைவள்ளல் என்று கூறுவோம். அவரிடம் பணிபுரிபவர்கள் அந்த முதலாளிக்கு உச்சகட்ட விசுவாசத்தை காட்டுவார்கள்.

மனிதன் இந்த உலகத்தில் சராசரியாக 60 வருடம் வாழ்கிறான். அதாவது 720 மாதங்கள் வாழ்கிறான். உலகில் வாழ்நாள் முழுவதும் இறைவனை வணங்கினால் 720 மாதங்கள் மட்டுமே அவனால் வணங்க முடியும். ஆனால் ரமலானில் லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவில் நாம் வணங்கிவிட்டால் ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கினால் கிடைக்கும் நன்மையை காட்டிலும் கூடுதலான நன்மையை அந்த ஒரு இரவில் நின்று வணங்கி நாம் அடைந்துவிடலாம். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

இத்துடன் அந்த இரவில் மனிதர்களுக்கு நன்மையளிக்கும் பல கட்டளைகளை அல்லாஹ் வானவர்களுக்கு இடுகிறான். அல்லாஹ்வின் இத்தகைய முடிவுகளை செயல்படுத்துவதற்காக வானவர்கள் அந்த இரவில் பூமிக்கு வருகை தருகிறார்கள்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் (97 :1-5)

லைலத்துல் கத்ர் எப்போது?
ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ரை ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நாம் தேட வேண்டும். இருபத்து ஏழாம் இரவு மட்டுமே லைலத்துல் கத்ர் என்பது தவறானக் கருத்தாகும்.

நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர், இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”உங்கள் கனவைப் போல் நானும் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாட்களில் தான் அமைந்துள்ளது. யார் லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்கின்றாரோ அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1158

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2017

மாபெரும் நஷ்டத்திற்குரியவன்
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, ”ஆமீன், ஆமீன், ஆமீன்” என்று கூறினார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ”எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ”எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்” என்று கூறி, ”ஆமீன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூற்கள் : இப்னு ஹிப்பான், மவாரிதுல்லம்ஆன், முஸ்னத் அபீயஃலா, முஸ்னத் பஸ்ஸார், தப்ரானீ கபீர்

இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும்.

இனி ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பது பற்றியும் நடைமுறையில் உள்ள பித்அத்துக்களையும் பார்ப்போம்.

”யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

நோன்பின் சிறப்புகள்

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
”நோன்பு நரகத்தி­ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நுôல்: புகாரீ (1894)

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நுôல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

கணக்கின்றி நன்மையை பெற்றுத்தரும் வணக்கம்
மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூ­யை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். இந்த வணக்கத்திற்கு குறிப்பிட்ட அளவு கூலி எதுவும் கிடையாது. அல்லாஹ் தான் விரும்பியதை தாரளமாக வழங்குகிறான்.

”ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூ­லி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ­லி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ர­)
நூல்: முஸ்­லிம் (2119)

சுவர்க்கமே கூ­லி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­)
நூல்: புகாரி 8

சுவர்க்கத்தில் தனி வாசல்
கடமையான நோன்பை நோற்றவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்குகிறான்.
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

”சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ர­)
நூல்: புகாரீ (1896), முஸ்­ம் (2121)

நோன்பின் நோக்கம்
எல்லா நேரத்திலும் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வை நம் மனதில் பதிய வைத்து அல்லாஹ் விரும்புகின்ற காரியங்களை செய்யக்கூடியவர்களாகவும் அவன் வெறுக்கின்ற காரியங்களை விடக்கூடியவர்களாகவும் நாம் மாற வேண்டும். இதற்காகவே அல்லாஹ் நோன்பை கடமையாக்கியுள்ளான்.

ஒருவர் நோன்பு நோற்றும் இந்த நல்லமாற்றம் அவரிடம் ஏற்படவில்லை என்றால் அவருடைய நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். பின்வரும் ஆதாரங்கள் நோன்பின் இந்த அடிப்படை நோக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது
(அல் குர்ஆன் 2:183)

”பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: புகாரி (1903)

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால்  அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், ”நான் நோன்பாளி” எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: புகாரி (1894)

ரமலானின் சிறப்புகளை அடையும் வழிகள்
பாவங்களைப் போக்கும் நோன்பும் இரவு வணக்கமும்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான். ரமலான் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதாலும் அல்லாஹ் நம் பாவங்களை மன்னிக்கிறான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது.

யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: புகாரீ (1901), முஸ்­ம் (1393)

இறுதிப் பத்து நாட்கள்
நபி(ஸல்) ரமலானின் மற்ற நாட்களைக் காட்டிலும் இறுதிப்பத்து நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள். இந்த நாட்களில் இரவு முழுவதும் விழித்து வணக்கவழிபாடுகளை ஈடுபட்டார்கள். லைலத்துல் கத்ரை அடைவதற்காகவே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு முயற்சி செய்துள்ளார்கள்.

(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தினரையும் (இறைவனை வணங்குவதற்காக) எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2024

நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்து நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம்

இஃதிகாஃப்
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் ரமலான் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். ரமலான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ”யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளில் உள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ர­)
நூல்கள்: புகாரீ (813), முஸ்­ம் (2168)

பிரத்யேகப் பிரார்த்தனை
அல்லாஹ்வின் பாவமன்னிப்பை நாம் பெறுவதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு இந்த ரமலானில் பிரத்யேகமாக ஒரு பிரார்த்தனை கற்றுத்தந்துள்ளார்கள். சிறிய பிரார்த்தனையாக இருந்தாலும் நிறைவான பொருள் கொண்ட அல்லாஹ்விடம் அதிக பெறுமதியான இந்தப் பிரார்த்தனையை நாம் அனைவரும் மனனமிட்டு அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.

”அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ 3435

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை
உம்ராவை விட ஹஜ்ஜில் கூடுதலான கிரிகைகளும் சிரமங்களும் உள்ளது. பொதுவாக உம்ரா செய்வது சிறந்த வணக்கம் என்றாலும் ரமலானில் இந்த வணக்கத்தை நாம் செய்தால் அதற்கு அல்லாஹ் இன்னும் அதிக நன்மையை வழங்குகிறான். ஹஜ் செய்த நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.

”ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­)
நூல்: புகாரீ (1782) முஸ்லி­ம் (2408)

திருக்குர்ஆன் ஓதுதல்
அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக நமக்கு நேர்வழிகாட்டினான். இதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தி கொண்டாடுவதற்காகவே அல்லாஹ் ரமலானை ஏற்படுத்தியுள்ளான். எனவே ரமலானில் மற்ற மாதங்களை விட அதிகமாக குர்ஆன் ஓத வேண்டும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டுகிறது. நேர் வழியைத் தெளிவாகக் கூறுகிறது. (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டுகிறது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:185)

அடுத்த வருடம் ரமலானில் நாம் உயிருடன் இருப்போமா? என்பதை நாம் அறிய முடியாது. எனவே பாக்கியங்களை நிறைந்த இந்த ரமலான் மாதத்தை சரியான முறையில் பயன்படுத்தி மறுமையில் வெற்றி பெறுவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *