சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும்.
சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் என்ற அறிவீனமான நம்பிக்கை இருந்தது. நபி(ச) அவர்களுக்கு மாரியதுல் கிப்திய்யா என்ற அடிமைப்பெண் மூலம் கிடைத்த ஒரு குழந்தை இருந்தது. இப்றாஹீம் எனும் பெயர் கொண்ட இந்தக் குழந்தை இறந்த தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காக சூரியன் துக்கம் கொண்டாடு வதாக மக்கள் பேசிக் கொண்டனர். தன் மகன் மரணித்த துக்கத்தில் இருந்த நபி(ச) அதையும் பொருட்படுத்தாமல் இந்த அறியாமைச் சிந்தனையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள்.
‘முகீரா இப்னு ஷுஉபா(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ச) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத் திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். ‘
(புஹாரி: 1043)
கட்டாய சுன்னத்தாகும்:
சூரிய, சந்திர கிரகணங்களின் போது தொழுவது கட்டாய சுன்னாவாகும். இமாம் இப்னுல் கையூம்(ரஹ்), ஷெய்க் பின்பாஸ்(ரஹ்) போன்ற அறிஞர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுமாறு நபி(ச) அவர்கள் ஏவியிருப்பதாலும் அவர்கள் அதனை செய்திருப்பதாலும் கட்டாய மாகத் தொழுதாக வேண்டும் என்று கூறுகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
தொழுகையின் நேரம்:
சூரிய, சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிவதற்கிடைப்பட்ட நேரம் தொழுகைக்குரிய நேரமாகும்.
‘நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள், அது நீங்கும் வரை தொழுங்கள்’ என்று வரும் ஹதீஸ்கள் (புஹாரி 1060, முஸ்லிம்: 904) இதற்கான ஆதாரமாகும். கிரகணம் முற்றாக நீங்கிவிட்டால் தொழுகையின் நேரம் முடிந்து விடும். கொஞ்சம் நீங்கி கொஞ்சம் இருந்தாலும் அது தொழுகைக்குரிய நேரமாகும்.
கிரகணத்தைக் கண்டால்:
01. அதிகமாக திக்ர் செய்தல்:
கிரகணம் ஏற்படும் போது அதிகமாக திக்ர் செய்வதுடன் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும். அத்துடன் தர்மம் செய்வதும் ஏற்றமானதாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
‘கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை யாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அவனைப் பெருமைப் படுத்துங்கள், தொழுங்கள், தர்மம் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள் கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.’ (புஹாரி1044)
02. அடிமைகளை விடுதலை செய்தல்:
‘அஸ்மா(ரழி) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.’
(புஹாரி: 1054)
இதன் மூலம் சூரிய, சந்திர கிரகணங்களின் போது அல்லாஹ்வுக்கு விருப்பமான காரியங்களை அதிகம் செய்தல் சிறப்பானது என்பதை அறியலாம்.
03. ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என அழைப்பு விடுப்பது:
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுங்கள்!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.’
(புஹாரி: 1045)
இந்த ஹதீஸ் மூலம் கிரகணத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படும் என்பதை அறியலாம்.
04. பள்ளியில் தொழப்படும்:
நபி(ச) அவர்கள் கிரகணத் தொழுகையை மஸ்ஜிதில் தொழுது வந்ததாக ஆயிஷா(Ë) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி(ச) அவர்களின் துணைவியார் ஆயிஷா (Ë) அவர்கள் கூறியதாவது: ‘அல்லாஹ்வின் தூதர்(ச) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுகையில்) நின்று ‘தக்பீர்’ கூறினார்கள்.’
(முஸ்லிம்: 1645)
பொதுவாக மழை வேண்டித் தொழுதல், பெருநாள் தொழுகை போன்றவற்றை நபி (ச) அவர்கள் திடலில் தொழுதிருந்தாலும் கிரகணத் தொழுகையை மஸ்ஜிதில் தொழுதுள்ளார்கள் என இந்த ஹதீஸ் கூறுவதால் அதை மஸ்ஜிதில் தொழுவதே சுன்னாவாகும்.
05. பெண்கள் சமூகமளித்தல்:
கிரகணத் தொழுகையில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆயிஷா(Ë), அஸ்மா(Ë) ஆகியோர் நபி(ச) அவர்களுடன் கிரகணத் தொழுகையில் பங்கு கொண்டமை பற்றி அநேக அறிவிப்புக்கள் பேசுகின்றன.
அஸ்மா பின்த் அபீ பக்ர்(Ë) அறிவித்தார்: ‘ஒரு சூரிய கிரகணத்தின் போது ஆயிஷா(Ë) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(Ë)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(Ë) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து ‘ஸுப்ஹா னல்லாஹ்’ என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்’ என்பது போல் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன்…..’ (புஹாரி: 1053)
06. தொழும் முறை:
கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். ஆனால், தொழும் முறையில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.
ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள் இரண்டு ருக்கூஃகள், இரண்டு சுஜூதுகள்… என்ற கருத்தில் இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர் உள்ளனர்.
பின்வரும் ஹதீஸ்களை இவர்கள் தமது கருத்துக்குரிய ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
ஆயிஷா(ரழி) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ச) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பின்னர், ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து’ என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றைய ரக்அத்திலும் செய்தார் கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சி களில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து சென்று தொழுங்கள்’ என்று கூறினார்கள்.
நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்’ என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார்.’
(புஹாரி: 1046)
‘ஆயிஷா(ரழி) அறிவித்தார்: சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி(ச) அவர்கள் தொழுதார்கள். நின்று தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, ‘ஸமிஅல்லாஹு லிமன்ஹமிதா’ என்றார்கள். எழுந்து முன்போன்றே நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முன்பு ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முந்தைய ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்களிலும் இது போன்றே செய்தார்கள். சூரிய கிரகணம் விலகியபோது ஸலாம் கொடுத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்.’
(புஹாரி: 1047), (முஸ்லிம்: 901)
ஏனைய தொழுகை போன்று இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்
இரண்டு ருகூஃ, இரண்டு நிலை (கியாம்) என்றில்லாமல் சாதாரணமாக ஏனைய தொழுகை போன்று இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்ற கருத்தை இமாம் அபூஹனீபா மற்றும் இப்னு ஹஸ்ம்(ரஹ்) போன்றோர் கொண்டுள்ளார்கள். பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கூறுகின்றார்கள்.
அபூ பக்ரா(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ச) அவர்கள் தங்களின் மேலாடையை இழுத்தவர் களாகப் பள்ளிக்குச் சென்றார்கள். மக்களும் அவர்களை நோக்கி விரைந்த னர். நபி(ச) அவர்கள் மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். கிரகணம் விலகியதும் ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத் திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்ப தில்லை. எனவே கிரகணம் பிடித்தால் அது விலகும் வரை தொழுங்கள்;, பிரார்த்தி யுங்கள்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள். அவர்களின் மகன் மரணித்தபோது மக்கள் பேசியதற்கு மறுப்பாகவே இவ்வாறு நபி(ச) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘ (புஹாரி: 1063)
இந்த ஹதீஸில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்று பொதுவாக வந்துள்ளதையே இத்தரப்பினர் ஆதார மாகக் கொள்கின்றனர். இருப்பினும் மற்றும் பல அறிவிப்புக்களில் அந்த இரண்டு ரக்அத்துக்களிலும் நான்கு நிலை, நான்கு ருகூஃ, நான்கு சுஜூத் இருந்ததாக ஹதீஸ்கள் வந்துள்ளதால் முதல் சாராரின் கருத்தே மிகச் சரியானதாகும். இந்த அடிப்படையில் கிரகணத் தொழுகையின் அமைப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.
1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதி, நீண்ட ஒரு சூறாவை ஓதுதல்.
2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல்.
3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல்.
4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹா வையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூறாவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல்.
5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல்.
6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல்.
7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல்.
8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல்.
தொழுகையின் பின்னர் குத்பா:
கிரகணத் தொழுகையின் பின்னர் குத்பா உரை இடம்பெற வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்த அனைத்து ஹதீஸ்களிலும் நபி(ச) அவர்கள் தொழுகையின் பின்னர் குத்பா உரை நிகழ்த்தி யுள்ளார்கள். எனவே, கிரகணத் தொழுகையில் குத்பாவும் ஒரு அங்கம் என்பது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
நபி(ச) அவர்கள் கிரகணத் தொழுகை நடாத்திய தினத்தில் அவரது மகன் மரணித்தார். மக்கள் அவரது மகன் மரணித்த காரணத்தினால் தான் கிரகணம் ஏற்பட்டதாகக் கூறினர். அது தவறானது என்று உணர்த்தவே நபி(ச) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அஃதல்லாமல் கிரகணத் தொழுகையின் ஒரு அங்கமாக குத்பா அமையாது என்பது அபூ ஹனீபா(ரஹ்), அஹ்மத் மாலிக்(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
இருப்பினும் குறித்த குத்பா உரையில் நபி(ச) அவர்கள் தனிநபர் பிறப்பு, இறப்புக்களால் கிரகணம் ஏற்படுவதில்லை என்பதை மட்டும் கூறவில்லை. துஆ, திக்ர் செய்யுமாறும் கூறியுள்ளார்கள். கப்ருடைய வேதனை பற்றியும் கூறியுள்ளார்கள். சுவர்க்கம் மற்றும் நரகம், விபச்சாரம் பற்றியெல்லாம் பேசியுள்ளார்கள்.
எனவே, சூழ்நிலை காரணமாகவே குத்பா செய்தார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அத்துடன் வெறும் அறிவித்தலாக இல்லாமல் ஹம்து ஸலவாத்து சொல்லி தனிச் சிறப்புடன் குத்பாவைச் செய்துள்ளார்கள். இப்றாஹீமின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தைக் களைவதற்காகத்தான் குத்பா செய்தார்கள் என்று தனிப்பட்ட எந்த ஆதாரமும் இல்லாமல் யூகம் செய்ய முடியாது. இது விடயத்தில் ‘இத்திபாஃ’ பின்பற்றுதலே எமது கடமையாகும். எனவே, கிரகணத் தொழுகையின் ஒரு அங்கமாக குத்பா உரை உள்ளது என்பதே சரியான முடிவாகும்.
கிராஅத்தை சப்தமிட்டு ஓதுதல்:
கிரகணத் தொழுகையில் கிராஅத்தை சப்தமிட்டு ஓதுவதா? மௌனமாக ஓதுவதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
சூரியக் கிரகணமாக இருந்தால் கிராஅத்தை சப்தமாக ஓதலாகாது. ஏனெனில், அது பகலில் தொழப்படும் தொழுகை. பகல் தொழுகைகளில் கிராஅத் மௌனமாகத்தான் ஓதப்பட வேண்டும். சந்திர கிரகணமாக இருந்தால் கிராஅத்தை சப்தமாக ஓத வேண்டும். ஏனெனில், இரவில் தொழப்படும் தொழுகைகளில் கிராஅத் சப்தமாக ஓதப்படும் என்று இதற்கு காரணம் கூறப்படுகின்றது.
ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகை என்பன பகலில்தான் தொழப்படுகின்றன. ஆனால், அவற்றில் கிராஅத்தை சப்தமாக ஓதுவதற்கே மார்க்கம் வழிகாட்டியுள்ளது. எனவே, இந்த யூகத்தின் அடிப்படையில் விடை காண முடியாது.
ஆயிஷா(Ë) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்துக்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்’
(புஹாரி: 1065)
இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகவே கிரகணத் தொழுகையில் நபி(ச) அவர்கள் சப்தமிட்டு ஓதியதாகக் கூறுவதால் அதுவே சரியான வழிமுறையாகும்.
வேறு பிரச்சினைகளுக்குத் தொழலாமா?:
கிரகணம் அல்லாமல் பூமியதிர்ச்சி, கடும் காற்று, இடி முழக்கம்… போன்றவை ஏற்பட்டால் தொழலாமா? என்ற சந்தேகம் எழலாம். இது குறித்து அறிஞர்கள் மத்தியில் நான்கு கருத்துக் கள் நிலவுகின்றன.
01. பூமியதிர்ச்சி, புயல் போன்ற எந்த ஆபத்தான அத்தாட்சிகளின் போதும் தொழுவது முஸ்தஹப்பானதாகும். இமாம் அபூஹனீபா (ரஹ்) மற்றும் இப்னு ஹஸ்ம்(ரஹ்) போன் றோர் இக் கருத்தில் உள்ளனர்.
02. கிரகணம் தவிர்ந்த வேறு எதற்காகவும் தொழக் கூடாது என்பது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் அபிப்பிராயமாகும்.
03. கிரகணம் மற்றும் பூமியதிர்ச்சி தவிர்ந்த ஏனையவற்றுக்காகத் தொழக் கூடாது என்பது ஹன்பலி மத்ஹபின் ஒரு சாராரின் கருத்தாகும்.
04. கிரகணம் தவிர்ந்த ஏனைய எதற்காகவும் ஜமாஅத் தொழுகை இல்லை. ஆனால், ஆபத்துக்கள், அதிர்ச்சிகள் ஏற்படும் போது பணிவை வெளிப்படுத்த விரும்பியவர்கள் தனித்தனியாகத் தொழுது கொள்ளலாம் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும். இதுவே பொருத்தமான கருத்துமாகும். அல்லாஹு அஃலம்.
Published on: Nov 5, 2016 4:24 pm
Republished on: Dec 26, 2019