முஹம்மத்(ச) அவர்கள் பற்றி பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்களில் ஒன்றை கடந்த இரண்டு இதழ்களில் பார்த்துள்ளோம். அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் அடிப்படையான சில உண்மைகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகின்றேன்.
01. மூடலானது:
பொதுவாக முன்னறிவிப்புக்கள் மூடலாகத்தான் இருக்கும். அதில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து நிதானமாக நோக்கும் போதே அதன் உண்மைத் தன்மை உறுதியாகும். இந்த அடிப்படையில் முன்னறிவிப்புக்கள் மிக மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.
02. மாற்றங்கள்:
பொதுவாக பைபிள் மொழி பெயர்ப்புக் களில் நம்பகத் தன்மையில் கோளாறு உள்ளது. பெயர்கள் இடங்களின் பெயர்களைக் கூட மொழிபெயர்ப்புக்கு மாற்றும் இயல்புள்ளவர்களாக அவர்கள் உள்ளனர்.
உதாரணமாக, தமிழில் இயேசு என்பது ஆங்கிலத்தில் ‘ஜீஸஸ்’ என்றும், தாவீது என்பது ‘டேவிட்’ என்றும் பேதுரு என்பதும், ‘பீட்டர்’ என்றும் மாற்றப்படுவதைக் குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் சில முன்னறிவிப்புக்களின் வார்த்தைகள், பெயர்கள் கூட பைபிள் மொழி பெயர்ப்பாளர்களால் மாற்றங்களுக்குள்ளாகி யிருக்கலாம்.
இங்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட லாம். அரபு மொழியும் பைபிள் எழுதப்பட்ட மொழி களும் சகோதர மொழிகளாகும். தமிழ் மொழியில் இருக்கும் சில வார்த்தைகள் சமஸ்கிருத மொழி சாயலில் இருப்பது போல் அரபு, அறாமிக் மொழிகள் தொடர்புபட்டதாகும்.
மக்காவிலே கஃபதுல்லாஹ் ஆலயம் உள்ளது. இதை ஆப்ரஹாம் , இஸ்மவேல் ஆகிய இரு தீர்க்கதரிசிகளும் புனர்நிர்மாணம் செய்தார்கள். முஸ்லிம்கள் ஹஜ் கடமைக்காக அங்குதான் செல்கின்றனர். இந்த மக்கா பூமி பக்கா என்றும் அழைக்கப்படுகின்றது.
‘(அல்லாஹ்வை வணங்குவதற்காக) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட முதல் வீடு ‘பக்கா’ (எனப்படும் மக்கா)வில் உள்ளதாகும். (அது) பாக்கியம் பொருந்தியதும், அகிலத் தாருக்கு நேர்வழியுமாகும்.’ (3:96)
முதலில் ஆலயம் அமைக்கப்பட்ட பகுதி ‘பக்கா’ என அழைக்கப்படுகின்றது. அது ஒரு பள்ளத்தாக்காகும்.
‘எங்கள் இரட்சகனே! புனிதமான உனது வீட்டுக்கு அருகில் விவசாயமில்லாத பள்ளத்தாக்கில் தொழுகையை நிலைநாட்டு வதற்காக என் சந்ததியில் சிலரை நிச்சயமாக நான் குடியமர்த்தியுள்ளேன். எனவே, எங்கள் இரட்சகனே! மனிதர்கள் சிலரின் உள்ளங்களை இவர்கள்பால் நாட்டம் கொள்ளச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு, கனி வர்க்கங்களி லிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!’
(14:37)
பக்கா பள்ளத்தாக்கில்தான் புனித ஆலயம் அமைந்துள்ளது. அரபியில் ‘பகா’ என்றால் அழுதான் என்ற அர்த்தமும் உள்ளது.
‘வானமோ பூமியோ அவர்களுக்காக அழவில்லை. அவர்கள் அவகாசம் வழங்கப் படுபவர்களாகவும் இருக்கவில்லை.’ (44:29)
வானமோ, பூமியோ அவர்களுக்காக அழவில்லை என்பதைக் குறிக்க ‘பமா பகத்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை குறித்துக் காட்டவே இது இங்கு குறிப்பிடப்படுகின்றது.
பக்கா பள்ளத்தாக்கில் அமையப்பெற்ற ஓர் ஆலயம் பற்றி பைபிளில் பேசப்படுகின்றது. பக்கா பள்ளத்தாக்கு என்பதை பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் ‘அழுகையின் பள்ளத்தாக்கு’ என மொழிபெயர்த்துள்ளனர். ‘வாதில் பக்கா’ பக்கா பள்ளத்தாக்கு என்பதை வாதில் புகாஃ அழுகைப் பள்ளத்தாக்கு என மாற்றியுள்ளனர். இதனால் அந்த முன்னறிவிப்பின் உண்மைத் தன்மை சிதைவடைந்து விடுகின்றது.
‘உம்முடைய வீட்டில் வாசமாயிருக் கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டிருப் பார்கள். (சேலா.)’
‘உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷ னும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.’
‘அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.’
‘அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப் படுவார்கள்.’
‘எனவே, எவருடைய பதிவேடு அவரது வலது கையில் வழங்கப்படுகின்றதோ அவர் இலகுவான முறையில் விசாரணை செய்யப்படுவார்.’
(84:4-7)
இங்கே அழுகையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கடவுளின் வீட்டின் (பைதுல்லாஹ் வின்) சிறப்பு பற்றியும், அங்கு வருபவர்களின் சிறப்பு பற்றியும், அங்குள்ளவர்கள் அல்லாஹ்வை அதிகம் புகழ்வார்கள் என்றும், அங்கே ஒரு நீரூற்று உருவாகும் (ஸம் ஸம் அதிசய நீரூற்று) அங்கு வருபவர்கள் ஜெயம் கொள்வார்கள் என்றும் பேசுகின்றது! இது மிகத் தெளிவாக கஃபதுல்லாஹ் பற்றியும் அங்கு வாழ்பவர்கள் பற்றியும் அங்கு வருபவர்கள் பற்றியும் பேசுகின்றது. ஆனால், பைபிளின் மொழிபெயர்ப்புப் போக்கால் பக்கா பள்ளத்தாக்கு என்பது அழுகையின் பள்ளத்தாக்காக மாறிவிடுகின்றது.
கிறிஸ்தவ உலகு கஃபாவின் சிறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் அழுகையின் பள்ளத்தாக்கு என்ற ஒரு பள்ளத்தாக்கையும், புனித ஆலயத்தையும் கண்டு பிடிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பைபிளின் இந்த அறிவிப்பு பொய்யாக மாறிவிடும்.
03 குளறுபடிகள்:
யூத, கிறிஸ்தவர்கள் தமது வேத நூல்களில் விளையாடியிருப்பதை குர்ஆன் கோடிட்டுக் காட்டுகின்றது. அர்த்தங்களை மாற்றுதல் தமது மன விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பைபிளில் விளையாடுதல் போன்ற பண்புகள் அவர்களிடம் இருந்துள்ளன. தமக்குப் பிடிக்காவிட்டால் இறைத் தூதர்கள் மீதும் களங்கம் கற்பிக்க அவர்கள் தயங்கியதில்லை. அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம்.
‘அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.’
(ஆதியாகமம் 16:12)
இங்கே இஸ்மாயில் நபியின் கை எல்லோருக்கும் விரோதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இமாம் இப்னுல் கையூம் அல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஹிதாயதில் ஹியார் பீ அஜ்வபதில் யஹுத் வன்னஸாரா’ என்ற நூலில் குறிப்பிடும் போது அன்றிருந்த அறபு மொழி பைபிளில்,
‘இஸ்மாயில் நபியின் கரம் அனைவரது கரத்திற்கும் மேலிருக்கும். அனைவரின் கரமும் பணிவுடன் அவரது கரத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருக்கும் என்றுதான் எழுதப் பட்டுள்ளது. இஸ்மாயீல் நபியை இழிவுபடுத்துவதற் காகவே இந்த மாற்றம் பைபிள் உலகத்தால் செய்யப்பட்டுள்ளது. கடந்த கால பைபிள்களின் மொழிபெயர்ப்புக்களை எடுத்தால் இந்த மொழி பெயர்ப்புக் குழறுபடிகளைத் தெளிவாக இனம் காணக் கூடியதாக இருக்கும். இன்ஷா அல்லாஹ். முன்னறிவிப்புக்கள் பற்றிப் பார்க்கும் போது இஸ்மவேல் நபி பற்றி கூறப்பட்ட இந்தத் தகவலில் குழறுபடி நடந்துள்ளதை நாம் தெளிவாக உணரக் கூடியதாக இருக்கும்.’
4. அல்லாஹ்வே மறைத்துள்ளான்:
இஸ்ரவேல் சமூகம் சரியான இன உணர்வு கொண்ட சமூகமாகும். அவர்கள் தமது இனத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் வேறு சமூகத்தில் வருவதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை. மிகப் பெரும் ஒரு இறைத் தூதர் வருவார் என்பதை அவர்கள் நம்பி இருந்தனர்.
ஆனால், அந்த இறைத்தூதர் இஸ்ரவேல் சமூகத்தில்தான் வருவார் என அவர்கள் நம்பியிருந்தனர். இஸ்மவேல் சமூகத்தில் அந்தத் தூதர் வருவார் என அவர்கள் நம்பவில்லை. சில வேளை இஸ்மவேல் சமூகத்தில் அந்தத் தூதர் வருவார் என்பதுதான் பைபிளின் முன்னறிவிப்பு என அவர்கள் விளங்கியிருந்தால் அந்த வசனங்களையே அழித்திருப்பார்கள். அல்லாஹு தஆலா, அந்த வசனங்களை அவர்கள் சரியாக உணராதவாறு விளங்கச் செய்து அந்த வசனங்களைப் பாதுகாத்துள்ளான் என்றே கூற முடியும். இப்போது அவர்களால் அந்த வசனங்களை அழிக்க முடியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக விளங்காதபடி மாற்ற முடியும். அதைத்தான் கிறிஸ்தவ உலகு செய்து வருகின்றது.
கிறிஸ்தவ உலகு ஒரு இறைத்தூதரை எதிர்பார்த்திருக்கிறது. அந்த இறைத்தூதர் யார்? என்பதையும் எதிர்பார்க்கப்பட்ட அந்த இறைத் தூதர் இஸ்மாயில் நபியவர்களின் பரம்பரையில் வந்த முஹம்மத் நபியவர்கள்தான் என்பதையும் பைபிளின் துணை கொண்டு துள்ளியமாக நிரூபிக்கவுள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…