-மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்-
உலக வரலாற்றில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தனித்துவம் வாய்ந்த பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இந்த வராலற்று உண்மையை பிற சமூகங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அன்றைய ரோம, பாரசீக வல்லரசுகள் இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்துப் பயந்து நடுங்கியதைப் போன்று இன்றைய வல்லரசுகளான அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்றன கதிகலங்கி நிற்பதற்கும் இஸ்லாதில் காணப்படும் இந்த வீரதீரப் பண்புகளே காரணங்களாகின்றன.
நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்ததைப் போன்று, முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமாகியதனாலும், படாடோகப் பரவசங்களுக்காய் மறுமையை மறந்ததனாலும் தமது தனித்துவத்தை அவர்கள் இழந்தார்கள். அவர்களுக்கிருந்த அளப்பரும் சொத்தான கிலாபத் பறிபோனது. ஓருடலாயிருந்த முஸ்லிம் தேசம் பல தேசங்களாய் துண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் கேட்பாரற்ற அநாதைகளாகினர். அழிவும், இழிவும் அவர்களின் அழையா விருந்தாளிகளாகிவிட்டன. ஆனாலும் அமாவாசைகளுக்குப் பின்னால் பௌர்ணமிகளிருப்பதைப் போல இழந்து போன தமது கிலாபத்தையும், அளப்பரும் தமது தனித்துவத்தையும் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை. அந்தத் தீர்க்க தரிசனத்தைப் பினவரும் நபி மொழி பறைசாற்றுகின்றது.
مسند أحمد
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فَقَالَ حُذَيْفَةُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ ‘
அல்லாஹ் நாடிய காலம் வரை உங்களிலே நபித்துவம் காணப்படும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்னர் நபித்துவத்தின் வழிகாட்டலில் கிலாபத் ஆட்சி அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். பின்னர் ஓர் இருக்கமான ஆட்சியொன்று வந்து அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்னர் ஒரு கொடுங்கோள் ஆட்சியொன்று வந்து அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்னர் நபித்துவத்தின் வழிகாட்டலில் கிலாபத் ஆட்சியொன்று இருக்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைபா இப்னுல் யமான், ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் (18406)) (ط – الرسالة
இன்றளவில் சர்வதேச ரீதியில் எத்தனை முஸ்லிம் நாடுகள் காணப்படுகின்றன? எங்கெல்லாம் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்? ஆங்காங்கே சிதறி வாழும் முஸ்லிம் சமூகம் அவ்வப் பிரதேசங்களில் சந்திக்கும் மிகப் பிரதானமான பிரச்சினைகளென்ன? என்பவை தொடர்பில் மேலோட்டமாகக் கீழே அவதானிக்கலாம்.
அதிகமான முஸ்லிம் நாடுகள் ஆசியாவில்தான் காணப்படுகின்றன
அதிகமான முஸ்லிம் நாடுகளைக் கொண்ட கண்டமாக ஆசியா விளங்குகின்றது. சுமார் 35 முஸ்லிம் நாடுகள் ஆசியாவில் காணப்படுகின்றது. முஸ்லிம் கண்டம் என இதையழைத்தாலும் தப்பில்லையெனலாம்.
ஆசியாவுக்கடுத்தது ஆபிரிக்காவே
ஆசியாவுக்கடுத்தபடியாக அதிக முஸ்லிம் நாடுகளைக் கொண்டது ஆபிரிக்காவாகும். சுமார் 29 முஸ்லிம் நாடுகள் இங்கு காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே அன்று முதல் இன்று வரை ஒரு தனித்துவமான உறவொன்றுள்ளதென்பது இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமெனலாம்.
ஐரோப்பாவில்…
ஐரோப்பாவில் சுமாராக 11 முஸ்லிம் நாடுகள் அல்லது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலப்பரப்புக்களுள்ளன.
சிறுபான்மையினராக…
ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் முறையே 12, 15, 12 என்ற எண்ணிக்கையிலான நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவுள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில்…
இவற்றைத் தாண்டி அமெரிக்க, ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்களிலும் குறிப்பிடத்தக்களவில் முஸ்லிம்களுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதாரமும் நம் கையில்தான்…
சர்வதேசப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக் கூடியதும், முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கக் கூடியதுமான ஒரு வளமாகப் பெற்றோலியம் காணப்படுகின்றது. உலக எண்ணை உற்பத்தியில் 75 வீதமானவை முஸ்லிம் நாடுகளால்தான் பூர்த்தி செய்யப்படுகின்றன. எண்ணை ஏற்றுமதி செய்யும் முக்கிய 10 நாடுகளில் 6 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். சர்வதேசப் பொருளாதார மத்திய நிலையமாக மத்திய கிழக்கு விளங்குகின்றது. எந்தவொரு நாடும் தமது உற்பத்திகளை மத்திய கிழக்கில்தான் சந்தைப்படுத்த வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏதாவதொரு நாட்டின் உற்பத்திகளை அரபு நாடுகள் பகிஷ்கரிக்கும் தருவாயில் சர்வதேசப் பொருளாதாரத்தில் தலம்பல்கள் ஏற்படும் அளவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
நீர் வளம்…
மத்திய தரைக் கடல், செங்கடல், அரபுக்கடல், வளைகுடாக்கடல், கஸ்பியன், கருபியன் கடல்கள், போன்றனவும், நைல், யூப்ரடீஸ், ரைகிரீஸ், சிந்து போன்றனவும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில், செல்வாக்கிலுள்ள கடற்பரப்புக்களும் நதிகளுமாகும். இவையல்லாமல் உலகிலுள்ள அனைத்து சமுத்திரங்களிலும் முஸ்லிம்களுக்கென்று பிரத்யேகமான செல்வாக்கொன்று காணப்படுகின்றது.
சர்வதேச ரீதியாக அனைத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் முஸ்லிம் சமூகம் தமது செல்வாக்கிற்கு நேர் மாற்றமாக உலகளவில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பலஸ்தீன், ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், செச்னியா, கிழக்குத் துர்கிஸ்தான், சேமாலியா… போன்ற முஸ்லிம் தேசங்கள், வல்லரசுகளின் ஆணுவாயுத ஒத்திகைகளுக்கான ஆடுகளங்களாகி 21-ம் நூற்றாண்டின் ஹிரோஸிமாக்களாக விளங்குகின்றன. பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் அனைத்தும் சூரையாடப்படுகின்றன. உலக வரை படத்தில் இன்னும் பல முஸ்லிம் தேசங்கள் சியோனிஸ வல்லாதிக்கத்தின் கழுகுப் பார்வையிலுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
சடரீதியான வளங்களுக்கு மேலாக அல்குர்ஆன், அல்ஹதீஸ் எனும் மிகப்பெரும் வளங்களைக் கைவசம் வைத்திருக்கும் முஸ்லிம் சமூகம், அதன் நீண்ட துயிலிலிருந்து எப்போது விழித்துக் கொள்ளும் என்ற வினாவுக்கு விரைவில் காலம் விடை சொல்லும்.
ஆயுத பலம், அறிவு பலம் அனைத்தையும் காட்டிலும் ஆன்மீக பலம்தான் இஸ்லாமிய சமூகத்தின் இப்போதையத் தேவையாகும். முஸ்லிம்களின் மீளெழுச்சிக்கு இதுவொன்றே தீர்வென்பதைப் பின்வரும் ஹதீஸ் அழகாக எடுத்துச் சொல்கின்றது.
‘ஈனா எனும் வியாபார முறையைக் கொண்டு நீங்கள் வியாபரம் செய்து கொண்டால், மாடுகளின் வால்களை நீங்கள் பற்றிக் கொண்டால், விவசாயத்தை நீங்கள் பொருந்திக் கொண்டால், ஜிஹாதை நீங்கள் விட்டுவிட்டால் அல்லாஹ் உங்கள் மீது ஓரிழிவை ஏற்படுத்துவான். உங்கள் மார்க்கத்தின் பால் நீங்கள் மீளும் வரை அதை உங்களை விட்டும் அல்லாஹ் அகற்ற மாட்டான்.
ஆறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி), ஆதாரம் : அபூதாவூத்
நம் இதயங்களை இஸ்லாம் ஆளட்டும்! இதனால் அது உலகையாளட்டும்! அகிலத்தையே ஆட்டி வதைக்கும் அட்டூழியங்கள் அழிந்து, ஒரு புது யுகம் புலரட்டும்.