‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்’ என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்’ என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!’ என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது.
இலங்கை முஸ்லிம்கள்ளூ ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் தனியான முஸ்லிம் பாடசாலைகளாகும். எமது முன்னோர்கள் கல்விக்காக மார்க்கத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் இழந்துவிடக் கூடாது என்ற தூர நோக்கில் செயற்பட்டதால் இஸ்லாமிய சூழலில் கலாசார தனித்துவத்தைப் பேணி உலகக் கல்வியைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.
ஆனால், அதிகாரிகளின் அசமந்தப் போக்கு, அரசியல் புறக்கணிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, மாற்றுமொழி ஆசிரியர்களின் அதிகரிப்பு, தகுந்த அதிபர் இன்மை, நிர்வாகச் சீர்கேடு, ஆசிரியர்களின் கடமையுணர்வற்ற செயற்பாடு, மாணவர்களின் கட்டுப்பாடற்ற போக்கு, பெற்றாரின் அக்கறையின்மை, பாடசாலைக்குள் அரசியல் தலையீடு,…. என பல்வேறுபட்ட குறைகள் மூலம் இன்று முஸ்லிம் பாடசாலைகள் வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன என்றால் பொய்யன்று!
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம் பாடசாலைகள் இன்று மங்கி மறைந்து வருகின்றன. முஸ்லிம் பாடசாலைகளுக்குக் கட்டிடம் கிடைக்கின்றது. ஆனால், ஆசிரியர் வெற்றிடங்கள் அடைக்கப் படுவதில்லை. சிங்களப் பாடசாலைகளில் அளவுக்கதிகமான ஆசிரியர்கள் இருப்பதால் அவர்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மூலமாக முழுமையான பயனை அடைய முடியா வண்ணம் மொழி வேறுபாடு முட்டுக்கட்டையாக அமைகின்றது. இப்படி ஏராளமான அரசியல் ரீதியான காரணங்கள் களையப்பட வேண்டியுள்ளது.
அடுத்து, கல்வி என்றால் அதன் இலக்கு என்ன என்பதை உணர வேண்டும். விஞ்ஞானம் படித்தால் வைத்தியராக வேண்டும், கணிதம் படித்தால் பொறியியலாளராக வேண்டும். இல்லையென்றால் தோல்வி மனப்பான்மையில் சோர்ந்து போகும் மனநிலை இன்று மாணவர் மத்தியில் மட்டுமன்றி பெற்றோர் மத்தியிலும் அதிகரித்து வருகின்றது.
பரீட்சைதான் ஒரு மனிதனின் அறிவையும் திறமையையும் தீர்மானிக்கும் என்பதற்கில்லை. இருப்பினும் பரீட்சையில் சித்தியடையாத சில மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தைக் கண்டு வருகின்றோம். பரீட்சைக்காக வாழ்க்கையல்ல. மாறாக, வாழ்க்கைக்காகவே பரீட்சை என்பதைப் புரியாமல் உள்ளனர்.
சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் முறையாகத் தோற்றாத மாணவர்கள் தமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்கு தொழில்நுட்பப் பயிற்சி என்றும் வேறு பல ‘கோர்ஸ்கள்’ என்றும் ஏராளமான வாய்ப்புக்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. எமது இளைஞர்கள் அது குறித்து அறியாதவர்களாகவும், அக்கறையற்றவர்களாகவும் உள்ளனர். பரீட்சையில் திறமைச் சித்தி பெறாத மாணவர்களுக்கு முறையான வழிகாட்டலை வழங்கி அவர்கள் வாழ்க்கைப் படியில் முன்னேறிச் செல்ல வழிகாட்டப்பட வேண்டும்.
நூஹ் நபி கப்பல் கட்டும் தெழில்நுட்பத்தைக் கற்றிருந்தார்கள். சுலைமான் நபி பறவைகள் மொழிகள் வரை அறிந்திருந்தார்கள். தாவூத் நபி ஆயுதம், கவசம் என்பனவற்றைச் செய்து விற்று வாழ்க்கை நடாத்தி வந்துள்ளார்கள். ஸகரிய்யா நபி தட்சராக இருந்துள்ளார்கள். யூசுப் நபி பொருளாதார விற்பன்னராக இருந்துள்ளார்கள். துல்கர்ணைன் மன்னன் சிறந்த கட்டிடக் கலை நிபுணராக இருந்துள்ளார்கள். இவற்றையெல்லாம் எதற்காக எமக்குக் குர்ஆனும், சுன்னாவும் போதிக்கின்றதென்றால் சமூகத்தில் இத்தகைய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உருவாக வேண்டும். இவையெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான கல்விகளே!
எனவே, சாதாரண தரத்தில் போதியளவு சித்தியடையாத மாணவர்கள் முட்டாள்கள் கிடையாது. கல்வியறிவு இல்லாவிட்டாலும் அவர்களுக்குள் ஏதோ ஒரு திறமை நிச்சயமாக இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து அவர்களுக்குப் பொருத்தமான ஏதோ ஒரு துறையை தெரிவு செய்ய வேண்டும். தொழில்நுட்பத் துறையில் அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையை இனம் கண்டு அவர்கள் அதில் முன்னேற முடியும். உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவைப் பெற முடியாதவர்களும் கல்வித் துறையின் பாதையை மாற்றி பாடங்களை மாற்றி படிக்கட்டுகளை ஏற்படுத்தி பயணிக்கத் தயாராக வேண்டும்.
விஞ்ஞானம் கற்கும் அனைவரும் வைத்தியராக முடியாது. கணிதம் கற்கும் அனைவரும் பொறியியலாளராக முடியாது. அவர்கள் அந்த இலக்கை அடைய முடியாது போனதும் வாழ்க்கையே வெறுத்து இனி படிப்பெதற்கு என்று எண்ணி படிப்பில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர். இதனால் திறமையான மாணவர்களின் படிப்பு இடைவழியில் நின்றுவிடுகின்றது.
இவர்கள் வைத்தியக் கனவைக் களைந்துவிட்டு இந்தத் துறையிலேயே இருக்கும் எண்ணற்ற துறைகளில் எதையேனும் ஒன்றைத் தெரிவு செய்து இலக்கை மாற்றிப் பயணிக்க வேண்டும்.
மாணவர்கள் சிலர் பரீட்சையில் பின்னடைவைச் சந்திக்கும் போது மாணவர்களை விட பெற்றோர்கள் நொந்து நூலாகிவிடுகின்றனர். ‘எவ்வளவு செலவளித்தேன்! எல்லாம் வீணாகி விட்டது’ என புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் வெறுப்படையும் மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தப் போக்கைக் கைவிட்டுவிட்டு ஆறுதல் கூறி அரவணைத்து அவர்களை நல்ல முறையில் முறையாக அடுத்த கட்டத்தை நோக்கி வழிநடாத்த வேண்டும்.
முஸ்லிம் பாடசாலைகளைச் சீரழிக்கும் நிர்வாகக் கோளாறுகள், அரசியல் தலையீடுகள், நீயா? நானா? என்ற போட்டி, ஆசிரியர்களின் அசமந்தப் போக்குகள்… போன்றன நிறுத்தப்பட வேண்டும். சுயநல நோக்கங்களுக்காக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுபவர்கள் நிச்சயமாக தமது பிள்ளைகள் விடயத்தில் நாளை கவலைப்படும் நிலையை அடைவர். எமது கல்விப் பாதையும், பார்வையும் மாறவேண்டியுள்ளது. இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் எந்தக் கல்வியையும் கற்கலாம். அதற்கு இஸ்லாத்தில் நன்மையுண்டு.
கற்ற கல்வியை இஸ்லாத்திற்காகவும், மனித குலத்தின் நன்மைக்காகவும் பயன்படுத்த வேண்டும். இதுவே கல்வியின் இலக்கு! கல்வி முன்னேற்றத்திற்கு தியாகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன மிகவும் முக்கியமானவையாகும். இவைகள் எமது சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது!
சீரான வழியில் எமது கல்விப் பயணம் திசை திருப்பப்பட்டால் ஒரு சிறந்த சமூக மறுமலர்ச்சியைக் காணலாம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!