Featured Posts

காலுரையின் மீது மஸஹ் செய்தல்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளார்கள். அந்த வரிசையில் காலுரையின் மீது எப்போது மஸஹ் செய்ய வேண்டும், எப்படி மஸஹ் செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் மஸஹ் செய்ய வேண்டும், என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நமக்கு பாடம் படிப்பித்து தருகிறார்கள்.

காலுரைக்கு மஸஹ் செய்தல் என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம்.

நாம் உளூ செய்து விட்டு காலுரையை அணிந்து கொண்டால் அதன் பிறகு தொழுகை நேரம் வந்து மீண்டும் உளூ செய்யும் போது அணிந்திருக்கும் காலுரையை கழட்ட தேவை கிடையாது. காலுரையை கழட்டாமல் வழமையாக உளூ செய்வது போல உளூ செய்து கொண்டு இறுதியாக தண்ணீரை தொட்டு இரண்டு கால்களின் மேற்பகுதியில் மட்டும் கரண்டை வரை ஒரு தடவை தடவினால் போதுமாகும்.

முதலில் பின்வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்,
“ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) சிறுநீர் கழித்தப் பின்னர் உளூச் செய்து, தம் இரண்டு காலுறையின் மீது மஸஹ் செய்துவிட்டு எழுந்து தொழுததைக் கண்டேன். இது பற்றி ஜரீர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்’ என ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்கள். (புகாரி 387)

‘காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்களுக்கு ஜரீர்(ரலி) அவர்களின் இச்செயல் மிகச் சிறந்த சான்றாகும். காரணம் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவராவார்’ என்று இப்ராஹீம் குறிப்பிடுகிறார்.

மேலும்“ ‘நான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்யும்போது (கால்களைக் கழுவாமல்) காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழுதார்கள்’ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். (புகாரி 388)

எனவே காலுரையின் மீது மஸஹ் செய்து தாராளமாக தொழலாம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்?

“ ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள், அலீ அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னைவிட அவர்தாம் இதுகுறித்து நன்கறிந்தவர் என்று கூறினார்கள். ஆகவே, நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 465)

ஊரில் இருப்பவர் ஒரு நாளைக்கு காலுரையை கழட்டாமல் மஸஹ் செய்யலாம். அதாவது காலுரையின் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றால் காலுரையை அணிவதற்கு முன் உளூ செய்து அணிய வேண்டும். அப்போது தான் ஒரு நாள் காலுரையை கழட்டாமல் மஸஹ் செய்யலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு நாள் முடிந்து விட்டது என்றால், மீண்டும் அணிந்திருக்கும் காலுரையை கழட்டி விட்டு, மீண்டும் உளூ செய்த பின் அந்த காலுரையை அணிந்து கொள்ளலாம் இப்படியே ஒவ்வொரு நாளும் செய்து கொள்ள முடியும்.

அதே போல தான் பிரயாணிகள் உளூ செய்து கொண்டு காலுரையை அணிந்து கொண்டால் அவர்கள் மூன்று நாட்கள் அணிந்து இருக்கும் காலுரையை கழட்ட தேவை கிடையாது. அந்த மூன்று நாட்களும் உளூ செய்யும் போதெல்லாம் காழுரையின் மீது மஸஹ் செய்துக் கொண்டால் போதுமாகும்.

குளிப்பு கடமையானால் காலுரையை கழட்டி விட்டு, குளித்த பின் உளூ செய்து பின் மீண்டும் காலுரையை அணிந்து கொள்ள வேண்டும். இது இரு சாரார்களுக்கும் பொதுவான சட்டமாகும். காலுரையை அணிந்திருக்கும் போது காலுரையின் மீது ஏதாவது நஜீஸ் பட்டுவிட்டால், நஜீஸ் பட்ட இடத்தை மட்டும் கழுவினால் போதுமாகும்.

இது இஸ்லாம் மக்களுக்கு தரக் கூடிய சலுகையாகும். குறிப்பாக வேலைகளுக்கு செல்பவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் அணிந்திருக்கும் காலுரையை கழட்ட தேவை இல்லை, கழட்டாமல் உளூ செய்து கொண்டு, காலை கழுவாமல், தண்ணீரை தொட்டு காலுரையின் மீது ஒரு தடவை மேல் பகுதியில் மட்டும் தடவினால் போதுமாகும்.

எனவே சந்தர்ப்பங்கள் வரும் போது இஸ்லாம் அனுமதித்த இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள்.

One comment

  1. this means usually we are wearing socks inner of shoes
    or is there anything special for it ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *