Featured Posts

மதீனாவின் சிறப்புகள்

உலகில் சில இடங்களை புனிதமான இடமாக இஸ்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. கஃபத்துல்லாஹ் அமைந்த இடம் புனிதமானது.மதீனா பள்ளி அமைந்த இடம் புனிதமானது. பைத்துல் முகத்திஸ் அமைந்த இடம் புனிதமானதாகும் . அதனால் தான் புனித பயணங்கள் என்ற அடிப்படையில் நன்மை நோக்கமாக கொண்டு பயணம் செய்வதற்கு இந்த மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடங்களுக்கும் புனித பயணம் செல்லக் கூடாது என்பதை இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1189)

மதீனா பள்ளி வரலாறு:
அனஸ் (ரலி) அறிவித்தார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்’ ‘பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!’ என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் ‘இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!’ என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர்செய்யப்பட்டன, பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன, பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர். ( புகாரி 1868)

மதீனா பள்ளி கட்டப்பட்ட இடம் ஆரம்பத்தில் முஷ்ரிக்குகள் அடக்கம் செய்யப் பட்ட இடமாகும். அதனால் தான் பள்ளியை கட்டுவதற்கு முன் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த இணை வைப்பாளர்களின் கப்ருகளை அப்புறப் படுத்தி விட்டு பள்ளியை அமைத்தார்கள்.
மேலும் “ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.’
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1187)

மேலும்“
பள்ளி இருக்கும் இடங்களில் கப்ருகள் இருக்க கூடாது என்பதையும் மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் அறியலாம்.
“அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘மஸ்ஜிதுன்னபி’யுடைய சுவர்கள் செங்கற்களாலும் அதன் கூரை பேரீச்ச மர ஓலையாலும் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன. அபூ பக்ரு(ரலி) (தம் ஆட்சியின் போது) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை என்றாலும் உமர்(ரலி) அதை விரிவுபடுததினார்கள். நபி(ஸல்) காலத்தில் இருந்தது போன்றே செங்கல், பேரீச்ச மர ஓலை, பேரீச்ச மரம் ஆகியவற்றைக் கொண்டே விரிவுபடுத்தினார்கள்.
பின்னர் உஸ்மான்(ரலி) அந்தப் பள்ளியில் அனேக விஷயங்களை அதிகமாக்கினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். அதன் கூரையைத் தேக்கு மரத்தால் அமைத்தார்கள். (புகாரி 446)

மதீனா நகரம் புனிதமானதாகும்:

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!’
என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1867)

மேலும்“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) ‘மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1873)

மேலும்“ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
‘மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, ‘பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!’ என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. ‘இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!’ என்றார்கள். (புகாரி 1868)

நபியவர்கள் கூறிய அடையாளங்களை முன் வைத்து இன்று மதீனா பள்ளியை சூழவுள்ள இடங்கள் புனித இடங்களாக அடையாளமிடப்பட்டுள்ளன.

மதீனாவிற்கு மற்றொரு பெயர்:

மேலும் “ அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். ‘இது ‘தாபா!’ (நலம் மிக்கது)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1872)

மதீனாவிற்கு யத்ரிப் என்ற பெயரும் உள்ளது. அது போல தாபா என்ற பெயரும் உள்ளதை தான் மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.
மதீனா தீயவர்களை வெளியேற்றும்…
“ யத்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1871)

மேலும்“ ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. ‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 1884)

கெட்டவர்கள், மற்றும் மார்க்கத்தில் புதியதை ஏற்படுத்தியவர்களை எல்லாம் இந்த மதீனா நகரம் அடையாளப்படுத்தி விடும் என்பதை தான் நபியவர்களின் இந்த ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

மதீனாவிற்கு எதிராக சூழ்ச்சி:

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!’
என ஸஅத்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1877)

மதீனாவிற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தப்பிக்க முடியாது. திரை மறைவிலிருந்து என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அந்த சூழ்ச்சிகளை அல்லாஹ் வெளியாக்கி முறியடித்து விடுவான்.

நபியவர்களின் வீடும், மிம்பரும்:
நபியவர்களின் வீட்டிலிருந்து மிம்பர்வரை உள்ள பகுதி மிக முக்கியமான புனித இடமாக நபியவர்கள் பிரகடனப் படுத்தியுள்ளார்கள் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் காணலாம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! என்னுடைய மிம்பர் என்னுடைய ஹவ்ள் (அல்கவ்ஸர் தடாகத்தின்) மீது அமைந்துள்ளது!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1888)
உலகில் நபியவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக அல்லாஹ் இப்படியொரு சிறப்பை நபியவர்களுக்கு கொடுத்துள்ளான்.

தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது:

மறுமை நாளுக்கு ஓர் முக்கியமான அடையாளமாக தஜ்ஜால் வரவுள்ளான். அவன் உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் போய் வந்து விடுவான் ஆனால் புனித நகரங்களான மக்காவிற்குள்ளும், மதீனாவிற்குள்ளும் அவனால் நுழைய முடியாது. மதீனாவிற்கு அப்போது ஏழு வாசல்கள் இருக்கும் எந்த வாசல் வழியாகவும் அவனுக்கு உள்ளே நுழைய முடியாது. என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி1880)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்’
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

மதீனாவிற்கு பரகத்
இப்றாகீம் நபி மக்காவிற்காக பரகத் வேண்டி பல பிரார்த்தனைகளை செய்துள்ளார்கள். அதே போல நபியவர்கள் மதீனாவிற்காக பல பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள்.

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!’
என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1885)

மதீனா பள்ளியில் தொழுவதன் சிறப்பு

“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1190)

மதீனாவில் வசிப்பவர்களுக்கும், மேலும்அங்கு வேலைக்கு சென்றவர்களுக்கும் மதீனா பள்ளியில் அடிக்கடி தொழுவதன் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உம்ரா, மற்றும் ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் குறிப்பபிட்ட நாட்கள் அங்கு தொழுவதன் மூலம் ஓரளவிற்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

மதீனாவே சிறந்த இடம்
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ‘ஷாம்’ வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’
என சுப்யான்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி 1875)

இப்படி பல சிறப்புகளை மதீனா நகரமும், மற்றும் மதீனா பள்ளியும் பெற்றுள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

One comment

  1. அல்ஹம்துலில்லாஹ்!! நல்ல பதிவு ரசித்தேன்
    மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன் மதீனா நகரில் வசிக்கும் மக்கள் அருள் பெற்றவர்கள் சுப்ஹானல்லாஹ்!! شكرا جزآكالله خيرا يا اخي

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *